தலைமறைவு ஓவியன் பேங்க்சி!

January 26, 2011 at 2:38 am 5 comments

பேங்க்சி (Banksy) என்கிற ஓவியனின் பேரைக்கேட்டாலே நடுங்குகிறது லண்டன் மாநகராட்சி. இருக்காதா பின்னே! அரசு தனியார் கட்டிடங்கள் என்று பாரபட்சம் பார்க்காமல், இரவோடு இரவாக சுவர்களில் அதிரடி ஓவியங்களை வரைந்துவிட்டு மாயமாகிவிடும் அந்த ஓவியன் யாரென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது லண்டனின் மேயர் அலுவலகம்.

யாரிந்த பேங்க்சி? அப்படி என்ன செய்கிறான் இந்த ரகசிய ஓவியன்? நீங்கள் ஒரு பொதுஜனமாக இருக்கும் பட்சத்தில் மாநகர பஸ்ஸின் பின்னிருக்கை,  பார்க் மரங்கள், பப்ளிக் டாய்லெட்டுகள் போன்ற பொது இடங்களில் ஐ லவ் யூ இளமதி, சிந்தாதிரி பேட்டை சூப்பர் கிங்ஸ் அருள், மணி, ஸ்டீபன், தலைவர் வி…. வாழ்க போன்ற பொன்னெழுத்துகளையோ, பென்சிலிலோ, கரியிலோ, நகத்திலோ பிராண்டி வைத்திருக்கும் “நவீன” ஓவியங்களையோ கட்டாயம் பார்த்திருப்பீர்கள். இதை ஆங்கிலத்தில் வண்டலிசம் என்பார்கள். தமிழில் வேண்டுமானால் பிராண்டலிசம் என்று வைத்துக்கொள்ளாலாம். இந்த வண்டலிச மென்டலிசம் நம் எல்லோரிடமும் சிறிது உள்ளது தான். வண்டலிசம் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகளுக்கு ஒருவடிகால் அல்லது வடி’கை’ என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். பப்ளிக் பொருட்களை நாசம் செய்வது என்று சட்டம் சொல்கிற‌து.

இந்த வண்டலிசத்தின் கலை வடிவம் தான் கிராஃபிடி ஆர்ட் ( graffiti art). கிராஃபிடி ஆர்ட் என்பது பெரும்பாலும் ஸ்பிரே கண்ணால் —–இந்தியன் தாத்தா வெள்ளை ஆம்புலன்சை கறுப்பாக்க‌ உபயோகிப்பரே அந்த உபகரணம் – சுவர்களில் விதவிதமான வண்ணங்களில் விதவிதமான விசுவல்களை ஸ்பிரே செய்து வரையப்படும் கலர்புல் கலாட்டா.  இது ஒரு வெகுஜனக்கலைவடிவம். கலையை காலரிகளிருந்து தெருவுக்கு கொண்டு வருகிற புரட்சிகரமான ஒரு கலைச்செயல். நம்மூர் சுவர்களில் சிரிக்கும் தானைத்தலைவனோ ,மூத்திர சந்துகளில் அப்பாவியாக அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கடவுளர்களோ இந்த வகைமைக்குள் வருவார்களோ என்பது தெரிய‌வில்லை.

இந்த கிராஃபிடி ஆர்ட்டில் ஒரு கிளைவடிவம் ஸ்டென்சில் கிராஃபிடி ஆர்ட். இதன் தந்தை என்று பாரீஸ் ஓவியர் பிளெக் லி ராட்டை(Blek le Rat )  சொல்லாலாம். இதற்கான ஒரு கலை நியாயத்தை வழங்கிய ஓவிய‌நாட்டாண்மை இவர் என்பது விமர்சகர்களின் வாதம். பேப்பரில் தேவையான பாகங்களை வெட்டி எடுத்து வீசி விட்டு அதில் உருவாகும் இடைவெளிகளின் வழியாக வண்ணங்களை ஸ்பிரே செய்து சுவரில் ஓவியங்களையோ எழுத்துக்களையோ உருவாக்கும் முறைதான் ஸ்டென்சில் கிராஃபிடி ஆர்ட். இந்த முறையில் தான் நம்மூர் ஆட்டோக்களில் பிரசவ்த்திற்கு இலவசம், பெண்ணின் ம்ணவயது 21 போன்ற வாசகங்கள் எழுதப்படுகிற‌து என்பது டிஸ்கவுன்ட் தகவல்.

ஓவியர் பிளெக் லி ராட்டை தன் மானசீக குருவாக கொண்டவர் தான் இந்த பதிவின் கதாநாயகன் பேங்க்சி. பேங்க்சி என்பது இவருடைய புனைப்பெயர்தான். உண்மையான பெயர் என்ன, எந்த நாட்டைச்சேர்ந்தவர், எப்படி இருப்பார் என்று எதுவுமே தெரியாமல் இவருடைய ஓவியங்கள் மக்களால் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மேற்குலக நாடுகளில் பொழுது விடியும் போது ஏதோ ஒரு கட்டிடத்தின் ஏதோ ஒரு சுவரில் பேங்க்சியின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். அது அந்த அரசாங்கத்தை, அரசியலை, போரை, வன்முறையை, அதிகாரத்தால் நசுக்கப்படும் மக்களின் துக்கங்களை வெளிப்படுத்தும் ஏதாவது ஒரு கருவையோ விமர்சனத்தையோ கொண்டிருக்கும். மக்கள் அதை ரசித்து கொண்டாடுவார்கள். அரசாங்கங்கள் எரிச்சலடைந்து ஆள் அனுப்பி சுவரை கழுவுவர்கள். பேங்க்சியோ அந்நேரம் சளைக்காமல் அடுத்த நாட்டுக்கு விமானத்தைப்பிடித்திருப்பார். புதிய சுவர்களை தேடி.

வெறும் பிரச்சார ஓவியனாக பாங்க்சியை நினைத்து விடவேண்டாம். ஆம்பியன்ட் ஆர்ட் என்பது அடிக்கடி விளம்பரத்துறையில் இப்போது புழங்கும் சொல். அதாவது ஆர்ட்டுக்கு மீடியமாக சுற்றுப்புறத்தையே பயன்படுத்துவது. உதாரணமாக விளக்குக்கம்பத்திற்கு கீழே வரையப்படும் ஒவியத்தில் அந்த விளக்குக்கம்பத்தையே ஒரு கேரக்டராக பயன்படுத்துவது. உடைந்த சுவரில் வரையும்போது அந்த உடைசலையே ஓவியத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்திக்கோள்வது.

பேங்க்சி இந்த ஆம்பியன்ட் ஆர்ட்டில் கில்லாடி. வேலிக்குப்பின்னாலிருக்கும் சுவரில் சில அகதிகளின் படங்களை வரைந்தாலே போதும். உண்மையான வேலியும் அகதிகளின் சித்திரங்களும் சேர்ந்து அந்த கிராஃபிடி ஓவியத்துக்கு ஒரு புதிய பரிணாமமே கிடைத்துவிடும். இப்படி பல்வேறு நாடுகளின் சுவர்களில் வரைந்த சித்திரங்களை தொகுத்து புத்தகங்களாகவும் போட்டிருக்கிறார். நிறைய கண்காட்சிகளையும் நடத்தி இருக்கிறார்.

இவரை ஒரு ஓவிய பின்லேடனைப்போல கடுப்பாக தெடிக்கொண்டிருக்கின்றன பல அரசாங்கங்கள். சிமோன் ஹாடர்சன் போன்ற ஒரு சில இதழியலாளர்கள் மட்டுமே இதுவரை பேங்க்சியை ரகசியமாக நேர்காணல் செய்திருக்கிறார்கள். ” ஜீன்சும் டிஷர்டும் அணிந்த, காதில் சில்வர் கடுக்கனும்,  சில்வர் செயினும் அணிந்த 30 வயது இளைஞன்” என்கிற மாதிரியான உருப்படியறற தகவல்களே இவர்களால் பேங்க்சியைப்பற்றி உலகுக்கு சொல்லமுடிந்தவை. பேங்க்சியின் உண்மையான பெயர் ராபர்ட், ராபடன், ரபின் கன்னிகன் என்று ஆளாளுக்கு ஒரு பெயரை ஊகித்து சொல்லி கொண்டிருக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்களின் பாஷையில் சொல்வதென்றால் “இந்த நூற்றாண்டின் ரகசியக்கலைஞன்”.

பேங்க்சியைபற்றிய மேலதிக தகவல்களுக்கு:  http://www.banksy.co.uk/

Advertisements

Entry filed under: tamil advertising.

சித்திரமும் ‘கணிணி’ப்பழக்கம்! கோலம்: a visual art

5 Comments Add your own

 • 1. துளசி கோபால்  |  January 26, 2011 at 7:29 am

  அருமையான பதிவு.

  எங்கூரிலும் இந்த க்ராஃபிடி ஆர்ட் ஒரு பிரச்சனையாத்தான் இருக்கு:(

 • 2. leenamanimekalai  |  January 26, 2011 at 11:55 am

  Beautifully written.
  Since longtime, I had been thinking of writing an article on Graffiti.
  It was when I happened to visit east germany, I was bewitched by the art form.
  Thanks Santosh.
  maybe , you should try and publish it in some magazine.
  shall i forward this to my journalist friends?
  cheers
  leena manimekallai

 • 3. ensanthosh  |  January 26, 2011 at 1:28 pm

  @துளசி கோபால்: Thank you thulasi. கிராஃபிடி ஆர்ட்டை ஏப்போதும் நெகடிவாக பார்க்கவேண்டாம் என்பதற்கான் உதாரனம் தான் பேங்க்சி!

  @ leenamanimekalai: Hi leena, ya i will try to write more about graffiti art. also in some magazine. thank you for your feedback.

 • 4. செல்லப்பா  |  January 26, 2011 at 2:26 pm

  நல்ல பதிவு. இயல்பான எண்ண ஓட்டங்களுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ள நடை ஈர்க்கிறது. இணைப்பைத் தொடர்ந்து சென்றால் காணக்கிடைப்பவை, வார்த்தைகள் தராத வலுவுடன் கூடிய ஓவியங்களாக கண்ணெதிரே காட்சியளிக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். அப்படியே விட்டுவிடாதீர்கள்.

 • 5. Prasanna Rajan  |  January 27, 2011 at 1:15 pm

  பேங்க்சி இயக்கிய டாக்குமெண்ட்ரி ‘எக்ஸிட் த்ரூ த கிஃப்ட் ஷாப்’ ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது. மிகச் சிறப்பான ஆவணப்படம். முடிந்தால் பாருங்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2011
M T W T F S S
« Jun   Feb »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

%d bloggers like this: