சினிமா விமர்சகர்கள்: ஒரு இன வரைவியல்.

tamil advertising

தமிழ்நாட்டில் கவிஞர்கள், கலைமாமணிகளுக்கு பிறகு அதிகமாக வாழும் இனம் என்று சினிமா விமர்சகர்களை சொல்லலாம். அதிலும் உள்பிரிவுகள் உண்டு. அவை யாவன என்றால் படம் வெளியாகிற அன்றே சக பதிவர்களுடன் தியேட்டர்களுக்கு சென்று இண்டெர்வெல்லில் தம்மடித்துக்கொண்டே பாதிப்படத்துக்கு விமர்சனத்தை பேசியே ஆரம்ப்பித்து, வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு போனதும் முதல் வேலையாக பிளாகில் விமரசன்ம் போடுபவர்கள். எடிட்டர்களின் அழுத்தத்தின் காரணமாகவோ, தெரிந்த சினிமா நண்பர்களின் அழைப்பின் காரணமாகவோ படம் பார்த்து பஞ்ச் வைத்து வாத்தியார்கள் போல மார்க் போட்டு விமர்சனம் ரெடி பண்ணும் வார இதழ் பாத்திரிகையாளர்கள், இயக்குனரே யோசிக்காத ஆங்கிளில் யோசித்து 80களின் இலக்கிய சுளுக்கு மொழியில் தலைப்புகளிட்டு திரைவிமர்சனங்கள் எழுதும் சிறுபத்திகையாளர்கள், இவர்களுடன் தங்கள் தனிப்பட்ட பிரியங்களுக்காக இயக்குனர்களை ஹிட்ச்காக்குடனோ குரசோவாவனுடனோ ஒப்பிட்டு முடிசூட்டி கையில் செங்கோல் வழங்கும் இலக்கிய எழுத்தாளர்கள். தொலைக்காட்சி சேனல்களில் சொடக்கு போட்டு விமர்சனம் செய்பவ்ர்கள்.

1

முதல் வகை பிளாக் எழுத்தாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். இவர்களுடைய வாசகர்கள் கம்பெனி வேலை நேரத்தில் அவசரமாக சின்ன பசங்க செக்ஸ் புக் படிக்கிற மாதிரி  பிளாக் படிப்பவர்கள். அதனால் இவர்களது மொழியும் ஆக்‌ஷன் சினிமா மாதிரி அவசர வேகத்தில் ஒரு மஜாவாக இருக்கும். சினிமா விமர்சனம் என்று சொல்லி பெரும்பாலும் இவர்கள் கலாய்ப்பது கதையை தான் கடைசி இரண்டு பாராவில் கேமரா சூப்பர் (5Dயா 7Dயா) , ஹாரிஸ் கலக்கியிருக்கிறார், ஜீ.வியின் பின்னணி சொதப்பல் என்கிற மாதிரி சினிமாவின் தொழிநுட்பத்தையும் சைடிஷ் மாதிரி தொட்டு கொள்வார்கள். ஹிரோயின்களுடைய குளோசப் ஷாட்டையோ கிர்ரடிக்கும் ஒரு சினிமா ஸ்டில்லையோ பதிவுக்கு நடுவில் படமாக போட்டு படிப்பவர்களில் பல்சை ஆப்பிஸ் நேரத்திலேயே அசரடிப்பவர்கள்.

இவர்கள் தங்களுக்கு என்று நெருங்கிய ஒரு வாசக வட்டத்தை கொண்டிருப்பவர்கள். அந்த வாசகர்களும் தங்களுக்கென்று ஒரு பிளாக் வைத்திருக்கும் பதிவர்களாகவே இருப்பார்கள். ஆக ஒரு ம்யூட்சுவல் அண்ட்ர்ஸ்டேண்டிங்க் அடிப்படையில் இவர்களின் விமர்சனங்களுக்கு ஒரு கம்மெண்டை போட்டு உசுப்பேத்திவிட்டு விடுபவர்கள். “தல விமர்சனம் சூப்பர்” “இன்னைக்கு ஈவ்னிங் ஷோவுக்கு புக் பண்ணி இருந்தேன். உங்க விமர்சனத்த படிச்சா போகவா வேணாமான்னு குழப்பமா இருக்கு” ”தியேட்டர்ல நானும் இதையே தான் ஃபீல் பண்ணினேன்” என்கிற வகை மாதிரிகளில் அந்த கமெண்ட் இருக்கும்.

