சத்யா: ஒரு கலைஞனின் பயணம்…

 

“Photography takes an instant out of time, altering life by holding it still.”
Dorothea Lange

 

இருள் என்பது குறைந்த ஒளி என்றான் பாரதி. இருளுக்கும் ஒளிக்குமிடையில் நடக்கும் பங்காளி சண்டை தான் புகைப்பட கலை. எவ்வளவு ஏரியாவை நான் எடுத்துக்கொள்வது என்று இருளும் எவ்வளவு ஏரியாவை நான் ஆக்ரமிப்பது என்று ஓளியும் போடும் சண்டை. அந்த சண்டையை சமாதானம் செய்யும் நாட்டாமை போல தீர்ப்பு சொல்லி நொடியில் காலத்தை உறையச்செய்து ஒரு ஃப்ரேமுக்குள் அடக்கும் பெருங்கலைஞன் தான் புகைப்படக்காரன்.

உண்மையில் இருள் தான் ஸ்ட்ராங்கான‌ தாதா மாதிரி. காரணம் அவன் எங்கும் இருக்கிறான். ஒளியைத்தான் புகைப்படகலைஞன் உருவாக்க வேண்டி இருக்கிறது. ஒளியைத்தான் அவன் வழிநடத்த வேண்டி இருக்கிறது. ஒளியை ஆளத்தெரிந்தவன் சிறந்த புகைப்பட‌கலைஞனாகிறான்.

அதே நேரம் இருள் இல்லாமலிருந்தால் ஒளிக்கு மதிப்பில்லை. போட்டோகிராபியின் அகராதியில் ஒளி மட்டுமே அதிகரித்து விட்டால் “ஓவர்” என்றும் இருள் அதிகமாகி விட்டால் “அன்டர்” என்றும் அர்த்தம்.

இருளும், ஒளியும் தான் பேஸ்மென்ட் என்றாலும் பில்டிங் ஸ்டராங்காக தேவை கோணம், கம்போசிங், டைம்,(கலர் ஃபோட்டோகிராபி என்றால்) கூடவே வண்ணங்கள் பற்றிய அறிவு. இந்த அடிப்ப்படைகளை வைத்து தொடர்ந்து சோதனைகள் செய்பவன் சிறந்த புகைப்படகலைஞனுக்கான பாதையில் பயணிப்பவன்.

நண்பன் சத்யாவின் பாதை அப்படிப்ப‌ட்டது என்று நான் அறிவேன். ஓவியக்கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் ஜூனியர். போட்டோகிராபியில் அதீத ஆர்வமுள்ள ஒரு நண்பனாக எனக்கு அறிமுகமானான். போட்டோகிராபியில் எனக்கு பாண்டித்யம் கிடையாது ஆனால் ரசனை உண்டு. ஓவியக்கல்லூரியில் படிக்கும் போது பாடத்திட்டத்தின் பொருட்டு அனைவருமே ஒருதடவையாவது கேமராவைத்தூக்குவார்கள் ஆனால் அதை தொடர்பவர்கள் மிகச்சிலரே.

கல்லூரியில் படிக்கும் போதிருந்தே சத்யாவின் புகைப்படங்களை ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன். ஓவியக்கல்லூரியின் ஓளி பரவிய மரக்கூட்டங்களையும், சருகுகளையும், காலம் புகையாக படிந்த கல்லூரி கட்டிடங்களையும்,  இருளில் மயங்கித்தெரியும் மாணவ உருவங்களையும் தொடர்ந்து அவன் பதிவு செய்த புகைப்படங்கள் இருளையும் ஒளியையும் வைத்து சோதனை செய்ததாக எனக்கு தோன்றும்.

கல்லூரி சுற்றுலாவில் எடுத்த வட இந்தியாவின் டாக்சிகள், விளம்பர பலகைகள், வண்ண‌மயமான மனிதர்கள் மற்றும் சிறுவர்கள் படங்கள் வண்ணத்திலும், கம்போசிங்கிலும் தொடர்ந்து அவன் செய்த எக்ஸ்பெரிமென்ட் என்றே நினைக்கிறேன்.
பிறகு விகடனின் மாணவ புகைப்படக்கலைஞனாகவும் இருந்தான்.

கல்லூரி முடித்து சினிமாட்டோகிராபி மேல் வந்த ஆர்வத்தால் முயற்சி செய்த நேரங்களில் தேனாம்பேட்டையின் பேச்சிலர் மொட்டைமாடியில் உட்கார்ந்து புகைப்படங்கள், பெயின்டிங், சினிமா என்று பேசிக்கொண்டிருப்போம்.

2003இல் தேசிய அளவில் வெளியான ஒரு காலண்டரில் பன்னிரெண்டு புகைப்படக்க‌லைஞர்களில் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டான். பிறகு இந்தியாவின் பெருங்கலைஞனில் ஒருவரான பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்தபின்பு சினிமா என்கிற கனவின் வாசல் மெல்ல திறந்துகொண்டது.

சினிமா என்பது கலைமனதை மட்டுமல்ல கடுமையான உழைப்பையும் வேண்டிநிற்கும் துறை. பி.சியின் பட்டறையில் சத்யாவின் ஏழு வருட கடின உழைப்பு இன்று தமிழ்சினிமாவில் அவனுக்கு பெரும் கவனத்தை பெற்றுத்தந்திருக்கிறது.ஆம், யுத்தம் செய் திரைப்படம் வழியாக தன் சினிமாட்டோகிராஃபி பயணத்தையும் ஆரம்பித்திருக்கிறான்.

சத்யாவின் புகைப்படங்களை பார்க்க‌

http://www.flickr.com/photos/klicksathya/

இன்றும் தன் ஐஃபோன் கேமராவில் வாழ்வின் அரிய நொடிகளை பதிவுசெய்ய தவறுவதில்லை.
சத்யாவிற்கு என் வாழ்த்துக்கள்.

February 20, 2011 at 11:12 pm 8 comments

கதை மாதிரி ஒரு கதை.

ரொம்பநாட்களாக காசிக்குப்போகணும் என்று ஆசை. ஆனந்தும் நானும் அடிக்கடி பயணங்கள் பற்றி திட்டமிடுவோம் ஆனால் நட்க்காது இம்முறை அப்படி அல்ல. ஒரு மாதம் அலுவலக விடுப்பு எடுத்துகொண்டு கிளம்பிவிட்டோம். நீன்ட ரயில் பயணம் கொஞ்சம் சோர்வாக உனரச்செய்தாலும் காசியை சென்று சேர்ந்ததும் உற்சாகமாகிவிட்டது.

ஒரு பழைய விடுதியில் அறை எடுத்து தங்கிக்கொண்டோம். பைப்பில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு விஸ்வநாதர் ஆலயத்துக்கு போகும் வழியில் ஒரு வட இந்தியரின் கடையில் பூரியும் கிழங்கும் சாப்பிட்டோம். எதிர்படும் திசையில் எல்லாம் சடைபிடித்த தாடி மீசையுடன் சாமியார்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். வயதானவர்களை அழைத்துகொண்டு வரும் டூரிஸ்ட் குடும்பங்கள். காசியிலேயே ஏதாவதொரு மடத்தில் தன் கடைசி கால‌த்தை கழிக்க வரும் முதியவர்கள். கூட்டத்தில் என்னவெல்லாமோ விற்க அலையும் மனிதர்கள். மாடுகள், நாய்கள், கடவுள்கள்.

போதை ஏற்றியது போல இருந்தது ஊர் சுற்றல். இரவானதும் மறுபடி அறைக்கு வந்து சேர்ந்தோம். குளிர் பரவியிருந்த‌து. ஆன‌ந்துக்கு பொதுவாக கடவுள் நம்பிக்கை கிடையாது. சாமியார்களை பார்த்தால் கிண்டல் வேறு. எனக்கு பெரிதாக பக்தி கிக்தி எல்லாம் இல்லையென்றாலும் இந்த மாதிரி கோயில்கள், விழாக்கள், சாமியார்கள், காசி இவற்றின் மேல் ஒரு சுவாரஸ்யம் உண்டு.

இணையத்தில் ஏதாவது இந்து பிலாசபி, ஞானம், போன்ற விஷ்யங்களை அறைகுறையாக படித்து விட்டு அதை பற்றி சுத்தமாக எதுவும் தெரியாத நண்பர்களிடம் பேசி பீலா விட்டு ஒரு த்துவக்களை காட்டிக்கொள்வதில் அல்ப சந்தோஷம்.
” மச்சான் நாளைக்கு எவனாவது தமிழ் தெரிஞ்ச சாமியாருங்கோ எவனையாவது கண்டுபிடிச்சு, கொஞ்சம் தத்துவம், மார்க்கம் பத்தி எல்லாம் கேள்வி கேட்கணும்டா” என்றேன் ஆனந்திடம். “யேன் அப்பிடியே சாமியாரா செட்டில் ஆயிடலாம்ணு பாக்கியா” என்றான் அவன். “சும்மா இங்க என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாம்ணு தான்” ” என்ன தெரிஞ்சுக்கிறதுக்கு. ஜாலியா இருக்கானுங்கப்பா இந்த சாமியாருங்க. சரக்கு, டோப்பு, எதுக்குமே பஞ்சமில்ல போல”

காலையில் எங்கள் விடுதிக்கு பக்கதிலிருந்த டீக்கடையில் ஆன்ந்த் தன்க்கு தெரிந்த “ஏக், கியா, துல்கனியே” போன்ற இந்தி  வார்த்தைகளை வைத்து யாராவது தமிழ் சாமியார் தெரியுமா என்று கேட்டான். ” நீ, தமிழு, இட்லி” போன்ற அவனுக்கு தெரிந்த தமிழ்வார்த்தைகளை வைத்து கடைக்காரன் பதில் சொல்லி கொண்டிருந்தான். ஒரு முடிவும் வந்தபாடில்லை.கடைசியில் கடைக்காரன் ஒருவாறாக புரிந்துகொண்டு ஒரு பையனை அழைத்தான். அவன் கொஞ்சம் நல்லா தமிழ்பேசினான். சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பானிபூரி விற்றபோது தமிழ் கற்றுகொண்டதையும் கூறினான்.”உங்கள்கு தமிழ் சாமியாரெ பாக்ணும். நம்ம கூட வாங்கோ காட்டும்” என்றபடி நடந்து ஒரு சந்துக்குள் கூட்டிபோனான்.

ஒரு பழைய அய்யர் வீடு மாதிரி தெரிந்த வீட்டின் திண்னையில் ஒருத்தர் உட்காந்திருந்தார். பார்க்க பிச்சைகாரனா? சாமியாரா என்று வித்தியாசம் தெரியவில்லை. பக்கத்திலும் சுற்றுமுற்றும் இன்னும் சில வயதான சாமியார்கள் படுத்தொகொண்டும், குத்தவைத்து உட்காந்துகொண்டும் வருவோர் போவோர்களை பாத்துகொண்டிருந்தார்கள்.”அதோ அவரு தமிழு தான்” என்று கைநீட்டி காட்டிவிட்டு அந்த பயைன் மறுபடி ச்ந்தில் நுழைந்து திரும்பி போனான். நானும் ஆனந்தும் அவரை பாத்து நடக்கத்துவங்கினோம்.
நாங்கள் நெருங்கி வரவும் அவர் எங்களை மேலும் அருகில் அழைப்பதுபோல மெல்ல தலைசைத்து லேசாக சிரித்தார். அழுக்கான தாடிக்கும் மீசைக்கும் நடுவில் கறைபடிந்த வாய் லேசாக திறந்து தான் சிரித்தார். நல்ல திடகாத்திரமாகத்தான் தெரிந்தார். அம்பது வயசுக்கு மேல் கண்டிப்பாக இருக்காது.

“சாமி நீங்க தமிழா” என்றேன். “ஆமா, நீங்க நம்மூர் காரங்களா? பாக்கும்போதே தோணிச்சு. தமிழ்நாட்டுல எங்கேருந்து வாரீங்க” என்றார். “சொந்த ஊரு திருனெவேலிபக்கம். இப்பம் இருக்கிரது சென்னையில தான்” என்றேன். ஆனந்த் பெரும்பாலும் பதில் சொல்லுவதில்லை. அவனுக்கு அவ்வள‌வு ஆர்வம் இருப்பதுபோலவும் தெரியவில்லை. “சாமீ, சும்மா இங்கே காசியெல்லாம் சுத்திபாக்கலாம்னுட்டு தான் வந்தோம். அப்டியே சாமியாருங்க கிட்ட பேசலாம்னா எங்களுக்கு ஹிந்தி தெரியாது அதான் ஒரு தமிழ் சாமியாருன்னா வசதியா இருக்குமில்லியா அதான் உங்கள தேடிபிடிச்சோம்” என்றவாறு” சாமி ஏதாவது சாப்பிடுறீங்களா எதாவது வாங்கிட்டு வரட்டுமா” என்றேன்.” இல்ல தம்பிங்களா காலையில சாமி ஸப்பிட்டாச்சு.” என்ற படி பையிலிருந்து ஒரு பீடியை எடுத்து பற்ற‌வைத்தபடி” சரி சாமியாருங்க கிட்ட என்ன பேசணும்” என்றார். “இல்ல சாமி சும்மா சாமியாருங்க அனுபவத்த பத்தி கேட்கலாம்ணு தான்…” என்றேன். ஆனந்த் இப்போது லேசாக தலையாட்டி ஆமோதிப்பதுபோல இருந்தது. “சாமிக்க பேரு என்னது” என்றேன்

“தம்பி என் உண்மையான பேரு சேகர்பாபு. சாமியாராகணும்னெல்லாம் பெரிசா நினைச்சதில்லை. நமக்கும் சொந்த ஊரு திண்டுக்கல் பக்கம் தான். ஆனா சின்ன வயசிலேயே சென்னைக்கு வந்துட்டேன். சொந்தம்னெல்லாம் யரும் கிடையாது. ஏதேதோ வேலை செஞ்சேன். பிறகு வாழ்க்கையில ஒரு வெறுப்பு வந்திடிச்சு. டெய்லி என்ன வேலை செஞ்சு என்னான்னு ஒரு நினைப்பு. வடபழனி கோயில் பக்கம் சுத்துவேன். நிறைய பிச்சைக்காரங்க, சாமியாருங்க கிட்ட பழக்கம். நானும் மெல்ல கோவிலாண்ட பிச்சைகாரங்க கூட சேந்து படுத்துப்பேன். பிறகு மெல்ல பிச்சை எடுக்கவும் ஆரம்பிச்சேன். அப்ட்யே ஜாலியா தான் போய்ட்டு இருந்த்து. திடீர்னு ஒரு ஒரு சினிமா பட சூட்டிங்க் அதுக்கு நிறைய பிச்சைக்காரங்களும் சாமியாருங்களும் வேணும்னு கேட்டதா எவனோ சொன்னான். அதுவும் சாமியாருங்கள பத்தியும் பிச்சைக்காரங்கள பத்தியும்  எடுக்கபோற சினிமான்னு சொன்னாங்க. யாரோ பாலான்னு ஒரு டயரக்டர் பேர சொன்னாங்க. காசும் கிடைக்கும் அப்டியே சூட்டிங்க்ல நடிகருங்களையும் பாக்கலாம்ணு ஜாலியா கிளம்பி போனோம். பாத்தா சூட்டிங் மட்ராசில இல்ல காசியில தான்னுட்டு சொன்னாங்க. எல்லாரையும் ட்ரெயினுல கூட்டிபோவாங்கண்ணு சொன்னாங்க. கொஞ்சம் பேர் தூரமா போணுமே நமக்கு வடபழனியே போதும்னுட்டு திரும்பி போயிட்டானுங்க” ” மச்சி நான் கடவுள்டா” என்று நாங்கள் ஆச்சரியபட‌ எடுத்தொக்கொண்ட இடைவெளியில் சாமி பீடியை ஒரு இழு இழுத்துவிட்டு மெலும் தொடர்ந்து.

” அப்புறம் நாங்க நிறையபேரு சென்டரல் இல்ல சென்டரலு அங்கேருந்து ட்ரெயினுல ஏறி இங்கே காசிக்கு வந்திட்டோம். ஷூட்டிங் நடந்தப்போ சாப்பாடு காசு எல்லாம் கிடைச்சுது.”
ஆனந்த் இன்ப அதிர்சிக்கு ஆட்பட்டு சில நிமிடங்கள் கடந்திருந்தது. காரணம் அவன் ஒரு பாலா ரசிகன். நானும் தான்.

” சாமி பாலா உங்க கிட்ட பேசினாரா, நீங்க எந்த சீன்ல வந்தீங்க” என்றோம் படபட‌ப்புடன்.” பாலா தம்பி நல்ல மனுஷனப்பா, சாமியாருங்க மாதிரியே நல்லா புகையை இழுத்து இழுத்து வுடும். மண்டையோடு கோர்த்த மாலை எல்லாம் கூட போட்டிருக்கும். அந்த ஆரியா தம்பிதான் எனக்கு ஆருன்னு அடையாளம் தெரியல். ஏதோ புது புள்ளையாம்ல. ஆனா அது கூட சாமியாருங்க மாதிரியே பயங்கரமா தாடி எல்லாம் வச்சுகிட்டு எங்க கூட தான் சில சமயம் சுத்திகிட்டு திரிஞ்சுது. அதுவும் சாமியாராத்தானே நடிச்சிருந்தது. அது என்னமோ தலைகீழா ஒரு ஆசனம். கைய தலைக்கு பின்னால கட்டிட்டு காலை மேல தூக்கி தலைகீழா நின்னுட்டு. ரொம்ப கஷ்டப்பட்டதுப்பா.” இன்னொரு இழு இழுத்ததும் பீடி பெரும்பாலும் கரைந்து போனது. நெருப்பை தரையில் தேய்த்து அணைத்து தூக்கி எறிந்தார் சாமி.

“ஹீரோயின் புள்ள நடிக்க வரும்ணு பாத்தா கடைசி வரைக்கும் வரலப்பா. அதெல்லாம் ஊருல தான் சூட்டிங்கின்னு சொல்லிட்டாங்க. ஆங் அப்புறம் உங்க நகர்கோவில் பக்கம் தானாம் ஒரு எழுத்தாளரு. அவரு பேரு கூட ஏதோ மோகன்னு வருமேப்பா.”

“சாமி அது ஜெயமோகன்.”

“ஆங் அவரு தான் இந்த கதைஎல்லாம் எழுதி டயலாக்கு எல்லாம் பேச சொல்லி கொடுப்பாராம் அவரு கூட கொஞ்சநாள் இங்கே இருந்தாரு. எப்பவும் எங்கள எல்லாம் உத்து பாத்திட்டு திரிவாரு. சில சமயங்களில சிரிச்சு எங்காளுங்ககிட்ட நல்லா பேசுவாரு.”

” சாமி நீங்க எந்த சீன்ல வந்தீங்க”

“நான் எங்கேப்பா படத்த பாத்தேன். அதான் சூட்டிங் முடிஞ்சு எல்லாரும் கிளம்பினப்போ. நான் போகலியே. இங்கே காசிலேயே கொஞ்ச நாள் இருக்கலாமுன்னு நினைச்சு இங்கேயே தங்கிட்டேன்”

“அப்போ நீங்க காசிக்கு வந்து கொஞ்சம் நாள் தான் ஆவுதுன்னு சொல்லுங்க” என்றான் ஆன‌ந்த்.

” ம்ம் கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷ‌மாச்சுப்பா” என்றார். இன்னொரு வாட்டி நான் கடவுள் பாக்கணும் அதில் இவர் எங்கே வருகிறார்னு உத்துபாக்கணும் என்று நினைத்துக்கொண்டேன்.”

சாமி நீங்க இனிமே தமிநாட்டுக்கு வரதா ஐடியா இல்லியா” என்றான் ஆன்ந்த்

” இல்லப்பா அங்கே எங்கப்பா சாமியாருங்களுக்கு பாதுகாப்பு இருக்கு. போன வருஷம் ஒரு சாமியார போட்டோ புடிச்சு டி.வியில எல்லாம் காட்டிட்டாங்களாமேப்பா.”

ஆனந்த் சிரித்தான்.

(தொடரும்)

February 3, 2011 at 2:26 am 6 comments

கோலம்: a visual art

தூரத்தில் எங்கோ கவுசல்யா சுப்ரஜா என்று ஸ்பீக்கர் சுப்ரபாததை ஆரம்பித்திருக்கும், சூரியனின் பால்வெளிச்சம் மெல்ல பெருகி மனிதர்கள் நிழல்களிலிருந்து உருவங்களாய் மாறத்துவங்குகிற காலை. பசுக்கள் கட்டியிருக்கும் வீடுகளுக்குச்சென்று சாணம் அள்ளிவருவது தான் பெரும்பாலும் காலையில் சிறுசுகளின் வேலை. அதைகரைத்து முற்றத்தில் சளக் சளக் என்கிற பிரத்யேக சப்ததுடன் அம்மாக்களோ அக்காக்களோ தெளித்து கொண்டிருப்பார்கள்.  காலையில் தூக்கக்கலக்கத்தில் திண்ணையில் உட்காந்து கோலம் போடும் அக்காக்கக்களையும், அக்காக்கள் போடும் கோலத்தையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தது ஞாபகம் வருகிறது. எங்களுர் அக்காக்கள் போடுகிற விதவிதமான கோலங்கள் தான் மெல்ல ஓவியங்கள் மீதான ஈர்ப்பை உருவாக்கியது என்று  தோன்றுகிறது.

நாகர்கோவிலில் பெரும்பாலும் கோலம்போட கோலமாவு என்கிற வெள்ளை மண்ணைத்தான் உபயோகப்படுத்துவார்கள். கிலோ இவ்வளவு என்று வாங்கிவைத்துக்கோள்ளலாம். வண்ணக்கோல மாவென்றால் ஸ்பெஷலாக சின்ன பாக்கெட்டுகளில் கிடைக்கும். .அரிசி மாவில் புட்டு செய்வதோட சரி. பெண்குழந்தை இல்லாத என் வீட்டில் நானே சில அக்காக்களிடம் ஸ்பெஷல் ட்ரெயினிங் எடுத்து கோலம் போட கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கோலமாவை சுட்டுவிரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் நுள்ளி எடுத்து தரையில் ஒரு கோடாக வரைவது அடைப்படை நுணுக்கம். முதலில் கோடு ஒழுங்காக வராது பட்டையாக பிரியும். தொடர்ந்த பயிற்சியின் விளைவாக பட்டை மெல்ல கோடாக மாறும். பின்பு இஷ்டத்துக்கு ரைட் லெப்ட் எடுத்து கோடுகளை வளைக்கவோ நீட்டவோ முடியும். நாலு புள்ளியில் ஆரம்பித்து நானூறு புள்ளி வரை ஷேர்மார்கெட் பங்குகளைப்போல கோலத்தின் அளவை நம் திறமைக்கு ஏற்றபடி விரிக்கலாம்.

“பொம்பள பசங்க மாதிரி பய கோலம் போடுறதுப்பாரு” என்று சீண்டுகிற அத்தைகளின் கிண்டல்களை எனக்கு கிடைத்த பாராட்டுகளாகவே எடுத்துக்கொண்டு,  நானும் முயல்கோலம், மான்கோலம். கம்பிக்கோலம் என்று வெரைட்டி காட்டுவேன். வண்ணப்பொடிகள் கிடைக்காத பஞ்ச காலங்களில் அம்மாவின் குங்குமம், சமையலறை ம்ஞ்சள் தூள் எல்லாம் மறுநாள் முற்றத்தில் மாவுடன் கலந்து கோலமாக கிடக்கும். துளைகள் போட்ட கோல அச்சுகள் வீண், சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைப்போல போட்டதையே போட்டுகொண்டிருக்கும் அச்சுகள் ரெண்டு நட்களில் சலிப்புற துவங்கும். மறுபடியும் கோலப்பொடி விரல்களையெ நாடும்.

கோலம் என்கிற விசுவல் ஆர்ட் நம் ஃபோல்க் கலைகளின் ஒரு வர்சுவல் வடிவம். கோலம் என்கிற சொல் பரிபாடலில் தான் முதன்முதலாக “கேழற் கோலம்” என்ற சொற்றொடராக விஷ்ணுவின் வராக அவதாரத்தைப்பற்றிய‌ குறிப்பில் வருகிறது. சிலபப்பதிகாரத்தில் “மாதவி தன் கோலம் தவிர்த்திருந்தாள்” “மணமகளைப் போல யாழ் கோலம் செய்யப்பட்டிருந்தது”. “மாதவி எழுதுவரிக்கோலம் ஆட்டத்திற்காகக் கோலம் செய்திருந்தாள்”, “பழங்குடிமக்கள் குமரிப்பெண்ணைத் தெய்வக்கோலம் செய்திருந்தனர்” போன்ற இடங்களிலும் கோலம் என்ற சொல் வருகிறது. இங்கே கோலம் என்ற சொல் ஒப்பனையை குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வகையில் நாம் தரைக்கு செய்யும் ஒப்பனையே கோலம். தரையை ஏன் அலங்கரிக்க வேண்டும்?

பழங்குடிகளின் வழிபாட்டில் தரை என்பதே முதல் புனிதப்பொருள். தரையை தன் முதல்கடவுளாகவே அவர்கள் கருதினார்கள். அதுவும் தெய்வம் முதல் காலடி எடுத்துவைத்து தன் வீட்டிற்குள் நுழையும் முற்றம் புனிதப்படுத்தபடவேண்டிய ஒன்றாகவும் அவர்கள் கருதியிருக்கலாம். கோலம் என்பது தண்ணீரோ பசுஞ்சாணமோ தெளித்து சுத்தப்படுத்தப்பட்ட தரைக்கு செய்யும் ஒப்பனை. அரிசி மாவை கரைத்து துணியில் கிழியாககட்டி தரையில் கோடு கிழிப்பதில் இயற்கையோடு இனைந்த வாழ்வும், எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கும் உண‌வளிக்கும் நோக்கமும் உள்ளடக்கம்.  கோலத்தின் இன்னொரு வடிவமே வடநாடுகளில் ரங்கோலி என்று அழைக்கபடுகிற‌து. ரங் என்றால் வண்ணங்கள் அவாலி என்றால் வரிகள். வண்னக்களினால் வரையப்படுவது என்று வடமொழியில் பொருள்.கோலத்தை பெங்காலியில் ஆலாப்னா, ராஜஸ்தானில் மதனா உத்தரபிரதேசத்தில் சவுக்புரானா, ஆந்திரத்தில் முக்கு என்று வெவ்வேறு பெயர்களில் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோலங்களில் இருவகை உண்டு. கம்பி கோலம் மற்றும் புள்ளிக்கோலம். கம்பிக்கோலம் என்பது புள்ளிகளில்லாமல் நேரடியாக கோடுகளை இழுத்து வரைவது. இடைவெளிகளை வண்ணப்பொடிகளால் வேண்டுமானால் நிரப்பிக்கொள்ளலாம்.  புள்ளிக்கோலம் என்பது நேராகவோ குறுக்காகவோ புள்ளிகள் வைத்து, அந்த புள்ளிகளை இணைக்கும் விதமாகவோ அல்லது அந்த புள்ளிகளை சுற்றி கோடுகள் வரும் விதமாகவோ இரு வகையில் வரையப்படுகிற‌து. அப்படி புள்ளிகளை சுற்றிவரும் கோடுகளை கொண்ட கோலம் சுழிகோலம் என்றும் சொல்கிறார்கள். சுழி கோலம் பெரும்பாலும் கைகளை எடுக்காமல் வரைவது. ஒரு இன்ஃபினிடி தன்மை கொண்டது. பூக்களை கொண்டு உருவாக்கபடும் கோலம் பூக்கோலம் என்கிறார்கள். இது தமிழ்நாட்டைவிட கேரளாவில் தான் இன்றும்பழக்கத்தில் உள்ள‌து. மலையாளத்தில் பூக்களம் என்றும் அத்தப்பூ என்றும் சொல்கிறார்கள். அதுவும் திருவோண நாட்களில் மட்டுமே போடுகிறார்கள்.

அடிப்படையில் கோலம் ஒரு ஜியோமிதிக் கலைவடிவம். புள்ளிகள், கோடுகள், வளைவுகள் என்று கனிதசூத்திரங்களுக்குள் அடங்கும் நேர்த்தியும் ஒழுங்கும் கொண்ட ஒரு அறிவியல் காட்சிக்கலை. தாந்திரிக் ஆர்ட்டிலும், கேரளாவின் “களம் வரைக்கல்” போன்ற கலைகளிலும் அதன் நீட்சி உள்ள‌து. இன்றைய நவீன ஓவியங்களிலும் கூட இதன் தாக்கம் உள்ளது.

இன்று அபார்ட்மென்ட் கலாச்சாரத்திற்கு மாறிகொண்டு, முற்றம் என்கிற ஒரு வஸ்துவே இல்லாமல் வாழும் நாம் கோலத்தை பற்றி நினைத்துகூட பார்க்கமுடியாத இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். கோலங்கள் பெண்களின் நுட்பமான அழகுழணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த இடத்தில் அசோகமித்திரனின் கோலம் கதையில் வரும் விஜயாவை நினைத்துக்கொள்கிறேன்.

January 27, 2011 at 2:05 am 3 comments

தலைமறைவு ஓவியன் பேங்க்சி!

பேங்க்சி (Banksy) என்கிற ஓவியனின் பேரைக்கேட்டாலே நடுங்குகிறது லண்டன் மாநகராட்சி. இருக்காதா பின்னே! அரசு தனியார் கட்டிடங்கள் என்று பாரபட்சம் பார்க்காமல், இரவோடு இரவாக சுவர்களில் அதிரடி ஓவியங்களை வரைந்துவிட்டு மாயமாகிவிடும் அந்த ஓவியன் யாரென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது லண்டனின் மேயர் அலுவலகம்.

யாரிந்த பேங்க்சி? அப்படி என்ன செய்கிறான் இந்த ரகசிய ஓவியன்? நீங்கள் ஒரு பொதுஜனமாக இருக்கும் பட்சத்தில் மாநகர பஸ்ஸின் பின்னிருக்கை,  பார்க் மரங்கள், பப்ளிக் டாய்லெட்டுகள் போன்ற பொது இடங்களில் ஐ லவ் யூ இளமதி, சிந்தாதிரி பேட்டை சூப்பர் கிங்ஸ் அருள், மணி, ஸ்டீபன், தலைவர் வி…. வாழ்க போன்ற பொன்னெழுத்துகளையோ, பென்சிலிலோ, கரியிலோ, நகத்திலோ பிராண்டி வைத்திருக்கும் “நவீன” ஓவியங்களையோ கட்டாயம் பார்த்திருப்பீர்கள். இதை ஆங்கிலத்தில் வண்டலிசம் என்பார்கள். தமிழில் வேண்டுமானால் பிராண்டலிசம் என்று வைத்துக்கொள்ளாலாம். இந்த வண்டலிச மென்டலிசம் நம் எல்லோரிடமும் சிறிது உள்ளது தான். வண்டலிசம் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகளுக்கு ஒருவடிகால் அல்லது வடி’கை’ என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். பப்ளிக் பொருட்களை நாசம் செய்வது என்று சட்டம் சொல்கிற‌து.

இந்த வண்டலிசத்தின் கலை வடிவம் தான் கிராஃபிடி ஆர்ட் ( graffiti art). கிராஃபிடி ஆர்ட் என்பது பெரும்பாலும் ஸ்பிரே கண்ணால் —–இந்தியன் தாத்தா வெள்ளை ஆம்புலன்சை கறுப்பாக்க‌ உபயோகிப்பரே அந்த உபகரணம் - சுவர்களில் விதவிதமான வண்ணங்களில் விதவிதமான விசுவல்களை ஸ்பிரே செய்து வரையப்படும் கலர்புல் கலாட்டா.  இது ஒரு வெகுஜனக்கலைவடிவம். கலையை காலரிகளிருந்து தெருவுக்கு கொண்டு வருகிற புரட்சிகரமான ஒரு கலைச்செயல். நம்மூர் சுவர்களில் சிரிக்கும் தானைத்தலைவனோ ,மூத்திர சந்துகளில் அப்பாவியாக அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கடவுளர்களோ இந்த வகைமைக்குள் வருவார்களோ என்பது தெரிய‌வில்லை.

இந்த கிராஃபிடி ஆர்ட்டில் ஒரு கிளைவடிவம் ஸ்டென்சில் கிராஃபிடி ஆர்ட். இதன் தந்தை என்று பாரீஸ் ஓவியர் பிளெக் லி ராட்டை(Blek le Rat )  சொல்லாலாம். இதற்கான ஒரு கலை நியாயத்தை வழங்கிய ஓவிய‌நாட்டாண்மை இவர் என்பது விமர்சகர்களின் வாதம். பேப்பரில் தேவையான பாகங்களை வெட்டி எடுத்து வீசி விட்டு அதில் உருவாகும் இடைவெளிகளின் வழியாக வண்ணங்களை ஸ்பிரே செய்து சுவரில் ஓவியங்களையோ எழுத்துக்களையோ உருவாக்கும் முறைதான் ஸ்டென்சில் கிராஃபிடி ஆர்ட். இந்த முறையில் தான் நம்மூர் ஆட்டோக்களில் பிரசவ்த்திற்கு இலவசம், பெண்ணின் ம்ணவயது 21 போன்ற வாசகங்கள் எழுதப்படுகிற‌து என்பது டிஸ்கவுன்ட் தகவல்.

ஓவியர் பிளெக் லி ராட்டை தன் மானசீக குருவாக கொண்டவர் தான் இந்த பதிவின் கதாநாயகன் பேங்க்சி. பேங்க்சி என்பது இவருடைய புனைப்பெயர்தான். உண்மையான பெயர் என்ன, எந்த நாட்டைச்சேர்ந்தவர், எப்படி இருப்பார் என்று எதுவுமே தெரியாமல் இவருடைய ஓவியங்கள் மக்களால் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மேற்குலக நாடுகளில் பொழுது விடியும் போது ஏதோ ஒரு கட்டிடத்தின் ஏதோ ஒரு சுவரில் பேங்க்சியின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். அது அந்த அரசாங்கத்தை, அரசியலை, போரை, வன்முறையை, அதிகாரத்தால் நசுக்கப்படும் மக்களின் துக்கங்களை வெளிப்படுத்தும் ஏதாவது ஒரு கருவையோ விமர்சனத்தையோ கொண்டிருக்கும். மக்கள் அதை ரசித்து கொண்டாடுவார்கள். அரசாங்கங்கள் எரிச்சலடைந்து ஆள் அனுப்பி சுவரை கழுவுவர்கள். பேங்க்சியோ அந்நேரம் சளைக்காமல் அடுத்த நாட்டுக்கு விமானத்தைப்பிடித்திருப்பார். புதிய சுவர்களை தேடி.

வெறும் பிரச்சார ஓவியனாக பாங்க்சியை நினைத்து விடவேண்டாம். ஆம்பியன்ட் ஆர்ட் என்பது அடிக்கடி விளம்பரத்துறையில் இப்போது புழங்கும் சொல். அதாவது ஆர்ட்டுக்கு மீடியமாக சுற்றுப்புறத்தையே பயன்படுத்துவது. உதாரணமாக விளக்குக்கம்பத்திற்கு கீழே வரையப்படும் ஒவியத்தில் அந்த விளக்குக்கம்பத்தையே ஒரு கேரக்டராக பயன்படுத்துவது. உடைந்த சுவரில் வரையும்போது அந்த உடைசலையே ஓவியத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்திக்கோள்வது.

பேங்க்சி இந்த ஆம்பியன்ட் ஆர்ட்டில் கில்லாடி. வேலிக்குப்பின்னாலிருக்கும் சுவரில் சில அகதிகளின் படங்களை வரைந்தாலே போதும். உண்மையான வேலியும் அகதிகளின் சித்திரங்களும் சேர்ந்து அந்த கிராஃபிடி ஓவியத்துக்கு ஒரு புதிய பரிணாமமே கிடைத்துவிடும். இப்படி பல்வேறு நாடுகளின் சுவர்களில் வரைந்த சித்திரங்களை தொகுத்து புத்தகங்களாகவும் போட்டிருக்கிறார். நிறைய கண்காட்சிகளையும் நடத்தி இருக்கிறார்.

இவரை ஒரு ஓவிய பின்லேடனைப்போல கடுப்பாக தெடிக்கொண்டிருக்கின்றன பல அரசாங்கங்கள். சிமோன் ஹாடர்சன் போன்ற ஒரு சில இதழியலாளர்கள் மட்டுமே இதுவரை பேங்க்சியை ரகசியமாக நேர்காணல் செய்திருக்கிறார்கள். ” ஜீன்சும் டிஷர்டும் அணிந்த, காதில் சில்வர் கடுக்கனும்,  சில்வர் செயினும் அணிந்த 30 வயது இளைஞன்” என்கிற மாதிரியான உருப்படியறற தகவல்களே இவர்களால் பேங்க்சியைப்பற்றி உலகுக்கு சொல்லமுடிந்தவை. பேங்க்சியின் உண்மையான பெயர் ராபர்ட், ராபடன், ரபின் கன்னிகன் என்று ஆளாளுக்கு ஒரு பெயரை ஊகித்து சொல்லி கொண்டிருக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்களின் பாஷையில் சொல்வதென்றால் “இந்த நூற்றாண்டின் ரகசியக்கலைஞன்”.

பேங்க்சியைபற்றிய மேலதிக தகவல்களுக்கு:  http://www.banksy.co.uk/

January 26, 2011 at 2:38 am 5 comments

சித்திரமும் ‘கணிணி’ப்பழக்கம்!

சித்திரங்கள் வரைவதில் நான் இப்போதும் பயிற்சி மானவன் தான். இவை சில இணைய மற்றும் அச்சு இதழ்களுக்காக வரைந்தவை. ஒரே ஸ்டைலில் வரைவதும் சலிப்பூட்டும் விஷயம் ஆதலால் வெவ்வேறு மீடியம்களில் வெவ்வேறு ஸ்டைலில் வரைந்து பார்த்தவை இந்த சித்திரங்கள்!

தங்க மீன் இணைய இதழில் ஒரு சிறுகதைக்கு வரைந்த சித்திரம்

விகடன் பப்ளிகேஷனுக்காக‌ ஒரு சிறுகதை தொகுப்புக்கு…

காலச்சுவடுக்காக…

சும்மா…

அசோகமித்திரனின் அழிவற்றது தொகுப்புக்கு…

மோனோலிசாவின் எக்ஸ்‍ ரே!

பெண்களை அழகாக வரைவது ஒரு ஓவியனுக்கு முக்கியமான விஷயம். அந்த கொடுப்பினை எனக்கு இல்லை. அது என்னமோ என்ன மாயமோ தெரியல பொண்ணுங்க முகம் மட்டும் ஒழுங்கா வரைய வரமாட்டேங்குது. அனாடமிய ஒழுங்கா கத்துக்கோன்னு என் ஓவிய வாத்தியார்கள் சொன்னதை உதாசீனம் பண்ணியது ரொம்ம்ம்ம்ப தப்பு.

January 24, 2011 at 11:54 pm 3 comments

ஒரு அட்டை வடிவமைப்பாள‌னின் ஒப்புதல் வாக்குமூலம்!

தமிழ் இலக்கியத்தில் பாரதி முதல் ஜெ.பி. சாணக்யா வரை பலதலைமுறை எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு அட்டை வடிவமைத்திருக்கிறேன் என்கிற பெருமை(?)யுடன். இந்த அட்டை வடிவமைப்பு சார்ந்த அனுபவங்களையே எழுதலாம் என்று தோன்றியது. படிக்கலாம் என்று தோன்றினால் படிக்கலாம்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது புளியமரத்தின் கதை படித்துவிட்டேன். எங்களூர் நூலகம் வித்யவிலாசினியில் தூசிபடிந்து அட்டை உடைந்து தூளாகிப்போன ஒரு பழையபதிப்பு. அட்டையே இல்லை. நான் முதன்முதலாக அட்டைவடிவமைத்ததும் புளியமரத்தின் கதைக்குத் தான்.

ஓவியக்கல்லூரி முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த இடைவெளியில் நாகர்கோவிலுக்கு போயிருந்த போது வழக்கம் போல காலச்சுவடுக்கு இதழ் வாங்க போயிருந்தேன். அதற்கு முன்பு பலதடவை காலச்சுவடு அலுவலகத்துகு இதழ் வாங்க போகும்போது காலச்சுவடு கண்ணனை பார்த்திருக்கிறேன். சுந்தர ராமசாமியின் மகன் என்பதும் காலச்சுவடை இப்போது இவர்தான் நடத்துகிறார் என்பதும் அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அவரிடம் பேசியது இல்லை. எப்போதும் சின்னபய்யனாகவே என்னை நான் நினைத்துகொள்வதால் கொஞ்சம் பெரியவங்களை பார்த்தால் பேச தயக்கமாக இருக்கும். ஆனால் இந்ததடவை நானாகவே பேசினேன். “சுந்தர ராமசாமி இல்லயா…” என்று பேச்சைத்துவங்கினேன். அப்படியே கொஞ்சம் தன்வரலாறையும் எடுத்துவிட்டேன்.

அட்டை வடிவமைக்க ஆர்வம் உண்டா என்று கேட்டார். கம்ப்யூட்டரில் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆதிமூலமும் மருதுவும் கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் அந்த கலக்கு கலக்கியவர்கள். நானெல்லாம் கம்ப்யூட்டர் இல்லை என்றால் டிசைனர் ஆகியிருக்கவே மாட்டேன். ஊரில் செங்கல் சுமந்திருக்க வேண்டியது தான். புளியமரத்தின் கதை புத்தகத்தை எடுத்து வந்து இதற்கு புதிய அட்டை உருவாக்க வேண்டும் என்றார். கொஞ்சம் மிரட்சியாக இருந்தது. காட்டிகொள்ளவில்லை. கணிணி முன் அமர்ந்தேன். போட்டோஷாப்பை சொடுக்கினேன். ஒரு புளிய இலையை வரைந்தேன். அப்புறம் புளியமரம். ஒரு புளியமரத்தின் கதை… சுந்தர ராமசாமி… அவ்வளவு தான். ஒரு அட்டைவடிவமைப்பாளன் பிறந்து விட்டான்.

அடுத்த வாரமே சென்னைக்கு வந்துவிட்டேன். காலச்சுவடும், உலகத்தமிழ் அலுவலகமும் ஒரே இடத்தில் இயங்கிகொண்டிருந்தது. டிசைனராக அங்கே சேர்ந்துவிட்டேன். மனுஷ்யபுத்திரன், அரவிந்தன் , அய்யனார் , சிபிச்செல்வன் , நண்பர்கள் ஆனந்த், சரவணன், செல்வி எல்லோரும் ஒன்றாக வேலைபார்த்தோம். மனுஷ்யபுத்திரனின் இடமும் இருப்பும் எல்லாம் படித்துவிட்டு அவரை ஒரு உம்மென்று இருக்கும் கவிஞர் போல என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு கல்லூரி மாணவனைப்போல படு ஜாலியாக இருந்தார். கவிதைக்கு அடுத்ததாக அவருக்கு நல்லா வருவது கிண்டல். நீராலானது அப்போது தான் படித்தேன். அவரும் நானும் சேர்ந்து ஆத்மாநாமின் முழுத்தொகுப்பிற்கு அட்டை வடிவமைத்தோம். அது தான் பதிப்பில் வந்த எனது முதல் அட்டை வடிவம்.

ஜெ.ஜெ.சில குறிப்புகளுக்கு நான் ஒரு புதிய அட்டை வடிவமைத்தேன். காற்றில் அலையும் இலைகள் முன்பக்கத்தில். ஆனால் எனக்கு அதன் முந்திய பதிப்புக்கு ஆதிமூலம் வரைந்திருந்த அட்டை தான் பிடித்திருந்தது. புளியமரத்தின் கதைக்கு ஒரு கிளாசிக்கல் லுக் வருகிற மாதிரி ஒரு அட்டை வடிவமைத்தேன். மரியா தாமுவுக்கு எழுதிய கடிதம் என்கிற சிறுகதை தொகுப்புக்கு வடிவமைத்த அட்டை தான் திருப்தியாக இருக்கிற‌து என்று சுரா சொன்னார். சுராவின் இதம் தந்த வரிகள் தொகுப்புக்கு அவருடைய கையெழுத்தையே எழுதி வாங்கி பயன்படுத்தினேன். இறந்தகாலம் பெற்ற உயிர் தொகுதிக்கு அவருடைய கம்பீரமான தாடியுடன் கூடிய‌ ஒரு புகைப்படத்தை பயன்படுத்தினோம்.

சி.சு. செல்லப்பாவின் வாடிவாசலுக்கு அட்டை வடிவமைக்க செல்லப்பாவே எடுத்த ஜல்லிக்கட்டு போட்டோக்கள் சினேகிதன் என்கிற புகைப்படக்கலைஞரிடம் இருந்தது. அதை தேடிக்கண்டுபிடுத்து வாங்கி பயன்படுத்தினோம். செல்லப்பாவிற்கு புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வம் இருந்திருக்கிரது. அதுவும் ஜல்லிகட்டு மேல் அதீத ஆர்வம் போல. அவரது பிரம்மான்டமும் ஒச்சமும் தொகுப்புக்கு செல்லப்பாவின் ஒரு போர்ட்ரயிட் வரைந்து பயன்படுத்தினேன். நான் வரைந்த சித்திரங்களில் உருப்படியாக வரைந்த ஒன்று அது.

ஆ.இரா. வேங்கடாசலபதி குஜிலி இலக்கியங்கள் பற்றிய புத்தகம் ஒன்று பதிப்பித்தார். முச்சந்தி இலக்கியம் என்ற பெயரில் புத்தகமாக வந்தது. அதற்கு அட்டையை அந்த காலத்து குஜிலி இலக்கியங்களின் அட்டையின் ஸ்டைலிலேயே வடிவமைத்தோம். பார்ப்பதற்கு பழைய புத்தகம் போல இருந்த்து. வாசகர்கள் தவற விடுவார்களோ என்று சின்ன சந்தேகம் இருந்த்து. ஆனால் அதுவரை நான் வடிவமைத்த அட்டைகளிலேயே மிகுந்த பாராட்டுகளை பெற்றது அந்த புத்தகம் தான். இந்திரன் தீராநதி விமர்சனத்தில் அந்த அட்டையை குறிப்பிட்டு சிலாகித்திருந்தார். பி.ஏ. கிருஷ்ணன் டெல்லியிருந்து போன் செய்து பாராட்டினார்.

பி.ஏ. கிருஷ்ணனின் புலி நகக்கொன்றை முகப்பிற்கு கதை நிகழும் இடமான நாங்குனேரி பகுதிகளுக்கு சென்று என் நண்பன் பிரசன்னகுமார் எடுத்த புகைப்படங்களை பயன்படுத்தினோம். இந்த காலத்தில் எடுத்த படங்களுக்கு பழைய தன்மையை கொண்டுவந்து அட்டையை உருவாக்கினோம்.

காலச்சுவடு கண்ணனின் முதல் கட்டுரைதொகுப்புக்கு அவருக்கு பிடித்த ஓவியர் டக்ளசின் ஓவியங்களை சோழமண்டலம் ஆர்டிஸ்ட் வில்லேஜுக்கு நானும் அய்யனாரும் போய் வாங்கி வந்து பயன்படுத்தினோம். டக்ளஸ் ஒரு எக்சென்ட்ரிக்கான ஆர்டிஸ்ட்.
அரவிந்தன் தனது சிறுகதைத்தொகுப்பிற்காக ரொம்ப நாட்களாக ஒரு பெயின்டரின் ஓவியத்தை வைத்திருந்தார்.(ஓவியரின் பெயர் மறந்து விட்டது) அவரது குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுகொண்டிருக்கிற‌து தொகுப்புக்கு அதுதான் அட்டை. வித்த்யாசமான எனக்கு பிடித்த அட்டை.

தேவிபாரதியின் பிறகொரு இரவு காலச்சுவடில் படிக்கும்போதே என்னை பாதித்த கதை. அந்த தலைப்பில் சிறுகதைத்தொகுப்பு வந்த போது திரும்பிச்செல்லும் காந்தியின் இமேஜ் அட்டையில் பயன்படுத்தினேன். கதையை படித்த போது கனமாக என்னுள் இற‌ங்கி இருந்த காந்தியை அட்டை வழியாக வழி அனுப்பினேன்.

மனுஷ்யபுத்திரன் உயிர்மை ஆரம்பித்த போது சுஜாதா, ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுக்கு எல்லாம் நானும் மனுஷ்யபுத்திரனும் சேர்ந்து நிறைய அட்டைகள் வடிவமைத்தோம். சாப்ட்வேர்கள் தெரியாதே தவிர மனுஷ்யபுத்திரனுக்கு அட்டைகள் வடிவமைப்பதில் ஆர்வம் அதிகம். அட்டைகளில் வரவேண்டிய சித்திரங்களை அவரே பெரும்பாலும் தேர்வு செய்து வைத்திருப்பார். சுஜாதாவுக்கு அதற்கு முன்னால் பல பதிப்பங்கள் மொக்கையாக புத்தகங்களை தயாரித்திருப்பார்கள். அட்டையைப்பார்த்தால் அவர் ஒரு பல்ப் எழுத்தாளர் மட்டுமே என்று அவரது வாசகர்களே நம்பி விடுவார்கள். உயிர்மையின் புத்தக தயாரிப்புகள் அவருக்கு திருப்தியாக இருந்திருக்கும்.

ஜெயமோகன் பொதுவாக அட்டை விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு தடவை யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்த சென் கவிதைகளின் அட்டையை ஜப்பானிய நீர்வண்ன ஓவியங்களைப்போல வெளிறிய வண்னத்தில் செய்திருந்தேன். அந்த புத்தகத்திற்கான விமர்சனத்தில் அட்டையை பற்றியும் எழுதி இருந்தார்.

சாருநிவேதிதாவின் புத்தககங்களுக்கு அவரைப்போல கொண்டாட்டம் ததும்பும் அட்டைகளையே வடிவமைத்தேன். சீரோ டிகிரிக்கு அட்டையில் திற‌ந்திருக்கும் உதடுகளையே சீரோவாக பயன்படுத்தி இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த அட்டைகளில் அதுவும் ஒன்று.

எஸ். ராமகிருஷ்ணன் பொதுவாக அட்டையில் மிகுந்த ஆர்வம் எடுத்துக்கொள்வார். வர வேண்டிய படங்களை அவரே நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து எடுத்து வந்து விடுவார். கலர் எழுத்துரு போன்றவற்ரில் கூட மிகுந்த ஆர்வம் காட்டுவார். பிறக்கப்போகும் குழந்தைக்கு ஸ்வெட்டர் தைக்கும் தாயைப்”போல” எஸ். ராமகிருஷ்ணன் தெரிவார் எனக்கு.

மனுஷ்யபுத்திரனின் நீராலானது எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு. அதன் இரண்டாம் பதிப்புக்கு ஒரு ஷெல்லின் இமேஜை பயன்படுத்தி இருந்தோம். ஏதோ ஒரு வகையில் நீராலானது தொகுதியின் உள்தன்மையை அந்த அட்டை பிரதிபலித்தது.

எனக்கு பிடித்த கவிஞர் சுகுமாரன் அவருடைய கவிதைகளின் முழுத்தொகுப்பு பூமியை வாசிக்கும் சிறுமிக்கு நான் வடிவமைத்த அட்டையை பார்த்துவிட்டு எனையே அந்த புத்கத்தை மேடையில் பெற்றுக்கொள்ள சொன்னார். ஞானக்கூத்தன் வெளியிட நான் பெற்றுகொண்டது என் அட்டைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கருதுகிறேன்.

அடையாளம் சாதிக் புத்தக தயாரிப்பில் அதன் வடிவமைப்பில் மிகுந்த நுட்பத்தை எப்போதும் எதிர்பார்ப்பவர். புத்தகங்களுக்கு முதுகு பெண்களுக்கு முதுகு மாதிரி அழகாக இருக்க வேண்டும் இல்லை என்றால் சொதப்பி விடும். நகர்ந்து முன்னட்டையிலோ பின்னட்டையிலோ வந்து அழகை கெடுத்து விடும். புத்தகங்களில் முதுகின் அள‌வை துல்லியமாக அளந்து எனக்கு எப்போதும் சொல்லி விடுவார். அவர் எதிர்பார்க்கிற ஃபெர்பெக்ஷனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல நேரம் போனை எடுக்காமல் எஸ்கேப் ஆகி இருக்கிறேன். பெர்பெக்ஷனாக இருப்பதற்கே பெர்பெக்ஷன் பார்ப்பவர் அவர். ஒரு வடிவமைப்பாளனாக சில நேரங்களில் கடுப்பாக இருந்தாலும் வாசகனாக அவருடைய புத்தகங்கள் எனக்கு பிடிக்கும்.

இன்னும் நிறைய எழுத்தாள நண்பர்களுக்கெல்லாம் அட்டைகள் வடிவமைத்துருக்கிறேன். அதை ஒட்டி சுவாரஸ்யமான நிகழ்வுகளும் உண்டு. அதை எல்லாம் எழுதும் பொறுமை இப்போதைக்கு இல்லை. மூத்த எழுத்தாளர்களிலிருந்து இளம் எழுத்தாளர்கள் வரை எல்லோரிடமும் பேசவும் வேலைபார்க்கவும் கிடைத்த இந்த வாய்ப்பு இலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கக்கூடிய ஒன்று.

காலச்சுவடு கண்ணன், அரவிந்தன், ஆ.இரா. வேங்கடாசலபதி, மனுஷ்யபுத்திரன், அய்யனார், மற்றும் என் நண்பர்கள் ஆன்ந்த், சரவணன், செல்வி போன்றவர்களின் பாராட்டுகளும் என்னை மேலும் உற்சாகப்படுத்தியவை. நண்பர் திவாகர் விஷுவல் ஆர்ட் சம்பந்தமான விஷ்யங்களில் தேர்ந்த ரசனையும் அறிவும் உள்ளவர். அவருடைய கருத்துக்கள் விஷுவல் ஆர்ட் சார்ந்த என்னுடைய ரசனையை மேலும் கூர்மையாக்க பயன்பட்டது. இன்று ஷர்மி தான் என் அட்டையின் முதல் பார்வையாளர். ஒரு வாசகியாக அட்டை பற்றிய முதல் கருத்து அவளுடையது தான் இன்று.

அட்டைகள் புத்தகங்களின் முகங்கள். அதற்குப்பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது. புத்த்கங்களின் உள்ளடக்கம் சார்ந்த ஒரு ரசனை இருக்கிறது. நேர நெருக்கடியினாலும், போதிய செலவுகள் செய்ய முடியாத காரணத்தினாலும் பெரும்பாலான சமயங்களில் திருப்தியாக அட்டைகள் அமையாது. ஆங்கில பதிப்பகங்கள் அட்டைகளுக்கு என்றே பிரத்யேகமாக பிரபல புகைப்படக்காரர்களை அணுகி ஒரு ப்ரோஜக்ட் போல பண்ணுகிறார்கள். அட்டைகளுக்கு கூட ராயல்டி வழங்குகிறார்கள். நம்மூரில் எழுத்தாளர்களுக்கே இப்போதெல்லாம் தான் ஒழுங்காக ராயல்டி கிடைக்கிறது. அட்டைகளுக்கெல்லாம் ராயல்டி கிடைக்க இன்னும் பல புத்த்க கண்காட்சிகளை கடந்தாக வேண்டும் போல.

January 23, 2011 at 10:31 pm 14 comments

புத்தக அட்டைகள்

நான் வடிவமைத்த சில புத்தக அட்டைகள்



January 23, 2011 at 1:39 am 5 comments

தாழ்வாரம்

திரைக்கதை



வெளி / மலையடிவாரம் – ஊர் / காலை

இருபது வயது மதிக்கத்தக்க, லுங்கியும் கசங்கிய சட்டையும் அணிந்த ஒரு இளைஞன் மலையிலிருந்து இறங்கி சமவெளியை நோக்கி நடக்கத்துவங்குகிறான். மெல்லிய சூரிய ஒளி அவன் மீது விழுகிறது. (காற்றின் சப்தம் பின்னணியில் ரீங்கரிக்கிறது) அவன் முதுகு வழியாக பார்க்கும் போது தூரத்தில் ஒரு கிராமம் சின்னதாகத்தெரிகிறது. அதை நோக்கிதான் அவன் நடந்து கொண்டிருக்கிறான். செருப்புகள் இல்லாத அவன் பாதங்கள் தொட்டாவாடி செடியின் சிறுமுள்ளுகளை சலனமில்லாமல் மிதித்து முன்னேறுகிறது. வலியை உணராத பாதங்கள். சில நாட்கள் வளர்ந்த தாடியும் மீசையுமாக அல்ட்சியமான பார்வையுடன் அவன் முகம் அண்மைக்காட்சியில் கடந்து செல்கிறது. வேகமில்லாத ஒரு அலட்சிய நடை. வழியில் கருவேல மரங்களுக்கிடையிலிருந்து சில பறவைகள் அவன் அசைவுகளை கேட்டு திடுக்கிட்டு எழுந்து பறக்கின்றன். அவற்றையும் அவன் எந்த உணர்வுமற்ற கண்களுடன் பார்த்துகொண்டே நடக்கின்றான். அவனுக்குப்பின்னால் நெடிந்துயர்ந்து நிற்கும் மேற்குதொடர்ச்சி மலை பின்னுக்கு சென்று கொண்டே இருக்கிறது. ஊரின் எல்லைய அவன் அடைந்து ஊரைநோக்கி நடக்கிறான். படுத்திருந்த ஒரு நாய் எழுந்து அவனை நோக்கி ஊளையிட்டு குரைக்கதுவங்குகிறது. இவன் முன்னால் நடக்க நடக்க அவனுக்கு முன்னாலே குரைத்தபடி நாய் ஊருக்குள் ஓடுகிறது. ஒரு சிறுவன் ஓட்டுகின்ற சைக்கிளை பிடித்த படி இன்னொரு சிறுவன் ஓடி வருகிறான். சைக்கிள் கோணல் மாணலாக ஓடிக்கொண்டு வருகிறது. எல்லைக்கு வரும் சைக்கிள் சிறுவர்கள் இவனை பார்க்கிறார்கள். சைக்கிள் தடுமாறி விழுகிறது. ஓட்டிவந்த சிறுவன் அரக்கபரக்க எழும்பவும் மற்ற சிறுவன் சைக்கிளை இழுத்து தூக்கி இருவருமாக பீதியடந்த கண்களுடன் அவனை பார்த்தபடி வழி விட்டு ஒதுங்குகிறார்கள். பயம் தெரியும் கண்களுடன் சிறுவர்களின் முகம் அண்மைகாட்சியில் வந்து மறைகிறது. அவன் நடந்து கொண்டே இருக்கிறான் இவர்களை பார்க்காதது போல. அவன் கட்ந்து போனதும் சிறுவர்கள் இன்னொரு வழியாக சைக்கிளை தள்ளிக்கொண்டு ஊருக்குள் ஓடுகிறார்கள். முதலில் சைக்கிளை ஓட்டிவந்த சிறுவன் அவிழ்ந்துபோன டவுசரை கைகளில் இறுக்கப்பற்றியபடி ஓடுகிறான். அவனுக்கு முன்னால் ஊருக்குள் நுழைந்த சிறுவர்கள் சைக்கிளை ஒரு மரத்த்டியில் சாத்தி வைத்துவிட்டு சற்று தள்ளி அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருக்கும் கூட்டத்தைப்பார்த்து கத்துகிறார்கள். ஒருவனை ஒருவன் மிஞ்சும் கத்தல் ’’கோவியண்ணன் வ்ராரு கோவியண்ணன் வ்ராரு’’ என்றவாறு மேலும் ஓடுகிறார்கள். சீட்டாடிக்கொண்டிருந்தவர்கள் சடாரென அதிர்ச்சியுற்று ஒருவரையருவர் பார்த்த படி எழுந்து ஊர் எல்லையைப் பார்க்கிறார்கள். முகங்களில் பதட்டம். அவர்கள் பார்க்கும் திசையிலிருந்து கோவி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தான்…


June 2, 2010 at 1:28 pm 2 comments

கமலஹாசனை தைத்த முள்.

எழுத்தாளர் முத்து மீனாள் எழுதிய சுயசரிதை “முள்”  கடந்த வருடம் வெளியாகி பரவலான கவனத்தைப்பெற்றது. இது வரை தமிழில் இப்படி ஒரு சப்ஜெக்டை யாரும் தொட்டதில்லை என்று சொல்லலாம். அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு “THORN” (மொழிபெயர்ப்பு சுபஸ்ரீ தேசிகன்.) நேற்று வெளியிடப்பட்டது. இந்நூலை வெளியிட்டு பேசிய கமலஹாசன் “இந்நூல் தன் நெஞ்சில் தைத்த முள். வெறும் ஒரு இலக்கியபடைப்பாக இந்நூலை பார்க்கவில்லை சமூகத்தில் இருக்கிற தீமைகளையும், கருணையையும் நேர்மையாக எளிமையாக வெளிப்படுத்தி இருக்கிறது” என்று கூறினார். ஜப்பானின் நிப்பான் ஃபவுன்டேஷனின் உதவியுடன் இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டுள்ளது. எனது நண்பர் எழுத்தாளர் அய்யனார் (முத்துமீனாளின் கணவர்)  “மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ்” மூலம் இந்நூலை வெளியிட்டிருக்கிறார். முடிந்தால் வாங்கி படியுங்கள். இந்நூலுக்கு அட்டை வடிவமைத்தது அடியேன் தான் என்பது அடிஷனல் தகவல்.

நினைவுப்பரிசாக ஒரு நூலை நான் பெற்றுகொண்டேன். (நடுவில் முத்துமீனாள்.)

January 23, 2010 at 2:10 pm 5 comments

உங்களுக்கு ஓவியத்தில் ஆர்வம் உண்டா?

இது என்னுடைய பழைய சில கிறுக்கல்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் வரைந்தவை. எல்லா வகை வரைதல் முறைகளிலும் முயன்று பார்க்கும் ஆர்வத்தில் வரைந்தவை. எதையும் பாதுகாத்து வைக்கும் பழக்கம் இல்லாத எனக்கு ஓவியக்கல்லூரி வாழ்க்கையின் ஞாபகங்களாக என்னுடன் வந்த மிச்சங்கள். சேர்த்துவைத்து பார்க்கும்போது தான் தொலைத்து விட்ட ஓவியங்களை பற்றிய கவலை எழுகிறது.

art collect 1

art collect 2

art collect 3

art collect 4

art collect 5

art collect 6

உங்களுக்கு பிடித்திருந்தால் அடுத்ததாக இன்னொரு ‘செட்’ போட உத்தேசம்.

August 14, 2009 at 6:26 pm 9 comments

Older Posts


வாசித்தவர்கள்

  • 15,805 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2012
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Follow

Get every new post delivered to your Inbox.