ஆதாமின்றே மகனும் சந்தோஷும்!

April 21, 2012 at 1:56 am 6 comments

ஆதாமின்றே மகன் அபு படத்தைப்பற்றி நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். ”படத்தில் அபுவிற்கு உதவி செய்வதாக ஒரு இந்து கதாபாத்திரமும், ஒரு கிறிஸ்தவ கதாபாத்திரமும் வருகிறது. மத ஒற்றுமையை இவ்வளவு வெளிப்படையாக சொல்லும் ஒரு படைப்பு அதன் கலை நேர்த்தியை இழந்து விடுகிறது என்று. நானும் ஆமாம் அது வலிந்து சொல்லப்பட்டிருப்பது ஒரு கு்றை என்று தான் கலங்கலாகப் பதிலளித்தேன்.

.

பிற்பாடு யோசிக்கும்போது கலங்கல் மெல்ல தெளிகிறது. சின்ன வ்யதிலிருந்து என் வாழ்கையில் இஸ்லாமிய மக்களோடான உறவை நினைத்து பார்க்கிறேன். என்னுடைய சிறுவயதில் நாகர்கோவிலில் குடியிருந்தோம். ஜாதி மத ரீதியாக தனி தனி குடியிருப்புகளாக இருந்த எங்கள் சொந்த ஊரான அருமனை போல அல்லாது நாகர்கோவில் நகரங்களுக்கே உரிய இயல்புடன் பல்வேறு ஜாதி மதங்கள் கலந்த வசிப்பிடங்களையும் காம்பவுண்டுகளையும் கொண்ட ஊர். குறிப்பாக அறுகுவிளை, பள்ளிவிளை, வாத்தியார் விளை போன்ற கீழ் நடுத்தரவர்க்க மக்கள் அட்ர்த்தியாக வாழும் பகுதிகளில் தான் வெவ்வேறு வாடகை வீடுகளில் குடியிருந்தோம்.

.

பள்ளிவிளையில் இருக்கும் போது எனக்கு ஐந்துவயது இருக்கலாம். பக்கத்துவீட்டில் ஒரு இஸ்லாமிய குடும்பம் இருந்தது. அங்கே அலி அண்ணனும், ஃபாத்திமா அக்காவும், அவர்களின் உப்பாவும், உம்மாவும் எல்லாம் உண்டு. உப்பாவுக்கு இறச்சி வெட்டும் கடையில் வேலை. அலி அண்ணன் எது வரை படித்தார் என்று ஞாபகம் இல்லை. வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கப்போகும் வேலை பார்த்து கொண்டிருந்தார். எங்களுடன் தங்கியிருந்த அலிஅண்ணனின் வயதை ஒத்த எனது மாமாவும் அவரும் நண்பர்கள். இருவருக்கும் எனது அம்மா தம்பிகளை போலவே வீட்டில் சாப்பாடும் போடுவார். நானும் எனது வீட்டைப்போலவே சுதந்திரமாக அவர்கள் வீட்டில் உலாத்துவதும் சாப்பிடுவதும் சகஜம். உப்பா சாயங்காலங்களில் வேலைவிட்டு வரும்போது எனக்கும் சேர்த்து மிட்டாய் வாங்கி வருவார். எங்கள் வீட்டுகாரர்கள் பக்கத்திலிருக்கும் முத்தாரம்மன் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவோம் அவர்கள் பள்ளிக்கு போய் சாமி கும்பிடுவார்கள் என்கிற விசயத்தை தவிற அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு சத்தியமாக தெரியாது.