2

இரண்டாவது வகை வார இதழ் விமர்சகர்கள். நல்லதோ கெட்டதோ பெரும்பாலும் இவர்கள் பெயர் வெளியே தெரிவதே இல்லை. இவர்களின் கருத்துக்கள் இதழ்களின் கருத்துக்களாவே அறியப்படும். இவர்கள் சில சமயம் தனியாகவோ அல்லது கூட்டம் கூட்டமாகவோ விமர்சனங்கள் எழுதுவார்கள். இதழாசிரியர்களின் வீக்கெண்ட் பிரெஷ்ஷர் காரணமாக தனியாக திய்ட்டர் தியேட்டராக அலைந்து டிக்கெட் எடுத்து விமர்சனம் எழுதிவிட்டு வவுச்சருடன் டிக்கெட்டை பின் பண்ணி அக்கவுண்ட் மாமாக்களிடம் கொடுத்து பெட்டிகாஷ் வாங்கிகொள்ள்ளும் பாவப்பட்டவ்ர்களாகவும் சிலநேரங்களில் விமர்சனக்குழுக்களாக தியேட்டரில் பன்னும் பட்டர்ஜாமும் சாப்பிட்டு படம் பார்த்து கூடிப்பேசி குத்துமதிப்பாக மதிப்பெண் போட்டு விமர்சன விமோசனம் அடைபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் போடும் ஓகே, நன்று, மிகநன்றுவுக்காக இயக்குனர்களோ, தயாரிப்பு தரப்பு ஆட்களோ போன் போட்டு நன்றி சொல்லி ஆனந்தகண்ணீர் வடிப்பதும், இப்படி பண்ணிட்டீங்களே பாசு என்று ரத்தகண்ணீர் வடிப்பதும் சகஜம்.

நடிகைகளின் தொப்புள் படங்களை போட்டு வரிசைபடுத்தி புதிர்போட்டி வைக்கும் பக்கங்களுக்கு அடுத்தபக்கத்திலேயே இவர்கள் சினிமாவிமர்சனத்தில் கலாச்சாரம் பற்றி கவலைப்படுவதும், விரசமான காட்சிகளுக்கு விமர்சனக்குட்டு வைப்பதும் கறுப்புகாமெடி. இவர்களின் விமர்சனம் சினிமா ஹீரோக்களைப்போல ஒரு பஞ்ச் டயலாக்குடன் தான் முடியும். பெரும்பாலும் படத்தின் தலைப்பையே இந்த பஞ்ச்க்கு பயன்படுத்துவார்கள். மற்றபடி கேமரா பசுமை, இசை இனிமை என்று எதுகை மோனையில் எளக்காரம் காட்டுவார்கள்.

3

மூன்றாம் வகையினரான சிறுபத்திரிகை சினிமா விமர்சகர்கள் உலகசினிமாவை ஊறுகாயாய் தொட்டுக்கொள்ளும் சுத்த சினிவாசிகள். இவர்கள் பெரும்பாலும் பேராசிரியர்களாகவோ, இலக்கிய மரிக்கொழுந்துவாகவோ இருந்து தொலைப்பது இயக்குனர்களின் வரம் அல்லது சாபம். எடுத்த உடனேயே தார்கோஸ்வ்கியுடையதோ, கீஸ்லோஸ்கியுடையதோ ஒரு சினிமா பற்றிய ஒரு பொன்மொழியை பிள்ளையார்சுழியாகப்போட்டு விமர்சனத்தை ஆரம்பிப்பது இவர்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்துவரும் பழக்கம். மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதும்போது கூட பின்நவீனத்துவ கைப்பழக்கத்தில் குழப்பத் தலைப்புகளிட்டு கும்மியடிப்பது இவர்களின் கூட்டு நனவிலி மனோபாவம். அதில் கதாநாயகனின் மரணம் முதல் தயாரிப்பாளர்களின் மரணம் வரை கட்டுடைப்பு வேறு நிகழும். ஹீரோவின் விக், நாயகிகளின் கொலுசு, காமெடி நடிகர்களின் நக்கல் என்று எல்லா இடத்திலும் குறியீடுகளை தேடி அடைவார்கள்.  ஒவ்வொரு ஃப்ரேமுக்கு இடையிலும் இருக்கும் நுண்ணரசியலை சினிமா டூயட்டுகளில் வரும் ஹீரோக்களைப்போல தடவி தடவி கண்டுகொள்வார்கள். தங்கள் மார்க்சிய, ஃபிராய்டிச, கோப்பர்னிச இன்னபிற இசங்களின் ரசங்களை வைத்து பகுப்பாய்வு பரோட்டா வீசுவார்கள்.

பெரும்பாலும் இரானிய சினிமா எங்கேயோ போயிட்டுருக்கு கொரிய சினிமா கொல்லைக்கு போயிட்டுருக்கு இவனுங்க என்ன படம் எடுக்கிறானுங்க டைப் நெகடிவ் விமர்சங்கள் செய்வது இவர்கள் வழக்கம். சினிமா புரிந்த அளவுக்கு இவர்கள் விமர்சனம் புரியவில்லையே என்று வாசகனை வரட்டி எடுக்கும் மொழியே இவர்களின் தனிச்சிறப்பு. தமிழ்சினிமா இயக்குனர்கள் இலக்கியம் படிப்பதில்லை என்பதே இவர்களுடைய நெடுநாளைய விமர்சன மரபு. இந்த நிலமை இன்று கொஞ்சம் மாறத்துவங்கி இயக்குனர்களும் இலக்கியம் படிக்க ஆரம்பித்து இதழுக்கு ஆயுள் சந்தாவும் கட்ட ஆரம்பித்து விட்டதால் இவர்கள் விமர்சனத்தில் கரிசனத்தின் சிறு நிழல்களும் படிய ஆரம்பித்து விட்டது புதிய மரபு.

4

இவர்கள் மூன்றாம் வகை விமர்சகளாக இருந்து பரிணாம விதியின் அடிப்படையில் நான்காம் இடத்திற்கு வந்தவர்கள். பெரும்பாலும் இலக்கிய ஆளுமைகள் என்று அறியப்படுபவர்கள். இவர்கள் இன்று எண்ணிக்கையில் பரவலாக காணாப்படாவிட்டாலும் காட்டில் புலிகள் குறைவானாலும் கெத்துக்கு குறைவிருக்காது என்ற வகைப்பாட்டில் அடங்குபவர்கள். விமர்சனங்களின் வழியே இயக்குனர்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கும் இலக்கிய இணைவேந்தர்கள். இயக்குனர்கள் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் உலகப்படமாகவும் இயக்குனர்களுடன் மனஸ்தாபம் வந்து விட்டால் உள்ளூர் குப்பைகளாகவும் தெரியும் மப்பு மாலைக்கண் இவர்களிடையே பரவலாக காணப்படும் ஒன்று. ஒலக அழகிகளையே அறிமுகப்படுதும் இயக்குனர்களுக்கு ஒலகசினிமாவையே அறிமுகப்படுத்தும் உயரிய இடத்தில் இருப்பவர்கள். இவர்கள் இன்று சினிமாவை விமர்சிப்பவர்கள் என்கிற நிலையைதாண்டி சினிமாவில் எந்த பஜாரில் எந்த டிவிடி கிடைக்கும், இந்த சீனுக்கு எந்த படத்தில் உருவலாம், என்கிற மாதிரியான குழுவிவாதங்களில் பங்கெடுப்பவர்களாகவும், கும்மாங்குத்து ஹீரோக்களுக்கு பஞ்ச் டயலாக் பற்றவைப்பவர்களாகவும், குத்துப்பாட்டிற்கு குரூப் டான்ஸ் ஆடுபவர்களாகவும் டார்வினின் பரிணாமவிதிகளுக்கே பம்பரம் சுழற்றுபவ்ர்கள்.

5

தமிழுக்கு தொலைக்காட்சி வந்தபோதே சினிமா விமர்சனம் செய்கிறவர்கள் கால்மேல் கால் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையை விதியை அசைக்காமல் பின்பற்றுபவ்ர்கள். சிலர் நடந்து கொண்டோ தவழ்ந்துகொண்டோ கூட விமர்சனம் செய்வது உண்டு. இடையிடையே இங்கிலீஷ் பேசி பயம் காட்டுவது இவர்கள் இயல்பு. சினிமாக்காரர்கள் நம்பி கொடுத்த கிளிப்பிங்ஸ்களையே போட்டு முழுசினிமாவையும் காட்டி பார்வையாளர்களை தியேட்டர் பக்கமே போகவிடாமல் செய்துவிடும் காமெடிடிராஜடிகளும் உண்டு. சினிமாக்காரர்கலை அதட்டுவது போலவோ மிரட்டுவதுபோலவோ பாவ்னையில் பேசுவதும் இவர்கள் வழக்கம். கத்திரிக்காய் எடைபோடுவது போல சினிமாவை எடை போடுவதும், சினிமாக்களை ஒண்ணாப்பு படிக்கும் குழந்தைகள் போல ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி மொக்க சினிமாக்களை பத்தாமிடத்திலும் மரணமொக்கைகளை முதலிடத்திலும் வைப்பது இவர்களது விமர்சன அரசியல்.

பின்குறிப்பு: இது அவசரகோலத்தில் எடுத்த ஒரு சர்வே. முழுமையானது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதையே தீஸிஸாக எடுத்து யாரேனும் மானுடவியல் நோக்கில்  முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்வதாக இருந்தால் இந்த கட்டுரையை தாராளமாக பயன்படுத்திகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

ஆதாமின்றே மகனும் சந்தோஷும்!

tamil advertising

ஆதாமின்றே மகன் அபு படத்தைப்பற்றி நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். ”படத்தில் அபுவிற்கு உதவி செய்வதாக ஒரு இந்து கதாபாத்திரமும், ஒரு கிறிஸ்தவ கதாபாத்திரமும் வருகிறது. மத ஒற்றுமையை இவ்வளவு வெளிப்படையாக சொல்லும் ஒரு படைப்பு அதன் கலை நேர்த்தியை இழந்து விடுகிறது என்று. நானும் ஆமாம் அது வலிந்து சொல்லப்பட்டிருப்பது ஒரு கு்றை என்று தான் கலங்கலாகப் பதிலளித்தேன்.

.

பிற்பாடு யோசிக்கும்போது கலங்கல் மெல்ல தெளிகிறது. சின்ன வ்யதிலிருந்து என் வாழ்கையில் இஸ்லாமிய மக்களோடான உறவை நினைத்து பார்க்கிறேன். என்னுடைய சிறுவயதில் நாகர்கோவிலில் குடியிருந்தோம். ஜாதி மத ரீதியாக தனி தனி குடியிருப்புகளாக இருந்த எங்கள் சொந்த ஊரான அருமனை போல அல்லாது நாகர்கோவில் நகரங்களுக்கே உரிய இயல்புடன் பல்வேறு ஜாதி மதங்கள் கலந்த வசிப்பிடங்களையும் காம்பவுண்டுகளையும் கொண்ட ஊர். குறிப்பாக அறுகுவிளை, பள்ளிவிளை, வாத்தியார் விளை போன்ற கீழ் நடுத்தரவர்க்க மக்கள் அட்ர்த்தியாக வாழும் பகுதிகளில் தான் வெவ்வேறு வாடகை வீடுகளில் குடியிருந்தோம்.

.

பள்ளிவிளையில் இருக்கும் போது எனக்கு ஐந்துவயது இருக்கலாம். பக்கத்துவீட்டில் ஒரு இஸ்லாமிய குடும்பம் இருந்தது. அங்கே அலி அண்ணனும், ஃபாத்திமா அக்காவும், அவர்களின் உப்பாவும், உம்மாவும் எல்லாம் உண்டு. உப்பாவுக்கு இறச்சி வெட்டும் கடையில் வேலை. அலி அண்ணன் எது வரை படித்தார் என்று ஞாபகம் இல்லை. வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கப்போகும் வேலை பார்த்து கொண்டிருந்தார். எங்களுடன் தங்கியிருந்த அலிஅண்ணனின் வயதை ஒத்த எனது மாமாவும் அவரும் நண்பர்கள். இருவருக்கும் எனது அம்மா தம்பிகளை போலவே வீட்டில் சாப்பாடும் போடுவார். நானும் எனது வீட்டைப்போலவே சுதந்திரமாக அவர்கள் வீட்டில் உலாத்துவதும் சாப்பிடுவதும் சகஜம். உப்பா சாயங்காலங்களில் வேலைவிட்டு வரும்போது எனக்கும் சேர்த்து மிட்டாய் வாங்கி வருவார். எங்கள் வீட்டுகாரர்கள் பக்கத்திலிருக்கும் முத்தாரம்மன் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவோம் அவர்கள் பள்ளிக்கு போய் சாமி கும்பிடுவார்கள் என்கிற விசயத்தை தவிற அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு சத்தியமாக தெரியாது.

.
பிறகு வாடகைவீட்டு காரர்களின் வழக்கம் போலான வாழ்வு எங்களை பள்ளி விளையிலிருந்து வாத்தியார்விளைக்கும் அறுகுவிளைக்குமாக வெவ்வேறு வீடுகளுக்கும் குடியிருப்புகளுக்கும் துரத்திகொண்டிர்ருந்தது. எப்போவாவது எங்கேயாவது நானும் அம்மாவும் அலி அண்ணனையோ அவர்களில் உம்மாவையோ சந்திக்கும் போது நின்று பேசிக்கொள்வோம். அவர்கள் வேறு எங்கேயாவது குடியிருந்து கொண்டிருப்பார்கள். நான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது ஒரு நாள் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அம்மாவுடன் மருந்து வாங்க சென்ற போது உம்மாவை பார்த்தோம். அவர் அம்மாவிடம் எதுவோ துக்கத்துடன் சொல்ல அம்மா என்னை இழுத்துகொண்டு வேகமாக உம்மாவுடன் ஆண்கள் வார்டுக்கு சென்றார்கள். அங்கே படுக்கையில் ஒரு சிசுவைப்போல சுருங்கிய உடலுடன் அலி அண்ணா படுத்திருந்தார். பேச்சு மூச்சு ஒன்றும் இல்லை. சுவருக்கு பெயிண்ட் அடிக்க போன இடத்தில் கரண்ட் பிடித்து விட்டதாம். கட்டிலை விட சில அடிகளே வளர்ந்திருந்த நான் அலி அண்ணனின் சுருங்கிய உடலை ஆச்சரியம் கலந்த துயரத்துடன் பார்த்தேன். அம்மா உம்மாவிடம் கண்னீருடன் எதையோ சொல்லி கொண்டிருந்தார். ஒரு வாரமாகிவிட்டதால் ஏற்கனவே உம்மா நிறைய அழுதிருப்பார்கள் போல. கண்னீர் எதுவுமில்லாமல் கனமான முகத்துடன் அம்மாவின் கண்களையே பார்த்துகொண்டு நின்றிருந்தார். சில நாட்கள் கழித்து அலிஅண்ணா இறந்த செய்தி எங்களுக்கு வந்தது. இதை எழுதும் போது கடைசியாக நான் பார்த்த அலியண்ணாவின் சுருங்கிய முகத்தை லேசான தாடி வைத்த பழைய முகத்துடன் கற்பனை செய்ய முயல்கிறேன்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என் வகுப்பு தோழனாக இருந்த அக்பர்.எனது தலைமுறையை சேர்ந்த எல்லா மாணவர்களைப்போலவும் நெல்லிக்காயும், மாங்காயும், கொய்யாக்காவும் பங்கு போட்டு பள்ளிக்கூட காக்கி டிரவுசரின் பாக்கெட் நிறைத்த நட்பு. வீட்டிருந்து பள்ளிக்கூடம் வரை போகும் வழிநடை நண்பன். என்னைப்போலவே சுமாராக படிப்பவன். எங்கள் தெருவுக்கு பக்கத்து தெருவில் குடியிருந்தான். அவனுடைய அப்பா ஏதோ மரமில்லில் வேலை பார்த்ததாக ஞாபகம். அக்பர் என்கிற பேரில் எனக்கு அப்போதே ஒரு கவர்ச்சி தோன்றும். போகிற வழியில் ஒண்ணுக்கடிக்கும் போது அவன் ஆணுறுப்பின் நுனி உரிந்தே இருப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டு என்னடா இது என்று விசாரித்திருக்கிறேன். அதற்கு பெயர் சுன்னத் என்றும் சாயிப்பு மார் ஆம்பிள்ளைகளுக்கெல்லாம் இப்படி தான் பண்ணுவார்கள் என்பதும் அவன் மூலமாக அறிந்தேன். நுனியை லேசாக வெட்டிவிடுவார்கள் என்பதை அவன் சொன்ன போது எனக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. வழக்கம் போல வீடு மாற்றத்தின் காரணமாக பள்ளியும் மாறிப்போனபோது அவன் நட்பை இழந்தேன். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்னவாகி இருப்பான் என எதையும் அறிய முடியவில்லை.
.
வடசேரி பள்ளிக்கு எதிரிலிருந்த மணிகண்ட விலாஸ் ஹோட்டலில் தான் எனது அப்பா சர்வராக வேலை பார்துகொண்டிருந்தார். மாலை நேரங்களில் ஹோட்டலை ஒட்டியிருக்கும் முதலாளியின் வீட்டில் புட்டுக்கும் ஆப்பத்துக்கும் மாவு இடிக்க எங்கள் அம்மா போகும் போது என்னையும் கூட கொண்டு போவார்கள். உலக்கையில் இடி படும் மாவு சிதறாமலிருக்க உரலின் வாயை சுற்ரி ஒரு அரிப்பு மாதிரி ஒன்றை வைத்திருப்பார்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்த படி நான் மிட்டாய் வாயுடன் உட்காந்து இருப்பேன். அங்கே மாவிடிக்க சில இஸ்லாமிய பெண்களும் வருவார்கள். அவர்களும் எனக்கு அத்தைகள் தான். ஏழ்மை முக்காடிட்ட முகங்கள். நோண்பு காலங்களில் எதிரிலிருக்கும் பள்ளியில் வாங்கு விளித்த பின்னாடி கொண்டுவரும் நோண்பு கஞ்சி எனக்கு ருசியாக தெரியும். உடம்புக்கு முடியாமல் போகும் காலங்களில் ஒழுகினசேரி பக்கத்தில் பாவு நுற்கும் நீளமான வீதி ஒன்றில் இருக்கும் ஒரு லெப்பயிடம் ஓதுவதற்கு அம்மா கூட்டிச்செல்வார். தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் அவர் என் மீது ஊதிய படியே ஏதோ எனக்கு தெரியாத பாஷயில் முணுமுணுத்தவாறு திடீரென தண்ணீரைத்தெளிப்பதும் பிறகு என் உச்சந்தலையில் கையை வைத்து ஓதுவதும் திகிலுடன் பார்த்தபடி உடல் நடுங்கி கொண்டு உட்காந்திருப்பேன். அங்கே கமழ்ந்த ஊதுபத்தியின் வாசனையை இப்போதும் என் ஞாபகநாசியில் உணரமுடிகிறது.
.
அப்பாவின் மரணத்திற்கு பிறகு எங்கள் சொந்த ஊரான அருமனைக்கே சென்று விட்டோம். அங்கே இஸ்லாமியர்களே இல்லை. இஸ்லாமியரையோ, பள்ளியையோ பார்க்கணுமென்றால் கடையாலு மூட்டிற்கோ, மார்த்தாண்டத்திற்கோ, குலசேகரத்திற்கோ சென்றால் தான் உண்டு. அருமனையில் பள்ளியிறுதி படிக்கும் வரை எனக்கு இஸ்லாமிய நண்பர்களே இல்லை.
.
சென்னை ஓவியக்கல்லூரி சேர்ந்த போது தான் மீண்டும் இஸ்லாமிய நண்பரகள் கிடைத்தார்கள். என்னுடைய ஓவியம் கலை சார்ந்த சிந்தனைகளில் ’வழித்திரிவு’களை உண்டாக்கிய எனது நண்பன் ஆபித்.மலையாளி. தன்னை ஒரு கலைஞன் ஓவியன் என்பதை தாண்டி இஸ்லாமியனாகவோ மலையாளியாகவோ நினைத்து கொள்பவன் அல்ல.சென்னையில் எனது வறுமையின் காலத்தில் புத்தகங்கள், விவாதங்களுடன் உணவையும் என்னுடன் பகிர்ந்து கொண்டவன். நான் விக்ரமாதித்யனை பற்றி சொல்லும் போது அவன் எனக்கு எம். அய்யப்பனை பற்றி சொல்லிக்கொண்டிருப்பான். நான் கணியாட்டத்தை பற்றி சொன்னால் அவன் தெய்யம் பற்றிஎனக்கு சொல்வான். இப்படி மலையாளத்தையும் தமிழையும் மாறிமாறி பரிமாறிக்கொள்வோம். இளமைக்கேயுரிய முதிர்ச்சியற்ற புரட்சி மனப்பான்மையுடன் பழமையான இஸ்லாமிய குடும்பமான தனது குடும்பத்திலும் ஊரிலும் பேசக்கூடாததை பேசி வாங்க கூடாத திட்டுகளை வாங்கி விட்டு விடுமுறை கழிந்து சென்னைக்கு வரும்போது அதையும் கதையாக சொல்லி சிரிப்பவன்.  இப்போது கேரள இளந்தலைமுறை கலைஞர்களில் ஒருவனாக அங்கீகரிப்பட்டு விட்டவன். முக்கியமான சினிமாவோ படைப்போ புத்தகமோ உடனே அதைப்பற்றி என்னுடன் பகிர்ந்து கொள்பவன்.
.
கல்லூரி நண்பர்கள் பாரதவிலாஸ் என்று கிண்டல் செய்யுமளவுக்கு இருந்தது எங்கள் அறை. காரணம் அறைவாசிகளில் ஒருவனான நண்பன் ஜெயபால் ஒரு கிறிஸ்தவன். இன்னொரு நண்பன் சமீர். மற்றொரு நண்பனான மணியும் நானும் இந்து. மத்ததால் தான் எங்களுக்குள் வேற்றுமை ஆனால் கையில் காசில்லாமலிருப்பதில், பட்டினி கிடப்பதில், இருக்கிற ஆடைகளை மாற்றி மாற்றிபோட்டுகொள்வதில் கனவுகள் காண்பதில் எங்களில் ஒற்றுமை இருந்தது. விடுமுறை கழிந்து கோயம்புத்தூரிலிருந்து வரும் சமீரின் பையில் “உம்மா” செய்து கொடுத்த சப்பாத்தியும் கறிக்குழம்பும் இருக்கும். சூடு செய்து ஒரு வாரம் உண்போம். சமீரின் தங்கை கல்யாணத்திற்கு கோவை சென்ற போது சாப்பிட்டு சாப்பிட்டு டயர்டாகியே எங்களை ரெஸ்டு எடுக்க வைப்பார்கள் அவன் வீட்டார்கள்.
.
இன்றும் எனது அலுவலகத்தில் இருக்கிற இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு உற்ற தோழர்களாகவும் வழிகாட்டிகளாகவும் என் பயணத்தில் உடன் வந்துகொண்டே இருக்கிறார்கள். இது தான் எனக்கு தெரிந்த ஒரு இந்துவினதும் இஸ்லாமியனதும் இந்திய வாழ்க்கை. ஆனால் கடந்த சில வருடங்களில் இவர்களுக்கிடையே மெல்ல மெல்ல அரசியல் காரணங்களால் உருவாக்கப்பட்டு கொண்டுருக்கிற கசப்புகளை கலைக்க, மத அடிப்படைவாதம் எளிய மக்களை குழப்பாமலிருக்க, நான் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன மத ஒற்றுமையை வலிந்து சொல்ல வேண்டி இருக்கிறது. அது சினிமாவாக இருந்தாலும் சரி, மற்ற கலைவடிவங்களாக இருந்தாலும் சரி. அதில் கலை அமைதி கெட்டு போனால் பரவாயில்லை. கலை அமைதியை விட சமூக அமைதியே எனக்கு முக்கியம்.

மகரமஞ்ஞு!

tamil advertising

நவீன ஓவியங்கள் மீதான மயக்கம் ரவிவர்மாவின் ஓவியங்கள் மீது சற்று சலிப்பேற்படுத்தியது. காலண்டர் ஓவியங்கள் என்று நக்கலாக நினைக்கவைத்தது. எங்களூரில் பெரும்பாலான வீடுகளின் பூஜையறைகளில் அருள்பாலிக்கும் சரஸ்வதிகளும், லஷ்மிகளும் அவர் வரைந்ததின் லித்தோபிரிண்டுகள் தாம். சின்ன வயதில் ஓவிய ஆர்வத்தில் பெரும்பாலும் பிரதி எடுத்து வரைந்ததும் அவற்றைத்தான்.

அவருடைய ஓவியப்பெண்களில் உறைந்து நிற்கும் அழகு ஒரு மதிமயக்கும் கனவு போல தெரியும் அப்போது.  குழந்தைக்கு முலையூட்டும் அம்மா, காலில் முள்ளெடுக்கும் சகுந்தலா, கண்ணனை கொஞ்சும் யசோதா, சிந்தனைவயப்பட்ட ஹம்சதமயந்தி, புருரவாசை விட்டு பிரியும் ஊர்வசி என்று அழகிய பெண்களால் நிறைந்த உலகம் ரவிவர்மாவுடையது. அவருடைய ஓவியங்களை பிரதி எடுத்து வரைந்து பழகாத ஓவியர்கள் தெந்நிந்தியாவில் குறைவு.

பிற்பாடு நவீன ஓவியங்களுடனான ஈர்ப்பு, அவருடைய ஓவியங்களை என் ரசனையின் வரிசையில் மிக பின்னுக்கு தள்ளிவிட்டது. சமீபத்தில் நான் பார்த்த ’மகரமஞ்ஞு’ என்கிற ரவிவர்மா பற்றிய மலையாளப்படம் மீண்டும் ரவிவர்மாவின் மீதும் அவருடைய ஓவியங்கள் மீதும் எனது மதிப்பை பெருகச்செய்துவிட்டது.

லெனின் ராஜேந்திரன் இயக்கிய இப்படம் ரவிவர்மாவை அவரது காலத்தின் வரலாற்றுப்பின்னணியில் வைத்து பார்க்கிறது. ரவிவர்மாவாக சந்தோஷ் சிவன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடக்கும் கதை. திருவிதாங்கூர் ராஜவம்சத்தில் பிறந்த ரவி வர்மா தன் ஒவியங்களுக்கான மாடல் பெண்களை தேடி அலைந்து கொண்டே இருக்கிறார். தாழ்த்தப்பட்ட பெண்கள், தெருவோர அபலைகள், தேவரடியார் பெண்கள், நடன மாதுக்கள் சகுந்தலையாகவும், ஊர்வசியாகவும், சரஸ்வதியாகவும், லஷ்மியாகவும் இவர் கேன்வாசில் உருமாறுகிறார்கள். அந்த ஓவியங்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத பெரும்பாலான திருவிதாங்கூர் மக்களின் வீடுகளுக்குள் செல்கிறது.

பழமைவாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ரவிவர்மாவுக்கு எதிராக குரல்கள் கரகரப்புடன் உயர்ந்து வருகிறது. அதற்கு ரவிவர்மா சொல்லும் பதிலே இப்போது அவருடைய ஓவியங்கள் மீதான எனது மதிப்பை அதிகரிக்கச்செய்வது. ஊர்வசிக்கும் புருரவாசுக்குமான கதையுடன் ரவிவர்மாவின் கதையை இணைத்து சொல்லப்பட்டிருக்கும் உத்தி இத்திரைப்படத்தை ஒரு கலை மேன்மையாக்குகிறது.  பக்தி இல்லை எனினும் ரவிவர்மாவுடைய ஓவியங்களை வணங்கத்தோன்றுகிறது.