ஆயர்பாடி மாளிகையில்…

tamil advertising

Shri-Krishna

ஆயர்பாடி மாளிகையில்… இந்த பாடல் அனேகமாக இன்று முப்பதுகளில் இருக்கும் எல்லோருக்கும் தன் பால்யகாலத்தை ஞாபகப்ப்டுத்தும் என்று நம்புகிறேன். நாகர்கோவிலில் எனது பள்ளி நாட்களின் சாயங்காலப்பொழுதுகளுடன் கலந்து விட்டவை. இந்த பாட்டு. பக்தி இல்லை என்றாலும் இந்த பாடல்களை கேட்கணும் என்று சென்னையில் தேடியபோது கைக்கு சிக்க வில்லை. இன்டெர்னெட்டில் எங்கேயாவது கிடைக்குமா என்று தேடியும் பயனில்லை என்கிற நிலையில் சரி லேன்ட்மார்க்கில் தேடினேன். கிடைத்துவிட்டது. தொடர்ந்து ஐந்துமுறை கேட்டேன் எஸ்.பி.பியின் குரலும் எம்.எஸ்.வியின் இசையும் என்னை சிறுபருவத்திற்கே அழைத்துசென்று விட்டது. குமரிமாவட்ட்த்தின் மங்கலான சாயங்காலங்கள் மனதில் வந்து கவிகிறது. நான் இப்போது ஆறாம் வகுப்பு படிக்கிறேன். அந்த தொகுப்பில் உள்ள எல்லா பாடல்களும் நாத்திகர்களையும் மயக்குபவை. கண்ணதாசனின் வரிகள் காதல், தாய்மை, ஊடல், பக்தி, என்று கவித்துவ பயணம் செய்கிறது. வீரமணி பாடிய ஒரு பாடலைத்தவிற மீதி எல்லாம் முத்துக்கள். கோகுலமும் கோபியர்களும் கண்முன்னே தோன்றி மறையும் மாயம், ஒரு பசுங்கன்று துள்ளி ஓடுகிறது. கிருஷ்ணன் நீலப்புன்னகை சிந்தி சிரிக்கிறான். “கோகுலத்து பசுக்களெல்லாம்” ” கோகுலத்தில் ஒரு நாள் ராதை” “கோபியரே கோபியரே” எல்லாம் மனதை உருக்குகிறது. முடிந்தால் நீங்களும் கேட்டு பாருங்கள். லேன்ட்மார்க்கில் கிடைக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண கானம். விலை ரூ. 110 தான்.