ஒரு அட்டை வடிவமைப்பாள‌னின் ஒப்புதல் வாக்குமூலம்!

January 23, 2011 at 10:31 pm 19 comments

தமிழ் இலக்கியத்தில் பாரதி முதல் ஜெ.பி. சாணக்யா வரை பலதலைமுறை எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு அட்டை வடிவமைத்திருக்கிறேன் என்கிற பெருமை(?)யுடன். இந்த அட்டை வடிவமைப்பு சார்ந்த அனுபவங்களையே எழுதலாம் என்று தோன்றியது. படிக்கலாம் என்று தோன்றினால் படிக்கலாம்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது புளியமரத்தின் கதை படித்துவிட்டேன். எங்களூர் நூலகம் வித்யவிலாசினியில் தூசிபடிந்து அட்டை உடைந்து தூளாகிப்போன ஒரு பழையபதிப்பு. அட்டையே இல்லை. நான் முதன்முதலாக அட்டைவடிவமைத்ததும் புளியமரத்தின் கதைக்குத் தான்.

ஓவியக்கல்லூரி முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த இடைவெளியில் நாகர்கோவிலுக்கு போயிருந்த போது வழக்கம் போல காலச்சுவடுக்கு இதழ் வாங்க போயிருந்தேன். அதற்கு முன்பு பலதடவை காலச்சுவடு அலுவலகத்துகு இதழ் வாங்க போகும்போது காலச்சுவடு கண்ணனை பார்த்திருக்கிறேன். சுந்தர ராமசாமியின் மகன் என்பதும் காலச்சுவடை இப்போது இவர்தான் நடத்துகிறார் என்பதும் அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அவரிடம் பேசியது இல்லை. எப்போதும் சின்னபய்யனாகவே என்னை நான் நினைத்துகொள்வதால் கொஞ்சம் பெரியவங்களை பார்த்தால் பேச தயக்கமாக இருக்கும். ஆனால் இந்ததடவை நானாகவே பேசினேன். “சுந்தர ராமசாமி இல்லயா…” என்று பேச்சைத்துவங்கினேன். அப்படியே கொஞ்சம் தன்வரலாறையும் எடுத்துவிட்டேன்.

அட்டை வடிவமைக்க ஆர்வம் உண்டா என்று கேட்டார். கம்ப்யூட்டரில் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆதிமூலமும் மருதுவும் கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் அந்த கலக்கு கலக்கியவர்கள். நானெல்லாம் கம்ப்யூட்டர் இல்லை என்றால் டிசைனர் ஆகியிருக்கவே மாட்டேன். ஊரில் செங்கல் சுமந்திருக்க வேண்டியது தான். புளியமரத்தின் கதை புத்தகத்தை எடுத்து வந்து இதற்கு புதிய அட்டை உருவாக்க வேண்டும் என்றார். கொஞ்சம் மிரட்சியாக இருந்தது. காட்டிகொள்ளவில்லை. கணிணி முன் அமர்ந்தேன். போட்டோஷாப்பை சொடுக்கினேன். ஒரு புளிய இலையை வரைந்தேன். அப்புறம் புளியமரம். ஒரு புளியமரத்தின் கதை… சுந்தர ராமசாமி… அவ்வளவு தான். ஒரு அட்டைவடிவமைப்பாளன் பிறந்து விட்டான்.

அடுத்த வாரமே சென்னைக்கு வந்துவிட்டேன். காலச்சுவடும், உலகத்தமிழ் அலுவலகமும் ஒரே இடத்தில் இயங்கிகொண்டிருந்தது. டிசைனராக அங்கே சேர்ந்துவிட்டேன். மனுஷ்யபுத்திரன், அரவிந்தன் , அய்யனார் , சிபிச்செல்வன் , நண்பர்கள் ஆனந்த், சரவணன், செல்வி எல்லோரும் ஒன்றாக வேலைபார்த்தோம். மனுஷ்யபுத்திரனின் இடமும் இருப்பும் எல்லாம் படித்துவிட்டு அவரை ஒரு உம்மென்று இருக்கும் கவிஞர் போல என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு கல்லூரி மாணவனைப்போல படு ஜாலியாக இருந்தார். கவிதைக்கு அடுத்ததாக அவருக்கு நல்லா வருவது கிண்டல். நீராலானது அப்போது தான் படித்தேன். அவரும் நானும் சேர்ந்து ஆத்மாநாமின் முழுத்தொகுப்பிற்கு அட்டை வடிவமைத்தோம். அது தான் பதிப்பில் வந்த எனது முதல் அட்டை வடிவம்.

ஜெ.ஜெ.சில குறிப்புகளுக்கு நான் ஒரு புதிய அட்டை வடிவமைத்தேன். காற்றில் அலையும் இலைகள் முன்பக்கத்தில். ஆனால் எனக்கு அதன் முந்திய பதிப்புக்கு ஆதிமூலம் வரைந்திருந்த அட்டை தான் பிடித்திருந்தது. புளியமரத்தின் கதைக்கு ஒரு கிளாசிக்கல் லுக் வருகிற மாதிரி ஒரு அட்டை வடிவமைத்தேன். மரியா தாமுவுக்கு எழுதிய கடிதம் என்கிற சிறுகதை தொகுப்புக்கு வடிவமைத்த அட்டை தான் திருப்தியாக இருக்கிற‌து என்று சுரா சொன்னார். சுராவின் இதம் தந்த வரிகள் தொகுப்புக்கு அவருடைய கையெழுத்தையே எழுதி வாங்கி பயன்படுத்தினேன். இறந்தகாலம் பெற்ற உயிர் தொகுதிக்கு அவருடைய கம்பீரமான தாடியுடன் கூடிய‌ ஒரு புகைப்படத்தை பயன்படுத்தினோம்.

சி.சு. செல்லப்பாவின் வாடிவாசலுக்கு அட்டை வடிவமைக்க செல்லப்பாவே எடுத்த ஜல்லிக்கட்டு போட்டோக்கள் சினேகிதன் என்கிற புகைப்படக்கலைஞரிடம் இருந்தது. அதை தேடிக்கண்டுபிடுத்து வாங்கி பயன்படுத்தினோம். செல்லப்பாவிற்கு புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வம் இருந்திருக்கிரது. அதுவும் ஜல்லிகட்டு மேல் அதீத ஆர்வம் போல. அவரது பிரம்மான்டமும் ஒச்சமும் தொகுப்புக்கு செல்லப்பாவின் ஒரு போர்ட்ரயிட் வரைந்து பயன்படுத்தினேன். நான் வரைந்த சித்திரங்களில் உருப்படியாக வரைந்த ஒன்று அது.

ஆ.இரா. வேங்கடாசலபதி குஜிலி இலக்கியங்கள் பற்றிய புத்தகம் ஒன்று பதிப்பித்தார். முச்சந்தி இலக்கியம் என்ற பெயரில் புத்தகமாக வந்தது. அதற்கு அட்டையை அந்த காலத்து குஜிலி இலக்கியங்களின் அட்டையின் ஸ்டைலிலேயே வடிவமைத்தோம். பார்ப்பதற்கு பழைய புத்தகம் போல இருந்த்து. வாசகர்கள் தவற விடுவார்களோ என்று சின்ன சந்தேகம் இருந்த்து. ஆனால் அதுவரை நான் வடிவமைத்த அட்டைகளிலேயே மிகுந்த பாராட்டுகளை பெற்றது அந்த புத்தகம் தான். இந்திரன் தீராநதி விமர்சனத்தில் அந்த அட்டையை குறிப்பிட்டு சிலாகித்திருந்தார். பி.ஏ. கிருஷ்ணன் டெல்லியிருந்து போன் செய்து பாராட்டினார்.

பி.ஏ. கிருஷ்ணனின் புலி நகக்கொன்றை முகப்பிற்கு கதை நிகழும் இடமான நாங்குனேரி பகுதிகளுக்கு சென்று என் நண்பன் பிரசன்னகுமார் எடுத்த புகைப்படங்களை பயன்படுத்தினோம். இந்த காலத்தில் எடுத்த படங்களுக்கு பழைய தன்மையை கொண்டுவந்து அட்டையை உருவாக்கினோம்.

காலச்சுவடு கண்ணனின் முதல் கட்டுரைதொகுப்புக்கு அவருக்கு பிடித்த ஓவியர் டக்ளசின் ஓவியங்களை சோழமண்டலம் ஆர்டிஸ்ட் வில்லேஜுக்கு நானும் அய்யனாரும் போய் வாங்கி வந்து பயன்படுத்தினோம். டக்ளஸ் ஒரு எக்சென்ட்ரிக்கான ஆர்டிஸ்ட்.
அரவிந்தன் தனது சிறுகதைத்தொகுப்பிற்காக ரொம்ப நாட்களாக ஒரு பெயின்டரின் ஓவியத்தை வைத்திருந்தார்.(ஓவியரின் பெயர் மறந்து விட்டது) அவரது குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுகொண்டிருக்கிற‌து தொகுப்புக்கு அதுதான் அட்டை. வித்த்யாசமான எனக்கு பிடித்த அட்டை.

தேவிபாரதியின் பிறகொரு இரவு காலச்சுவடில் படிக்கும்போதே என்னை பாதித்த கதை. அந்த தலைப்பில் சிறுகதைத்தொகுப்பு வந்த போது திரும்பிச்செல்லும் காந்தியின் இமேஜ் அட்டையில் பயன்படுத்தினேன். கதையை படித்த போது கனமாக என்னுள் இற‌ங்கி இருந்த காந்தியை அட்டை வழியாக வழி அனுப்பினேன்.

மனுஷ்யபுத்திரன் உயிர்மை ஆரம்பித்த போது சுஜாதா, ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுக்கு எல்லாம் நானும் மனுஷ்யபுத்திரனும் சேர்ந்து நிறைய அட்டைகள் வடிவமைத்தோம். சாப்ட்வேர்கள் தெரியாதே தவிர மனுஷ்யபுத்திரனுக்கு அட்டைகள் வடிவமைப்பதில் ஆர்வம் அதிகம். அட்டைகளில் வரவேண்டிய சித்திரங்களை அவரே பெரும்பாலும் தேர்வு செய்து வைத்திருப்பார். சுஜாதாவுக்கு அதற்கு முன்னால் பல பதிப்பங்கள் மொக்கையாக புத்தகங்களை தயாரித்திருப்பார்கள். அட்டையைப்பார்த்தால் அவர் ஒரு பல்ப் எழுத்தாளர் மட்டுமே என்று அவரது வாசகர்களே நம்பி விடுவார்கள். உயிர்மையின் புத்தக தயாரிப்புகள் அவருக்கு திருப்தியாக இருந்திருக்கும்.

ஜெயமோகன் பொதுவாக அட்டை விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு தடவை யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்த சென் கவிதைகளின் அட்டையை ஜப்பானிய நீர்வண்ன ஓவியங்களைப்போல வெளிறிய வண்னத்தில் செய்திருந்தேன். அந்த புத்தகத்திற்கான விமர்சனத்தில் அட்டையை பற்றியும் எழுதி இருந்தார்.

சாருநிவேதிதாவின் புத்தககங்களுக்கு அவரைப்போல கொண்டாட்டம் ததும்பும் அட்டைகளையே வடிவமைத்தேன். சீரோ டிகிரிக்கு அட்டையில் திற‌ந்திருக்கும் உதடுகளையே சீரோவாக பயன்படுத்தி இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த அட்டைகளில் அதுவும் ஒன்று.

எஸ். ராமகிருஷ்ணன் பொதுவாக அட்டையில் மிகுந்த ஆர்வம் எடுத்துக்கொள்வார். வர வேண்டிய படங்களை அவரே நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து எடுத்து வந்து விடுவார். கலர் எழுத்துரு போன்றவற்ரில் கூட மிகுந்த ஆர்வம் காட்டுவார். பிறக்கப்போகும் குழந்தைக்கு ஸ்வெட்டர் தைக்கும் தாயைப்”போல” எஸ். ராமகிருஷ்ணன் தெரிவார் எனக்கு.

மனுஷ்யபுத்திரனின் நீராலானது எனக்கு பிடித்த கவிதை தொகுப்பு. அதன் இரண்டாம் பதிப்புக்கு ஒரு ஷெல்லின் இமேஜை பயன்படுத்தி இருந்தோம். ஏதோ ஒரு வகையில் நீராலானது தொகுதியின் உள்தன்மையை அந்த அட்டை பிரதிபலித்தது.

எனக்கு பிடித்த கவிஞர் சுகுமாரன் அவருடைய கவிதைகளின் முழுத்தொகுப்பு பூமியை வாசிக்கும் சிறுமிக்கு நான் வடிவமைத்த அட்டையை பார்த்துவிட்டு எனையே அந்த புத்கத்தை மேடையில் பெற்றுக்கொள்ள சொன்னார். ஞானக்கூத்தன் வெளியிட நான் பெற்றுகொண்டது என் அட்டைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கருதுகிறேன்.

அடையாளம் சாதிக் புத்தக தயாரிப்பில் அதன் வடிவமைப்பில் மிகுந்த நுட்பத்தை எப்போதும் எதிர்பார்ப்பவர். புத்தகங்களுக்கு முதுகு பெண்களுக்கு முதுகு மாதிரி அழகாக இருக்க வேண்டும் இல்லை என்றால் சொதப்பி விடும். நகர்ந்து முன்னட்டையிலோ பின்னட்டையிலோ வந்து அழகை கெடுத்து விடும். புத்தகங்களில் முதுகின் அள‌வை துல்லியமாக அளந்து எனக்கு எப்போதும் சொல்லி விடுவார். அவர் எதிர்பார்க்கிற ஃபெர்பெக்ஷனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல நேரம் போனை எடுக்காமல் எஸ்கேப் ஆகி இருக்கிறேன். பெர்பெக்ஷனாக இருப்பதற்கே பெர்பெக்ஷன் பார்ப்பவர் அவர். ஒரு வடிவமைப்பாளனாக சில நேரங்களில் கடுப்பாக இருந்தாலும் வாசகனாக அவருடைய புத்தகங்கள் எனக்கு பிடிக்கும்.

இன்னும் நிறைய எழுத்தாள நண்பர்களுக்கெல்லாம் அட்டைகள் வடிவமைத்துருக்கிறேன். அதை ஒட்டி சுவாரஸ்யமான நிகழ்வுகளும் உண்டு. அதை எல்லாம் எழுதும் பொறுமை இப்போதைக்கு இல்லை. மூத்த எழுத்தாளர்களிலிருந்து இளம் எழுத்தாளர்கள் வரை எல்லோரிடமும் பேசவும் வேலைபார்க்கவும் கிடைத்த இந்த வாய்ப்பு இலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கக்கூடிய ஒன்று.

காலச்சுவடு கண்ணன், அரவிந்தன், ஆ.இரா. வேங்கடாசலபதி, மனுஷ்யபுத்திரன், அய்யனார், மற்றும் என் நண்பர்கள் ஆன்ந்த், சரவணன், செல்வி போன்றவர்களின் பாராட்டுகளும் என்னை மேலும் உற்சாகப்படுத்தியவை. நண்பர் திவாகர் விஷுவல் ஆர்ட் சம்பந்தமான விஷ்யங்களில் தேர்ந்த ரசனையும் அறிவும் உள்ளவர். அவருடைய கருத்துக்கள் விஷுவல் ஆர்ட் சார்ந்த என்னுடைய ரசனையை மேலும் கூர்மையாக்க பயன்பட்டது. இன்று ஷர்மி தான் என் அட்டையின் முதல் பார்வையாளர். ஒரு வாசகியாக அட்டை பற்றிய முதல் கருத்து அவளுடையது தான் இன்று.

அட்டைகள் புத்தகங்களின் முகங்கள். அதற்குப்பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது. புத்த்கங்களின் உள்ளடக்கம் சார்ந்த ஒரு ரசனை இருக்கிறது. நேர நெருக்கடியினாலும், போதிய செலவுகள் செய்ய முடியாத காரணத்தினாலும் பெரும்பாலான சமயங்களில் திருப்தியாக அட்டைகள் அமையாது. ஆங்கில பதிப்பகங்கள் அட்டைகளுக்கு என்றே பிரத்யேகமாக பிரபல புகைப்படக்காரர்களை அணுகி ஒரு ப்ரோஜக்ட் போல பண்ணுகிறார்கள். அட்டைகளுக்கு கூட ராயல்டி வழங்குகிறார்கள். நம்மூரில் எழுத்தாளர்களுக்கே இப்போதெல்லாம் தான் ஒழுங்காக ராயல்டி கிடைக்கிறது. அட்டைகளுக்கெல்லாம் ராயல்டி கிடைக்க இன்னும் பல புத்த்க கண்காட்சிகளை கடந்தாக வேண்டும் போல.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , , , , , , .

புத்தக அட்டைகள் சித்திரமும் ‘கணிணி’ப்பழக்கம்!

19 Comments Add your own

 • 1. para  |  January 24, 2011 at 6:39 am

  திரு. சந்தோஷ், உங்கள் அட்டை வடிவமைப்பைப் போலவே எழுத்தும் நேர்த்தியாக இருக்கிறது. செய்தது யாரென்று தெரியாமலேயே உங்களுடைய பல அட்டைப் படங்களைக் கண்டு ரசித்து, வியந்திருக்கிறேன். இப்போது தெரிந்தது. மனமார்ந்த வாழ்த்துகள்.

 • 2. ensanthosh  |  January 24, 2011 at 11:20 am

  நன்றி பா. ராகவன் சார்.

 • 3. Samudra  |  January 24, 2011 at 2:13 pm

  அருமையான வடிவமைப்பு…வாழ்த்துக்கள்..

 • 4. asthya  |  January 24, 2011 at 3:08 pm

  santhosh, ninga panina antha mudhal cover design , puliyamarathin kathai design , iruntha thedi yeduthu post panunga

  it is nice3 write up.
  this page is very pleasant and soothing –
  “this blue yellow combination of the compliementary”
  nalairuku
  gud wishes- keep writing

 • 5. அமுதவன்  |  January 24, 2011 at 3:13 pm

  வாழ்த்துக்கள் சந்தோஷ். அட்டைப்படங்கள்தானே புத்தகங்களின் வாசல். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அட்டையிலேயே கோடி காட்டி விடுவதும், பார்க்கிறவர்களை வாங்கத்தூண்டும் கலாபூர்வமான கவர்ச்சியைக் கொண்டுவருவதிலும் அட்டை வடிவமைப்பவரின் பங்கு மிகமிக அதிகமே. நல்ல ரசனையுடன் அதனைச் செய்துவரும் தங்களின் பணி சிறக்க மீண்டும் எனது வாழ்த்துக்கள்.

 • 6. ensanthosh  |  January 24, 2011 at 3:56 pm

  நன்றி சத்யா, சமுத்ரா, அமுதவன். சத்யா, புளியமரதின் கதை முதல் அட்டை இப்போது என்னிடதில் இல்லை.

 • 7. ramji_yahoo  |  January 25, 2011 at 11:29 am

  பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  ஆனால் ஒரு புத்தகம் வாங்க நான் முடிவு செய்கையில் அட்டைப்படத்திர்க்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
  அட்டைபடம்/அட்டை என் முடிவை மாற்றும் காரணியாக இருந்ததே illai

 • […] This post was mentioned on Twitter by Guru Prasad P, mugil முகில். mugil முகில் said: ஒரு அட்டை வடிவமைப்பாள‌னின் ஒப்புதல் வாக்குமூலம்! http://tinyurl.com/4mredww […]

 • 9. athisha  |  January 27, 2011 at 11:41 am

  அடேங்கப்பா.. நீங்கதானா அது.. வாவ்!

 • 10. Cheena (சீனா )  |  January 30, 2011 at 5:56 pm

  அன்பின் சந்தோஷ் – அட்டைப் படங்கள் அத்த்னையும் அருமை – புத்தகத்தின் மேல் ஒரு மதிப்பினை ஏற்படுத்தும் படங்கள். உழைப்பிற்கும் திறமைக்கும் நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 • 11. ensanthosh  |  January 30, 2011 at 10:53 pm

  அன்புள்ள ராம்ஜி.

  எனக்கும் அதே சந்தேகம் தான். ஆனால் அடையாளம் சாதிக் ஒரு தடவை என்னிடம் சொன்னார் புத்தக விற்பனையில் அட்டைகள், ஏன் அட்டைகளின் நிறம் கூட ஒரு காரணியாக இருக்கிற‌து என்று. விளம்பரங்கள் பார்த்து பொருட்கள் வாங்குவதில்லை என்று சிலர் சொல்வார்கள். ஆனால் விளம்பரங்கள் மறைமுகமாக நம் சப்கான்ஷியஸில் ஒரு ப்ராடக்ட் பற்றிய தாக்கத்தை உருவாக்கும். அது அட்டைகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் கூட ஜெயமோகன் போன்ற ஒரு எழுத்தாளரின் புத்தகம் அட்டையே இல்லாமல் இருந்தால் கூட கண்டிப்பாக வாங்கிப்படிப்பேன். கன்டன்ட் சார்ந்த தீவிரமான வாசிப்பு இருப்பவர்களுக்கு அட்டைகள் ஒரு மேட்டரே அல்ல.

  அன்புடன்
  சந்தோஷ்

 • 12. ensanthosh  |  January 30, 2011 at 10:56 pm

  நானே தான் அதிஷா! 🙂

 • 13. ensanthosh  |  January 30, 2011 at 10:57 pm

  சீனா (உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிரது)

  நன்றி

 • 14. Kumarraja  |  July 20, 2011 at 10:23 am

  புத்தகத்தை பற்றி அதன் அட்டைபடமே சொல்கிறது நல்ல வரைகலை சார்

 • 15. saravanan  |  April 20, 2012 at 7:54 pm

  you kno santhosh in our area kno one know the real santhosh…………..nut am proud be friend of you ……….
  really great machi……………

 • 16. abilashchandran  |  May 3, 2012 at 12:35 pm

  உங்களுடைய பல வடிவமைப்புகளைக் கண்டு வியந்திருக்கிறேன். குறிப்பாக ஜென் கவிதைத் தொகுப்பு.

 • 17. ensanthosh  |  May 3, 2012 at 12:52 pm

  நன்றி அபிலாஷ். ’ஸ்டாக் போட்டோ’ அட்டைகளின் யுகம் என்று தற்போதைய தமிழ் புத்தக அட்டைகளை பற்றி கிண்டலாக ஒரு நண்பர் அவருடைய பிளாகில் எழுதி இருந்தார். அது உண்மையே.இந்த “யுகத்தில்” என்னுடைய பங்கும் உண்டு என்பதில் எனக்கு சற்று கூச்சம் தான். ஆதிமூலம், மருது, ஆர்.பி.பாஸ்கரன் போன்றவர்களின் அட்டைகள் கிளாசிக்குகள். அதன் சிறு நுனியையாவது பிடித்து விட எனக்கும் ஆசை தான். இன்னும் முயற்சி செய்கிறேன்.

  அன்புடன்
  சந்தோஷ்

 • 18. உயிர்த்தோழி.  |  May 3, 2012 at 1:24 pm

  அன்பு நண்பரே! எனக்கு ஒரு புத்தகத்திற்கு அட்டை வடிவமைத்துக் கொடுக்க முடியுமா? சுமாராக எவ்வளவு செலவாகும். அவசியம் தெரியப்படுத்தவும்.

 • 19. ensanthosh  |  May 3, 2012 at 1:30 pm

  கண்டிப்பாக தோழரே! என்னை செல்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள். 98402 59414.

  அன்புடன்
  சந்தோஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2011
M T W T F S S
« Jun   Feb »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

%d bloggers like this: