Archive for May, 2009

யூத்ஃபுல் விகடன்

 

 http://youthful.vikatan.com/youth/santhosharticle26052009.asp

vikatan 2

யூத்ஃபுல் விகடன்.காமில் நமது கட்டுரை “படைப்புத்திறனை பணமாக்கலாம்” பிரசுரமாகியுள்ளது. விகடனுக்கு என் நன்றி.

Advertisements

May 26, 2009 at 3:26 pm 4 comments

படைப்புத்திறனை பணமாக்கலாம்!

oviyam

நீங்கள் சிறுவயதில் கரிக்கோடுகளால் வீடெல்லாம் கிறுக்க ஆரம்பித்து, அப்பாவிடம் அடம் பிடித்து வாட்டர் கலர் வாங்கி ” இயற்கைக் காட்சியை” வரைந்து நண்பர்களிடம் காட்டி காட்டி அலட்டல் பண்ணியிருக்கலாம். உங்களிடம் ஒரு ஓவியன் உருவாகி வளர்ந்த்திருக்கிறான் என்பதெ அதன் அர்த்தம் காலச்சுழற்சியில் வீட்டாரும் நாட்டாரும் உங்கள் உள்ளே இருந்த ஓவியனை அழித்து ஒரு இஞ்சினியராகவோ டாக்டராகவோ உருமாற்றியிருக்கலாம். அல்லது கணக்கு நோட்டில் கதைகள் கிறுக்கி, பத்தாம் வகுப்பு கீதாவை ஒருதலையாக காதலித்து அவள் அப்பா மாற்றலாகி வேறு ஊருக்கு அவளையும் கூட்டிசென்ற சோகத்தில் காதல் ஒரு நரகம் என்று உணர்ந்து கவிதைகள் எழுதி வாரமலருக்கு அனுப்பி அது பிரசுரமாகி பக்கத்து ஊரிலிருக்கும் கீதா எப்படியாவது அதை படித்து விட மாட்டாளா என்கிற பதபதப்பில், பத்தாம் வகுப்பு ஃபெயிலாகி அப்பாவும் அண்ணனும் மாறி மாறி பென்டெடுக்க கவிதையையும் கீதாவையும் அன்றுடன் நீங்கள் மறந்து போயிருக்கலாம். சூழ்நிலை இப்படி ஒரு எழுத்தாளனை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். (இன்று ப்ளாகில் எழுதி அந்த ஆசையை ஈடேற்றி கொள்வது வேறு விஷயம்) பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, நிறைய பவுடர் பூசி அழுத்தமாக லிப்ஸ்டிக் போட்டு அமெச்சூர் நடிகர்கள் நடித்த நாடகங்கள் என்று பார்த்து அந்த இன்ஸ்பிரேஷ்னில் நீங்கள் போட்ட நாடகங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், அதிகபட்சமாக அறிவியல் வாத்தியாரின் ஆதரவோடு பள்ளி ஆண்டுவிழாவில் நீங்கள் போட்ட “முத்துவுக்கு கிடைத்த குத்து” என்கிற நாடகம் எல்லாராலும் “செமத்தியாக” பாராட்டப்பட்டு உங்கள் நடிகர் கனவிற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்திருக்கலாம். ஒரு இளம் நடிகனை இந்திய திரையுலகம் இழந்திருக்கலாம். பெரியம்மா பொண்ணு நிச்சயதார்த்ததிற்கு நான் தான் போட்டோ எடுப்பென் என்று அடம்பிடித்து மாமாவிடமிருந்து ஆட்டோமெட்டிக் கேமராவை வாங்கி நீங்கள் விழுந்து விழுந்து படமெடுத்திருப்பீர்கள். ஃபிலிமை கழுவி பிரின்ட் போட்டபோது தான் தெரிந்திருக்கும் நடுக்கத்தில் உருவங்களெல்லாம் நடமாடும் ஆவியாக மாறி குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருப்பதை. பாவம் அவுட் ஆஃப் போக்கஸ் என்ற வாக்கியத்தை அந்த காலங்களில் நீங்கள் அறிந்த்திருக்க மாட்டீர்கள். இப்படி உங்கள் புகைக் பட கலைஞன் கனவும் ஃபிலிம் ரோல் போல உங்களுக்குள்ளே சுருண்டு மறைந்திருக்கும்.  இப்படி ஏராளம் ஏராளம் கலைஞர்கள் சின்ன வயதிலேயே காணாமல் போனதுண்டு எந்த காணவில்லை அறிவிப்பும் வெளியிடப்படாமலே. அதற்கு காரணம் அன்று இருந்த சமூகபொருளாதார நிலை தான். (அப்பாடா விஷயம் சீரியசுக்கு வந்தாச்சு) பெற்றோர்களின் கனவு தங்கள் பிள்ளைகள் கைநிறைய சம்பாத்தித்து சமூகத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற  தான். படம் வரைபவனும் கவிதை எழுதுறவனும் பொழைக்கமாட்டான் என்கிற மூடநம்பிக்கை தான். ஆனால் இன்று நிலமை மாறி இருக்கிறது. விளம்பரத்துறை, பல்வேறு ஊடகங்கள், அனிமேஷன் போன்ற தொழில்நுட்பமும் கலையும் கலந்துரையாடும் களங்கள் போன்றவை நமது  படைப்புத்திறனுக்கு தீனியும் பணமும் ஈட்டித்தருகின்றன. ஓவியத்திறமை இருக்கும் சிறுவன் அந்த துறையிலேயே ஒரு நிபுணனாக வருவதற்கான வெளி இன்று இருக்கிறது. எழுத்துத்திறமை இருப்பவர்கள் தாடியை சொறிந்தபடி அலைய வேண்டிய தேவை இன்று இல்லை. ஊடகங்களின் யுகத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். ஓவியம், எழுத்து, நடிப்பு, புகைப்படம், இசை என்று எல்லாவிதமான கலைதிறமைகளையும் வெளிப்படுத்த ஒரு களமாக இன்று விளம்பரத்துறை இருக்கிறது. இன்று எளிதாக படைப்புத்திறனை பணமாக்கலாம். சிறுவர்களின் கலைத்திறமைகளை வரவேற்போம். வளர வைப்போம்.

May 22, 2009 at 2:01 pm 8 comments

விளம்பரங்களில் நடிக்க விருப்பமா?

modelling

பெரும்பாலும் மாடல்கள் சினிமாவுக்கான ஒரு பாதையாகத்தான் விளம்பர மாடலிங்கை தேர்வு செய்கிறார்கள். அழகாக இருப்பது மட்டுமல்ல உணர்ச்சிகளை நொடியில் மாற்றி வெளிப்படுத்தும் தேர்ச்சியும் இருக்க வேண்டும். குட்டிக்குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை விளம்பரங்களில் மாடல்கள் பிஸியாக இருக்கிறார்கள். பிரிண்ட் மீடியா என்றால் பெரும்பாலும் கேமராவை முறைத்து பார்ப்பது போல் போஸ் கொடுத்தால் போதும். விளம்பரப்படங்கள் என்றால் தான் கொஞ்சம் நடிக்கவும் தெரிய வேண்டும். ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட ஒரு சிறு விளம்பரப்படத்தில் நடிக்க லட்சலட்சமாக வாங்கும் நடிக நடிகைகள் இருக்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்களை விளம்பர நிறுவனமோ அல்லது வணிகநிறுவனங்களோ தான் தேர்ந்தெடுக்கிறார்கள். விளம்பரப்பட இயக்குனர்களும் பரிந்துரைப்பது உண்டு. விளம்பர நடிகர்களுக்கான ஏஜென்சிகள் வசம் தான் பெரும்பான்மையான மாடல்களின் புகைப்பட ஆல்பங்கள் இருக்கும் தொடர்பு கொள்ளுவதும் அவர்கள் மூலமாக தான் இருக்கும். விளம்பரப்படங்களில் நடிக்க ஆர்வமுள்ளவர்கள் முதலில் தொடர்பு கொள்ள வேண்டியது ஒரு நல்ல விளம்பர புகைப்படக்கலைஞரைத்தான். அஷ்ட கோணங்களிலும் நவரச பாவங்களிலும் (சிரிப்பு, முறைப்பு, கடுப்பு, etc)  உங்களை புகைப்பிடித்து ஒரு ஆல்பம் தயாரித்து கொள்ளவும்.  பிறகு அந்த ஆல்பத்துடன் மாடல் ஏஜென்டுகளை அணுகவேண்டும். பல விளம்பரநிறுவனங்களுடன் தொடர்பிலிருக்கும் அவர்கள் உங்களை தேவைப்படும் போது விளம்பர தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள். உங்களுக்கு கிடைக்கவேண்டிய தொகையில் ஒரு பாகம் அவர்களுக்கு கமிஷனாகப்போகும். விளம்பரம் வெற்றி பொறுவதை பொறுத்து உங்கள் கிராஃப் ஏறவோ இறங்கவோ செய்யலாம். யார் கண்டது நீங்கள் அப்படியே பெரிய நடிகராகி அரசியலில் புகுந்து…

May 21, 2009 at 3:21 pm 5 comments

அமுல் பேபி!

amul collect 3

அமுல் பேபி என்று கிண்டல் செய்வதை எல்லாரும் கேட்டிருப்போம். காரணம் அமுல் விளம்பரங்களில் வரும் உருண்டை முகமும் முட்டைகண்களும் உப்பிய கன்னங்களும் கொண்ட புள்ளிகளிட்ட சட்டை அணிந்த  குட்டிப்பெண் தான். அமுல் இந்திய வெண்மைப் புரட்சியின் முக்கியமான அடையாளம் . மிகப்பழைமையும் புகழும் கொண்ட ஒரு பிராண்ட். அமுல் என்ற பெயருக்கு காரணம் சமஸ்கிருதத்தில் அமுல்ய என்றால் விலைமதிப்பற்றது என்று பொருள் அதுமட்டுமல்லாமல் Anand Milk Union Limited என்பதன் சுருக்கிய வடிவமும் கூட. ஆனந்த் என்பது அமுல் தயாரிப்புகள் ஆரம்பித்த குஜராத்திலுள்ள கிராமத்தின் பெயர். டாக்டர் வர்கீஸ் குரியின் அவர்களின் முன்னெடுப்பில் அயிரக்கணக்கான பால் விவசாயிகளின் ஒருங்கிணவால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் தான் அமுல் பிறப்பதற்கு காரணம்.   அமுல் இந்த அளவிற்கு பெயரும் புகழும் பெற  முக்கியமான காரணம் அதன் விளம்பரங்கள். அந்தந்த காலங்களின் சமூக நிகழ்வுகளை கிண்டலடிக்கும் அதன் கார்ட்டூன் வடிவ விளம்பரங்கள். காயிதே மில்லத் கல்லூரி சாலையில் முன்பு விளம்பரப்பலகைகள் இருந்தபோது சென்னை வாசிகள் அதை கவனித்திருக்கலாம். அரசியல் சினிமா கிரிக்கெட் பண்டிகைகள் என்று எல்லா விஷயங்களையும் கிண்டலடிக்கும் அந்த விளம்பரங்களின் வெற்றி அமுல் என்கிற பிராண்டை இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது. 1945 ல் சந்தைக்கு வந்த அமுல் கிட்டத்தட்ட 1967 வரை வழக்கமான விளம்பர உத்திகளையே கையாண்டு வந்தது. அதன் பிராண்ட் இமேஜை மாற்றியவர் சில்வெஸ்டர் டகுன்கா (Sylvester daCunha)என்ற விளம்பர விற்பன்னர். உணவு பொருட்களை வாங்குவதில் முக்கிய முடிவுகளை எடுப்பது இந்தியாவை பொறுத்தவரை இல்லத்தரசிகள் தான். எனவே அவர்களுக்கு பிடித்தமான குழந்தை பாத்திரம் ஒன்றை உருவாக்க முடிவெடுத்து உருவாக்கப்படடவள் தான் இந்த அமுல் பேபி என்று அழைக்கப்படும் “அட்டர்லி பட்டர்லி குட்டிப்பெண்”. 1960 களின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளம்பர வரிசை அன்று முதல் இன்று வரை இந்தியாவில் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் நகைச்சுவை ஆவணமாகத் திகழ்கிறது. கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது அமுல் விளம்பரங்கள். 

amul collect 1

மேலும் அமுல் விளம்பரங்களை காண இங்கே கிளிக்கவும் http://www.amul.com/hits.html

May 20, 2009 at 2:21 pm 7 comments

விளம்பரம் செய்யாதீர்

hoarding 2

எங்கள் ஊர் அருமனை ஒரு டவுன் பஞ்சாயத்து. நகரத்தைப்போல அங்கு வீடுகள் நெருக்கமாக இருப்பதில்லை. வீட்டுக்கு வீடு இடைவெளிகள் அதிகமாக இருக்கும். ஆனால் எண்பதுகள் வரை அங்கே வீடுகளுக்கு காம்பவுண்ட் சுவர் கிடையாது. மக்களுக்கு திருட்டு பயமும் கிடையாது. எண்பதுகளில் தான் சுவர்கள் வர ஆரம்பித்தன. கூடவே பயமும் என்று நினைக்கிறேன். அதுவும் ரோட்டோரங்களில் இருக்கிற வீடுகளுக்கு தான் சுவர் தேவையாக இருந்தது. சுவர்கள் கட்டியவர்கள் கூடவே ஒன்றையும் செய்தார்கள். விளம்பரம் செய்யாதீர் (stick no bills) என்ற வாசகத்தையும் எழுதி வைக்க ஆரம்பித்தார்கள். அதிக பட்சமாக மார்த்தாண்டம் ஆனந்தில் விஜயகாந்த், ராதிகா மற்றும் பலர் நடித்த தூள்பறக்கும் சண்டைக்காட்சிகள் நிறைந்த… என்று போகும் சாணி பேப்பரில் அடித்த சினிமா விளம்பர நோட்டீசுகளும் இயேசு அழைக்கிறார் என்று தலைப்பிட்ட சுவிஷேச பிரசங்கக் கூட்டங்களுக்கான நோட்டீசுகளும் தான். இவைதான் நாங்கள் பார்த்த முதல் விளம்பர போஸ்டர்கள். மார்த்தாண்டத்தில் ஏதோ ஒரு ப்ளாக்செட் ப்ரின்டர்களிடம் பதிப்பிக்கும் நோட்டீசுகள் அவை. மஞ்சள் சிகப்பு நீலம் போன்ற வண்னங்களில் அதிகமும் கறுப்பு வண்ணத்தில் அச்சு செய்யப்பட்டவை.  படங்களை பக்கத்தில் சென்று பார்த்தால் புள்ளிகளாகப் பிரியும். இந்த மாதிரியான நோட்டீஸ்களால் தங்கள் சுவர் அசிங்கமாகக்கூடாது என்று மக்கள் நினைத்தார்கள்.  மேலும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களுக்கும் அவர்கள் பயந்தார்கள் என்று நினைக்கிறேன். சென்னையில் தற்போது விளம்பரப்பலகைகளை தடை செய்திருக்க்கிறார்கள். அதை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பவர்களையும் நான் பார்க்கிறேன். “விளம்பரப்பலகைகளால் சென்னை நகரத்தின் காட்சி அழகு கெடுகிறது. உதாரணம் பனகல்பார்கின் அழகு பலகைகளை நீக்கியபிறகே தெரிகிறது. மேலும் அடிகடி மாற்றிக் கொண்டிருக்கும் ஃப்ளெக்ஸ் போன்ற பொருட்களால் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவும் அதிகரிக்கிறது. இயற்கையழிவு அதிகரிக்கிறது. விளம்பர உலகத்திற்கு விளம்பரபலகைகளை தவிர்த்து  வேறு ஊடகங்கள் இருக்கின்றன” என்கிறார் விளம்பர உலகத்தை சேர்ந்த நந்தினி சரண்யா. கிட்டத்தட்ட இதே பிரச்சனைகளையே கூறும் சந்தீப் வர்மா மேலும் ” போக்குவரத்து    பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. மேலும் இயற்கை சீற்றங்களின் போது விபத்துகளுக்கும் நடந்திருக்கின்றன.” என்று சேர்க்கிறார். “ஆனால் விளம்பரப் பலகைகள் நகரத்திற்கு அழகூட்டும் ஒரு விஷயம் . எனது தனிப்பட்ட கருத்து இது” என்கிறார்  அதே விளம்பர உலகத்தை சேர்ந்த வனிதா பிரசாத். விளம்பரப் பலகைகளை தடைசெய்வது உலகத்தின் பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. ஹவாய் அலாஸ்கா போன்ற அமெரிக்க மாநிலங்களில் கூட 1970 களில் விளம்பரபலகைகளை தடை செய்திருக்கிறார்கள். உங்கள் கருத்துக்களையும் நீங்கள் பதிவு செய்யலாம்.

May 18, 2009 at 12:38 pm 7 comments

‘நாம் இருவர் நமக்கு இருவர்’

family planning

‘நாம் இருவர் நமக்கு இருவர்’  80களில் இந்த வாசகத்தை கேட்காத, படிக்காத யாரும் இருந்திருக்க மாட்டார்கள். சிறுவனாக இருந்த நான் கூட மஞ்சள் நிறப்பின்புலத்தில் கறுப்பு வண்ணத்தில் திருத்தமாக வரைந்திருக்கும் அம்மா அப்பா குழந்தைகள் முகங்கள் போட்ட அரசு விளம்பரங்களை ஆர்வமாக பார்த்திருக்கிறேன். குடும்பக்கட்டுப்பாடு என்றால் என்னவென்று தெரியாத வயதில் அரசு மருத்துவமனைகளிலும் ரோட்டோர சுவர்களிலும் வரையப்பட்டிருந்த அந்த விளம்பரங்களை கவனித்திருக்கிறேன். எனது பால்ய கால ஞாபகங்களில் ஒன்றாக பதிந்து போன சித்திரங்கள் அவை. அதில்  மக்கள் தொகைப்பெருக்கம் உலகத்தை பயமுறுத்தத் துவங்கிய பிறகு உலக அரசாங்கங்கள் எடுத்த முடிவில் இந்தியாவும் இணைந்து கொண்டதின் வெளிப்பாடு அது. எனது தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பதினோரு பிள்ளைகள். அந்த விளம்பரங்களுக்கு கிடைத்த வெற்றி போலும். அரசாங்கம்¢ கொண்டு வந்த திட்டங்களில் இது மட்டும்தான் வர்க்க, ஜாதி வேறு பாடுகளை தாண்டி சமமான வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். அரசு விளம்பரங்கள் பெரும்பாலும் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன என்று நான் நினைத்ததுண்டு, பிற்காலத்தில் காட்சி தொடர்பியல் படிக்கும்போது தான் தெரிந்துகொண்டேன் மஞ்சள் வண்ணம் அதிக அலைநீளம் கொண்டது என்று. அதிக தூரத்திற்கு பார்வைக்கு படுகிற வண்ணம்.  அந்த விளம்பரங்களில் என்னை கவரும் இன்னொரு அம்சம் நல்ல சிகப்பு கலரில் வரையப்பட்ட முக்கோணம். அந்த முக்கோண லோகோவை வடிவமைத்தவர் டீப் தியாகி என்று அழைக்கப்பட்ட தர்மேந்திர குமார் தியகி. நேரு, லால்பகதூர் சாஸ்திரி காலத்திருந்து இந்திரா வரை  குடும்பக்கட்டுபாட்டு  உதவி ஆணையராக இருந்தவர். சிறந்த வடிவமைப்பு திறன் படைத்த்வர். இன்று இந்த முக்கோண லோகோ பல உலக நாடுகளின் குடும்பக்கட்டுபாட்டு சின்னமாக விளங்குகிறது. டீப் தியாகி தன் 41 ம் வயதில் இறந்து போனார் அவருக்கு குழந்தைகள் இல்லை. அவரது பங்களிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.

May 15, 2009 at 6:16 am 12 comments

தமிழ் விளம்பர எழுத்தாளர்கள் தேவை.

தமிழ் விளம்பர எழுத்தாளர்களின் தேவை இன்று அதிகம்.
தமிழில் எழுதவேண்டும் என்று நினைப்பவர்களில் பலர் பத்திரிகை வேலையை மட்டும் தான் தேர்வு செய்கிறார்கள் அல்லது மூன்று பாரம் வரும் அளவுக்கு கவிதைகள் தேறியதும் புத்தகம் போட ஏதாவது பதிப்பகத்தை தேடி அலைகிறார்கள். பத்திரிகையை விட குறைந்த உழைப்பு (?) ஆனால் அதிக வருமானத்தை அளிக்கிற
விளம்பரத்துறைக்கு நம் எழுத்தாள நண்பர்கள் அதிகமாக வருவதில்லை. நூறு பத்திகளில் எழுத வேண்டிய விஷயங்களை ஒரு வரியில் சொல்ல  வேண்டிய நிர்ப்பந்தம் சுவாரஸ்யமானது என்றே நான் நினைக்கிறேன். ’குறுகத் தரிக்கும்’ இந்த திறமை தான் விளம்பர எழுத்துக்கு மிகத் தேவையானது. வெகுஜன மக்களிடம் நேரடியாக பேசும் கலை என்பதால் மொழி எளிமை முக்கியம்.
அவர்களின் பண்பாடு வாழ்வியல் உளவியல் பொருளாதாரம் சார்ந்த நுட்பமான அறிதல் ரொம்ப முக்கியம்.   இன்று வருகின்ற தமிழ் அச்சு விளம்பரங்கள் பெரும்பாலும் மொழிபெயர்ப்புகள்.
உள்ளூர் நிறுவனங்களுக்கு மட்டும் தான் நேரடி எழுத்துக்கள்
அவசியமாக இருக்கிறது அதுவும் பெரும்பாலும் ஆடல் பாடல்களல் ஆன துணிக்கடை விளம்பரங்கள் தான். விளம்பர மெட்டுகளுக்கு பாடல்கள் எழுதுவதும் முக்கிய வேலை.
நமது இந்திய சினிமாக்களின் நீட்சியாக இந்திய விளம்பரங்களிலும் பெரும்பாலும் பாடல்களே இடம் பிடித்திருக்கிறது. விளம்பர எழுத்துகளும் ஒரு வகை மக்கள் இலக்கியம் என்றே நினைக்கிறேன்.  ஆங்கிலத்தில் உலகப்புகழ்பெற்ற சிறந்த விளம்பர எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சிறந்த நாவலாசிரியர்களுக்கு இணையான புகழும்இருக்கிறது. உதாரணம் David Abbott, William Bernbach, Leo Burnett, David Ogilvy. தமிழிலும் இருக்கிறார்கள் ஆனால் அவர்களைப்பற்றி நமது இலக்கிய எழுத்தாளர்களுக்கோ ஊடகங்களுக்கோ அக்கறை இல்லை.  என்ன ஆச்சு… குழந்தை அழுகுது… போன்ற விளம்பர வசனங்கள் பட்டி தொட்டிகள் எங்கும் புகழ்பெற்று நமது தமிழ் வெகுஜனமக்களின் பகடி பேச்சுவழக்கின் ஒரு பாகமாக இருந்தது என்று கூட சொல்லாம் ஆனால் அந்த வசனத்தை  எழுதியது யார் என்று சத்தியமாக இன்று வரை தெரியாது.  புது பைக் புது ட்ரெஸ்ஸ§ புது வீடு கலக்குற் சந்ரு போன்றவை சமீபத்திய உதாரணங்கள். முழுக்கமுழுக்க வணிக ரீதியான கலை என்பதால் கூட படைப்பாளிகளின் விவரங்கள் வெளியில் தெரியாமல் போய் இருக்கலாம். சினிமாவுக்கு இனையான கவர்ச்சிகரமான ஒரு துறை விளம்பரம். சினிமாவை விட வணிகரீதியான ஒழுங்கு மிக அதிகம். மிகச்சிறந்த விளம்பர எழுத்தாளர்கள் சில சமயங்களில் ஒன்றுமே எழுதாமல் விட்டு விடுவார்கள்.  விளம்பரங்கள் காட்சியின் வழியாக பேசுபவை அதனால் மொழி சில சமயங்களில் அவசியமற்று போய்விடும். அந்த சமயங்களில் மவுனமே மிகச்சிறந்த வாசகம். நுட்பமான வாசிப்பு அறிவும் மொழி ஆளுமையும் உள்ள எழுத்தாளர்களின் வரவு விளம்பரத்துறைக்கு மிக முக்கியம் மனசை இளமையாகவும் மூளையை முதிர்ச்சியாகவும்  வைத்து கொள்ள வேண்டியது அதை விட முக்கியம். ’இளம்‘ எழுத்தாளர்களை விளம்பரத்துறைக்கு வரவேற்கிறேன்.

May 14, 2009 at 7:48 am 9 comments

Older Posts


வாசித்தவர்கள்

  • 69,860 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

May 2009
M T W T F S S
    Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: