Archive for February 20, 2011
சத்யா: ஒரு கலைஞனின் பயணம்…
“Photography takes an instant out of time, altering life by holding it still.”
Dorothea Lange
இருள் என்பது குறைந்த ஒளி என்றான் பாரதி. இருளுக்கும் ஒளிக்குமிடையில் நடக்கும் பங்காளி சண்டை தான் புகைப்பட கலை. எவ்வளவு ஏரியாவை நான் எடுத்துக்கொள்வது என்று இருளும் எவ்வளவு ஏரியாவை நான் ஆக்ரமிப்பது என்று ஓளியும் போடும் சண்டை. அந்த சண்டையை சமாதானம் செய்யும் நாட்டாமை போல தீர்ப்பு சொல்லி நொடியில் காலத்தை உறையச்செய்து ஒரு ஃப்ரேமுக்குள் அடக்கும் பெருங்கலைஞன் தான் புகைப்படக்காரன்.
உண்மையில் இருள் தான் ஸ்ட்ராங்கான தாதா மாதிரி. காரணம் அவன் எங்கும் இருக்கிறான். ஒளியைத்தான் புகைப்படகலைஞன் உருவாக்க வேண்டி இருக்கிறது. ஒளியைத்தான் அவன் வழிநடத்த வேண்டி இருக்கிறது. ஒளியை ஆளத்தெரிந்தவன் சிறந்த புகைப்படகலைஞனாகிறான்.
அதே நேரம் இருள் இல்லாமலிருந்தால் ஒளிக்கு மதிப்பில்லை. போட்டோகிராபியின் அகராதியில் ஒளி மட்டுமே அதிகரித்து விட்டால் “ஓவர்” என்றும் இருள் அதிகமாகி விட்டால் “அன்டர்” என்றும் அர்த்தம்.
இருளும், ஒளியும் தான் பேஸ்மென்ட் என்றாலும் பில்டிங் ஸ்டராங்காக தேவை கோணம், கம்போசிங், டைம்,(கலர் ஃபோட்டோகிராபி என்றால்) கூடவே வண்ணங்கள் பற்றிய அறிவு. இந்த அடிப்ப்படைகளை வைத்து தொடர்ந்து சோதனைகள் செய்பவன் சிறந்த புகைப்படகலைஞனுக்கான பாதையில் பயணிப்பவன்.
நண்பன் சத்யாவின் பாதை அப்படிப்பட்டது என்று நான் அறிவேன். ஓவியக்கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் ஜூனியர். போட்டோகிராபியில் அதீத ஆர்வமுள்ள ஒரு நண்பனாக எனக்கு அறிமுகமானான். போட்டோகிராபியில் எனக்கு பாண்டித்யம் கிடையாது ஆனால் ரசனை உண்டு. ஓவியக்கல்லூரியில் படிக்கும் போது பாடத்திட்டத்தின் பொருட்டு அனைவருமே ஒருதடவையாவது கேமராவைத்தூக்குவார்கள் ஆனால் அதை தொடர்பவர்கள் மிகச்சிலரே.
கல்லூரியில் படிக்கும் போதிருந்தே சத்யாவின் புகைப்படங்களை ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன். ஓவியக்கல்லூரியின் ஓளி பரவிய மரக்கூட்டங்களையும், சருகுகளையும், காலம் புகையாக படிந்த கல்லூரி கட்டிடங்களையும், இருளில் மயங்கித்தெரியும் மாணவ உருவங்களையும் தொடர்ந்து அவன் பதிவு செய்த புகைப்படங்கள் இருளையும் ஒளியையும் வைத்து சோதனை செய்ததாக எனக்கு தோன்றும்.
கல்லூரி சுற்றுலாவில் எடுத்த வட இந்தியாவின் டாக்சிகள், விளம்பர பலகைகள், வண்ணமயமான மனிதர்கள் மற்றும் சிறுவர்கள் படங்கள் வண்ணத்திலும், கம்போசிங்கிலும் தொடர்ந்து அவன் செய்த எக்ஸ்பெரிமென்ட் என்றே நினைக்கிறேன்.
பிறகு விகடனின் மாணவ புகைப்படக்கலைஞனாகவும் இருந்தான்.
கல்லூரி முடித்து சினிமாட்டோகிராபி மேல் வந்த ஆர்வத்தால் முயற்சி செய்த நேரங்களில் தேனாம்பேட்டையின் பேச்சிலர் மொட்டைமாடியில் உட்கார்ந்து புகைப்படங்கள், பெயின்டிங், சினிமா என்று பேசிக்கொண்டிருப்போம்.
2003இல் தேசிய அளவில் வெளியான ஒரு காலண்டரில் பன்னிரெண்டு புகைப்படக்கலைஞர்களில் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டான். பிறகு இந்தியாவின் பெருங்கலைஞனில் ஒருவரான பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்தபின்பு சினிமா என்கிற கனவின் வாசல் மெல்ல திறந்துகொண்டது.
சினிமா என்பது கலைமனதை மட்டுமல்ல கடுமையான உழைப்பையும் வேண்டிநிற்கும் துறை. பி.சியின் பட்டறையில் சத்யாவின் ஏழு வருட கடின உழைப்பு இன்று தமிழ்சினிமாவில் அவனுக்கு பெரும் கவனத்தை பெற்றுத்தந்திருக்கிறது.ஆம், யுத்தம் செய் திரைப்படம் வழியாக தன் சினிமாட்டோகிராஃபி பயணத்தையும் ஆரம்பித்திருக்கிறான்.
சத்யாவின் புகைப்படங்களை பார்க்க
http://www.flickr.com/photos/klicksathya/
இன்றும் தன் ஐஃபோன் கேமராவில் வாழ்வின் அரிய நொடிகளை பதிவுசெய்ய தவறுவதில்லை.
சத்யாவிற்கு என் வாழ்த்துக்கள்.





