சினிமா விமர்சகர்கள்: ஒரு இன வரைவியல்.

April 27, 2012 at 11:31 pm 16 comments

தமிழ்நாட்டில் கவிஞர்கள், கலைமாமணிகளுக்கு பிறகு அதிகமாக வாழும் இனம் என்று சினிமா விமர்சகர்களை சொல்லலாம். அதிலும் உள்பிரிவுகள் உண்டு. அவை யாவன என்றால் படம் வெளியாகிற அன்றே சக பதிவர்களுடன் தியேட்டர்களுக்கு சென்று இண்டெர்வெல்லில் தம்மடித்துக்கொண்டே பாதிப்படத்துக்கு விமர்சனத்தை பேசியே ஆரம்ப்பித்து, வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு போனதும் முதல் வேலையாக பிளாகில் விமரசன்ம் போடுபவர்கள். எடிட்டர்களின் அழுத்தத்தின் காரணமாகவோ, தெரிந்த சினிமா நண்பர்களின் அழைப்பின் காரணமாகவோ படம் பார்த்து பஞ்ச் வைத்து வாத்தியார்கள் போல மார்க் போட்டு விமர்சனம் ரெடி பண்ணும் வார இதழ் பாத்திரிகையாளர்கள், இயக்குனரே யோசிக்காத ஆங்கிளில் யோசித்து 80களின் இலக்கிய சுளுக்கு மொழியில் தலைப்புகளிட்டு திரைவிமர்சனங்கள் எழுதும் சிறுபத்திகையாளர்கள், இவர்களுடன் தங்கள் தனிப்பட்ட பிரியங்களுக்காக இயக்குனர்களை ஹிட்ச்காக்குடனோ குரசோவாவனுடனோ ஒப்பிட்டு முடிசூட்டி கையில் செங்கோல் வழங்கும் இலக்கிய எழுத்தாளர்கள். தொலைக்காட்சி சேனல்களில் சொடக்கு போட்டு விமர்சனம் செய்பவ்ர்கள்.

1

முதல் வகை பிளாக் எழுத்தாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். இவர்களுடைய வாசகர்கள் கம்பெனி வேலை நேரத்தில் அவசரமாக சின்ன பசங்க செக்ஸ் புக் படிக்கிற மாதிரி  பிளாக் படிப்பவர்கள். அதனால் இவர்களது மொழியும் ஆக்‌ஷன் சினிமா மாதிரி அவசர வேகத்தில் ஒரு மஜாவாக இருக்கும். சினிமா விமர்சனம் என்று சொல்லி பெரும்பாலும் இவர்கள் கலாய்ப்பது கதையை தான் கடைசி இரண்டு பாராவில் கேமரா சூப்பர் (5Dயா 7Dயா) , ஹாரிஸ் கலக்கியிருக்கிறார், ஜீ.வியின் பின்னணி சொதப்பல் என்கிற மாதிரி சினிமாவின் தொழிநுட்பத்தையும் சைடிஷ் மாதிரி தொட்டு கொள்வார்கள். ஹிரோயின்களுடைய குளோசப் ஷாட்டையோ கிர்ரடிக்கும் ஒரு சினிமா ஸ்டில்லையோ பதிவுக்கு நடுவில் படமாக போட்டு படிப்பவர்களில் பல்சை ஆப்பிஸ் நேரத்திலேயே அசரடிப்பவர்கள்.

இவர்கள் தங்களுக்கு என்று நெருங்கிய ஒரு வாசக வட்டத்தை கொண்டிருப்பவர்கள். அந்த வாசகர்களும் தங்களுக்கென்று ஒரு பிளாக் வைத்திருக்கும் பதிவர்களாகவே இருப்பார்கள். ஆக ஒரு ம்யூட்சுவல் அண்ட்ர்ஸ்டேண்டிங்க் அடிப்படையில் இவர்களின் விமர்சனங்களுக்கு ஒரு கம்மெண்டை போட்டு உசுப்பேத்திவிட்டு விடுபவர்கள். “தல விமர்சனம் சூப்பர்” “இன்னைக்கு ஈவ்னிங் ஷோவுக்கு புக் பண்ணி இருந்தேன். உங்க விமர்சனத்த படிச்சா போகவா வேணாமான்னு குழப்பமா இருக்கு” ”தியேட்டர்ல நானும் இதையே தான் ஃபீல் பண்ணினேன்” என்கிற வகை மாதிரிகளில் அந்த கமெண்ட் இருக்கும்.

2

இரண்டாவது வகை வார இதழ் விமர்சகர்கள். நல்லதோ கெட்டதோ பெரும்பாலும் இவர்கள் பெயர் வெளியே தெரிவதே இல்லை. இவர்களின் கருத்துக்கள் இதழ்களின் கருத்துக்களாவே அறியப்படும். இவர்கள் சில சமயம் தனியாகவோ அல்லது கூட்டம் கூட்டமாகவோ விமர்சனங்கள் எழுதுவார்கள். இதழாசிரியர்களின் வீக்கெண்ட் பிரெஷ்ஷர் காரணமாக தனியாக திய்ட்டர் தியேட்டராக அலைந்து டிக்கெட் எடுத்து விமர்சனம் எழுதிவிட்டு வவுச்சருடன் டிக்கெட்டை பின் பண்ணி அக்கவுண்ட் மாமாக்களிடம் கொடுத்து பெட்டிகாஷ் வாங்கிகொள்ள்ளும் பாவப்பட்டவ்ர்களாகவும் சிலநேரங்களில் விமர்சனக்குழுக்களாக தியேட்டரில் பன்னும் பட்டர்ஜாமும் சாப்பிட்டு படம் பார்த்து கூடிப்பேசி குத்துமதிப்பாக மதிப்பெண் போட்டு விமர்சன விமோசனம் அடைபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் போடும் ஓகே, நன்று, மிகநன்றுவுக்காக இயக்குனர்களோ, தயாரிப்பு தரப்பு ஆட்களோ போன் போட்டு நன்றி சொல்லி ஆனந்தகண்ணீர் வடிப்பதும், இப்படி பண்ணிட்டீங்களே பாசு என்று ரத்தகண்ணீர் வடிப்பதும் சகஜம்.

நடிகைகளின் தொப்புள் படங்களை போட்டு வரிசைபடுத்தி புதிர்போட்டி வைக்கும் பக்கங்களுக்கு அடுத்தபக்கத்திலேயே இவர்கள் சினிமாவிமர்சனத்தில் கலாச்சாரம் பற்றி கவலைப்படுவதும், விரசமான காட்சிகளுக்கு விமர்சனக்குட்டு வைப்பதும் கறுப்புகாமெடி. இவர்களின் விமர்சனம் சினிமா ஹீரோக்களைப்போல ஒரு பஞ்ச் டயலாக்குடன் தான் முடியும். பெரும்பாலும் படத்தின் தலைப்பையே இந்த பஞ்ச்க்கு பயன்படுத்துவார்கள். மற்றபடி கேமரா பசுமை, இசை இனிமை என்று எதுகை மோனையில் எளக்காரம் காட்டுவார்கள்.

3

மூன்றாம் வகையினரான சிறுபத்திரிகை சினிமா விமர்சகர்கள் உலகசினிமாவை ஊறுகாயாய் தொட்டுக்கொள்ளும் சுத்த சினிவாசிகள். இவர்கள் பெரும்பாலும் பேராசிரியர்களாகவோ, இலக்கிய மரிக்கொழுந்துவாகவோ இருந்து தொலைப்பது இயக்குனர்களின் வரம் அல்லது சாபம். எடுத்த உடனேயே தார்கோஸ்வ்கியுடையதோ, கீஸ்லோஸ்கியுடையதோ ஒரு சினிமா பற்றிய ஒரு பொன்மொழியை பிள்ளையார்சுழியாகப்போட்டு விமர்சனத்தை ஆரம்பிப்பது இவர்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்துவரும் பழக்கம். மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதும்போது கூட பின்நவீனத்துவ கைப்பழக்கத்தில் குழப்பத் தலைப்புகளிட்டு கும்மியடிப்பது இவர்களின் கூட்டு நனவிலி மனோபாவம். அதில் கதாநாயகனின் மரணம் முதல் தயாரிப்பாளர்களின் மரணம் வரை கட்டுடைப்பு வேறு நிகழும். ஹீரோவின் விக், நாயகிகளின் கொலுசு, காமெடி நடிகர்களின் நக்கல் என்று எல்லா இடத்திலும் குறியீடுகளை தேடி அடைவார்கள்.  ஒவ்வொரு ஃப்ரேமுக்கு இடையிலும் இருக்கும் நுண்ணரசியலை சினிமா டூயட்டுகளில் வரும் ஹீரோக்களைப்போல தடவி தடவி கண்டுகொள்வார்கள். தங்கள் மார்க்சிய, ஃபிராய்டிச, கோப்பர்னிச இன்னபிற இசங்களின் ரசங்களை வைத்து பகுப்பாய்வு பரோட்டா வீசுவார்கள்.

பெரும்பாலும் இரானிய சினிமா எங்கேயோ போயிட்டுருக்கு கொரிய சினிமா கொல்லைக்கு போயிட்டுருக்கு இவனுங்க என்ன படம் எடுக்கிறானுங்க டைப் நெகடிவ் விமர்சங்கள் செய்வது இவர்கள் வழக்கம். சினிமா புரிந்த அளவுக்கு இவர்கள் விமர்சனம் புரியவில்லையே என்று வாசகனை வரட்டி எடுக்கும் மொழியே இவர்களின் தனிச்சிறப்பு. தமிழ்சினிமா இயக்குனர்கள் இலக்கியம் படிப்பதில்லை என்பதே இவர்களுடைய நெடுநாளைய விமர்சன மரபு. இந்த நிலமை இன்று கொஞ்சம் மாறத்துவங்கி இயக்குனர்களும் இலக்கியம் படிக்க ஆரம்பித்து இதழுக்கு ஆயுள் சந்தாவும் கட்ட ஆரம்பித்து விட்டதால் இவர்கள் விமர்சனத்தில் கரிசனத்தின் சிறு நிழல்களும் படிய ஆரம்பித்து விட்டது புதிய மரபு.

4

இவர்கள் மூன்றாம் வகை விமர்சகளாக இருந்து பரிணாம விதியின் அடிப்படையில் நான்காம் இடத்திற்கு வந்தவர்கள். பெரும்பாலும் இலக்கிய ஆளுமைகள் என்று அறியப்படுபவர்கள். இவர்கள் இன்று எண்ணிக்கையில் பரவலாக காணாப்படாவிட்டாலும் காட்டில் புலிகள் குறைவானாலும் கெத்துக்கு குறைவிருக்காது என்ற வகைப்பாட்டில் அடங்குபவர்கள். விமர்சனங்களின் வழியே இயக்குனர்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கும் இலக்கிய இணைவேந்தர்கள். இயக்குனர்கள் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் உலகப்படமாகவும் இயக்குனர்களுடன் மனஸ்தாபம் வந்து விட்டால் உள்ளூர் குப்பைகளாகவும் தெரியும் மப்பு மாலைக்கண் இவர்களிடையே பரவலாக காணப்படும் ஒன்று. ஒலக அழகிகளையே அறிமுகப்படுதும் இயக்குனர்களுக்கு ஒலகசினிமாவையே அறிமுகப்படுத்தும் உயரிய இடத்தில் இருப்பவர்கள். இவர்கள் இன்று சினிமாவை விமர்சிப்பவர்கள் என்கிற நிலையைதாண்டி சினிமாவில் எந்த பஜாரில் எந்த டிவிடி கிடைக்கும், இந்த சீனுக்கு எந்த படத்தில் உருவலாம், என்கிற மாதிரியான குழுவிவாதங்களில் பங்கெடுப்பவர்களாகவும், கும்மாங்குத்து ஹீரோக்களுக்கு பஞ்ச் டயலாக் பற்றவைப்பவர்களாகவும், குத்துப்பாட்டிற்கு குரூப் டான்ஸ் ஆடுபவர்களாகவும் டார்வினின் பரிணாமவிதிகளுக்கே பம்பரம் சுழற்றுபவ்ர்கள்.