.
பிறகு வாடகைவீட்டு காரர்களின் வழக்கம் போலான வாழ்வு எங்களை பள்ளி விளையிலிருந்து வாத்தியார்விளைக்கும் அறுகுவிளைக்குமாக வெவ்வேறு வீடுகளுக்கும் குடியிருப்புகளுக்கும் துரத்திகொண்டிர்ருந்தது. எப்போவாவது எங்கேயாவது நானும் அம்மாவும் அலி அண்ணனையோ அவர்களில் உம்மாவையோ சந்திக்கும் போது நின்று பேசிக்கொள்வோம். அவர்கள் வேறு எங்கேயாவது குடியிருந்து கொண்டிருப்பார்கள். நான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது ஒரு நாள் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அம்மாவுடன் மருந்து வாங்க சென்ற போது உம்மாவை பார்த்தோம். அவர் அம்மாவிடம் எதுவோ துக்கத்துடன் சொல்ல அம்மா என்னை இழுத்துகொண்டு வேகமாக உம்மாவுடன் ஆண்கள் வார்டுக்கு சென்றார்கள். அங்கே படுக்கையில் ஒரு சிசுவைப்போல சுருங்கிய உடலுடன் அலி அண்ணா படுத்திருந்தார். பேச்சு மூச்சு ஒன்றும் இல்லை. சுவருக்கு பெயிண்ட் அடிக்க போன இடத்தில் கரண்ட் பிடித்து விட்டதாம். கட்டிலை விட சில அடிகளே வளர்ந்திருந்த நான் அலி அண்ணனின் சுருங்கிய உடலை ஆச்சரியம் கலந்த துயரத்துடன் பார்த்தேன். அம்மா உம்மாவிடம் கண்னீருடன் எதையோ சொல்லி கொண்டிருந்தார். ஒரு வாரமாகிவிட்டதால் ஏற்கனவே உம்மா நிறைய அழுதிருப்பார்கள் போல. கண்னீர் எதுவுமில்லாமல் கனமான முகத்துடன் அம்மாவின் கண்களையே பார்த்துகொண்டு நின்றிருந்தார். சில நாட்கள் கழித்து அலிஅண்ணா இறந்த செய்தி எங்களுக்கு வந்தது. இதை எழுதும் போது கடைசியாக நான் பார்த்த அலியண்ணாவின் சுருங்கிய முகத்தை லேசான தாடி வைத்த பழைய முகத்துடன் கற்பனை செய்ய முயல்கிறேன்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என் வகுப்பு தோழனாக இருந்த அக்பர்.எனது தலைமுறையை சேர்ந்த எல்லா மாணவர்களைப்போலவும் நெல்லிக்காயும், மாங்காயும், கொய்யாக்காவும் பங்கு போட்டு பள்ளிக்கூட காக்கி டிரவுசரின் பாக்கெட் நிறைத்த நட்பு. வீட்டிருந்து பள்ளிக்கூடம் வரை போகும் வழிநடை நண்பன். என்னைப்போலவே சுமாராக படிப்பவன். எங்கள் தெருவுக்கு பக்கத்து தெருவில் குடியிருந்தான். அவனுடைய அப்பா ஏதோ மரமில்லில் வேலை பார்த்ததாக ஞாபகம். அக்பர் என்கிற பேரில் எனக்கு அப்போதே ஒரு கவர்ச்சி தோன்றும். போகிற வழியில் ஒண்ணுக்கடிக்கும் போது அவன் ஆணுறுப்பின் நுனி உரிந்தே இருப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டு என்னடா இது என்று விசாரித்திருக்கிறேன். அதற்கு பெயர் சுன்னத் என்றும் சாயிப்பு மார் ஆம்பிள்ளைகளுக்கெல்லாம் இப்படி தான் பண்ணுவார்கள் என்பதும் அவன் மூலமாக அறிந்தேன். நுனியை லேசாக வெட்டிவிடுவார்கள் என்பதை அவன் சொன்ன போது எனக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. வழக்கம் போல வீடு மாற்றத்தின் காரணமாக பள்ளியும் மாறிப்போனபோது அவன் நட்பை இழந்தேன். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்னவாகி இருப்பான் என எதையும் அறிய முடியவில்லை.
.
வடசேரி பள்ளிக்கு எதிரிலிருந்த மணிகண்ட விலாஸ் ஹோட்டலில் தான் எனது அப்பா சர்வராக வேலை பார்துகொண்டிருந்தார். மாலை நேரங்களில் ஹோட்டலை ஒட்டியிருக்கும் முதலாளியின் வீட்டில் புட்டுக்கும் ஆப்பத்துக்கும் மாவு இடிக்க எங்கள் அம்மா போகும் போது என்னையும் கூட கொண்டு போவார்கள். உலக்கையில் இடி படும் மாவு சிதறாமலிருக்க உரலின் வாயை சுற்ரி ஒரு அரிப்பு மாதிரி ஒன்றை வைத்திருப்பார்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்த படி நான் மிட்டாய் வாயுடன் உட்காந்து இருப்பேன். அங்கே மாவிடிக்க சில இஸ்லாமிய பெண்களும் வருவார்கள். அவர்களும் எனக்கு அத்தைகள் தான். ஏழ்மை முக்காடிட்ட முகங்கள். நோண்பு காலங்களில் எதிரிலிருக்கும் பள்ளியில் வாங்கு விளித்த பின்னாடி கொண்டுவரும் நோண்பு கஞ்சி எனக்கு ருசியாக தெரியும். உடம்புக்கு முடியாமல் போகும் காலங்களில் ஒழுகினசேரி பக்கத்தில் பாவு நுற்கும் நீளமான வீதி ஒன்றில் இருக்கும் ஒரு லெப்பயிடம் ஓதுவதற்கு அம்மா கூட்டிச்செல்வார். தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் அவர் என் மீது ஊதிய படியே ஏதோ எனக்கு தெரியாத பாஷயில் முணுமுணுத்தவாறு திடீரென தண்ணீரைத்தெளிப்பதும் பிறகு என் உச்சந்தலையில் கையை வைத்து ஓதுவதும் திகிலுடன் பார்த்தபடி உடல் நடுங்கி கொண்டு உட்காந்திருப்பேன். அங்கே கமழ்ந்த ஊதுபத்தியின் வாசனையை இப்போதும் என் ஞாபகநாசியில் உணரமுடிகிறது.
.
அப்பாவின் மரணத்திற்கு பிறகு எங்கள் சொந்த ஊரான அருமனைக்கே சென்று விட்டோம். அங்கே இஸ்லாமியர்களே இல்லை. இஸ்லாமியரையோ, பள்ளியையோ பார்க்கணுமென்றால் கடையாலு மூட்டிற்கோ, மார்த்தாண்டத்திற்கோ, குலசேகரத்திற்கோ சென்றால் தான் உண்டு. அருமனையில் பள்ளியிறுதி படிக்கும் வரை எனக்கு இஸ்லாமிய நண்பர்களே இல்லை.
.
சென்னை ஓவியக்கல்லூரி சேர்ந்த போது தான் மீண்டும் இஸ்லாமிய நண்பரகள் கிடைத்தார்கள். என்னுடைய ஓவியம் கலை சார்ந்த சிந்தனைகளில் ’வழித்திரிவு’களை உண்டாக்கிய எனது நண்பன் ஆபித்.மலையாளி. தன்னை ஒரு கலைஞன் ஓவியன் என்பதை தாண்டி இஸ்லாமியனாகவோ மலையாளியாகவோ நினைத்து கொள்பவன் அல்ல.சென்னையில் எனது வறுமையின் காலத்தில் புத்தகங்கள், விவாதங்களுடன் உணவையும் என்னுடன் பகிர்ந்து கொண்டவன். நான் விக்ரமாதித்யனை பற்றி சொல்லும் போது அவன் எனக்கு எம். அய்யப்பனை பற்றி சொல்லிக்கொண்டிருப்பான். நான் கணியாட்டத்தை பற்றி சொன்னால் அவன் தெய்யம் பற்றிஎனக்கு சொல்வான். இப்படி மலையாளத்தையும் தமிழையும் மாறிமாறி பரிமாறிக்கொள்வோம். இளமைக்கேயுரிய முதிர்ச்சியற்ற புரட்சி மனப்பான்மையுடன் பழமையான இஸ்லாமிய குடும்பமான தனது குடும்பத்திலும் ஊரிலும் பேசக்கூடாததை பேசி வாங்க கூடாத திட்டுகளை வாங்கி விட்டு விடுமுறை கழிந்து சென்னைக்கு வரும்போது அதையும் கதையாக சொல்லி சிரிப்பவன்.  இப்போது கேரள இளந்தலைமுறை கலைஞர்களில் ஒருவனாக அங்கீகரிப்பட்டு விட்டவன். முக்கியமான சினிமாவோ படைப்போ புத்தகமோ உடனே அதைப்பற்றி என்னுடன் பகிர்ந்து கொள்பவன்.
.
கல்லூரி நண்பர்கள் பாரதவிலாஸ் என்று கிண்டல் செய்யுமளவுக்கு இருந்தது எங்கள் அறை. காரணம் அறைவாசிகளில் ஒருவனான நண்பன் ஜெயபால் ஒரு கிறிஸ்தவன். இன்னொரு நண்பன் சமீர். மற்றொரு நண்பனான மணியும் நானும் இந்து. மத்ததால் தான் எங்களுக்குள் வேற்றுமை ஆனால் கையில் காசில்லாமலிருப்பதில், பட்டினி கிடப்பதில், இருக்கிற ஆடைகளை மாற்றி மாற்றிபோட்டுகொள்வதில் கனவுகள் காண்பதில் எங்களில் ஒற்றுமை இருந்தது. விடுமுறை கழிந்து கோயம்புத்தூரிலிருந்து வரும் சமீரின் பையில் “உம்மா” செய்து கொடுத்த சப்பாத்தியும் கறிக்குழம்பும் இருக்கும். சூடு செய்து ஒரு வாரம் உண்போம். சமீரின் தங்கை கல்யாணத்திற்கு கோவை சென்ற போது சாப்பிட்டு சாப்பிட்டு டயர்டாகியே எங்களை ரெஸ்டு எடுக்க வைப்பார்கள் அவன் வீட்டார்கள்.
.
இன்றும் எனது அலுவலகத்தில் இருக்கிற இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு உற்ற தோழர்களாகவும் வழிகாட்டிகளாகவும் என் பயணத்தில் உடன் வந்துகொண்டே இருக்கிறார்கள். இது தான் எனக்கு தெரிந்த ஒரு இந்துவினதும் இஸ்லாமியனதும் இந்திய வாழ்க்கை. ஆனால் கடந்த சில வருடங்களில் இவர்களுக்கிடையே மெல்ல மெல்ல அரசியல் காரணங்களால் உருவாக்கப்பட்டு கொண்டுருக்கிற கசப்புகளை கலைக்க, மத அடிப்படைவாதம் எளிய மக்களை குழப்பாமலிருக்க, நான் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன மத ஒற்றுமையை வலிந்து சொல்ல வேண்டி இருக்கிறது. அது சினிமாவாக இருந்தாலும் சரி, மற்ற கலைவடிவங்களாக இருந்தாலும் சரி. அதில் கலை அமைதி கெட்டு போனால் பரவாயில்லை. கலை அமைதியை விட சமூக அமைதியே எனக்கு முக்கியம்.
Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , .

மகரமஞ்ஞு! சினிமா விமர்சகர்கள்: ஒரு இன வரைவியல்.

6 Comments Add your own

 • 1. saravanan  |  April 23, 2012 at 7:33 am

  s santhosh am recalling my school days …in leave days i ll roaming with cpk viju.kannan,ashok,annish(ulli)..some days i met u also .u kno one day viju showed me one invitation black color with some eyes some kind of creative thinking image in that front page invitation that time he told me this is drawn by santhosh .i was surprised i asked u who is that after some days i met u ……………………thanks

 • 2. saravanan  |  April 23, 2012 at 7:37 am

  this article refers some fact but some of them doing some illegal activities thats affects all islamic friends. i Did my diploma in Noorul islam college. lot of friends r dir. In that circle some of the culprits doing some junk thinks so every onle ll blame all Muslims. Same thing happening in India also……………..

 • 3. ensanthosh  |  April 23, 2012 at 11:47 am

  🙂 yes! thank you da!

 • 4. ensanthosh  |  April 23, 2012 at 11:52 am

  yes! misunderstand have two sides also! we need aware of that! We opposed religious fundamentalism always in all aspects. Thats it!

 • 5. Manjoor Rasa  |  April 29, 2012 at 5:56 pm

  ஆம். உண்மை தான அரசியல் தான் ஊதி ஊதி மக்களை பிரிவினைப் படுத்திக்கொண்டிருக்கிறது.

 • 6. ensanthosh  |  April 29, 2012 at 11:02 pm

  ஆமாம் மஞ்ஞூர் ராசா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

April 2012
M T W T F S S
« Feb   May »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: