செந்நிலவு

சிறுகதை

 

“இந்த சிக்கன் ரொம்ப நல்லா இருக்கு. இந்தமாதிரி இது வரை சாப்பிட்டதில்லை” மலையாளத்தில் சொன்னான் பிஜு வர்கீஸ். அவனுக்கு பிடித்தமான ரெமி மார்டின் இரண்டு பெக்குகள் ஏற்கனவே உள்ளே போயிருந்தது.

“நம்ம ரெஸ்டாரண்டுல புதுசா ஒரு செஃப் வந்திருக்காங்க” என்றான் மேனேஜர்.

அந்த ரெஸ்டராண்டின் பெயர் சம்ஸ்தான். அது ‘அரேபியன் க்யூன்” பயணியர் கப்பலில் இருக்கும் ரெஸ்டாரண்ட்.

சாச்சன்ஸ் க்ரூப் அரபு எமிரேட்ஸில் இயஙகும் மிகப்பெரிய வணிக நெட் ஒர்க். டோனி புதியகுளங்கர என்னும் பத்தனம்திட்டக்காரன் வியாபாரியால் ஆரம்பிக்கபட்டு இன்று பல மலையாளிகளின் கூட்டு வணிகத்தால் வளர்ந்து நிற்கும் ஸ்தாபனம். துபாயிலிருந்து கொச்சிக்கு ஒரு சொகுசுக்கப்பல் என்பது டோனி புதியகுளங்கராவின் வணிக கனவுகளில் ஒன்று. ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் ஒரு மெடிடரேனியன் சொகுசுக்கப்பலை இரண்டாம் விலைக்கு வாங்கி ‘அரேபியன் க்யூன்ன்’ என்கிற பெயரில் துபாய்க்கும் கொச்சினுக்கும் நடுவில் ஓட விட்டார்கள.

விமானத்தில் என்றால் நான்கு மணி நேரம் தான் இந்த கப்பலில் நான்கு நாட்கள் ஆகிறது என்பதால் மலையாளிகள் முதலில் தயங்கினார்கள். இப்போதும் பயணியர் எண்ணிக்கை குறைவு தான். கொஞ்சம் சுற்றுலா மனப்பான்மை கொண்ட மலையாளிகள் மட்டுமே கப்பலில் வருகிறார்கள். பிஜு வர்கீஸும் அதில் ஒருவன். அவனும் கேரளத்திலும் எமிரேட்ஸுலுமெல்லாம் தொழில் செய்யும் ஒரு பிஸினஸ்மேன் தான். ஆண்டுக்கு இரண்டு தடவையேனும் இந்த கப்பலில் வருவதையும் போவதையும் வழக்கமாக வைத்திருக்கிறான். ஆகவே ரெஸ்டாரண்டில் அனைவரும் பழக்கமானவர்கள்.

“யாரது புதிய செஃப்”என்றபடி சாப்பிட்டு முடித்து எழுந்தான் பிஜு வர்க்கீஸ்

“ஐ வில் இண்ட்ரட்யூஸ் சார்” என்றான் மேனேஜர்.

பிஜு கைகளை கழுவிக்கொண்டு டிஷ்யூ பேப்பரால் ஒற்றியபடி தன் மேஜைக்கு திரும்பியபோது ஒரு இளம்பெண் அவன் அருகில் வந்தாள். செஃபுக்குரிய உடையில் இருந்தாள்.

“ஹலோ சார். ஐ ஆம் மாயா. புதிய செஃப்” என்றாள்.

“ஹாய். ஐ ஆம் பிஜு வர்கீஸ் ” என்றபடி கை கொடுத்தான். அவன் வழக்கமாக கப்பலில் சந்திக்கும் வெளுத்த நிறமுள்ள பெண் அல்ல அவள். சாக்லேட் நிறத்தில் முகம். பெரிய கண்கள். திருத்தமான மூக்கு, உதடுகள். செஃப் தொப்பியின் வெண்மை அவள் முகத்தை இன்னும் கருமையேற செய்திருந்தது. ஒரு பழங்கால கற்சிலை பெண்ணுக்கு செஃபின் ஆடை அணிவித்தது போல தோன்றியது. ஈர்க்கும் அழகுடன் இருக்கிறாள் என்பதை பார்த்த உடனே பிஜு வர்கீஸ் கண்டுகொண்டான்.

ஆனால் அவள் கையை குலுக்கியபோது அது மென்மையாக இல்லை. கிச்சன் கத்திகளுக்கும் பாத்திரங்களின் கைப்பிடிக்கும் பழகி கொஞ்சம் கடினமாகி விட்டிருந்தது என்று தோன்றியது. அவளுடைய சுட்டு விரலில் பிளாஸ்டர் போட்டிருப்பதை அப்போது தான் பார்த்தான்.

“வாட் ஹேப்பண்ட் யுவர் ஃபிங்கர்”என்றான்

“நைஃப் பட்டு விட்டது” என்றாள்

“பட் யுவர் டிஷ்ஷெஸ் ஆவ்சம். அந்த சிக்கன் கிரேவி. எக்ஸ்றா ஆர்டினரி. நான் இதுவரை இப்படி ஒரு ருசியை பார்த்ததில்லை”என்றான்

“தேங்க் யூ”என்றாள் அவள்.

“யூ ஆர் ஆல்சோ ப்யூட்டிஃபுல்”என்றான். இதை அவள் எதிர்பார்க்காதது போல கொஞ்சம் வெட்கப்படவே . “ஹேய் சாரி. எனக்கு எது பிடிச்சிருந்தாலும் அப்பவே சொல்லிடுவேன்” என்றான்

“நோ ப்ராப்ளம்”என்று புன்னகைத்தாள் மாயா “எனிவே தேங்க்ஸ் அகெய்ன்”என்றாள்

“நாட்டில் எவிடயாணு” என்றான்

“கேரளா இல்லை தமிழ்நாடு. குழித்துறை அருகில் மேல்புறம்னு ஒரு ஊர்” என்றாள்

“ஓ தமிழா”

“அரை மலையாளி”என்று சிரித்தாள்.

“ஓகே. இஃப் யூ இண்ட்ரெஸ்டட், ஆர் ஹேவ் டைம், மேல் தளத்தில் ஸ்விம்மிங் பூல் பக்கத்துல தான் நான் பெரும்பாலும் இருப்பேன். நைட் ஒரு மணி வரைக்கும் கூட. விரிஞ்சு கிடக்குற கடலுக்கு நடுவில் நின்று இரவு நிலவ பார்க்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நேரமிருந்தா நீயும் வரலாம் ” என்று வாய் நிறைய புன்னகைத்தான்.

….

செஃப்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைபோதுமான வசதிகளோடு இருந்தது. அடுக்குகளாக அறையில் நான்கு கட்டில்கள். உடைமாற்றிக்கொண்டிருந்த மாயாவை பார்த்தாள் கிளாடி. சக செஃப். கொல்லம் காரி. கடந்த இரண்டு வருடமாக இந்த கப்பலில் வேலை பார்க்கிறாள். மாயாவை விட நான்கைந்து வயது மூத்தவள்.

“ஹேய் அந்தாளு ஒரு பெண்ணு பிடியனாக்கும். புளுத்த பணமுள்ள ஆளு. எப்படியும் வருஷத்துக்கு ரெண்டு தடவ இந்த கப்பல்ல வருவான். கப்பல்ல வேலை செய்யுற பொண்ணுங்கல்ல இருந்து தனியா வருகிற டூரிஸ்ட் பெண்கள் வரைக்கும் யாரையும் விட்டு வைக்கிறது கிடையாது. பேசிப்பார்ப்பான் மசியலனா பணத்த விட்டு பார்க்கிறது. அதுக்கும் சரி வரலனா மிரட்டுறது. பெண்கள்னா செக்ஸ் மிஷின்னு அந்த ஆளுக்கு நினைப்பு. போனதடவ கூட மசாஜ் ஸ்பால இருக்கிற ஒரு பொண்ணு கிட்ட வேலையைக்காட்டி பிரச்சினையாச்சு.” என்றாள் கிளாடி.

“அப்புறம் எப்படி இந்தாளு திரும்ப இந்த கப்பல்ல வாறான். பிளாக் லிஸ்டுன்னு ஒண்ணும் கிடையாதா”எண்றாள் மாயா

“உண்டு. ஆனா இவன் நம்ம எம்டி டோனி புதியகுளங்கரயோட ஃப்ரண்டு. இந்த கப்பலிலும் இவன் இன்வெஸ்ட் பண்ணி இருக்கிறான் என்று கூட சொல்கிறார்கள்” என்றாள் கிளாடி.

“வாய் நிறைய சிரிச்சுகிட்டு பேசினான்னு அந்த ஆள எல்லாம் பார்க்க போயிடாதே” என்று சிரித்தாள் கிளாடி.

மாயாவும் சிரித்தாள். ஆனால் உடை மாற்றிக்கொண்டு “நான் மேல் தளத்துக்கு போறேன். நீ தூங்கு” என்றபடி கிளம்பினாள். கிளாடி மாயாவை முறைத்தாள். மாயா அதற்கும் சிரித்தாள்.

…..

“ஹாய் வெல்கம் வெல்கம் “என்றான் பிஜு வர்கீஸ். “நீ வருவேன்னு நான் எதிர்பார்க்கல”என்றான்.

“ஐ நீட் ஜஸ்ட் ரிலாக்ஸேஷன். நீங்களும் கூப்பிட்டீங்க. “என்று புன்னகைத்தாள் மாயா

“ட்ரிங் பண்ணுவீங்களா” என்று டின் பியரை நீட்டினான்.

“நோ தேங்க்ஸ். எப்பவாச்சும் ஒயின் மட்டும் தான்.”

“ஐ வில் ஆர்டர் ஃப்ரம் பார்” என்றான்

“இல்லை இல்லை வேண்டாம். ஐ ஜஸ்ட் சிட் சம் டைம்ஸ் அவ்வளவு தான்”

நீச்சல் குளத்தில் சிலர் குளித்து கொண்டிருந்தார்கள். சின்ன டென்னிஸ் கோர்ட்டில் சிலர் டென்னிஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே சாய்வு நாற்காலிகளில் சிலர் பேசிக்கொண்டும் குடித்து கொண்டுமிருந்தார்கள்.

“ இந்த மலையாளிகள் எல்லாம் ஒம்பது மணின்னா போர்த்திகிட்டு தூங்க போயிடுவாங்க. பத்து மணிக்கு மேல நீயும் நானும் மட்டும் தான் இங்க இருக்க வேண்டி இருக்கும். இப்படி கடல் நடுவுல நின்னு வானத்த பார்க்கிறது தனி ஒரு சுகம். நீ அட்லீஸ்ட் பனிரெண்டு மணி வரைக்குமாவது இருந்து பார்த்திட்டு போகலாம். கொஞ்சம் மேகமூட்டம் இருக்கு விலகினா அழகா நிலவு தெரியும். ப்ளீஸ் சிட்”என்று பக்கத்தில் ஒரு சாய்வு நாற்காலியை காட்டினான்.

மாயா உட்கார்ந்தாள்

“நீ எப்டி செஃபா. அதுவும் கப்பல்ல”என்றான் பிஜு வர்கீஸ்

“குக்கிங் ரொம்ப பிடிக்கும். சென்னை அடையார்ல கவர்ன்மெண்ட் இன்ஸ்டிட்யூட்ல படிச்சேன். சென்னைலயும் பெங்களூர்லையும் சில ஸ்டார் ஹோட்டல்கள்ல ட்ரெயினியா இருந்தேன். அப்புறம் இந்த அரேபியன் க்யூன்” என்றாள்

“வெரி குட். யூ நோ ஐ ஆம் எ ஃபூடி. குறிப்பா நான்வெஜ். தேடி தேடி சாப்பிட்டுருக்கேன். வடக்கன் கேரளத்தின் கல்லுமேக்கா முதல் ஆஃபிரிக்கன் புல்ஸோட பால்ஸ் வரைக்கும் எல்லா வகையான நான்வெஜ்ஜுகளும். நான் சாப்பிடாததுன்னு பூலோகத்துல எந்த ஜீவ ராசியும் கிடையாது”என்றான்

மாயா சிரித்தாள் “உண்மையாவா” என்றாள்

“ஆமா”என்றான்

“ஹூமன் ப்ளெஷ்?”என்றாள்.

பினு வர்கீஸ் திடுக்கிட்டு விட்டான். அப்புறம் மெல்ல சிரித்துகொண்டு “பட் ஐ ஆம் நாட் கானிபல்” என்றான்.

“ஆனா நம்ம நாட்டுலயும் கானிபல்ஸ் இருந்திருக்காங்க தெரியுமா”என்றாள் மாயா

“இருந்திருக்கலாம். ஆதி காலத்துல”என்றபடி பியரை உறிஞ்சினான்.

“ஆதி காலத்துல இல்ல. போன நுற்றாண்டுல கூட” என்றாள்

“என்ன சொல்ற” என்றான் பிஜு வர்கீஸ்.

“எங்க அம்மா சொன்ன கதை ஒண்ணு இருக்கு. கதையில்ல உண்மையிலேயே நடந்த சம்பவம்ணு சொல்வாங்க” என்றாள்

“சரியாக நூறு வருடங்களுக்கு முன்னாடி. 1920கள்ல இது நடந்திச்சு. தெக்கே திருவிதாங்கூர் சமஸ்தானம். வடக்கே கொச்சின் சமஸ்தானம். கிழக்கே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆம்பனூர்னு ஒரு குட்டி தேசம். இன்னைக்கு அம்பூரி, குடப்பனமூடு எல்லாம் இருக்கே கிட்டத்தட்ட அந்த ஏரியா. கொஞ்சம் மலைப்பிரதேசம் மாதிரி தான். பதினாறாம் நூற்றாண்டு வாக்குல வடக்கேருந்து மேற்கு தொடர்ச்சி மலையோரமாவே வந்த ஏதோ ஒரு ஆரிய குலத்தை சேர்ந்தவர்கள் எட்டு காணி குடிகளை அழித்து உருவாக்கிய சிறிய தேசம். பெரும்பாலும் மலைக்காணிகளை விவசாயக்குடிகளாக மாற்றி ஆட்சி செஞ்சிருக்காங்க.

குறிஞ்சி நில மக்களுக்கு விவசாயமே தெரியாது. ஆனா அவங்கள கிட்டத்தட்ட விவசாய அடிமைகளாகவே நடத்தியிருக்காங்க ஆட்சியாளர்கள். உற்பத்தி பொருட்களை அங்கருந்து அகஸ்தியக்கூடம் மலைகள் வழியாக வண்டிப்பாதைகளை ரகசியமா உருவாக்கி பாண்டி நாட்டின் சில பாளையக்காரர்களுக்கும் ஜமீந்தாருகளுக்கும் வணிகம் செஞ்சிருக்காங்க. பல நூற்றாண்டுகளாக இது நடந்திருக்கு. திருவிதாங்கூருக்கோ பிரிட்டிஷாருக்கோ கூட அப்படி ஒரு சின்ன தேசம் இருக்கிறது தெரியாது.

1920களில அந்த ஆம்பனூர் தேசத்தின் ஆட்சித்தலைவனாக இருந்தவன் ஆம்பன் ஆர்யகலிங்கன் கோதகாமன். அவனுடைய தலைமை அமைச்சராக இருந்தவன் வெட்டத்தில் சூர்யநெல்லன். இருவரும் மக்களை செய்த கொடுமைகள் சொல்லி மாளாது என்கிறார்கள். தங்கள் வணிகத்தொடர்புகளை அதிகரிக்கவும் வளர்க்கவும் தமிழகத்திலிருந்து பாளையக்காரர்களையும் ஜமீந்தார்களையும் அடிக்கடி ஆம்பனூருக்கு ரகசியப்பாதைகள் வழியாக அழைத்து விருந்து வைப்பார்கள். கோதகாமனுக்கு குடியும் விருந்தும் என்றால் கொண்டாட்டம். செய்வதற்கு வேறு வேலைகளும் இல்லை. உழைப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும் அடிமைகளாக மக்கள் இருக்கிறார்கள். திருவிதாங்கூர் போன்ற சமஸ்தானங்களே பிரிட்டிஷாருக்கு கப்பம் கொடுக்க திண்டாடிக்கொண்டிருந்த காலம். மக்களின் உழைப்பில் ஆம்பனூரின் கஜானா எப்போதும் நிறைந்து கொண்டே தான் இருந்தது.

விருந்துகளில் கலந்து கொள்பவர்களுக்கு இரவில் மக்களிடமிருந்தே அழகிய பெண்களை தேர்ந்து அனுப்புவதையும் வழக்கமாக வைத்திருந்திருந்திருக்கிறார்கள். யாரும் எதுவும் எதிர்த்து கேட்க முடியாத சூழல்.

விருந்துக்கு சமைத்து போடுவதற்கென்று இருந்த வைப்பு பொரை என்னும் அடுக்களையே பிரம்மாண்டமாக இருக்குமாம். அங்கே தலைமை சமையல் காரனாக இருந்தவர் ஐயன் கருத்த வேணு. அடிமை மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரும் அடிமை தான். ஆனால் சிறந்த சமையல் காரர். எல்லா வகையான சமையலிலும் அபார திறமை கொண்டவர். கருத்த வேணுவின் மனைவி தெச்சியம்மை. அவள் அவ்வளவு அழகாக இருப்பாளாம். சிறுவயதிலேயே திருமணம் என்பதால் முப்பத்தாறு வயதிலேயே நான்கு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டிருந்தாள். மூத்தவள் பதினைந்து வயதான செண்பகாம்மை , அடுத்தவள் பதிமூன்று வயதான பாறுவாம்மை, அடுத்த இருவரும் பத்து வயதுக்கு உட்பட்ட சேம்பியம்மையும் நீலியம்மையும். நான்கு குழந்தைகளும் அழகிய கறுப்பிகள்.

நாட்டு பெண்களை ஜமீந்தாரர்களுக்கும் பாளையக்காரர்களுக்கும் படுக்கைக்கு அனுப்பும் ஆர்யலிங்கன் கோதகாமன் மற்றும் வெட்டத்தில் சூர்யநெல்லனின் கொடுமையைக்கண்டு கருத்த வேணுவிடம் அவ்வப்போது தெச்சியம்மை கொதிப்பதுண்டு. “நாம என்ன செய்ய முடியும். அடிமைகள்” என்பாராம் கருத்த வேணு. தெச்சியம்மைக்கு தங்கள் பிள்ளைகளை நினைத்தும் பயம். குழந்தைகள் வளர்ந்து கொண்டு வேறு இருக்கிறார்கள்.

ஒரு நாள் பாண்டி நாட்டிலிருந்து வந்திருந்த இரண்டு ஜமீந்தார்கள் மற்றும் ஒரு பாளைய காரருக்கு விருந்து முடிந்து பெண்களை அனுப்பும் படலம் நடந்திருக்கிறது. தெச்சியம்மையை வைப்பு புரையில் கண்ட ஒரு ஜமீன் இன்றிரவுக்கு அவள் தான் வேண்டும் என்றிருக்கிறார். வெட்டத்தில் சூர்யநெல்லன் வந்து அவளை தயாராக சொல்லவும் தெச்சியம்மை கொதித்து எழுந்து விட்டாள். இத்தனை நாள் மனதிற்குள் பொருமிக்கொண்டிருந்த கோபம் அப்படியே கிளம்பி விட்டது. இது வரை பாதிக்கப்பட்ட எல்லா பெண்களின் மொத்த கோபமும் பெரிய வெடிப்பாக கிளம்ப அடுக்களையில் தேங்காய் வெட்டும் வெட்டோத்தியை எடுத்துக்கொண்டு ஆர்யலிங்கன் கோதகாமனையும் சூர்யநெல்லனையும் அந்த ஜமீந்தார்களையும் பாளையக்காரனையுமெல்லாம் வெட்டி சாய்க்க கிளம்பி இருக்கிறாள்.

ஆனால் உடலில் தினவும் ஆறடிக்கு மேல் உயரவும் வலிவும் கொண்ட சூர்யநெல்லன் அவள் கையிலிருந்த வெட்டோத்தியை வாங்கி “அடிமைக்கு இவ்வளவு திமிரா” என்றபடி அவளது இடது மார்பை அரிந்து வீழ்த்தி இருக்கிறான். ரத்தம் ஆறாக பெருக அவள் தரையில் இழைந்தபடி இருந்திருக்கிறாள். சம்பவம் அறிந்து கருத்த வேணு ஓடி வர அவனையும் வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள்.

தெச்சியம்மையின் இடது மார்பை ஒரு தட்டில் வைத்து சமையலறைக்கு கொண்டு சென்ற கோதகாமனும் சூர்யநெல்லனும் அதை அரிந்து கோழியிறச்சியிலிட்டு சமைத்து ஜமீனுக்கும் பாளையக்காரருக்கும் பரிமாற சொல்லி இருக்கிறான். எல்லாரும் விருந்தில் அதை ருசித்து சாப்பிட்டுமிருக்கிறார்கள்.”

என்று சொல்லிவிட்டு பிஜுவர்கீஸை பார்த்தாள் மாயா. பிஜு வர்கீஸ் வாயில் வைத்திருந்த பியரை மிடறாக விழுங்கிக்கொண்டு அவளை பார்த்தான்.

“ரத்தம் ஆறாக பெருக தரையில் இழைந்தபடி வைப்பு புரையின் பின்னாலிருக்கும் குடிலுக்கு வந்த தெச்சியம்மை தனது நான்கு பெண் பிள்ளைகளில் மூத்தவள் செண்பகாம்மையிடம் மற்ற மூன்று குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வேறு தேசத்துக்கு ஓடி விடு என்றிருக்கிறாள். இந்த கோதகாமன், சூர்யநெல்லன், அந்த இரண்டு ஜமீன்கள் மற்றும் பாளையக்காரர்களின் வம்சத்தையே பூண்டோடு அழிக்க வெண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறாள். ரத்தம் ஆறாக பெருக “ஒரு ஆண் மகனும் எஞ்சக்கூடாது” என்று சொல்லியபடி உயிரை விட்டிருக்கிறாள்.

செண்பகாம்மை தனது மூன்று தங்கச்சிகளுடன் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் ஏறி இன்று ஆறுகாணி பத்து காணி என்று சொல்லக்கூடிய காடுகள் வழி பயணித்திருக்கிறாள். அன்று நிலவு செந்நிறமாக ஓளிர்ந்து கொண்டு காட்டின் மீதாக அவர்களுக்கு துணைக்கு வந்தது. இன்று அங்கெல்லாம் ரப்பர் எஸ்டேட்டுகள் இருக்கிறன. அன்றெல்லாம் கொடுங்காடு அது. ஒரு வண்டித்தடம் கண்டு செண்பகாம்மை தனது மூன்று தங்கைகளுடன் அதை தொடர்ந்து நடந்திருக்கிறாள். வழியில் முத்துக்குட்டி ஆசான் எனும் இரட்டைமாட்டு வண்டிக்காரர் அவர்களை கண்டு வண்டியில் ஏற்றி தனது ஊரான மேல்புறத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார். பிள்ளைகள் இல்லாத அவரும் அவர் மனைவி பொன்னுநேசமும் அவர்களை தங்கள் குழந்தைகளாக வளர்த்திருக்கிறார்கள். செண்பகாம்மை நடந்த கதைகளை சொல்ல அதை ஊரார் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றிருக்கிறார் முத்துகுட்டி ஆசான். முத்துக்குட்டி ஆசான் பெரிய வர்ம கலைஞர். பெண்களுக்கு அன்றெல்லாம் வர்மமும் அடிமுறையும் கற்று கொடுக்காத காலம். ஆனால் தனது நான்கு பிள்ளைகளுக்கும் அவர் அதை சொல்லிக்கொடுத்தார்.

இதற்கிடையில் ஆம்பனூர் தேசம் பற்றி அறிய வந்த பிரிட்டிஷார் அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆர்யலிங்கன் கோதகாமன் குடும்பத்துடன் தமிழகத்துக்கு தப்பி சென்று விட்டான்.

செண்பகாம்மையும் பாறுவம்மையும் சேம்பியம்மையும் நீலியம்மையும் வளர்ந்தபோதும் அந்த பழி வாங்கும் நெருப்பு அவர்களுக்குள் அனல் விட்டு எரிந்து கொண்டிருந்தது. முத்துகுட்டி ஆசானும் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்தார். ஆர்யலிங்கன் கோதகாமன் கிழக்கே பாபநாசத்தை அடுத்த சிற்றூர் ஒன்றில் ஒரு ஜமீந்தாரின் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டிருந்தான். செண்பகாம்மை ஜமீன் தாரின் வீட்டில் வர்ம வைத்திச்சி என்கிற பெயரில் சென்று ஆர்யலிங்கனின் குடும்பத்தை கூண்டோடு அழித்தாள்.

அதன் பிறகு அந்த நான்கு பெண்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சந்தர்பங்களை உருவாக்கி தங்கள் அன்னையின் தசைகளை உண்ட ஜமீன் தார்களையும் பாளையக்காரயும்னையும் வம்சத்தோடு அழித்தார்கள். ஆனால் அமைச்சன் சூர்யநெல்லனையும் அவன் குடும்பத்தையும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

நான்கு பெண்களுக்கும் திருமணமாகி விளவங்கோடு தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தாலும் சந்தித்துக்கொள்ளும் போதெல்லாம் அவர்களுக்கு அந்த மனக்குறை இருந்து கொண்டே இருந்தது. தங்கள் அன்னையின் வாக்கு அவர்களை துரத்திக்கொண்டே இருந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அடுத்த வருடம் செண்பகாம்மை இறந்து போனாள். பிறகு பாறுவம்மையும் சேம்பியம்மையும் எல்லாம் ஒவ்வொன்றாக இறந்து போனார்கள். நீலியம்மைக்கு இன்னும் தன் அன்னையின் வாக்கு ஒரு வேட்டை நாயைப்போல கனவுகளிலும் துரத்திக்கொண்டிருந்தது. வெட்டத்தில் சூர்யநெல்லனின் வம்சம் இன்றும் எங்கேயோ தழைத்திருக்கும் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடிந்ததில்லை.

நீலியம்மைக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தபோது அவளுக்கு தன் அன்னை தெச்சியம்மையின் பெயரை இட்டாள் நீலியம்மை. நான்கு பெண்களும் தங்கள் தலைமுறைக்கு நடந்த கதைகளை சொல்லியே வளர்த்ததால் எல்லாரும் அந்த அனலை நெஞ்சில் தாங்கிக்கொண்டு தான் வளர்ந்தார்கள். தெச்சியம்மை வரலாற்றில் முதுகலை படித்தாள். குழித்துறையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தாள். பழைய திருவிதாங்கூர் மேனுவல்களையும் கொச்சி சம்ஸ்தான மேனுவல்களை ஆராய்ந்து மக்களின் இடப்பெயர்வுகள் குறித்த கணக்கெடுப்புகள் வழி அவள் ஒன்றை கண்டுபிடித்தாள். வெட்டத்தில் சூர்யநெல்லன் ஆம்பனூரிலிருந்து பொன் பொருளுடன் குடும்பத்துடன் கொச்சி சமஸ்தானத்துக்கு தப்பிச்சென்று உதயம்பேரூர் என்னும் ஊரில் வாழ்ந்திருக்கிறான். கையிலிருந்த பொன் பொருளை கொண்டு ஒரு வணிகனாக வளர்ந்திருக்கிறான். வெட்டத்தில் சூர்யநெல்லனின் தலை முறைகள் இன்னும் அங்கே வாழ்கிறார்கள் என்பதை ப்ரொஃபசர் தெச்சியம்மை கண்டு பிடித்தாள்.”

என்றாள் மாயா

பிஜு வர்கீஸ் “அப்படியா அப்படி எந்த வணிக குடும்பமும் அங்கே வாழ்ந்ததாக எனக்கு தெரியவில்லை. நானும் உதயம்பேரூர் காரன் தான்” என்றான்.

மாயா புன்னகைத்தாள்

“ சூர்ய நெல்லனின் ஐந்தாம் தலைமுறையில் ஒரு ஆண் மட்டும் இப்போதும் எஞ்சி இருக்கிறான்” என்றாள் மாயா

“இதெல்லாம் கதைகளாக இருக்கும். பழங்கதைகளில் பாதி தான் உண்மை இருக்கும். ஒரு வகையான ஃபோல்க்லோர் இவை. இந்த இரவை இப்படி ஒரு அழகிய பெண்ணுடன் கழிக்க எனக்கு கொடுத்து வைத்திருக்கிரது, ஆனால் அவள் சொல்லும் கதை தான் பயங்கரமாக இருக்கிறது. நாம் வேறு ஏதேனும் பேசலாம். ரொமாண்டிக்காக. எனது அறைக்குக்கூட செல்லலாம்” என்றபடி பிஜு வர்கீஸ் மாயாவின் கைகளில் வருடினான்.

“ப்ரொஃபசர் தெச்சியம்மை யார் தெரியுமா. எனது பாட்டி” என்றாள்

பிஜு வர்கீஸ் சட்டென்று கையை விலக்கி எடுத்து விட்டான்.

“அப்போ அந்த சூர்யநெல்லனின் வம்சத்தின் கடைசி ஆளை போட்டு தள்ளப்போவது நீ தானா” என்றான் பிஜுவர்கீஸ்.

“அந்த கடைசி ஆள் நீ தான்” என்றாள் மாயா

பிஜு வர்கீஸ் சற்று பயந்து விலகினான் “நானா. நாங்கள் பேரு கேட்ட கிறிஸ்தவ குடும்பம். சூர்ய நெல்லனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை”

“ சூர்யநெல்லன் 1920களில் குடும்பத்துடன் கொச்சிக்கு சென்றதும் செய்த முதல் வேலை என்ன தெரியுமா தனது பெயரை வெட்டத்தில் வர்கீஸ் முதலாளி என்று மாற்றி வைத்துக்கொண்டான். அன்றிருந்த சாதீய பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக மக்கள் மதம் மாறினார்கள். கிறிஸ்தவம் அவர்களுக்கு கொஞ்சமேனும் விடுதலையைக்கொடுத்தது. ஆனால் உனது கொள்ளுத்தாத்தா தனது அடையாளத்தை பிரிட்டிஷ் காரர்களிடமிருந்து மறைப்பதற்காக அப்படி செய்தான். இந்த கதைகள் உங்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. இரண்டு தலைமுறைகளுக்குள்ளாக அவர்கள் எல்லாவற்றையும் மறந்து போனார்கள்.”

பிஜு வர்கீஸ் நிலை தடுமாறி எழுந்தான்.

“நூறு வருடங்களுக்கு முன்பு எனது ஐந்து தலைமுறைக்கு முந்தைய ஆள் செய்தற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.”என்று விலகினான்

“இன்று ஜனநாயகத்துக்கு வந்து விட்டோம் . பழைய பகைகளுக்கும் சாபத்திற்கும் சபதத்திற்குமெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை என்று தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னை கடந்த ஐந்தாறு வருடங்களாக ஃபாலோவ் செய்து கொண்டிருக்கிறேன். “என்று நிறுத்தினாள் மாயாள்.

“ஆனால் இன்னும் அந்த சூர்யநெல்லனின் ரத்தம் உனக்குள் ஓடிக்கோண்டு தான் இருக்கிறது என்பதை அறிகிறேன். பெண்களை வெறும் சதைப்பிண்டங்களாக பார்க்கும் ஒரு ஆண் மிருகம், அது தலைமுறைகள் கடந்தும் நடமாடிக்கொண்டிருக்கிறது. பெண்கள் என்றாலே வெறும் ஃப்ளெஷ். போன தடவை கூட இந்த கப்பலில் ஒரு இளம்பெண்ணை வன்கலவி செய்து கடலில் எறிந்திருக்கிறாய். உன் வணிக சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை கொண்டு எதிலும் சிக்காமல் இன்னும் சுதந்திரமாக இருக்கிறாய். எங்கள் கொள்ளுபாட்டிகள் செண்பகாம்மையும் பாறுவம்மையும் சேம்பியம்மையும் நீலியம்மையும் எல்லா கொலைகளுக்கு முன்பு தங்கள் தசைகளை அவர்களுக்கு புசிக்கக்கொடுப்பதை ஒரு சடங்காகவே செய்திருக்கிறார்கள். சடங்குகள் ஆழ்மனத்தை தட்டி எழுப்புவை. அதன் வழி அவர்கள் தங்கள் அன்னை தெச்சியம்மையாகவே மாறி இருக்கிறார்கள்” என்றாள் மாயா

பிஜு வர்கீஸ் பின்னால் நகர்ந்து கோண்டிருந்தான். மேல்தளத்தில் யாருமே இல்லை.

“இன்று நீ சாப்பிட்ட கோழிக்கறியில் எனது சுட்டு விரலின் ஒரு துணுக்கும் இருந்தது. அவ்வளவு ருசி என்றாய். அது சூர்ய நெல்லனின் நாக்கு தான் அல்லவா “ என்றபடி அவள் சிரித்தாள்

அது ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய சிரிப்பென பிஜு வர்கீஸின் காதுகளில் ஒலித்தது.

அவன் மாயாவை பார்த்தபடி அச்சத்துடன் பின்னால் சென்று கப்பலின் மேல் தளத்தின் விளிம்பு கம்பிகளில் முதுகை உரசியபடி நின்றான்.

அவள் அவனை நெருங்கி வந்தாள்.

அவன் மேஜை மீது யாரோ வைத்து விட்டு போன ஒரு டென்னிஸ் பேட்டை எடுத்து அவள் மீது வீசினான். அதை ஒரு தேர்ந்த வர்மக்கலை ஆசானுக்குரிய முறையில் தட்டி விட்டு முன்னே வந்தாள்.

தனது கை விரல்களை சுழற்றி அவன் மார்பின் மீது வைத்து அழுத்தி பின்னால் தள்ளினாள். அவன் கையில் மதுக்கோப்பையுடன் கீழே விழும்போது தான் கவனித்தான்.

மாயாவின் தலைக்கு மீது மேகங்கள் விலகி நிலவு எழுந்தது. அது செந்நிறமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

#சந்தோஷ்நாராயணன்சிறுகதை

பெயர்வு

சிறுகதை

 

யூனிஃபார்முக்கு மாறி தொப்பியை சரிசெய்துகொண்டான் ராம்லால். ரயில் ஓட்டுனருக்கான சீருடை அது. வாஹினி மாலின் நவீன கழிவறை கண்ணாடியில் தன்னை ஒரு முறை மீண்டும் பார்த்துக்கொண்டான். நாடியை கொஞ்சம் தூக்கி கம்பீரமாக இருக்கிறானா என்று உறுதி படுத்திக்கொண்டான். விறைப்பாக நின்று தனக்கு தானே சல்யூட் வைத்துக்கொண்டதும், சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்கிற நினைப்பு வந்து திரும்பி பார்த்தான். என்னை பார்த்ததும் வெட்கம் வந்தது போல சிரித்தான். எனக்கு ராம்லாலை நன்றாக தெரியும். எப்படியும் மாதத்திற்கு ஒரு முறை அவனை பார்த்து விடுகிறேன். 

புன்னகைத்தபடி எனக்கும் ஒரு சல்யூட் வைத்தான் “பாப்பா வந்திருக்காளா சார்”என்றான்

“வந்திருக்கா. என் ஒயிஃப் கூட ஃபுட்கோர்ட்ல சாப்பிட்டுட்டு இருக்கா” என்றேன்

“ரயிலுக்கு பாப்பா வரும் இல்ல” என்றான். கொஞ்சம் ஹிந்தியில் உரசி எடுத்த தமிழ். 

“சாப்பிட்டு முடிச்சதும், அங்க தான் வர சொல்லி இருக்கேன்” என்றபடி பளபளவென்று இருந்த வாஷ் பேசினில் குழாய் தண்ணீரை திறந்து முகம் கழுவி துடைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். 

“அப்புறம் ஊருக்கு போனியா? உன் குடும்பம் எல்லாம் எப்டி இருக்கு” என்றபடி நடந்தேன்

“போன மாசம் போயிட்டு வந்தேன் சார். ஒயிஃப் குழந்தையை கூட்டிட்டு வந்துட்டேன்” என்றபடி

இடுப்பு பெல்டை சரிசெய்த படி என் கூடவே நடந்தான்.

வாஹினி மாலின் அகண்ட  வட்டமான தரைதளத்தின் பிரமாண்ட தூண்களுக்கிடையில் நடந்து  டிக்கெட் கவுண்டருக்கு வந்து சேர்ந்தோம். வாகினி மாலின் உள்தளத்தில் ஓடும் பாட்டரி ரயிலுக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்டர் அது. மெல்லமான அசைவுகளுடனும் சோபையான முகத்துடனும் டிக்கெட் கொடுப்பவர் டிக்கட்டை பஞ்ச் செய்து கேட்பவர்களுக்கு கவுண்டரின் துளை வழியாக கொடுத்துக்கொண்டிருந்தார்.

ராம்லால் கவுண்டர் அருகில் சென்று எட்டிபார்த்தான்.

வாஹினி மாலுக்கு குடும்பத்துடன் வரும்போதெல்லாம் ராம்லாலை பார்க்காமல் செல்வதில்லை. காரணம் எங்கள் ஆறு வயது மகள் ஆதிரா. வாஹினி மால் வந்தாலே பொம்மை ரயிலில் ஏறாமல் போகக்கூடாது என்பது அவளது கட்டளை. அதுவே சாசனம். ஆகவே நாங்கள் அதை மீறமுடியாது. போன வருடம் முதன் முதலாக அவள் இந்த ரயிலில் ஏறியபோதே அந்த ரயிலின் “எஞ்சின் மாமா”வாகிய ராம்லால வேறு அவளுக்கு ஃப்ரண்டாகி விட்டிருந்தான்.   

ராம்லால் பீஹார் காரன். மாத்வபூர் என்கிற மாதிரி ஏதோ ஒரு கிராமம்.  ஆறு வருடம் முன்பு சென்னை வந்து பல வேலைகள் பார்த்தவன், ட்ரைவிங் தெரியும் என்பதால் தெரிந்த ஒரு ப்ரோக்கர் வழியாக இந்த குழந்தைகள் ரயில் ஓட்டும் வேலைக்கு வந்து சேர்ந்தானாம். மாத சம்பளம் என்பது அவன் சொந்த ஊரில் ஜென்மத்துக்கும் நினைத்து பார்க்காத விஷயம். யூனிஃபார்ம் போடுவது அதை விட பெரியது . இவன் யூனிஃபார்மில் இருக்கும் போட்டோவை மனைவியிடம் காட்டியபோது ஊரே திரண்டு வந்து பார்த்தாக ஒரு முறை சொன்னான். ஆகவே சந்தோஷமாக இந்த வேலையைப்பார்த்துக் கொண்டிருந்தான்.    

மட்டுமல்லாமல் அவனுக்கு குழந்தைகள் மீது இயல்பாகவே ஒரு ப்ரியம் இருந்தது என்பதை நான் கண்டு கொண்டிருந்தேன். அவனுடைய குழந்தை பூமிகாவுக்கும் ஆதிராவின் வயது தான் என்றான் ஒருமுறை. இப்படி ஒவ்வொரு முறை அவனை பார்க்கும்போதும் பேசிப் பேசி அவனைப்பற்றி அறிந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மாலுக்கு வரும் யாரும் அவனிடம் இப்படி பேசுவதில்லை என்றான் ஒரு முறை. நான் ஆர்வமாக கேட்பது அவனுக்கு சந்தோஷம்.  

ஆதிராவுக்கு ஒரு டிக்கட் என்று ராம்லாலிடம் பணத்தை நீட்டினேன். அவன் சிரித்தபடி கவுன்ண்டரில் பணத்தை நீட்டி டிக்கட்டை எடுத்து தன் யூனிஃபார்ம் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.

மனைவியும் ஆதிராவும் ஃபுட்கோர்டிலிருந்து கிளம்பி நேராக ரயில் அருகில் வந்தார்கள். வரும்போதே ஆதிரா “ஹாய் எஞ்சின் மாமா”என்றபடி வந்தாள். கையில் வைத்திருந்த பெரிய லாலிபாப் ஒன்றை அவனுக்கு நீட்டினாள்.

“நீ சாப்பிடு பாப்பா” என்று அவன் அவளது தலையை வருடினான்.           

“பய்யா பத்து டிக்கட் போட்டாச்சு. பசஙகள வண்டில ஏத்திட்டு ஸ்டார்ட் பண்ணிக்கப்பா” என்றார் கவுண்டரில் இருந்த ஆள். பெற்றோர்கள் டிக்கட்டை நீட்ட, வாங்கி பாக்கெட்டிற்குள் திணித்தபடி குழந்தைகளை அந்த குட்டி ரயிலின் சிறிய பெட்டிகளுக்குள் உட்கார வைத்து கதவை அடைத்தான் ராம்லால்.   

ஒவ்வொரு பெட்டியிலும் மிக்கி மவுஸ் சோட்டாபீம் போன்ற கார்டூன்கள் வரையப்பட்டு எனாமல் பூக்கள் கலர் கலராக சிரித்துக்கொண்டிருந்தன. மொத்தம் ஐந்தாறு பெட்டிகள். அவற்றைத் தாண்டி முன் சென்று சிறிய எஞ்சினின் இருக்கையில் அமர்ந்து கொண்டான் ராம்லால். ரயில் புறப்புடும் விதமாக பாம்ம்ம்ம்ம் என்று சத்தமாக ஒரு ஹாரனை அடித்துவிட்டு ஸ்டார்ட் செய்தான். எஞ்சினில் கட்டி இருந்த பெரிய மணி முழங்கத் தொடஙகியது. குழந்தைகள் கூக்குரலிட்டும், கத்தியும் தங்கள் பெற்றோர்களை பார்த்து சிரித்தார்கள். ‘ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்’ போல ஏதோ ஒரு துள்ளலான ஆங்கில குழந்தைப்பாடல் கரகரப்பான ஸ்பீக்கரில் ஒலிக்கத்துவங்கியது.

ராம்லால் எஞ்சினை ஆள்கூட்டங்களுக்கு இடையிலாக லாவகமாக திருப்பி ஓட்டிச்சென்றான். சிலர் புன்னகையுடன் ஒதுங்கி வழி விட்டனர். ரயில் பெட்டிகள் வளைந்து வளைந்து தூண்களின் இடையிலாக ஊர்ந்து சென்றது.  குழந்தைகள் ஜாலியாக கண்ணாடிகளுக்குள் மேனிக்க்யூன்கள் நிற்கும் கடைகளை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள். ஒவ்வொரு சுற்றிலும் பெற்றோர்களை தாண்டும்போதும் குழந்தைகள் கூக்குரலிட்டார்கள். 

ஆதிரா வழக்கம் போல எங்களை பார்த்து தன் கையில் இருந்த பெரிய லாலிபாப்பை தூக்கி காட்டினாள். மூன்று சுற்று முடித்து ஒவ்வொரு பெட்டிகளாக திறந்து குழந்தைகளை இறக்கி விட்டான் ராம்லால். 

ஆதிரா அவளே குட்டி கதவை திறந்து கொண்டு இறங்கி எனக்கு இதெல்லாம் சகஜம் என்பதைப்போல எங்களை பார்த்தாள் .

“தேங்க்ஸ் எஞ்சின் மாமா”என்றாள்.

ராம்லால் சிரித்தான். அடுத்த சுற்றுக்காக சில குழந்தைகள் காத்திருந்தார்கள். குறைந்தது பத்து டிக்கட் இல்லாமல் வண்டியை கிளப்ப முடியாது. ராம்லால் கசங்கிய உடைகளை சரி செய்து கொண்டு மிடுக்காக காத்து நின்றான். டிக்கட் கவுண்டர் மீது அடிக்கடி பார்வை சென்று மீண்டது.  

“அப்பா என்ன வாங்கித்தந்தாரு” என்றான் ஆதிராவிடம் குனிந்து

“கலர் பென்சில். வரையுறதுக்கு புக்கு”என்று தன் அம்மாவிடமிருந்து பையை பிடுங்கி ராம்லாலிடம் காட்டினாள். நாங்கள் சிரித்தோம். 

“நீ நல்லா படம் வரைவியா”  என்றான் ராம்லால்

“ஆமா. சூப்பரா வரைவேனே. ஸ்கூல்ல எனக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்” என்றாள் ஆதிரா 

“என்ன பார்த்து வரைவியா” என்றான்

“ஓ உங்க தொப்பி கூட சூப்பரா வரைவேன்”என்றாள்

“ஓகே குட்டி எஞ்சின் மாமாவுக்கு பாய் சொல்லு. அப்பாவுக்கு ட்ரெஸ் எடுக்க போகணும்”என்றேன். 

கிளம்பும் முன்பு ஒரு கலர் பென்சில் செட்டை எடுத்து ராம்லாலிடம் கொடுத்தாள் “இது உங்க பொண்ணு பூமிகாவுக்கு”

“அய்யோ வேண்டாம் பாப்பா”என்றான் அவன்

“வாங்கிக்கோ ராம்லால்”என்றேன் நான்

“அய்யோ வேண்டாம் சார். கஸ்டமர் கிட்ட எதுவும் வாங்கக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு” என்றான்

“அட வாங்கி பாக்கட்ல போடு ராம்லால். இவ்வளவு பெரிய யூனிஃபார்ம் பாக்கெட் இருக்கே”என்றேன்

அவன் கவுண்டரில் இருக்கும் ஆளை ஒரு தடவை திரும்பி பார்த்துவிட்டு வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிரித்தான்.

பொங்கலுக்கு இந்த தடவை எனக்கென்று நான் புது துணிகள் எதுவும் எடுத்திருக்கவில்லை. அலுவலக வேலைகளால் தள்ளிப்போட்டு இப்படி மார்ச் முதல் வாரம் வரை வந்து விட்டது. மனைவி கட்டாயப்படுத்தியதால் வந்தேன் இல்லை என்றால் சம்மர் ஹாலிடேஸில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்திருப்பேன்.  

நாங்கள் முதல் தளத்தில் உள்ள பேண்டலூனில் எனக்காக ட்ரெஸ் எடுத்துக்கொண்டிருக்கும்போது கீழே ராம்லால் குழந்தைகளை ரயிலில் வைத்துக்கொண்டு உற்சாகமாக வட்டமிட்டுக்கொண்டிருந்தது கண்ணாடிகள் வழியாக தெரிந்தது. 

நாங்கள் ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு கிளம்பும் போது எங்கள் அருகில் உரசுவது போல “பாம்ம்ம்ம்”என்று ஹார்ன் அடித்துக்கொண்டு சென்றான். அவளது எஞ்சின் மாமா டாட்டா கட்டியபடி போவதைப்பார்த்ததும் ஆதிரா துள்ளிக்குதித்து கத்தினாள். 

நாங்கள் வாஹினி மாலுக்கு போய்விட்டு வந்த அடுத்த வாரம் கொரோனா ஊரடங்கை அறிவித்திருந்தார்கள். திடீரென்று கிடைத்த இந்த விடுமுறையை என்ன செய்வது என்று தெரியாமல் ஆதிரா வீட்டிற்குள் சுற்றி சுற்றி வந்தாள். வெளியே விளையாடவும் அனுமதியில்லை என்பது அவளை மேலும் துக்கம் கொள்ள செய்தது. மாலில் வாங்கி வந்த கலர் பென்சில் செட்டுகளை எடுத்து போட்டு அவ்வப்போது படம் வரைந்து கோண்டிருந்தாள். 

தினமும் நாலைந்து படங்கள் வரைந்து கொண்டு வந்து காட்டினாள். நான் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று லேப்டாப்பை திறந்துகோண்டு உட்கார்ந்தாள் என் மடியில் வந்து உட்கார்ந்து கொள்வாள். ஆப்பிஸ் ஸூம் மீட்டிங்குகளுக்கு நடுவில் புகுந்து ஒரு நாள் எங்கள் மேனேஜருக்கு ஹாய் சொன்னாள். 

படம் வரைந்து போரடித்த ஒரு நாளில் ‘அப்பா வாஹினி மாலுக்கு போலாமா. குட்டி ரயிலில்ல ஏறணும்” என்றாள். அப்போது தான் அது எனக்கு உறைத்தது. மால்களெல்லாம் மூடி நான்கு வாரங்களுக்கு மேலாகி விட்டது. இந்த ராம்லால் என்ன செய்து கொண்டிருப்பான். சம்பளம் கொடுத்திருப்பார்களோ என்னமோ? குடும்பத்தை வேறு போன மாதம் கூட்டி வந்திருப்பதாக சொன்னான். 

“பாப்பா வாஹினி மாலுக்கும் லீவு விட்டுட்டாங்க. ஸ்கூல் திறக்கும்போது தான் மாலும் திறப்பாங்க” என்றேன். மொத்த சோகத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல முகத்தை வைத்துக்கொண்டாள். 

மறுநாள் நாங்கள் டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்த போது வடமாநில தொழிலாளிகள் பொட்டி படுக்கைகளுடன் கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வதை காட்டினார்கள். பெண்களும் குழந்தைகளும் கூட நடந்து செல்வதை பார்க்கும்போது குற்ற உணர்ச்சியாக இருந்தது. 

“அப்பா எஞ்சின் மாமா எஞ்சின் மாமா”என்று கத்தினாள் ஆதிரா

ஒரு சேனலில் ராம்லால் நெடுஞ்சாலையோரம் நின்றபடி நீட்டிய மைக்கின் முன்பு தயக்கமாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். நான் ரிமோட்டில் வால்யூமை ஏற்றினேன். “ஒரு மால்ல வேல பார்த்திட்டுருந்தேன்.  போன மாசம் ஏஜெண்ட் கூப்பிட்டு மாலெல்லாம் திறக்க நாளாகும். நீ ஊருக்கு கிளம்புனு சொல்லிட்டாரு. கையில இருந்த காச வச்சு ஒரு மாசம் சமாளிச்சாச்சு. நம்மள்கு குழந்த இருக்குது. குடும்பம் இருக்குது. சாவுறதா இருந்தா கூட சொந்த ஊருக்கு போய் சாகலாம்னு இருக்குது சார்” என்றான். பக்கத்தில் அவன் மனைவியாக இருக்கலாம். கூடவே ஆதிரா அளவுக்கு சின்ன ஒரு குழந்தை. அது பூமிகாவா. ஆம் பூமிகா தான். கையில் ஆதிரா அன்று கொடுத்த பென்சில் பாக்கெட்டை வைத்து காற்றில் ஆட்டிக்கொண்டிருந்தாள். 

எனக்கும் மனைவிக்கும் தர்மசங்கடமாக இருந்தது. ஆதிரா “ஐ டிவியில எஞ்சின் மாமா எஞ்சின் மாமா. அவரோட குட்டி ரயில் எங்கப்பா”என்றாள்

“அவங்க எல்லாம் ஊருக்கு கிளம்பிட்டாங்கடா செல்லம். நாம நாகர்கோவில்லு போவோம் இல்ல. அத மாதிரி அவங்க அவங்க பாட்டி ஊருக்கு கிளம்பிட்டாங்க”என்றேன்

“எப்படி போவாங்க”என்றாள்

“இப்போ பஸ் ரயில் எதுவும் இல்லை இல்ல . நடந்தே போவாங்க” என்றேன் 

“எவ்வளவு தூரம்” என்றாள்

“ரொம்ப. ரொம்ப தூரம்” என்றேன்

“அவ்வளவு தூரம் நடந்தே போவாங்களா”என்றாள்

“ஆமா”என்றேன்

“கால் வலிக்காதா”

“வலிக்கும் பாப்பா”

“அய்யோ… பாவம்” என்றபடி டிவியை பார்த்தாள்.

“அவ தான் பூமிகாவா”என்றாள். ஆதிரா சட்டென்று எல்லாவற்றையும் புரிந்து கொள்பவள். 

“ஆமா” என்றேன்

“அவளுக்கு என்ன மாதிரியே சின்ன காலு. அவ்வளவு தூரம் எப்டிப்பா நடப்பா”என்று தன் காலை தொட்டு காட்டினாள்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மனைவியை பார்த்தேன்.  

“வா தூங்கப்போகலாம்” என்று ஆதிராவை தூக்கிக்கொண்டு அவள் பெட் ரூமிற்குள் சென்றாள்.

எனக்கு தூக்கம் வர வெகு நேரம் பிடித்தது.

காலையில் நான் எழுந்த போது கவனித்தேன் ஆதிரா எனக்கு முன்னால் எழுந்து விட்டிருந்தாள். என்னை கண்டதும் ஹாலிலிருந்தவள் ஓடி வந்தாள். கையில் ஒரு பேப்பர் இருந்தது. 

“அப்பா இதை பாரேன். காலையில வரஞ்சேன்”என்று காட்டினாள்

பென்சில்களால் வரைந்த கலர்ஃபுல்லான  குட்டி ரயில். எஞ்சினில் ராம்லால் உட்கார்ந்து ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் முகம் பெருமிதத்தோடும் உற்சாகத்தோடும் இருந்தது. பின்னால் இருந்த நீலக்கலர் பெட்டியில் ராம்லாலின் மனைவி இருந்தாள். அடுத்த இளஞ்சிவப்பு நிற பெட்டியில் பூமிகா உட்கார்ந்து கைகளை தூக்கி ஆட்டிக்கொண்டிருந்தாள். மேலும் பின்னால் இருந்த பெட்டிகள் முழுக்க குழந்தைகளும் ஆட்களுமாக மூட்டை முடிச்சுகளோடு இருந்தார்கள். அந்த குட்டி ரயில் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. அதன் கீழே நகரங்களும் கட்டிடங்களும் மனிதர்களும் சின்னதாக, மிக சின்னதாக அழுக்காக தெரிந்தார்கள்.

நான் ஆதிராவின் முகத்தை பார்த்தேன். அதற்கு பூமிகாவின் சாயல் இருந்தது.

நான் மறுபடி காகிதத்தை பார்த்தேன். அந்த குட்டி ரயில் இரண்டாக, நான்காக, எட்டாக, நூறாக பெருகிய படி காகிதத்திலிருந்து வெளியேறி ஓட ஆரம்பித்தன. அவை இந்தியாவின் பெரிய சாலைகளை, பெரிய நகரங்களை, கிராமங்களை, தெருக்களை இணைத்தபடி எல்லா இடங்களிலும் ஓட ஆரம்பித்தது. அதில் குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் மூட்டை முடிச்சுகளுடன் உட்கார்ந்து இருந்தனர். அதன் ‘பாம்ம்ம்’ என்கிற சத்தம் பெருகி பெருகி ஒரு பெரிய ஓலம் போல எழுந்து காதை நிறைத்தது.      

#சந்தோஷ்நாராயணன்சிறுகதை #சிறுகதை

சுராவும் சுஜாதாவும்.

இலக்கியம்

sura sujatha

நான் ஒரு எழுதுபவனாக இல்லை, ஒரு வாசகனாகவே இதை எழுதுகிறேன். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே புளியமரத்தின் கதை வாசித்து விட்டேன். ஜெ.ஜெ. சில குறிப்புகள் எல்லாம் கல்லூரி காலத்தில் தான் படித்தேன்.(இந்த புத்தகங்களுக்கும் பிற்காலத்தில் அட்டை வடிவமைப்பு செய்திருக்கிறேன் எனபது இங்கே தேவையற்ற உபதகவல்). சுராவின் பெரும்பாலான சிறுகதைகளை படித்திருக்கிறேன். கட்டுரைகளையும்.

சொந்த ஊர் அருமனை என்றாலும் பத்தாம் வகுப்பு வரை வளர்ந்தது நாகர்கோவில் என்பதால் அதன் மீது ஒரு வசீகரம் உண்டு. வேப்பமூடு ஜங்ஷனும், மீனாட்சிபுரம் குளத்து பஸ் ஸ்டாண்டும், கோட்டாறும், தியேட்டர்களும் என் சிறுவயது ஞாபகங்களுடன் பிணைந்தவிட்ட ஒன்று. புளியமரத்தின் கதையில் சுரா அளிக்கும் பழைய, எனக்கும் பரிச்சயமற்ற நாகர்கோவில் பற்றிய சித்திரமே முதல் வாசிப்பில் என்னை கவரும் அம்சமாக இருந்தது. அன்றிருந்த இளம் மனநிலையில் அந்த அளவிற்கே என் வாசிப்பும் இருந்தது. பிறகு இரண்டு மூன்று தடவை புளியமரத்தின் கதையை வாசித்திருக்கிறேன். வெவ்வேறு வயதுகளில், சென்னையில். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் மனித மனங்களின் உள்ளடுக்குகள், அதன் கீழ்மைகள், அதன் பெருமிதங்கள், அதன் தந்திரங்கள் எல்லாம் இழைகளாக பிரிந்து கிண்டலும் கேலியுமாக என் முன்னே எழுந்து திரிவதை பார்த்திருக்கிறேன். இன்னும் ஒரு முறை வாசித்தால் பழைய வாசிப்பில் நான் தவறவிட்ட சுவராஸ்யமான இண்டு இடுக்குகள் கண்ணில் தட்டுபடலாம்.

ஜெ.ஜெ சில குறிப்புகள் வாசிக்கும் காலத்தில் ஓரளவுக்கு தமிழ் எழுத்தின் பின்புலத்தையும், வாழ்க்கையின் கலைடாஸ்கோப் சிக்கல்களையும் பற்றிய அறிமுகமும் ஓரளவு புரிதலும் உருவாகி விட்டிருந்தது. ஜெ.ஜெ அவற்றின் மீது ஒரு மரண அடி அடித்தான். மெல்லிய தெளிவையும் எல்லையற்ற குழப்பத்தையும் உருவாக்கினான். கேள்விகளால் வாசிக்கும் என்னை சீண்டினான். எல்லாவற்றையும் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யக்கோரினான். ஜெ.ஜெ என்னை தொந்தரவு செய்தது போலவே எல்லாரையும் தொந்தரவு செய்தான். இத்தனைக்கும் ஜெ.ஜெ.சில குறிப்புகள் நான் வாசித்தது தொண்ணூறுகளின் கடைசியில். அது வெளியான போது இன்னும் ச்லனங்களை உருவாக்கியது என்பது நமக்கு தெரியும்.

மனிதர்களின் சிடுக்குகளை ஒரு சர்ககஸ் மேஜிக் கண்ணாடியின் கோணல்களான கேரிக்கேச்சர்கள் போல புளியமரத்தின் கதை சித்தரித்தது என்றால், ஜெ.ஜெ அந்த சிடுக்குகளை முடிவில்லாத கேள்விகளால் தீவிரமான ஒரு பெயிண்டிங் போல நமக்குள் அழுத்தமாக வரைந்து செல்கிறது.

சுராவின் கறாரான இலக்கியமதிப்பீடுகள் பற்றி நாம் அறிந்ததே. அது எப்போதும் தேவையாகவும் இருக்கிறது. நான் காலச்சுவடில் டிசைனராக பணியாற்றிக்கொண்ருந்தபோது அவரை சில முறை நாகர்கோவில் வீட்டில் சந்தித்து பேசியுமிருக்கிறேன். அவரை சந்திப்பது என்பது எல்லாரையும் (வாசித்தவர்களை சொல்கிறேன்) போல எனக்கும் ஒரு கனவாக இருந்தது. முதல் சந்திப்பிலேயே மூன்று நான்கு மணி நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு சிறுவனாக இருந்த என்னிடம் அவர் ஒரு சக வயதுக்காரனைப்போல சினிமா பற்றியும் இளைஞர்களின் லைஃப்ஸ்டைல் பற்றியும் ஆர்வமாக – என்னை பேசவிட்டு அவர் தான் -கேட்டுக்கொண்டிருந்தார். அரவிந்தன், அடூர், ஜான் ஆப்ரஹாம் பற்றி அவர் ஒரு முறை பேசியது சுவராஸ்யமாக இருந்தது. இந்த மூவருடனும் அவருக்கு நேர்ப்பழக்கம் உண்டு. ”அடூர் திட்டமிட்டு நேர்த்தியாக ஒரு வங்கி மேலாளரைப்போல ஒரு சினிமாவுக்கான வேலைகளை செய்வார், ஜான் அதற்கு நேரெதிரான ஆள் எந்த திட்டமும் இல்லை வேலைகளும் முழுமையாக இருக்காது. ஆனால் அரவிந்தன் இந்த இரு ஆளுமைகளுக்கும் நடுவில் இருப்பவர். அவரே எனக்கு மிகப்பிடித்தமான கலைஞர் ” என்றார். ஒரு வகையான சமநிலை கொண்ட பார்வை. இந்த பார்வையே சு.ராவின் கலைநோக்கின் மைய்யம் என்பது என் புரிதல்.

கலை மற்றும் வாழ்வு பற்றிய இந்த தீவிரமான பார்வையை அவர் எப்போதும் கொண்டிருந்தார். அதை நுட்பமும், மெல்லிய அதே நேரம் கூர்மையான அங்கதத்தையும் கொண்ட வசீகரமான மொழியால் எழுதினார். விமர்சனங்களை உருவாக்கினார். அதனாலேயே சம காலத்தில் எழுத வந்த இளம் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக, ஒரு மைய ஈர்ப்பாக இருந்தார். இப்போதும் இருக்கிறார். சுராவின் மொழி மைக்கேல் ஏஞ்சலோவின் உளியைப்போல கூர்மையாகவும் கச்சிதமாகவும் இருக்கிறது. தேவையற்ற ஒரு சொல்லின் பிசிறு கூட இல்லை. இந்த புரிதல் எல்லாம் ஒரு வாசகனாக எனக்கு இருக்கிறது. சு.ராவின் இடம் என்ன என்பது எனக்கு தெரியும்.

ப்போது சுஜாதா. சுஜாதாவை கணேஷ் வசந்த் டிடெக்டிவ் கதை எழுதுகிற, ஏன் எதற்கு எப்படி எழுதுகிற, முதல்வன் போன்ற படங்களுக்கு கலாட்டாவாக வசனம் எழுதிய ஒரு ஜாலியான ஜனரஞ்சக எழுத்தாளராகத்தான் அறிமுகம் செய்து கொண்டேன். நமது தமிழ் சமூகத்தின் எல்லாவிதமான பக்கங்களையும் தொட்டு செல்லும் வணிக சினிமாவைப்போலத்தான் சுஜாதாவையும் நினைத்தேன். நானெல்லாம் தீவிர இலக்கிய வாசகன் என்னும் ஒரு விதமான போலியான பாவனையில் இருந்தேன். அதனால் கிட்டத்தட்ட சுஜாதாவை பற்றிய கொஞ்சம் உதாசீனமான பார்வைதான் எனக்கு இருந்தது.

ஆனால் இரண்டாயிரத்திற்கு பிறகு தான் உண்மையில் சுஜாதாவை வாசிக்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல ’தீவிரமான பாவனை’ என்னும் மலச்சிக்கலிலிருந்து வெளியே வந்து பார்க்க ஆரம்பித்தது அப்போது தான். கொஞ்சம் திறந்த மனதுடன். சுஜாதாவின் மொழி நுட்பம் அப்போது தான் என்னை வசீகரிக்க ஆரம்பித்தது. அவரது சிறுகதைகள் (வாராந்திர டெட்லைன் அவசரங்களில் எழுதியதாக அவர் கூறிக்கொண்டது உட்பட), விளையாட்டுத்தனமும்,அறிவியலும், சமூகம் பற்றிய பகடியும் இழைகளாக ஓடும் விஞ்ஞானச்சிறுகதைகள், கணையாழியின் கடைசி பக்கங்கள் எல்லாம் படித்தபோது ஏற்கனவே எனக்குள்ளிருந்த சுஜாதா என்னும் பிம்பம் உடைந்து -டெர்மினேட்டரில் உருகிய மெட்டல் ரோபோ மீண்டும் அர்னால்டாக மாறுவதைப்போல- புதியதாக மாறி எழுந்து நின்றது.

கணையாழி கடைசிப்பக்கத்தில் கிட்டத்தட்ட சுஜாதா தன் முப்பதாவது வயதில் எழுத ஆரம்பித்திருக்கிறார். டெல்லியில் உலக சினிமாக்களை பார்த்து விட்டு ஸ்ரீதரையும் கோபாலகிருஷ்ணனையும் இயக்குனர்களே இல்லை என்று கலாய்க்கிறார். நவீன நாடகங்களை பார்த்து விட்டு சென்னையின் பழைய சிரிப்பு நாடகங்களை கிண்டல் செய்கிறார். இதழ்களின் குண்டு தீபாவளி மலர்களை கேலி செய்கிறார். சத்யஜித்ரேயை கொண்டாடுகிறார். லா.சா.ரா, க.நா.சு வை பற்றி எழுதுகிறார். சுராவின் புளியமரத்தின் கதையின் உயர்தர நகைச்சுவையை யாரும் கொண்டாட வில்லையே என்று கவலைப்படுகிறார். ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளேயில் இருக்கும் சர்ரியலிசத்தன்மையை சுட்டிக்காட்டுகிறார். இப்படி எல்லாவற்றை பற்றிய விமர்சனமும் மதிப்பீடுகளும் சுஜாதாவுக்கும் இருந்திருக்கின்றன. கூடவே ஜாலியாக லேட்டரல் திங்கிங் புதிர்களை போடுகிறார், ரூபே கோல்ட்பெர்க் என்னும் சித்திரக்காரனின் நகைச்சுவை சித்திரங்களை தந்து அதிலிருக்கும் விளையாட்டுத்தனத்தை பகிர்ந்து கொள்ளுகிறார், குறுக்கெழுத்து போட்டி வைக்கிறார். வாசிப்பவர்களை சற்று இலகுவாக்குகிறார்.

அதுவே சுஜாதாவின் வசீகரம். எழுத்தாளனோ வாசகனோ எப்போதும் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும், எந்நேரமும் தீவிரமாக மோட்டுவளையை பார்த்து சிந்திக்க வேண்டும், உன்னதத்திலேயே மிதக்க வேண்டும் என்று அவர் விரும்பியதாக தெரியவில்லை. அதே நேரம் நகர, மத்திய வர்க்க வாழ்க்கையின் சித்திரங்களை அவரது கதைகளிலும் நாடகங்ககளிலும் அமைதியாகவும், அங்கதமாகவும் சித்தரிக்கவும் செய்திருக்கிறார். வாராந்திரிகளின் ரசனைக்கு எற்றவாறு இறங்கி வந்தும் சிக்சர் அடித்திருக்கிறார். அதற்கான இடம் எது என்பதும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இதில் ஒரு விளையாட்டுத்தனம் இருக்கிறது. நானெல்லாம் சீரியசான இலக்கிய்யகாரன் என்ற பாவனை இல்லை. ஆனாலும் அவ்வகையான எழுத்துகளில் கூட வசீகரமான ஃப்ரெஷ்ஷான ஒரு மொழி இருக்கிறது. கிரியேடிவிட்டி இருக்கிறது.

தொடர்ந்து கலைச்சொல்லாக்கம் பற்றி கவலை படுகிறார். கணினியில் தமிழ் வந்த போது அதன் சாத்தியங்களை குறித்து திரும்ப திரும்ப எழுதுகிறார். பன்முகத்தன்மையுடன் எல்லாவற்றையும் அணுகுகிறார். பல்வேறு விஷயங்களின் மீதான ஆர்வம் காரணமாகவே மேலோட்டமான ஆழமற்ற படைப்புகளை எழுதி இருக்கிறார் என்று ஒரு க்ரூப் இப்போதும் குற்றம் சொல்கிறது. ஆனால் சுஜாதா அவ்வாறான கிளைம்களை கோரி நின்றதாக எனக்கு தோன்ற வில்லை. மனிதர் தான் செய்வதை ஜாலியாக உற்சாகமாக செய்து கொண்டிருந்திருக்கிறார். அதை படிப்பவர்களுக்கு கடத்தவும் செய்திருக்கிறார். கடைசி நாட்களில் கற்றதும் பெற்றதும் எழுதுவது வரை இளம் எழுத்தாளர்களை அடையாளம் காட்டுகிறார்..

இந்த கலவையான பன்முகத்தன்மை தான் ஒரு சாரார் அவர் மீது வசீகரம் கொள்ளவும் ஒரு சாரார் விமர்சனங்கள் வைக்கவும் காரணமாக இருக்கிறது. ஆனால் மொழி பி.சி.சர்க்காரின் கையிலிருக்கும் மேஜிக் ஸ்டிக் போல அவர் விரல்களில் சுழல்கிறது. இந்த புரிதல் எல்லாம் ஒரு வாசகனாக எனக்கு இருக்கிறது. சுஜாதாவின் இடம் எது என்பதும் எனக்கு தெரியும்.

சுராவை இறுக்கமும் தீவிரமும் கொண்டவராகவும் சுஜாதாவை ஆழமற்ற விளையாட்டுத்தனம் கொண்டவராகவும் எதிரிடையாக வைத்து ஒப்பீடுகள் செய்து அதன் வழியாக இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கப்பார்க்கிறார்கள். தராசுகளில் வைத்து யார் எடை கூடியவர் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தராசுகளை கையில் வைத்திருக்கும் அதிகாரம் யாருக்கு யார் கொடுத்தது. ஆனால் ஒரு வாசகனாக யார் யாருக்கு என்ன இடம் என்பது எனக்கு தெரியும். அது வாசிப்பதன் வழியாக நமக்கு உருவாகும் பார்வை. இருபத்து நான்கு மணி நேரமும் தூய, உன்னத, அதி தீவிர கவித்துவ பாவனையிலேயோ அல்லது எல்லாவற்றையும் ஜஸ்ட் லைக் தேட் மேலோட்டமான மனநிலையில் மட்டுமே பார்த்துக்கொண்டோ தான் இருக்க வேண்டும் என்று இல்லை. பாவனைகள், ஆழமின்மை இந்த இரண்டையும் உதறி விட்டு சுவராஸ்யமான, நேர்மையான, சமநிலையான பார்வையுடன், ஒரு இடத்தில் நின்று கொள்ள வாசகர்களாக நமக்கு உரிமையுள்ளது தானே.

அது மட்டுமல்ல ஒரு வாசகனுக்கு இதெல்லாம் அவன் வாழ்வின் ஒரு சிறு பகுதி. இந்த வாசிப்பு அவன் வாழ்வில் உள்ளே ஒரு மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருக்கும் தான். ஒரு பார்வையை உருவாக்கி இருக்கும். ஆனால் அதை எல்லாம் மீறி இன்று இருக்கும் அரசியல், பொருளாதாரம், மருத்துவம், கல்வி, நுகர்வு, உணவு, மத அழுத்தம், இயற்கை அழிப்பு எல்லாம் அவன் மீது செலுத்தும் தாக்கம், என்று அவன் அன்றாடங்களில் எதிர்கொள்ள ஆயிரம் முரண்கள் உள்ளன. இலக்கியம் ஒன்றும் சகலரோஹ நிவாரணி இல்லை. இலக்கியத்துக்கும் எழுத்துக்கும் வெளியேயும் வாழ்க்கையும் இயற்கையும் விரிந்து கிடக்கிறது.

அவர்கள் அழியும் முன்

Uncategorized

_MG_2403

 

ஜிம்மி நெல்சன். இங்கிலாந்தை சேர்ந்த புகைப்பட கலைஞர்.  அவர்கள் அழியும் முன் (Before they pass away) என்னும் தலைப்பில் உலகம் முழுக்க அழியும் தறுவாயிலிருக்கும் பழங்குடிகளை புகைப்படங்களாக பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

ட்ரைபல் போட்டோகிராஃபி என்பதில் நிறைய கலைஞர்கள் ஆர்வமாக காட்டினாலும் ஜிம்மி நெல்சனின் புகைப்படங்களில் பழங்குடிகள் கிட்டத்தட்ட விளம்பர மாடல்கள் போல் போஸ் கொடுக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் ஜிம்மி பழங்குடிகளை நிலங்களின் பின்னணியுடன் கம்போஸ் செய்திருக்கும் விதம், ஒளி மற்றும் வண்ணங்களை பயன்படுத்தி இருக்கும் நுட்பம்,  புகைப்பட ரசிகர்களால் ஒரு பக்கம் கொண்டாடப்பட, இன்னொரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

 

omo-21

 

சர்வைவல் இன்டெர்நேஷனல் என்னும் அமைப்பைசேர்ந்த ஆந்த்ரோபாலஜி அறிஞரான‌ ஸ்டீபன் கோரி ஜிம்மின் புகைப்படங்களை “பழமையின் மீதான தவறான பார்வை” என்று விமர்சிக்கிறார். அதற்கு அவர் உதாரணமாக ஈகுவடார் பழங்குடிகளான ‘வாரோனி இந்தியன்” குழுவை அவர் புகைப்படம் எடுத்திருக்கும் விதத்தை சுட்டி காட்டுகிறார். வாரோனி இந்தியன் பழங்குடிகள் இன்று ஆடைகள் உடுக்க ஆரம்பித்து விட்டனர் ஆனால் ஜிம்மி அவர்களை கிட்டத்தட்ட வலிந்து நிர்வாணமாகவே படம் பிடித்திருக்கிறார் என்கிறார் கோரி.

இந்தோனேஷிய பாப்புவா பழங்குடிகள் தலைவரான பென்னி வென்டாவும் இது போலவே குற்றம் சாட்டுகிறார். ஜிம்மி நெல்சன் தங்கள் பழங்குடிகளை “ஹெட் ஹன்டர்ஸ்” என்று தன் போட்டோகிராஃபி புத்தகத்தில் குறிப்பிடுவதையும் அவர் கண்டிக்கிறார். “உண்மையில் ஹெட் ஹ‌ன்டர்கள் பழங்குடி மக்கள் அல்ல பழங்குடிகளை அழிக்கும் இந்தோனேஷிய ராணுவம் தான். அது மட்டுமில்ல ஜிம்மி குறிப்பிடுவது போல நாங்கள் அழிந்து கொண்டிருப்பவர்கள் இல்லை அழிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு” என்கிறார்.

“என்னுடைய அழகியல் பார்வை, மற்றும் பழங்குடிகள் மீதான அன்பு சார்ந்து மட்டுமே இதை பதிவு செய்திருக்கிறேன்.” என்று பதில் சொல்கிறார் ஜிம்மி நெல்சன். ஒரு பழங்குடி குட்டிப்பாப்பாவை தோளில் வைத்துக்கொண்டு அவர் கேமராவை ஹேண்டில் செய்வதைப்பார்த்தால் அதுவும் உண்மை தான் என்றே தோன்றுகிறது.

ஒன்லைன் விமர்சகர்கள்!

tamil advertising

oneline

 

இணையத்தில் அதுவும் குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இன்னபிற சமூக வலைத்தளங்களில் சினிமா விமர்சனங்களை உடனுக்குடன் படிப்பதில் சில அனுகூலங்களும் சில பிரச்சினைகளும் இருக்கின்றன.

முதலில் அனுகூலம்.

வெள்ளிக்கிழமை முதல் ஷோ ஆரம்பித்து இண்டெர்வெல் விடும் போதே, ஒன் பாத்ரூம் போயிட்டே ஒன்லைனில் ஸ்டேட்டஸ்மெசேஜையும், டீ,சமோசா சாப்பிட்ட படி ட்விட்டரில் ஒரு கீச்சையும் தட்டி, ஓபனிங் ஷோ முடியுறதுக்குள்ளே ஒபீனியன் கிரியேட் பண்ணி விடுகிறார்கள்.

படம் பார்க்காத சக நெட்டிசன்கள் கூட ஆப்பிஸ் வேலைக்கு மத்தியிலும் ’கர்மவீரனே…’கணக்காக இதை லைக்கிட்டும் ஷேர் செய்தும், மேட்னி ஷோ முடிவதற்குள் இணையத்தை மெர்சலாக்கி படம் எடுத்தவர்களை பதைபதைக்க வைக்கிறார்கள்.

நல்ல படமென்றால் கொண்டாட்ட ஸ்டேட்டஸ் போட்டு கும்மி அடிக்கவும், மொக்கை என்றால் காமெடி மீமி போட்டு அம்மி மிதிக்கவும் செய்வதால், இது வரை பார்க்காதவர்களும் ஆறின கஞ்சி பழங்கஞ்சி ஆகுறதுக்குள் பிளாக்கில் டிக்கட் எடுத்தாவது படத்தை பார்க்கவோ, தலை தப்பியது ட்விட்டர் புண்ணியம் என்று எடுத்த டிக்கட்டையே இலவசமாக கொடுக்கவோ தயாராகி விடுகிறார்கள். மற்றவர்களயும் வீக் எண்டில் படம் பர்க்கலாமா அல்லது பர்சை பத்திரப்படுத்தலாமா என்று ஒரு முடிவுக்கு வர வைக்கிறார்கள்.

இனி பிரச்சினை.

என்னவென்றால், ஒரு படத்தை கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி விடுவதால் அடுத்த வாரம் படம் பார்ப்பவர்களை ’கொடுத்த பில்ட் அப் அளவுக்கு ஒர்த் இல்லையோ’ எனவும், கதறக் கதற கமெண்ட் போட்டு கலாய்த்த ஒரு படத்தை பார்க்கும் போது ’அந்த அளவுக்கு மரண மொக்கை இல்லியே’ எனவும் யோசிக்க வைத்து விடுவது தான்.

சோ, இந்த அவசர விமர்சகர்கள், எதையும் சற்று ஓவராக பண்ணி விடுவதால், நல்ல படத்துக்கு கெட்டது செய்கிறார்களா? அல்லது மோசமான படத்துக்கு நல்லது செய்கிறார்களா? என்ற குழப்பங்களையே தலைக்குள் தட்டாமாலையாக சுற்ற விடுகிறார்கள்.

உடல் ஒரு மீடியம்

tamil advertising

tmagArticle

 

கொடுத்த ஒவ்வொரு காசுக்கு ஒரு ஜோக் என்று சிரித்து விட்டு வீட்டுக்கு நடையைக்கட்டும் சபா நாடகங்கள் முதல் புதிய பரிமாணங்களை காட்டும் நவீன நாடகங்கள் வரை இன்று நமக்கு அறிமுகம் உண்டு . நிகழ்த்து கலையும் (பெர்ஃபார்மன்ஸ் ஆர்ட்) ஒரு வகையான விஷுவல் ஆர்ட் தான். உலகெங்கும் அதற்கு பல்வேறு வடிவங்கள்.

இதில் பல சோதனை முயற்சி செய்யும் கலைஞர்கள் இருக்கிறார்கள். சோதனை கலைஞர்களுக்கா? பார்வையாளர்களுக்கா என்பது பார்க்கும் நமது புரிதலை பொறுத்தது.

மரினா அப்ரமோவிக். (Marina abramovic என்று கூகிளில் தேடவும்) செர்பியா நாட்டு நிகழ்த்து கலைஞர். ’நிகழ்த்து கலையின் மூதாட்டி’ என்று இவரை செல்லமாக சொல்கிறார்கள். மரினா தன் உடலையே ஒரு சோதனைக்கருவியாக கொண்டு பல நிகழ்த்துகளை நடத்துகிறார்.

ஒரு முறை தன் முன்னால் ஒரு டேபிளில் ஆலிவ் ஆயில், ரோஜா செடி முதல் கத்தி, லோட் செய்யப்பட்ட துப்பாக்கி உட்பட 72 பொருட்களை பரப்பி விட்டு, ஆறு மணி நேரமாக அசையாமல் உட்கார்ந்திருந்தார். லிஸ்டிலுள்ள எந்த பொருளை வேண்டுமானாலும் தன் மீது பிரயோகிக்கலாம் என்பதே பார்வையாளர்களுக்கான சவால். மனிதர்களின் நம்பிக்கை மீதான ஒரு சோதனை முயற்சி. அன்பா வன்முறையா என்பது தான் மரினா காண விரும்பிய ரிசல்ட்.

முதலில் பார்வையாளர்கள் அமைதியாக பார்த்துவிட்டு தான் சென்றார்கள் பிறகு கூட்டம் சேர சேர மெல்ல வன்முறையை நோக்கி மனிதர்கள் சென்றதாக சொல்லும் மரினா “ அவர்கள் எனது கூந்தலை வெட்டவும், பிறகு ரோஜா செடியின் முட்களை எனது நிர்வாணமான வயிற்றில் அழுத்தவும் செய்தார்கள். ஒருவன் துப்பாக்கியை எடுத்து என் தலைக்கு குறி வைக்க இன்னொருவன் அதை தடுக்கவும் செய்தான். எப்போதும் முடிவை கூட்டத்திடம் விட்டு விடும்போது நீங்கள் கொல்லப்படும் சாத்தியம் கூட உண்டு” என்கிறார்.

அன்பிற்கும் வன்முறைக்கும் இடையே உறைந்திருக்கும் மனிதர்களின் சைக்காலஜியை தனது பெரும்பாலான நிகழ் கலையின் வழியாக சோதித்து பார்த்த மரினா, ”எனது உடலின் எல்லையையும் மனதின் விரிவையும் அதற்கு பயன்படுத்திக்கொள்கிறேன்” என்று கவித்துவமாக சொல்கிறார்.

நம்மூரில் முன்பு அல்லயன்ஸ் ஃப்ராங்கைஸிலும், மேக்ஸ் முல்லர் பவனிலும், பெசண்ட்சகர் பீச்சை ஒட்டி இருக்கும் டான்சர் சந்திரலேகாவின் ஸ்பேஸசிலும் வேறு சில கலைஞர்களின் சோலோ பெர்ஃபார்மன்ஸ்களை பார்த்து வியந்திருக்கிறேன். மரினா இந்தியாவிற்கு வந்திருக்கிறாரா என்று தெரியவில்லை, அப்படி வந்து இது மாதிரியான நிகழ்வுகளை நடத்தி இருந்தால், நினைக்கவே படபடப்பாக இருக்கிறது.

மினி மியூசியம்

tamil advertising

mini musuem

பள்ளி பிராயத்தில் மியூசியத்திற்கு போய் இருப்பீர்கள். ஒரு ஆதிகாலத்து விலங்கின் பயமுறுத்தும் எலும்பு கூடோ? காலங்கள் பாசியாக படர்ந்த ஒரு கல்வெட்டோ? பாடம் செய்யப்பட்ட பழங்காலத்து பறவையின் பஞ்சடைக்கப்பட்ட இறகுடலோ? புரியாத ஜிலேபி மொழியில் கதை பேசும் கல்வெட்டோ? ஏதோ ஒன்ற கைகட்டி அடக்கமாக வியந்து பார்த்திருப்பீர்கள் அல்லவா.

ஒரு மியூசியம் உங்கள் கைக்குள்ளேயே அடக்கமாக இருந்தால் எப்படி இருக்கும். எதோ ஸ்மார்ட்போன் ஆப் என்று நினைத்து விடாதீர்கள். நிஜமாகவே ஒரு குட்டியூண்டு மியூசியம். நினைக்கவே சுவராஸ்யமாக இருக்கிறதல்லவா? அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார் வர்ஜீனியாவை சேர்ந்த ஹான்ஸ் ஃபெக்ஸ்.

ஆய்வு விஞ்ஞானியான தன் தந்தை டாக்டர். ஜோர்கன் ஃபெக்ஸ், மால்டா தீவிலிருந்து கொண்டு வந்த உறைய வைக்கப்பட்ட ’ரெசினி’ல் ஒட்டிய சில ஆராய்ச்சி துணுக்குகள் தன்னை கவர்ந்ததாக சொல்லுகிறார் ஹான்ஸ். அப்போது அவருக்கு வயது ஏழு. இம்முறைய பின்பற்றி ஏன் குட்டி குட்டியாக ம்யூசியம் உருவாக்கக்கூடாது என்கிற ஐடியா அப்போதே அவருக்குள் தோன்றியதாம்.

கட்ந்த 35 வருட தேடலில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் முதல் ம்யூசியம் ஆராய்ச்சியாளர்கள் வரை பலரது உதவியையும் நாடிய ஹான்ஸ் இப்போது இதை சாத்தியாமாக்கி விட்டார்.

டைனோசர் முட்டையின் சிறு துண்டு முதல் நிலாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ’லுனார் ராக்’ வரை கிட்டத்தட்ட பூமியின் வரலாற்றையே சின்ன சின்ன ’சாம்பிள் பீஸ்களாக’ உறைந்த ரெசின் என்கிற கண்ணாடிப்பேழைக்குள் பதித்து இன்று விற்பனைக்கும் கொண்டு வந்து விட்டார்.

மேலே இருக்கும் புகைப்படத்தில் குட்டி குட்டியாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பார்த்தால் வியக்காமல் இருக்க முடியாது. அறிவியலிலும் வரலாற்றிலும் ஆர்வமுள்ளவர்கள் ஒன்றை வாங்கி படுக்கைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டால், இண்டியானா ஜோன்ஸில் வரும் ’ஹாரிசன் ஃபோர்ட்’ மாதிரி தொல்பொருள் ஆராய்ச்சியாளனாக கனவில் ஃபீல் பண்ணலாம்.

இண்டெராக்டிவ் ஆர்ட்

tamil advertising

Iris-by-Hybe-3

 

சினிமா பார்க்கபோவது போல நவீன ஓவிய கண்காட்சிக்கு நம்மூரில் யாரும் குடும்பத்துடன் போவதில்லை. ஆனால் பிற ஊர்களில் போகிறார்கள். குடும்பத்துடன் வேண்டாம் தனியாக போகிறீர்களா? போனாலும் அமைதியாக வேடிக்கை பார்த்து விட்டு திரும்பி விடுவீர்கள் தானே. நவீன ஓவியங்கள் புரிவதில்லை என்பது கிளிட்சேவான ஒரு குற்றச்சாட்டு

எப்படி புரிந்து கொள்வது. சிம்பிள். புரிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள் அனுபவியுங்கள் என்பதே பதில். சிறு குழந்தை சிரிக்கும் காட்சி, ஒரு சூரிய உதயத்தின் காட்சி, ஒரு கொசுவை அடித்தால் சிதறிய ரத்தத்துடன் அது ஒட்டியிருக்கும் காட்சி. இப்படி எதை பார்த்தாலும், பார்க்கும் நமது அனுபவத்தை ஒட்டி ஏதோ ஒன்று நமது மனதில் விரியும் அல்லவா. அதே தான். நவீன ஓவியம் ஓவியர் என்ன வரைந்திருக்கிறார் என்பதை விட பார்வையாளர் எப்படி எடுத்து கொள்கிறார் என்பதே முக்கியம் என்கிறது.

அதிலும் பார்வையாளரும் ஆர்ட்டில் ஒரு பகுதியாகி விட்டால் எவ்வளவு சுவராஸ்யமாக இருக்கும் என்று யோசித்ததின் விளைவே ”இண்டெராக்டிவ் ஆர்ட்” என்று சொல்லபடும் ஒரு வகையான நவீன டிஜிடல் ஆர்ட்.

இன்று நம்மை சுற்றி எல்லாமும் டிஜிடல் மயம். இண்டெராக்டிவ் ஆர்ட்டும் தொடுதிரை முதல் சென்சார் வரை டிஜிடலையே தன் மீடியமாக பயன் படுத்துகிறது. நீங்கள் இண்டெராக்டிவ் ஆர்ட் முன்பாக நின்றால் உங்கள் பிம்பமும் அந்த ஆர்ட்டின் ஒரு பகுதியாக மாறலாம், அல்லது உங்கள் அசைவே அந்த ஆர்ட்டை ஒரு அனிமேட்டட் கேன்வாஸாக மாற்றலாம், உங்கள் கண்சிமிட்டல் கூட அந்த ஆர்ட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம், அல்லது உங்கள் கைதட்டல் அந்த ஆர்ட்டில் ஒரு வண்ணத்தை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இப்படி உங்கள் பங்களிப்பே அந்த ஆர்ட்டுக்கு புது புது வடிவத்தை கொடுக்கலாம்.

மவ்ரிஸ் பெனாயுன் முதல் தோமஸ் சார்வெரியத் வரை நிறைய நவீன ஆர்டிஸ்டுகள் இம்முறையில் இண்டெராக்டிவ் ஆர்ட்டை உருவாக்குகிறார்கள்.

Interactive art என்று கூகிளில் தேடினால் படங்களும், தகவல்களும் உங்கள் முன் விரியும். அதன் வழியாக ஆர்வமுள்ளவர்கள் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் டிஜிடல் மயமாகும் கொஞ்ச காலத்தில் அட்டையிலிருக்கும் விகடன் தாத்தா நீங்கள் ஹலோ சொன்னால் திருப்பி ஹலோ என்று பதிலுக்கு கைகளை ஆட்டினாலும் வியக்கமாட்டீர்கள் தானே.

அஞ்ஞானச் சிறுகதைகள் 09

tamil advertising

5

41. வண்ணம்

பிரம்மாண்டமாக, அசையாமல் நின்று கொண்டிருந்த ரோபோவை காட்டி ப்ரொஃபசர் மனாஸ் “இதன் பெயர் ப்ரஹ். இது வெறும் ரோபோ இல்லை. உன்னை மாதிரி ரோபோக்களை உருவாக்கும் மதர் சிஸ்டம் இது.” என்றார் தன் பக்கத்தில் நின்றிருந்த குட்டி மஞ்சள் நிற ரோபோவிடம். “இதன் ஹெட் பகுதியிலிருந்து உருவானவன் நீ…” என்றார். மஞ்சள் ரோபோ ப்ரொஃபசரை ஏறிட்டு பார்த்தது.

“தெரிகிறது. இதன் ஜெஸ்டிலிருந்து கருஞ்சிவப்பு, ஸ்டொமகிலிருந்து வெள்ளை, காலிலிருந்து கடும்நீலம் என்று வெவ்வேறு வண்ணங்களில் ரோபோக்கள் உருவாகின்றன அல்லவா” என்றது மஞ்சள் ரோபோ. ஆமென்று தலையசைத்தார் மனாஸ். “ஆனால் எங்கள் எல்லாருடைய பாடி மெடபாலிஸமும் ஒன்று தான். இப்படி வண்ணங்களை மாற்றி எங்களை ஏமாற்றி நீங்கள் அடைவது என்ன”

ப்ரொஃபசர் மஞ்சள் ரோபாவை உற்று“ என்னுடைய இந்த அறிவியல் நகரம் என் கண்ட்ரோலில் இருக்க இந்த வகைப்பாடுகள் எனக்கு தேவையாக இருக்கிறது. ஒரு உண்மையை சொல்லட்டுமா இந்த ப்ரஹ் இல்லையென்றாலும் நீங்கள் உருவாகி வருவீர்கள். வெறும் வண்ணமடிக்கும் வேலையைத்தான் இந்த ப்ரஹ் செய்கிறது. நீ மஞ்சள் ரோபாவாக இருப்பதால் உன்னிடம் இதை சொல்கிறேன். ஆமாம் உனக்கு என்ன குறை? ஏன் இந்த கேள்விகள்? எல்லா அழுத்தங்களும் கடும்நீல நிற ரோபோக்களுக்கு தானே” என்றார்.

சட்டென்று மஞ்சள் ரோபோ, ப்ரஹ் என்னும் அந்த பிரமாண்ட ரோபோவை அசைத்து தள்ளியது. அது ஒரு பெரிய கட்டிடம் போல விழுந்து நொறுங்கிய அதிர்வு காற்றாய் அடித்தது. ப்ரொ. மனாஸ் செய்வதறியாது மஞ்சள் ரோபோவை பார்த்தார். அதன் மஞ்சள் நிற சிலிக்கான் ஸ்கின் அடித்த காற்றின் அதிர்வில் இளகி உதிர்ந்தது.

 

உள்ளே கடும்நீல நிறம் தெரிந்தது.

 

42. யார்?

 

“இந்த பூமியில எங்கும் மனிதர்களே. இல்ல” என்றது அடியாள் ஏலியன்.

“அப்படி சொல்ல முடியாது” என்றது மாஸ்டர் ஏலியன்.

“அண்டார்டிகா உள்பட ஏழுகண்டங்கள், அதுல இருக்கிற நாடுகள், தெருக்கள், வீடுகள் இப்டி பூமியின் மூலை முடுக்கெல்லாம் லேசர் கற்றைகளால் சல்லடையாக தேடியாகிவிட்டது. எங்கும் மனிதர்களே இல்லை” என்றது அடியாள் ஏலியன்.

“நான் நம்ப மாட்டேன்..” என்றது மாஸ்டர் ஏலியன்.

”இல்ல மாஸ்டர். நான் ஊரெல்லாம் தேடிட்டு வந்து சொல்கிறேன். நீங்கள் உட்காந்த இடத்தில் இருந்து கொண்டே எப்டி சொல்றீங்க. பூமியில் மனிதர்களே இல்லை” என்று மீண்டும் சொன்னான் அடியாள் ஏலியன்.

“இருக்காங்க.” என்றது மாஸ்டர்.

“இல்ல” அடியாள்

“இருக்காங்கனு சொல்றேன்.” மாஸ்டர்.

“இல்லவே இல்ல” அடியாள்

“இருக்காங்கனு அடிச்சு சொல்றேன்.” என்றார் மாஸ்டர் சத்தமாக.

“எப்டி சொல்றீங்க” என்றான் அடியாள் எரிச்சலாக

”நல்லா பாரு. இந்த கதையை இப்போ படிச்சிட்டு இருக்கிறது யாரு, கீழே லைக், கமெண்ட் எல்லாம் போட்டுட்டிருக்கிற இவங்க எல்லாம் யாரு” என்றார் மாஸ்டர் கோபமாக.

 

43. எலி

நாளை நடக்கப்போகும் விருது விழாவை நினைத்தபடி தன் கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் விஞ்ஞானி ராபர்ட்.

மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியின் பிலேஸ் செல்கள் தான் மனிதன் உட்பட விலங்குகள் தங்கள் வழிகளை அறிவதற்கான காரணம். இயற்கையாக மூளையில் இருக்கும் ஜி.பி.எஸ். தன் ஆராய்ச்சி கூடத்தில் ஆயிரக்கணக்கான எலிகளின் மூளைகளை திறந்து சென்சார்களை பதித்து, அவை எல்லாவற்றையும் ஒரு மானிட்டரில் இணைத்திருந்தார்.

எலிகளின் மூளைகளின் கிரிட் செல்களில் உருவாகும் சிக்னல்களை கொண்டு ஒரு டிஜிட்டல் மேப்பை உருவாக்கி நாளைய நிகழ்வில் உலகத்தை வாயடைத்து போக செய்ய வேண்டும். மானிட்டரில் விரிந்த வரைபடத்தில் வழிகள் துல்லியமாக அம்புகுறியிட்டு காட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே வந்த ராபர்ட் ஒரு சிகப்புநிற அம்புகுறி காட்டிய வாசகத்தை உற்றுபார்த்தார். வே டு ஹெல் என்று எழுதி இருந்தது.

கூடத்தின் மூலை முடுக்கெல்லாம் ஆயிரக்கணக்கான கீச்சொலிகள் ஒன்றாக எழுந்து காதை அடைத்தது.

 

 

44. ஸ்டிக்கர்

“டாக்டர். இது என் பையன். நேத்திலிருந்து இவனுக்கு ஒரு பிரச்சினை.”

“என்ன சொல்லுங்க”

“நேத்து காலையில நான் இவனுக்கு ஒரு அட்வைஸ் பண்ணினேன். உடனே அத நக்கல் பண்ணினான்”

“பசங்க அப்டி தான். அது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே”

“இல்ல டாக்டர். நக்கல் பண்ணின பிறகு அவன் ஒண்ணு பண்ணினான் அது தான் பிரச்சினை”

டாகடர் இளைஞனை பார்த்தார். அவன் புன்னகைத்து கொண்டிருந்தான்.

”அப்டி என்ன பண்ணினான்”

“திடீருன்னு எங்கிருந்து வந்திச்சின்னு தெரியல் அவன் கையில ஒரு பூனைக்குட்டி கார்ட்டூன் ஸ்டிக்கர். அதை அப்டியே என் மூஞ்சியில ஒட்டினான். அப்புறம் என் பொண்டாட்டி எதுவோ சொன்னதுக்கு ஒரு ஸ்மைலி அழுற மாதிரி ஒரு ஸ்டிக்கர ஒட்டினான். அப்புறம் யாரு எது பண்ணினாலும் அதுக்கெல்லாம் ஒரு கார்ட்டூன் ஸ்டிக்கர் ஒட்டினான். அது எங்கேருந்து அவன் கைக்கு வருதுன்னு தெரியல. யாரு என்ன சொன்னாலும் இப்படி விதவிதமா கார்ட்டூன் ஸ்டிக்கர்களை ஒரு நொடியில ஒட்டிடுறன். வீட்டுல வால் எல்லாம் ஒரே ஸ்டிக்கர் மயமா இருக்கு டாக்டர்”

டாக்டர் திரும்பி அவனை பார்த்தார் “இதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை சரி பண்ணிடலாம்” என்றார்.

அவன் சடாரென்று டாக்டரின் நெற்றியில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டினான். அதில் ஒரு குட்டிபாப்பா கார்ட்டூனுனும் மூணு லவ் சிம்பலும் இருந்திச்சு.

 

 

45. கோபம்

 

”பூமா தேவிக்கும் விஷ்ணுவின் வராக அவதாரத்திற்கும் பிறந்தவன் தான் நரகாசுரன். ஸ்ரீமத் பாகவதத்தில் இருக்கிறது”என்றார் தாத்தா திண்ணையில் இருந்தபடி..

“அப்புறம் எதுக்கு விஷ்ணுவோட இன்னொரு அவதாரமான கிருஷ்ணரே அவரை கொலை செய்யணும்”என்ற படி பட்டாசு பார்சலை பிரித்தான் அபி.

”கிருஷ்ணர் மட்டுமில்ல, காளியும், சத்ய பாமாவும் கூட நரகாசுரன கொன்னதா வெவ்வேறு கதைகள் இருக்கு. ஆனா கிருஷ்ணர் கொன்னத தான் நான் நம்புறேன். அது பெரிய கதை. ”என்றார் தாத்தா

“அப்போ பூமாதேவிக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்ல தாத்தா” என்ற அபி ஒரு வெடி பாக்கட்டை எடுத்து முற்றத்தில் இறங்கினான்

“இருந்திருக்கலாம். ஆனா அது தான் விதி.” என்ற தாத்தாவை பார்த்துக்கொண்டே அபி ஒரு வெடியை உருவி தரையில் நிக்க வைத்தான்.

”அப்போ பூமாதேவிக்கு கோபமே வந்திருக்காதா. அவங்க கோபத்த எப்டி காட்டி இருப்பாங்க.” என்றான் ஊதுவத்தியின் கனலை பார்த்தபடி.

பிறகு குனிந்து வெடியின் திரியை பற்ற வைக்கும் போது தான் வெடியின் மீது அச்சிடப்படிருந்த லக்‌ஷ்மியின் உருவத்தை பார்த்தான். அவளது சிறு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வழிவது போல தோன்றியது. மறுகணம் லக்‌ஷ்மி சுக்குநூறாக பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறினாள்.

“பூமாதேவி லக்‌ஷ்மியின் ஒரு அவதாரம் தான்”என்று தாத்தா சொன்னது வெடிச் சத்தத்தில் அவன் காதில் விழவில்லை.

அஞ்ஞானச் சிறுகதைகள் 08

tamil advertising

Log in Anjanasirukathai

36. லாக் இன்

‘இன்னைக்கு ரெண்டு வாழ்க்கை வாழுறாங்க. ஒன்று நிஜ உலகில் மற்றது ஃபாஸ்புக்கில். இதற்கான தீர்வு என்ன‘ இது தான் உங்களுக்கு தந்த ப்ராஜக்ட், அப்டிதானே”என்றான் மார்க். தலையை அசைத்த விவேகானந்த் ”இந்திய தத்துவங்களின் படி ஒன்று ஸ்தூல சரீரம் அதாவது நிஜம் மற்றது சூக்‌ஷ்ம சரீரம் அதாவது வர்சுவலாக ஃபேஸ்புக்கில். இந்த எல்லைகளை அழித்து ஒரே வாழ்க்கையை தருவது தான் என் ஆய்வின் முடிவு” என்றான். எப்படி என்பது போல பார்த்தான் மார்க்.

“ப்ரோக்கிராமிங்கில் சில மாற்றங்களை செய்திருக்கிறேன். முதலில் நீங்களே லாக் இன் பண்ணுங்கள்” என்ற படி லேப்டாப்பை நீட்டினான் விவேகானந்த். மார்க் லாக் இன் பண்ணி ஃபேஸ்புக்கில் நுழைந்தான். அவன் உடல் இப்போது வெளியில் இல்லை என்பதை அறிந்து ஒரு கணம் திகைத்தான். ப்ரொஃபல் பிக்சருக்குள் இருந்தபடி விவேகானந்தை பார்த்தான். விவேகானந்த் லேப்டாப்பை நோக்கி குனிந்தான் “நீங்கள் லாக் இன் பண்ணும் போது உங்கள் ஸ்தூல சரீரத்துடன் உள்ளே நுழைந்து விடுவீர்கள். அதாவது நிஜ உடலுடன்.” “எப்படி வெளியே வருவது. இங்கே லாக் அவுட் ஆப்ஷனே காணாமே” என்றான் மார்க் உள்ளிருந்தபடி.

”லாக் அவுட் ஆப்ஷனை டிஸ்ட்ராய்ட் செய்து விட்டேன். இனி நீங்கள் வெளியே வரவே முடியாது. இந்திய தத்துவத்தில் இதை ’விதேக முக்தி’ என்று சொல்வார்கள்” என்ற படி லேப்டாப்பை மூடினான்.

 

37 இனம்

”நீ பார்க்கப்போவது, காலபகோஸ் தீவுகளிலிருந்து நான் கொண்டு வந்த அழியப்போகும் பூச்சி இனத்தின் கடைசி ஒரே ஒரு பூச்சி. இந்த ஒரு பூச்சியும் செத்துப்போனால் இனி அந்த இனமே இல்லை. பெயர் பெயசிலிதோரியா எண்டி. எட்டுகாலி டாரண்டுலா ஃபேமிலி. அதாவது சிலந்தி இனம். டார்வின் தன் காலபகோஸ் தீவு டைரியில் இந்த பூச்சியை பற்றி பதிவு செய்திருக்கிறார். ஒரு சிறு பாறைத்துண்டில் பல நூறு வருடங்களுக்கு முன்பு செத்துபோன ஒரு ஆண் பூச்சியின் படிவத்தையும் அப்போது கண்டெடுத்தார்” லேபிற்கு போகும் வராந்தாவில் நடந்தபடி தன் தோழி லின்சியிடம் சொன்னான் கிறிஸ். இளம் எண்டமோலஜிஸ்ட். பூச்சியியல் ஆய்வாளன்.

“நேற்று இரவு முழுக்க டார்வினின் பாறைத்துண்டு படிவத்தையும், அந்த பூச்சியையும் வைத்துகொண்டு உடலியலை ஆராய்ந்து கொண்டிருந்தேன். வித்தியாசத்தை கடைசியில் தான் கண்டேன். நம்மிடமிருப்பது பெண் பூச்சி.” என்றபடி லேபின் கதவை திறந்தான். லின்ஸி லேசாக புன்னகைத்தபடி பின் தொடர்ந்தாள்.

பூச்சி இருந்த கண்ணாடி பாட்டில் வெறுமையாய் திறந்து கிடந்தது. அதிர்வுடன் மேஜையை நெருங்கிய கிறிஸ் அப்போது தான் பக்கத்தில் கிடந்த பாறைத்துண்டை கவனித்தான். அதில் டார்வினின் படிவமும் இல்லை.

தூசிபடிந்த மேஜையிலிருந்து ஜன்னலை நோக்கி பதினாறு கால்கள் ஊர்ந்து போனதற்கான மிக மெல்லிய தடயத்தை லின்சி மட்டுமே முதலில் பார்த்தாள்.

 

38. ….

 

”ஆதியிலே வார்த்தை இருந்தது, என்று பைபிளில் யோவான் அதிகாரம் ஒன்று முதல் வசனம் ஆரம்பிக்கிறது. விழிப்பு கனவு தூக்கம் இதை தாண்டிய நான்காவது நிலையாக அந்த ஒலியை மாண்டூக்கிய உபநிஷத் கூறுகிறது. அந்த வார்த்தையை, அதாவது அந்த ஒலியை பதிவு பண்ணவே இந்த பயணம். காலத்தில் பின்னோக்கி நாம் அனுப்பிய ’நானோ சோனிக் ரிகார்டர்”தாங்கிய விண்கலம் அதை பதிவு செய்து நமக்கு இப்போது அனுப்பும்” என்றார் அகவுஸ்டிக் எஞ்ஜினியர் அனந்தகிருஷ்ணன் தன் குழுவினரிடம்.

அவர்களின் முன்னால், விண்கலம் அனுப்பும் ரேடியோ வேவ்ஸை எலெக்ட்ரான்களின் உதவியுடன் சவுண்ட் வேவ்ஸாக மாற்றி ஒலிபரப்பும் நியோனிய ஸ்பீக்கர்கள் தயாராக இருந்தன. ” இந்த நீல நிற எல்இடி லைட் ஒளிரும் போது நாம் அந்த ஆதி ஒலியை ஐந்து நிமிடங்களுக்கு கேக்கப்போகிறோம். இன்னும் சில நொடிகள் தான். இப்போதே அனைவரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்ற படி அனந்தகிருஷ்ணன் இமைகளை மூடினார். குழுவினரும் அதையே செய்தனர். சில கணங்களில் ஆழமான அமைதியை உள்ளுக்குள் கேட்டனர்………………………..ஐந்து நிமிடங்களுக்கு பிறகு வார்த்தைகளில் சொல்ல முடியாத பரவசத்துடன் கலைந்து சென்றனர்.

அந்த நீல நிற லைட் ஒளிரவே இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க வில்லை.

 

 

39. விதை

”இந்த ஒரு லட்சம் கர்ப்பிணி பெண்கள் எல்லாம் நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவங்க. சிசுக்களின் ரைட் பிரயினில் இருக்கிற, சமூக அநீதியை எதிர்க்கிற, புரட்சி செய்ய தூண்டுகிற நியூரான்களை அல்ட்ரா லேசரால் அழிக்கிறது, அதுக்கு பதிலா நம்ம கம்பெனியோட ரூட்மேப்பை அதுல பதிய வைக்கிறது. இது தான் நாம செய்ய வேண்டிய வேலை. இன்னும் இருபது வருஷத்துல கேள்வி கேக்காத லட்சம் அடிமைகள் தானா வந்து நம்ம கம்பெனில ஜாயின் பண்ணுவாங்க. இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி இதுக்காகத்தான் இந்த லேப ஆரம்பிச்சி நம்மள அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்கு” என்றார் சீஃப் மெடிகல் ஆப்பிஸர் சிதம்பரம். அவர் முன்னால் இருந்த இரண்டு இளம் மருத்துவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“இன்னையிலிருந்து நம்ம வேலை ஆரம்பிக்கிறது. சரியாக பத்து நாட்களில் இந்த ஃபர்ஸ்ட் பேட்சை முடித்து அனுப்பணும்” “ஒகே சார்.”என்றனர் இளம் மருத்துவர்கள். பத்து நாட்களில் வேலை முடிந்தது. சிதம்ப்ரம் திருப்தியாக சிரித்த படி மேலிடத்திற்கு அழைத்தார்.

வெளியே வந்த ஒரு இளம் மருத்துவன் மற்றவனிடம் “நான் ஒரு சிசுவிற்கு மட்டும் எதுவும் பண்ணல. ஃபேக் ரிப்போர்ட் தான் கொடுத்தேன்.” என்றான்.

மற்றவன் அதிர்ச்சியுடன் “ஏன் இப்டி பண்ணினீங்க சுபாஷ்சந்திரன்” என்றான்.

”ஒரு விதை இருந்தாலும் போதும்” என்றான் கண்கள் சிவக்க. மற்றவனுக்கு முதலில் புரியவில்லை.

 

40. சிகரெட்

”உங்களை போன்ற செயின் ஸ்மோக்கர்கள் சிகரெட் பழக்கத்தை விட்டொழிப்பதற்காகதான் இந்த சிகரெட் இன்வென்ஷன். மரண பயம் காட்டணும் ” என்று சொன்ன தன் மாணவன் டேவிட்டை கோணல் சிரிப்புடன் பார்த்தார் ப்ரொபசர். அவன் உள்ளங்கையில் ஒரு சிகரெட் இருந்தது. ”மூன்று தியரிகளின் படி இதை தயாரித்திருக்கிறேன். நியூட்டனின் தேர்ட் லாவ், கொஞ்சம் பிளாக் ஹோல், நான் வணங்கும் கிறிஸ்துவிடமிருந்து மூன்றாவது” என்றான். ப்ரொபசர் நெற்றியை சுருக்கியபடி அந்த சிகரெட்டை எடுத்து தன் உதடுகளில் பொருத்தினார். கிண்டலாக புன்னகைத்து கொண்டே பற்றவைத்தார்.

முதல் முறை புகையை உறிஞ்சி வெளியே விட்டார். இரண்டாவது முறை சிகரெட்டை வாயில் வைத்ததும் சிகரெட் அவரை உறிஞ்ச தொடங்கியது. ”ஒரு வினைக்கு எதிர்வினை உண்டு” என்றான் டேவிட்.

சுதாரிப்பதற்குள் ப்ரொபசரின் மொத்த உடலையும் சுருக்கி சிகரெட் உள்ளிழுத்துக் கொண்டது “தனது நிறையை விட அதிக நிறையை உள்ளிழுத்துக்கொள்ளும் பிளாக் ஹோல்” என்றான்.