5

தமிழுக்கு தொலைக்காட்சி வந்தபோதே சினிமா விமர்சனம் செய்கிறவர்கள் கால்மேல் கால் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையை விதியை அசைக்காமல் பின்பற்றுபவ்ர்கள். சிலர் நடந்து கொண்டோ தவழ்ந்துகொண்டோ கூட விமர்சனம் செய்வது உண்டு. இடையிடையே இங்கிலீஷ் பேசி பயம் காட்டுவது இவர்கள் இயல்பு. சினிமாக்காரர்கள் நம்பி கொடுத்த கிளிப்பிங்ஸ்களையே போட்டு முழுசினிமாவையும் காட்டி பார்வையாளர்களை தியேட்டர் பக்கமே போகவிடாமல் செய்துவிடும் காமெடிடிராஜடிகளும் உண்டு. சினிமாக்காரர்கலை அதட்டுவது போலவோ மிரட்டுவதுபோலவோ பாவ்னையில் பேசுவதும் இவர்கள் வழக்கம். கத்திரிக்காய் எடைபோடுவது போல சினிமாவை எடை போடுவதும், சினிமாக்களை ஒண்ணாப்பு படிக்கும் குழந்தைகள் போல ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி மொக்க சினிமாக்களை பத்தாமிடத்திலும் மரணமொக்கைகளை முதலிடத்திலும் வைப்பது இவர்களது விமர்சன அரசியல்.

பின்குறிப்பு: இது அவசரகோலத்தில் எடுத்த ஒரு சர்வே. முழுமையானது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதையே தீஸிஸாக எடுத்து யாரேனும் மானுடவியல் நோக்கில்  முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்வதாக இருந்தால் இந்த கட்டுரையை தாராளமாக பயன்படுத்திகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , , .

ஆதாமின்றே மகனும் சந்தோஷும்! ஆன்டி கிரிக்கெட்!

16 Comments Add your own

 • 1. ramji_yahoo  |  April 28, 2012 at 9:21 am

  என்னதான் தீர்வு
  ஒரு நல்ல (சார்பற்ற) சினிமா விமர்சகர் எவ்வாறு இருக்க வேண்டும்

  நீங்கள் (& நான்) விரும்பும் ஒரு கனவு சினிமா விமர்சகர் உருவாக நாம் என்ன செய்ய வேண்டும்

 • 2. ensanthosh  |  April 28, 2012 at 11:29 am

  ராம்ஜி.
  இதற்கு தீர்வென்று எதுவும் இல்லை. நான் எழுதி இருக்கும் சினிமா விமர்சகர்கள்,( பதிவர்கள் முதல் சிறுபத்திரிகை விமர்சகர்கள் வரை )பெரும்பாலும் எனது நண்பர்கள். அவர்களது அனுபவங்கள். சினிமாவே மொக்கையாக இருக்கும் போது விமர்சனம் அதைவிட மொக்கையாக இருக்கிறது சில நேரங்களில். அதை நேரடியாகவே கலாய்த்துகொள்வோம். அதையே ஜாலியாக ஒரு பதிவாக போட்டேன். மற்றபடி சினிமா விமர்சனம் என்பது தமிழில் வளர்ந்து வரும் ஒரு துறை. அது நிறை குறைகளொடு தான் இருக்கும் என்பது எனக்கு தெரியும். அந்த வகையில் தொடர்ந்து சினிமா விமர்சனங்கள் தேவை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

 • 3. abi  |  April 28, 2012 at 4:32 pm

  hehehhe:ஒலக அழகிகளையே அறிமுகப்படுதும் இயக்குனர்களுக்கு ஒலகசினிமாவையே அறிமுகப்படுத்தும் உயரிய இடத்தில் இருப்பவர்கள். இவர்கள் இன்று சினிமாவை விமர்சிப்பவர்கள் என்கிற நிலையைதாண்டி சினிமாவில் எந்த பஜாரில் எந்த டிவிடி கிடைக்கும், இந்த சீனுக்கு எந்த படத்தில் உருவலாம், என்கிற மாதிரியான குழுவிவாதங்களில் பங்கெடுப்பவர்களாகவும், கும்மாங்குத்து ஹீரோக்களுக்கு பஞ்ச் டயலாக் பற்றவைப்பவர்களாகவும், குத்துப்பாட்டிற்கு குரூப் டான்ஸ் ஆடுபவர்களாகவும் டார்வினின் பரிணாமவிதிகளுக்கே
  )

 • 4. ramji_yahoo  |  April 28, 2012 at 9:34 pm

  சந்தோஷ்
  பிரச்னை (நோய்) இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர் ( அறிவோம்)

  தீர்வை நோக்கி செல்லாமல்

  பிரச்சனையை மட்டும் எழுதுவது, ஒருநாள் இன்பத்திற்கும்/ ஹிட்டிர்க்கும் மட்டுமே உதவும் .

 • 5. ensanthosh  |  April 29, 2012 at 2:09 am

  ராம்ஜி சார்

  பிரச்சினை(நோய்) இருக்கிறது என்பதை மட்டுமே நான் இப்போதைக்கு சொல்லலாம் என்று நினைத்தேன். பிளட் டெஸ்ட் எக்ஸ்ரே எல்லாம் எடுக்கிற லேப் மாதிரி. டாக்டர்கள் பிற்காலத்தில் வந்து ஆப்ரேஷன் பண்ணி சக்சஸ் பண்ணுவார்கள். நான் டாக்டர் இல்லை. லேப் டெக்னீஷியன். 🙂

 • 6. நரேஷ்  |  April 30, 2012 at 11:50 am

  பதிவு மிக நன்று! கலாய்த்தல் திணை இருந்தாலும், உருப்படியாக யாருமே இல்லையா என்று தோன்றினாலும், சமயங்களில் ஓவர் லாஜிக் கூட ஒடம்புக்கு ஆகாது என்பதால் மிக ரசித்தேன்… வாழ்த்துக்கள்!

 • 7. ensanthosh  |  April 30, 2012 at 12:57 pm

  Thank you naresh

 • 8. Rajesh Da Scorp  |  April 30, 2012 at 5:11 pm

  ரொம்ப நல்லா இருக்கு. நீங்க இங்க கேடகரைஸ் பண்ணியிருக்கும் இந்த வகைகளை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இது நகைச்சுவையான கட்டுரை என்பதால், இதிலுள்ள பல கருத்துகளை சீரியஸாக எண்ணிப் பார்க்காமல் இருந்துவிடக்கூடாது. என்னளவில், முதல்வகையில் விளக்கப்பட்டிருக்கும் பல விஷயங்களை நானும் எண்ணிப் பார்த்திருக்கிறேன் (பதிவர் கும்பல், தம்மடித்துக்கொண்டு படம் பார்த்து அதை வீட்டுக்கு வந்தவுடன் அவசரமாக டைப் செய்து பதிவிடுவது). அதேபோல், வார இதழ் விமர்சனங்கள். இந்த இரண்டு வகை விமர்சனங்களுக்கும் ஒரு பக்கா டெம்ப்ளேட் இருக்கிறது. பல உதாரணங்கள் கொடுக்க இயலும் 🙂

  நானும் ஒரு மொக்கை விமர்சகர் என்ற முறையில், என் பாயின்ட் என்னவாக இருக்கும் என்றால், தமிழில் இப்போது வெளிவரும் நூறு படங்களில், 90 படங்களுக்கு விமர்சனம் எழுதவே தேவையில்லை. அது எனர்ஜி வேஸ்ட். மிகச்சில படங்களே பார்க்கும் ஆடியன்ஸைக் கவர்வதாக அமைகின்றன. ஆகவே, அந்தப் படங்களைப் பற்றி விபரமாக எழுதுவது ஒரு ப்ளாக் வைத்திருக்கும் விமர்சகனின் கடமையாக அமையக்கூடும். இதில், சும்மா ஜாலிக்காவ விமர்சனம் எழுதுவது, சார்புநிலையோடு எழுதுவது போன்ற பல துணைப்பிரிவுகள் வேறு இருக்கின்றன 🙂 ..

 • 9. ensanthosh  |  April 30, 2012 at 5:40 pm

  நன்றி ராஜேஷ்,

  நண்பர்கள் தமிழ் சினிமா விமர்சனம் மேலும் மெருகேற என்ன செய்யலாம் என்பதையே ஒரு விவாதமாக்கலாமென்று மெயிலினார்கள். உங்கள் திரை விமர்சன‌ங்கள் கூட முக்கியமான ஒன்றாக எனக்கு படுகிறது. போகிற போக்கில் நானும் ஒரு பிளாக் வைத்திருக்கிறேன் நானும் சினிமா விமர்சனம் எழுதுவேன் என்ற டைப்பில் இல்லாமல் தீவிரமான சினிமா காதலுடன் அதே சமயம் அதிபுத்திஜீவிதனத்தை காட்டாமல் ஏராளமான தகவல்களுடன் நீங்கள் எழுதுவதை தான் சொல்கிறேன். நண்பர்கள் சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். நீங்களும் மெலும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டால் ஒரு தொகுப்பாக அதை பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இது முதலில் தமிழில் சினிமா விமர்சனங்கள் வளரவும் அதன் மூலம் தமிழ் சினிமாவுக்கான வளர்சச்ிக்கும் பங்காற்றினால் நம்மை போன்ற சினிமா காதலர்களுக்கு நல்லது தானே!

  அன்புடன்
  சந்தோஷ்

 • 10. Vijayakumar Ramdoss  |  April 30, 2012 at 6:59 pm

  நன்றாக எழுதப்பட பதிவு, வெகுநாளா எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்

 • 11. abilashchandran  |  May 3, 2012 at 12:11 pm

  சூப்பர்!

 • 12. ensanthosh  |  May 3, 2012 at 12:19 pm

  நன்றி அபிலாஷ்!

 • 13. Saravana Kumar Perumal  |  May 3, 2012 at 7:13 pm

  பி.ஆர்.மகாதேவன் எனும் ஒரு வகையை இதில் சேர்த்து கொள்ளாதது குறித்து என் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

 • 14. ensanthosh  |  May 3, 2012 at 8:18 pm

  திரைக்கதைகளை பட்டி பாத்து டிங்கரிங் பண்ணுவாரே அவரா? 🙂

 • 15. ilangokrishnan  |  May 4, 2012 at 7:29 pm

  அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டேயிருந்தேன்.. நல்ல பதிவு. வாழ்த்துகள்

 • 16. ensanthosh  |  May 4, 2012 at 11:05 pm

  நன்றி இளங்கோ 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

April 2012
M T W T F S S
« Feb   May »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: