தாழ்வாரம்

tamil advertising

திரைக்கதைவெளி / மலையடிவாரம் – ஊர் / காலை

இருபது வயது மதிக்கத்தக்க, லுங்கியும் கசங்கிய சட்டையும் அணிந்த ஒரு இளைஞன் மலையிலிருந்து இறங்கி சமவெளியை நோக்கி நடக்கத்துவங்குகிறான். மெல்லிய சூரிய ஒளி அவன் மீது விழுகிறது. (காற்றின் சப்தம் பின்னணியில் ரீங்கரிக்கிறது) அவன் முதுகு வழியாக பார்க்கும் போது தூரத்தில் ஒரு கிராமம் சின்னதாகத்தெரிகிறது. அதை நோக்கிதான் அவன் நடந்து கொண்டிருக்கிறான். செருப்புகள் இல்லாத அவன் பாதங்கள் தொட்டாவாடி செடியின் சிறுமுள்ளுகளை சலனமில்லாமல் மிதித்து முன்னேறுகிறது. வலியை உணராத பாதங்கள். சில நாட்கள் வளர்ந்த தாடியும் மீசையுமாக அல்ட்சியமான பார்வையுடன் அவன் முகம் அண்மைக்காட்சியில் கடந்து செல்கிறது. வேகமில்லாத ஒரு அலட்சிய நடை. வழியில் கருவேல மரங்களுக்கிடையிலிருந்து சில பறவைகள் அவன் அசைவுகளை கேட்டு திடுக்கிட்டு எழுந்து பறக்கின்றன். அவற்றையும் அவன் எந்த உணர்வுமற்ற கண்களுடன் பார்த்துகொண்டே நடக்கின்றான். அவனுக்குப்பின்னால் நெடிந்துயர்ந்து நிற்கும் மேற்குதொடர்ச்சி மலை பின்னுக்கு சென்று கொண்டே இருக்கிறது. ஊரின் எல்லைய அவன் அடைந்து ஊரைநோக்கி நடக்கிறான். படுத்திருந்த ஒரு நாய் எழுந்து அவனை நோக்கி ஊளையிட்டு குரைக்கதுவங்குகிறது. இவன் முன்னால் நடக்க நடக்க அவனுக்கு முன்னாலே குரைத்தபடி நாய் ஊருக்குள் ஓடுகிறது. ஒரு சிறுவன் ஓட்டுகின்ற சைக்கிளை பிடித்த படி இன்னொரு சிறுவன் ஓடி வருகிறான். சைக்கிள் கோணல் மாணலாக ஓடிக்கொண்டு வருகிறது. எல்லைக்கு வரும் சைக்கிள் சிறுவர்கள் இவனை பார்க்கிறார்கள். சைக்கிள் தடுமாறி விழுகிறது. ஓட்டிவந்த சிறுவன் அரக்கபரக்க எழும்பவும் மற்ற சிறுவன் சைக்கிளை இழுத்து தூக்கி இருவருமாக பீதியடந்த கண்களுடன் அவனை பார்த்தபடி வழி விட்டு ஒதுங்குகிறார்கள். பயம் தெரியும் கண்களுடன் சிறுவர்களின் முகம் அண்மைகாட்சியில் வந்து மறைகிறது. அவன் நடந்து கொண்டே இருக்கிறான் இவர்களை பார்க்காதது போல. அவன் கட்ந்து போனதும் சிறுவர்கள் இன்னொரு வழியாக சைக்கிளை தள்ளிக்கொண்டு ஊருக்குள் ஓடுகிறார்கள். முதலில் சைக்கிளை ஓட்டிவந்த சிறுவன் அவிழ்ந்துபோன டவுசரை கைகளில் இறுக்கப்பற்றியபடி ஓடுகிறான். அவனுக்கு முன்னால் ஊருக்குள் நுழைந்த சிறுவர்கள் சைக்கிளை ஒரு மரத்த்டியில் சாத்தி வைத்துவிட்டு சற்று தள்ளி அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருக்கும் கூட்டத்தைப்பார்த்து கத்துகிறார்கள். ஒருவனை ஒருவன் மிஞ்சும் கத்தல் ’’கோவியண்ணன் வ்ராரு கோவியண்ணன் வ்ராரு’’ என்றவாறு மேலும் ஓடுகிறார்கள். சீட்டாடிக்கொண்டிருந்தவர்கள் சடாரென அதிர்ச்சியுற்று ஒருவரையருவர் பார்த்த படி எழுந்து ஊர் எல்லையைப் பார்க்கிறார்கள். முகங்களில் பதட்டம். அவர்கள் பார்க்கும் திசையிலிருந்து கோவி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தான்…