கோலம்: a visual art

January 27, 2011 at 2:05 am 3 comments

தூரத்தில் எங்கோ கவுசல்யா சுப்ரஜா என்று ஸ்பீக்கர் சுப்ரபாததை ஆரம்பித்திருக்கும், சூரியனின் பால்வெளிச்சம் மெல்ல பெருகி மனிதர்கள் நிழல்களிலிருந்து உருவங்களாய் மாறத்துவங்குகிற காலை. பசுக்கள் கட்டியிருக்கும் வீடுகளுக்குச்சென்று சாணம் அள்ளிவருவது தான் பெரும்பாலும் காலையில் சிறுசுகளின் வேலை. அதைகரைத்து முற்றத்தில் சளக் சளக் என்கிற பிரத்யேக சப்ததுடன் அம்மாக்களோ அக்காக்களோ தெளித்து கொண்டிருப்பார்கள்.  காலையில் தூக்கக்கலக்கத்தில் திண்ணையில் உட்காந்து கோலம் போடும் அக்காக்கக்களையும், அக்காக்கள் போடும் கோலத்தையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தது ஞாபகம் வருகிறது. எங்களுர் அக்காக்கள் போடுகிற விதவிதமான கோலங்கள் தான் மெல்ல ஓவியங்கள் மீதான ஈர்ப்பை உருவாக்கியது என்று  தோன்றுகிறது.

நாகர்கோவிலில் பெரும்பாலும் கோலம்போட கோலமாவு என்கிற வெள்ளை மண்ணைத்தான் உபயோகப்படுத்துவார்கள். கிலோ இவ்வளவு என்று வாங்கிவைத்துக்கோள்ளலாம். வண்ணக்கோல மாவென்றால் ஸ்பெஷலாக சின்ன பாக்கெட்டுகளில் கிடைக்கும். .அரிசி மாவில் புட்டு செய்வதோட சரி. பெண்குழந்தை இல்லாத என் வீட்டில் நானே சில அக்காக்களிடம் ஸ்பெஷல் ட்ரெயினிங் எடுத்து கோலம் போட கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கோலமாவை சுட்டுவிரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் நுள்ளி எடுத்து தரையில் ஒரு கோடாக வரைவது அடைப்படை நுணுக்கம். முதலில் கோடு ஒழுங்காக வராது பட்டையாக பிரியும். தொடர்ந்த பயிற்சியின் விளைவாக பட்டை மெல்ல கோடாக மாறும். பின்பு இஷ்டத்துக்கு ரைட் லெப்ட் எடுத்து கோடுகளை வளைக்கவோ நீட்டவோ முடியும். நாலு புள்ளியில் ஆரம்பித்து நானூறு புள்ளி வரை ஷேர்மார்கெட் பங்குகளைப்போல கோலத்தின் அளவை நம் திறமைக்கு ஏற்றபடி விரிக்கலாம்.

“பொம்பள பசங்க மாதிரி பய கோலம் போடுறதுப்பாரு” என்று சீண்டுகிற அத்தைகளின் கிண்டல்களை எனக்கு கிடைத்த பாராட்டுகளாகவே எடுத்துக்கொண்டு,  நானும் முயல்கோலம், மான்கோலம். கம்பிக்கோலம் என்று வெரைட்டி காட்டுவேன். வண்ணப்பொடிகள் கிடைக்காத பஞ்ச காலங்களில் அம்மாவின் குங்குமம், சமையலறை ம்ஞ்சள் தூள் எல்லாம் மறுநாள் முற்றத்தில் மாவுடன் கலந்து கோலமாக கிடக்கும். துளைகள் போட்ட கோல அச்சுகள் வீண், சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைப்போல போட்டதையே போட்டுகொண்டிருக்கும் அச்சுகள் ரெண்டு நட்களில் சலிப்புற துவங்கும். மறுபடியும் கோலப்பொடி விரல்களையெ நாடும்.

கோலம் என்கிற விசுவல் ஆர்ட் நம் ஃபோல்க் கலைகளின் ஒரு வர்சுவல் வடிவம். கோலம் என்கிற சொல் பரிபாடலில் தான் முதன்முதலாக “கேழற் கோலம்” என்ற சொற்றொடராக விஷ்ணுவின் வராக அவதாரத்தைப்பற்றிய‌ குறிப்பில் வருகிறது. சிலபப்பதிகாரத்தில் “மாதவி தன் கோலம் தவிர்த்திருந்தாள்” “மணமகளைப் போல யாழ் கோலம் செய்யப்பட்டிருந்தது”. “மாதவி எழுதுவரிக்கோலம் ஆட்டத்திற்காகக் கோலம் செய்திருந்தாள்”, “பழங்குடிமக்கள் குமரிப்பெண்ணைத் தெய்வக்கோலம் செய்திருந்தனர்” போன்ற இடங்களிலும் கோலம் என்ற சொல் வருகிறது. இங்கே கோலம் என்ற சொல் ஒப்பனையை குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வகையில் நாம் தரைக்கு செய்யும் ஒப்பனையே கோலம். தரையை ஏன் அலங்கரிக்க வேண்டும்?

பழங்குடிகளின் வழிபாட்டில் தரை என்பதே முதல் புனிதப்பொருள். தரையை தன் முதல்கடவுளாகவே அவர்கள் கருதினார்கள். அதுவும் தெய்வம் முதல் காலடி எடுத்துவைத்து தன் வீட்டிற்குள் நுழையும் முற்றம் புனிதப்படுத்தபடவேண்டிய ஒன்றாகவும் அவர்கள் கருதியிருக்கலாம். கோலம் என்பது தண்ணீரோ பசுஞ்சாணமோ தெளித்து சுத்தப்படுத்தப்பட்ட தரைக்கு செய்யும் ஒப்பனை. அரிசி மாவை கரைத்து துணியில் கிழியாககட்டி தரையில் கோடு கிழிப்பதில் இயற்கையோடு இனைந்த வாழ்வும், எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கும் உண‌வளிக்கும் நோக்கமும் உள்ளடக்கம்.  கோலத்தின் இன்னொரு வடிவமே வடநாடுகளில் ரங்கோலி என்று அழைக்கபடுகிற‌து. ரங் என்றால் வண்ணங்கள் அவாலி என்றால் வரிகள். வண்னக்களினால் வரையப்படுவது என்று வடமொழியில் பொருள்.கோலத்தை பெங்காலியில் ஆலாப்னா, ராஜஸ்தானில் மதனா உத்தரபிரதேசத்தில் சவுக்புரானா, ஆந்திரத்தில் முக்கு என்று வெவ்வேறு பெயர்களில் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோலங்களில் இருவகை உண்டு. கம்பி கோலம் மற்றும் புள்ளிக்கோலம். கம்பிக்கோலம் என்பது புள்ளிகளில்லாமல் நேரடியாக கோடுகளை இழுத்து வரைவது. இடைவெளிகளை வண்ணப்பொடிகளால் வேண்டுமானால் நிரப்பிக்கொள்ளலாம்.  புள்ளிக்கோலம் என்பது நேராகவோ குறுக்காகவோ புள்ளிகள் வைத்து, அந்த புள்ளிகளை இணைக்கும் விதமாகவோ அல்லது அந்த புள்ளிகளை சுற்றி கோடுகள் வரும் விதமாகவோ இரு வகையில் வரையப்படுகிற‌து. அப்படி புள்ளிகளை சுற்றிவரும் கோடுகளை கொண்ட கோலம் சுழிகோலம் என்றும் சொல்கிறார்கள். சுழி கோலம் பெரும்பாலும் கைகளை எடுக்காமல் வரைவது. ஒரு இன்ஃபினிடி தன்மை கொண்டது. பூக்களை கொண்டு உருவாக்கபடும் கோலம் பூக்கோலம் என்கிறார்கள். இது தமிழ்நாட்டைவிட கேரளாவில் தான் இன்றும்பழக்கத்தில் உள்ள‌து. மலையாளத்தில் பூக்களம் என்றும் அத்தப்பூ என்றும் சொல்கிறார்கள். அதுவும் திருவோண நாட்களில் மட்டுமே போடுகிறார்கள்.

அடிப்படையில் கோலம் ஒரு ஜியோமிதிக் கலைவடிவம். புள்ளிகள், கோடுகள், வளைவுகள் என்று கனிதசூத்திரங்களுக்குள் அடங்கும் நேர்த்தியும் ஒழுங்கும் கொண்ட ஒரு அறிவியல் காட்சிக்கலை. தாந்திரிக் ஆர்ட்டிலும், கேரளாவின் “களம் வரைக்கல்” போன்ற கலைகளிலும் அதன் நீட்சி உள்ள‌து. இன்றைய நவீன ஓவியங்களிலும் கூட இதன் தாக்கம் உள்ளது.

இன்று அபார்ட்மென்ட் கலாச்சாரத்திற்கு மாறிகொண்டு, முற்றம் என்கிற ஒரு வஸ்துவே இல்லாமல் வாழும் நாம் கோலத்தை பற்றி நினைத்துகூட பார்க்கமுடியாத இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். கோலங்கள் பெண்களின் நுட்பமான அழகுழணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த இடத்தில் அசோகமித்திரனின் கோலம் கதையில் வரும் விஜயாவை நினைத்துக்கொள்கிறேன்.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , .

தலைமறைவு ஓவியன் பேங்க்சி! கதை மாதிரி ஒரு கதை.

3 Comments Add your own

 • 1. Prabu  |  January 27, 2011 at 11:43 am

  Hi Sandy,

  Kolam superb ahh ezhuthi irukkeenga, ungalai paaratta vendiya vishayam than……

  நாங்க எங்க ஊருல கலர் பொடி இல்லேன்னா, என்ன பண்ணுவோம் தெரியுமா? செங்கலை அரைத்து சிவப்பு நிற பொடியாகவும், பேனா மையை மண்ணுடன் சேர்த்து ஊதா நிறமாகவும், இலைகளை அரைத்து சார் எடுத்து மண்ணுடன் சேர்த்து பச்சை நிற மாகவும்
  இப்படி சிறுவயதில் கலர் பொடி செய்து கோலத்திற்கு போடுவோம்…. அது ஒரு காலம்….

  Prince : )

 • 2. செல்லப்பா  |  January 27, 2011 at 5:07 pm

  இன்னும் புறநகர்ப் பகுதிகளில் கோலம் அதற்கேற்ற பிரத்யேக உற்சாகத்துடன் போடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. மார்கழி மாதங்களில் சிலர் இரவே கோலம் போட்டுவிட்டு உறங்கிவிடுகின்றனர்.

 • 3. Kumarraja  |  July 21, 2011 at 10:42 am

  நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான கோலம் படங்களை கண்பித்ததற்கு மிக்க நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2011
M T W T F S S
« Jun   Feb »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

%d bloggers like this: