மால்தூசியனின் கதை

tamil advertising

பழமையின் பிடியில் இருந்த உலகை அரசாங்கன் என்பவன் மீட்டு கடந்த சில நூறாண்டுகளாக ஆட்சி செய்துவருகிறான். அவனுடைய அரசாளுகையில் பிரதிநிதிகள் மாறினாலும் திட்டங்களும் தீர்மாங்களும் எப்போதும் மாறுவதில்லை. ஓலைச்சீட்டு முறையில் குடத்தை குலுக்கி பொதுஜனங்கள் என்று அழைக்கப்படுகிற அப்பாவி மக்களால் அவனின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தேர்தலுக்குப்பிற‌கு அந்த ஓலைச்சீட்டுகள் குப்பையில் கொட்டப்படுவது போல அம்மக்களும் கண்டுகொள்ள‌ப்பட மாட்டார்கள்.

அரசாங்கனின் ஆட்சி எப்போதும் ஜனநாயகப்போர்வை போர்த்திய பணக்காரர்களுக்கான ஆட்சி தான். மக்கள் என்பது எப்போதும் நாட்டின் உற்பத்தியைப்பெருக்க உபயோகப்படும் ஆட்டுமந்தைகள் என்பதே அரசாங்கனின் தத்துவம். மால்தூஸ் என்பவரால் கட்ந்த நூற்றாண்டிடில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்ட தத்துவம் தான் அது.

குறிப்பாக மால்தூசியனின் தத்துவப்பிரகாரம் உற்பத்தியை பெருக்கப்பயன்படும் மக்கள் என்கிற உழைப்புக்கூட்டம் பெருகி அந்த உற்பத்தியில் பெரும் பங்கை தாங்களே நுகர்ந்துகொள்ளும் போது நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். அந்நேரங்களில் அந்த மக்களின் பெருக்கத்தை எண்ணிக்கையை குறைக்க அரசாங்கன் ஆவன செய்ய வேண்டும். அதன்படியாக அவன் மக்கள் கூட்டத்தை குறைக்க என்ன செய்யவேண்டும் என்று தன் பிரதிநிதிகளுடன் கலந்து உரையாடினான்.பள்ளிகளில் மால்தூஸ் போன்றவர்களின் தத்துவங்களை படித்து வந்த அவன் பிரதிநிதிகளும் அமைச்சர் பெருமக்களும் அதற்கான வழிகளை மால்தூஸிடமே கண்டுகொண்டார்கள்.

நேரடியாக மக்களை கொன்று குவித்து விட்டால் ஹிட்லரை விட கொடூரமானவன் என்று அரசாங்கனை சொல்லி விடுவார்கள். ஆகவே பற்பல திட்டங்களை வகுத்தார்கள். பெண்குழந்தைகளின் பெருக்கம் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் ஆகவே பெண்குழந்தைகளின் பிறப்பை கட்டுபடுத்த வேண்டும் என்பதை முதலில் அவர்கள் கண்டுகொண்டார்கள். ஆன்குழந்தைகள் அதிகரித்தால் அவர்களின் உழைப்பால் உற்பத்தி பெருகி நாட்டின் முன்னேற்றம் விரைவாக வளரும் என்பது இன்னொரு கண்டுபிடிப்பு.

ஆகவே அவர்கள் பெண்சிசுக்களை அழிக்கவும், கொலை செய்யவும் அரசாங்க மருத்துவமனைகள் வழியாக திட்டங்களை தயாரித்தனர். சிறப்பு மருத்துவர்களை அதற்கு பயன்படுத்தினர். பெண்சிசுக்களை கொல்ல மறைமுகமாக பெற்றோர்களை வற்புறுத்தினர். அதற்கு பொருளதாரக்காரணங்களை கற்பித்தனர். பெற்றோர்களும் சதி அறியாமல் சம்மதித்தனர். அதற்குரிய தொழில்நுட்பக்கருவிகளை உற்பத்தி செய்த தனியார் நிறுவங்கள் மென்மேலும் லாபம் சம்பாதித்து திளைத்தன. மெல்ல மெல்ல இது பரவி இன்று வளர்ந்து கோண்டு இருக்கிரது. அரசாங்கன் இப்போது தனது நேரடிப்பங்களிப்பை வெளியில் நிறுத்தி கொண்டாலும். பெண்சிசு கொலைகளுளுக்கு எதிராக தன்னை காட்டி கொள்ளும் வேஷமணிந்தாலும் தனியார் மருத்துவர்கள் அதை தொடர மறைமுக ஆதரவும் அளித்து வருகிறார். இதற்குப்பின்னால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், மருத்துவ உபகரணக்கள் தயாரிப்பவர்களின் லாபவெறி இன்று இதை நடத்திச்செல்கிறது.

மெல்லக்கொல்லும் மதுக்கடைகளை பெருகச்செய்வது இன்னொரு வழி. அதன் மூலம் ஆடவர்கள் ஆண்மை இழப்பு, மெல்ல நெருங்கும் மரணம் வாயிலாக ஜனத்தொகையை கட்டுக்குள் கொண்டுவருவது மால்தூசியனின் மற்றொரு குறிப்பு. இதுவும் அரசாங்கனின் ஆட்சியில் மறைமுகாமாக செயல்படுத்தப்பட்டு வருவது உண்மை. புகைப்பழக்கம், போதைப்பழக்கம், மற்ற வழிகளில் ஆடவர்களிண் எண்ணிக்கையை குறைப்பதும் அரசாங்கனின் முன்னுள்ள சவால்.

அடுத்த கட்டமாக நோய்களை பரப்புவது. இதற்கு பல்வேறு வகையான தடுப்பூசிகளின் பெயரில் குழந்தைகளின் உடலில் கிருமிகளை செலுத்துவது முக்கியமான வழியாகும். பிற வழிகளிலும் எவ்வாறு இதனை செயல்படுத்தலாம் என்பதை ஆராய அரசாங்கன் பல கோடிகளை செலவழித்து படித்தவர்களை வைத்து மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்.

போர்கள் இனப்படுகொலைகளை தூன்டுவது வழியாக மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது ஆக்ச்சிறந்த கடைசி வழிமுறை. இதுவும் பல தடவைகள் பரிசீலிக்கப்படு வரும் ஒன்று.

இவை தவிர திருமணங்களை தள்ளிப்போடும் மனநிலையை உருவாக்குவது. இன்று பலர் திருமண வாழ்கையை பொருளாதாரத்தின், வாழ்கைமுறையின் காரணமாக தள்ளிப்போடுவதாக தாங்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது மறைமுகமாக அரசாங்கனின் அஜென்டா என்பதும். அவர்கள் பலியாடுகள் என்பதும் அவர்கள் அறிவது இல்லை.

பணக்கார வர்க்கம் அனுபவித்து முடிக்கிற தொழில்நுட்பங்கள் உண்டுமுடித்த எச்சில் மாதிரி கீழ்வர்க்கத்திடம் கடத்தப்படும். உதாரணம் பைக், செல்பேசி போன்றவை. கீழ்வர்க்கம் பைக்கில் போகும் காலகட்டத்தை அடையும் போது மேல்வர்க்கம் பென்ஸ் காரில் சென்று கொண்டிருக்கும். ஆனால் நம்ம கீழ் வர்கத்தை சேர்ந்தவனோ நம்ம தாத்தா நடந்து போனாரு அப்பா சைக்கிள் வச்சிருந்தாரு நாம இன்னைக்கு பைக் வச்சிருக்கோம் என்று பெருமையாக நினைத்துகொண்டு காலத்தை ஓட்டும். பணக்கார வர்க்கம் சுபிக்ஷ்மாம வாழவேண்டும். அதற்கு உற்பத்திகளை செய்ய மட்டுமே மக்கள் கூட்டம்.
அதையும் கட்டுக்குள் வைக்க இந்த மறைமுகத் திட்டங்கள் என்று அரசாங்கன் தன் ஜனநாயக ஆட்சியை உலகம் முழுவதும் நன்றாகத்தான் நடத்திக்கொண்டிருக்கிறான்.

வேட்டி கட்டியவன் வெளியே போ!

tamil advertising

”சந்தோஷ் இன்னைக்கு பொறந்த நாளா” “கோவிலுக்கு போய்ட்டு வந்தீங்களா. வீட்ல எதனாச்சும் விஷேசமா” இடுப்புக்கு கீழே ஜீன்சுக்குபதிலாக இன்று வேட்டியை கண்டுவிட்ட சகபாடிகளின் விசாரணை இது. ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் வேட்டி அணிந்த வேளையாள். என்னே காலக்கொடுமை.

காலையில் பீரோவை ஆய்ந்த போது மடித்து வைத்திருந்த வேட்டி கட்டிக்கோ என்றது. ஆப்பிஸாவது கீப்பீசாவது கட்டுறா வேட்டிய என்று ஆழ் மனதிலுருந்து ஒரு ஆதிகிழவன் குரல். பிம்பத்தை பார்த்தபோது நல்லாதான் இருக்கு என்றது கண்ணாடி. அப்புறமென்ன சின்னகவுண்டர் விஜயகாந்த கணக்கா ஆப்பிஸில் என்ட்ரி கொடுத்து விட்டேன். அதற்கு தான் மேற்கண்ட கேள்விகள். சந்தேகங்கள்.விசாரணைகள்.
.
சரத்குமாரிலிருந்து மம்மூடி மோகன்லால் வரைக்கும் வேட்டிக்கு வக்காலத்து வாங்கினாலும் நம் தமிழிளங்குடிகள் கண்டுகொள்வதாக இல்லை. வீட்டுவிஷேசங்களுக்கான ’அக்கேஷனல்’ உடை மட்டுமே என்று வேட்டியின் மகிமையை ஓரம்கட்டி விட்டு அடிக்கிற வெயிலுக்கு அண்டர்வேரும் ஜீன்சும் அணிந்து அரிக்கிற தொடையை சொறிந்த கொள்ள வாகில்லாமல் அல்லல் படுகிறது இளையசமுதாயம்.
.
“மச்சான் பேண்ட் தாண்டா வண்டி ஓட்ட வசதி” என்கிறான் ஒருத்தன் ஏதோ இருபத்துநாலு மணிநேரமும் வண்டியிலேயே வாழ்கையை ஓட்டுற மாதிரி. எப்போதும் வண்டியிலேயே வயித்துப்பாடு பாக்குற மெடிக்கல் ரெப்ர்சண்டேட்டிவுகளுக்கும் மார்கெட்டிங் டார்கெட்டிங்குகளுக்கும் இந்த லாஜிக் ஒர்க் அவுட் ஆகலாம். மடிச்சு கட்டுன வேட்டியோட பட்டாபட்டி டிரவுசர் தெரிய முட்டிக்கு கீழ முழுசா காத்து வாங்க எத்தனையோ கிராமத்து மைனர்கள் சினிமாவுல வண்டி ஓட்டுறத பார்க்கும் போது இந்த லாஜிக்கும் லோஜிக்கா தான் தெரியுது.
.
“வசதியா இருக்காதுன்னு”ன்னு வக்காலத்து வாங்குறான் இன்னொருத்தன். அவசரமா ஆய் போறதுக்கு பெல்டை கழற்றி பேண்டை அவுக்குறத விட இழுத்து இடுப்புல சொருகிக்கிற வேட்டி வசதியானது இல்லையா. “இந்திரிய”த்தை இறுக்குற ஜீன்சை விட இடுப்பு வரைக்கும் காத்தாடுற வேட்டி நம்ம வெக்கைக்கு வசதியானது இல்லையா.
.
குளிருக்கு நல்லதுன்னு கூடாரம் அடிக்குற துணியில ஜீன்ஸ் தச்சிருக்கான் வெளிநாட்டான். பற்றி எரியுற வெயிலுக்கு பருத்தியாடையே நல்லதுன்னு வேட்டியை தந்துட்டு போயிருக்கான் நம்ம பாட்டன். பருவமும் தெரியாம பண்பாடும் தெரியாம போட்டுகிட்டு திரியிறான் அவன் பேரன்.
.
பேண்ட் காலனியாக்கத்தின் எச்சம் உலகமயமாக்கலின் உச்சம்னு பட்டிமன்றத்துல பாடம் எடுக்கிறாங்க. எதுகை மோனைக்கு சிரிச்சுபோட்டு எந்திருச்சு போயிடுறாங்க சனங்க. ஆயிரம் கொற சொன்னாலும் அரசியல்வாதிக கிட்ட பிடிச்ச ஒரே விஷயம் இந்த வேட்டிய இன்னும் விட்டுகொடுக்காம் இருக்கிறது தான்.
.
முழுசா கட்டினா ஒரு அழகு முட்டி வரைக்கும் மடிச்சுகட்டினா மறு அழகு. கேரளத்து சேட்டன்கள் இன்னும் கேம்பசில் கூட வேட்டி கட்டுகிறார்கள். தமிழன் தான் தாழ்வுமனப்பான்மையில் வேட்டிக்கு விடை கொடுத்து விட்டானா. ஆண்ட பரம்பரையின் அடையாளம் வேட்டி என்று அரசியல் ரீதியாக புறக்கணித்து விட்டானா.
.
வேட்டி கட்டியவரை வெளியேறச்சொன்னதாம் ஒரு வெள்ளைகாரன் ஆரம்பித்த கிளப். முதல்ல வேட்டியின் தேசத்திலிருந்து அவனை வெளியேற சொல்லணும். நண்பர்களே வேட்டிக்கு எதிரான மனநிலைக்கு வேட்டு வைப்போம். வேட்டி நமது பண்பாடு என்று மனதிற்குள் போட்டு வைப்போம்.

நீங்க தான் நாடகத்தின் கேரக்டர்!

tamil advertising

நண்பர்கள் அண்ணாமலையும், சாம்பமூர்த்தியும் சேர்ந்து ”ஓஹோ புரொடக்‌ஷன்ஸ்” என்கிற பெயரில் ஒரு தியேட்டர் குரூப் ஆரம்பிச்சிருக்காங்க. அவர்களின் முதல் நாடகம் பிம்பங்கள் (Reflections) கடந்த மாதம் பெசண்ட்நகர் ஸ்பேசஸ் அரங்கத்தில் நிகழ்த்தினார்கள்.

அண்ணாமலை அட்வெர்டைசிங் அண்ட் மார்கெட்டிங் படிப்பை அஹமதாபதில் முடித்தவர். நாடகம் மேல் கொண்ட ஆர்வத்தால் விளம்பரநிறுவனத்தில் பார்த்த வேலையை உதறிவிட்டு முழுநேர நாடகக்காரனாய் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஞானியின் பரீக்‌ஷாவில் பயிற்சி பெற்றவர்.
சாம்பமூர்த்தி அடிப்படையில் கணிணிஅறிவியல் மாணவர். இவரையும் நாடக உலகம் திசைதிருப்பியதால் இப்போது முழுநேர நாடகக்காரர். ஏற்கனவே ’ஈவம்’ போன்ற குழுக்களில் பங்காற்றியவர்.
நண்பர்கள் உதவியுடன் தங்கள் முதல் நாடகத்தை அரங்கேற்றினார்கள். இவர்கள் இருவரும் பல்வேறு பாத்திரங்களாய் உருமாறி நடித்திருந்த பிம்பங்கள் நாடகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. காரணம் நவீன நாடகங்களுக்குரிய எந்த “கிளிஷே”க்களும் இல்லாமல் நேரடியாக மக்களிடம் அவர்கள் பிரச்சினைகளை பற்றி நையாண்டியுடன் காட்சிப்படுத்தியது தான். தமிழும் ஆங்கிலமும் கலந்த தங்கிலீஷ் தான் இவர்களது மொழி.
அரூப நவீன நாடகங்கள் கண்டுகொள்ள தவறும் தற்கால சமூக, அரசியல், தனிமனித நிகழ்வுகளை நுட்பமான விமர்சன கிண்டலுடன் பார்வையாளருக்கு புரியும்படியாகவும், புன்னகைக்கும் படியாகவும் வெளிப்படுத்தியது இந்நாடகத்தின் ஸ்பெஷல் என்று சொல்வேன்.
இந்நாடகத்தின் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாத்திரத்துடன் பார்வையாளர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். இதுவே இந்நாடகத்தின் வெற்றி.
முதல் நிகழ்வு பெற்ற வரவேற்பின் காரணமாக இந்நாடகத்தை மறுபடியும் புதிய சேர்க்கைகளொடு நிகழ்த்த இருக்கிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் தவற விட வேண்டாம். அழகான ஸ்பேசஸ் அரங்கத்தில் இந்நிகழ்வை காண்பது நல்ல அனுபவம்.
மே மாதம் 13ம் தேதி, ஞாயிறுமாலை, பெசன்ட் நகர் பீச் அருகிலுள்ள ஸ்பேசஸ்ல் நடக்க இருக்கிறது. நண்பர்கள் வருக.
கட்ந்த நிகழ்வின் பார்வையாளர்கள் எதிர்வினை
ஓஹோவின் முக நூல் பக்கம்

ஆன்டி கிரிக்கெட்!

tamil advertising
எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. இதனால் கிரிக்கெட்டுக்கு ஒண்ணுமில்ல எனக்குதான் கஷ்டம். பராக்கு பார்த்துகொண்டு பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது, பேருந்தில் போகும் போது, ஒண்ணுக்கடிக்க டாய்லெட் போகும் போது, டீக்கடைக்கு ரிலாக்சாக டீயடிக்கப்போகும்போது,  ‘ஸ்கோர் என்ன பாஸ்’ என்று கேட்பவர்களிடம் ‘தெரியல பாஸ்’ என்றால் ஏதோ நியாண்டர்தால் மனிதனைப்பார்த்து விட்டது போல பார்ப்பார்கள்.
.
”கிரிக்கெட் பார்க்கறதில்லை. ஒன்லி ஃபுட்பால் தான்” என்று கிடைக்கிற கேப்பில் கோலடிக்கவும் முடியல. ஏன்னா ரூனிக்கு ரொனால்டினோ சித்தப்பாவான்னு கேக்குற அளவுக்குதான் கால்பந்து ஞானமும்.
.
அக்காக்கள் ஆடும் பாறைகளிக்கு, சின்னண்ணன்களின் தள்ளும்புள்ளும் (இது விளவங்கோடு தமிழ்) விளையாட்டுக்கு, பெரியண்ணன்கள் ஆடும் கபடிக்கு சின்ன வயசிலிருந்தே பார்வையாளனாகப் பழக்கப்பட்டவன் தான் நான். ஆனாலும் இந்த டி.வி முன்னால் உட்காந்து கிரிக்கெட் பாக்கச்சொன்னால் பாகற்காயை பல்லில் கடித்தமாதிரி இருக்கிறது. இந்த உளவியலின் உள்ளர்த்தம் என்ன.
.
மண்ணை ஊதி ஊதி மறைத்துவைத்த இலையை கண்டதும் ஆளாளுக்கு விரட்டிபிடித்து விளையாடும் மரம்தொட்டுகளி, உப்பிற்கு போகும் வழியேது என்று கண்ணைக்கட்டி ரப்பர் சருகுகளில் காலுரச நடக்கும் கண்கட்டிகளி, காலிடுக்கு வழியாக விட்டெறிந்த கம்பை எடுத்து விட்டு ஓடிவரும் முன்பே மரத்தில் வானரங்களாகி கிளைவிட்டு தாவும் மரக்கொரங்கு, ஒற்றைக்காலிலே ஊரை அளக்கும் கிளியாந்தட்டு, சாக்குட்டான், சாத்தியாம்புறம், முறுமுட்டி, நாக்கோணி, ஐத்துக்கோணி, ஆரஞ்ச், கீலேஸ் என்று புரியாத மொழியில் புள்ளடிக்கும் தள்ளும்புள்ளும், கயிற்றை சுழற்றி எதிராளிக்கு மணடையில் ஆக்கர் வைக்கும் பம்பரம், முஷ்டியை மடக்கி வீராப்பாக முட்டு வாங்கும் கச்சி களி, விழுந்து விழுந்தே விழுப்புண்கள் பெறும் கபடியாட்டம் என்று எத்தனையோ விளையாட்டுகளை எகத்தாளமாய் ஆடிய பரம்பரை தானே நம்மளது. ஏன் இந்த கிரிக்கெட்டை கண்டால் மட்டும் பேட்ஸ்மேனை விட வேகமாக ஓடித்தள்ளுகிறேன்.
.
இதிலும் அப்பவெல்லாம் எங்களுரில் ஊருக்கு ஒரு வீட்டில் தான் டி.வி இருக்கும். பெரும்பாலும் அந்த வீட்டுகாரர் இராணுவத்திலிருப்பார். வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும், ஞாயிற்றுகிழமை மாலை தமிழ்ப்படம் என்றால், வீடு உணமையிலேயே ஹவுஸ்ஃபுல்லாகும். அதிலும் பெரும்பாலும் பெண்பிள்ளைகளுக்குத்தான் வீட்டுக்குள் அனுமதி. ஆண்பிள்ளைகள் ஜன்னல் கம்பிக்குள் தலையை விட்டு கொண்டோ முற்றத்து வேப்பமரத்தில் தொங்கிக் கொண்டோ தான் அந்த பிளாக் அண்ட் வொயிட் டீவியில் படம் பாக்கணும். அதிலும் டீவிக்கு, ஸ்வெட்டர் போட்டமாதிரி ஒரு அங்கியோ, பொட்டிக்கடைக்கு ஷட்டர் போட்ட மாதிரி ஒரு மரப்பலகை மூடியோ போட்டிருப்பார்கள். என்றாவது கிரிக்கெட் போட்டால் முற்றம் வரை நிறைந்து நின்று எட்டிப்பார்க்கும் மக்கள் கூட்டம். நானும் என்ன தான் பாக்கிறனுங்கண்ணு சிலநாள் எட்டிப்பார்ப்பேன்.
.
ஒருத்தன் பந்தை சாவகாசமாய் பெப்சியோ கோக்கோ வழியும் எச்சில் தொட்டு, ஏதோ மல்டிநேஷனல் பிராண்டிங் பதித்த தன் பேண்ட் தொடையில் தேய்த்துகொண்டு ஓடியாந்து எறிய, மூன்று குச்சிகளுக்கு முன்னால் நிற்பவன் குச்சியை காக்கும் பொருட்டு மட்டையை காற்றில் சுழற்றி பந்தை அடிக்க, அதன் பின்னால் ஒருத்தன் ஓட அது சிக்ஸரோ பவுண்டரியோ போகும்மென்று சுற்றியிருக்கும் மக்கள் கூட்டம் கையில் பீப்பியுடன் கத்த, மறுபடியும் ஒருத்தன் பந்தை சாவகாசமாய் பெப்சியோ கோக்கோ வழியும் எச்சில் தொட்டு, ஏதோ மல்டிநேஷனல் பிராண்டிங் பதித்த தன் பேண்ட் தொடையில் தேய்த்துகொண்டு ஓடியாந்து எறிய, மூன்று குச்சிகளுக்கு முன்னால் நிற்பவன் குச்சியை காக்கும் பொருட்டு மட்டையை காற்றில் சுழற்றி பந்தை அடிக்க, அதன் பின்னால் ஒருத்தன் ஓட அது சிக்ஸரோ பவுண்டரியோ போகும்மென்று சுற்றியிருக்கும் மக்கள் கூட்டம் கையில் பீப்பியுடன் கத்த, இதை ரெண்டு தடவை படிக்கும் போதே உங்களுக்கு மண்டைகாயுதே திரும்ப திரும்ப பார்க்க எனக்கு எப்படி இருக்கும்.
.
பிற்காலத்தில் என் கண் முன்னாலேயே கோலியும், பம்பரமும், தள்ளும்புள்ளும், மாயமாய் எங்கோ மறைய எங்கும் எதிலும் கிரிக்கெட்டே பேச்சாகி போனது. ரெண்டு நண்டுசிண்டான்கள் சந்தித்துகொண்டால் கூட தெண்டுல்கர் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். பூமரை மென்று கொண்டே ஃப்ரீயாய் கிடைத்த காங்குலியின் ஸ்டிக்கரை புத்தகப்பையில் ஒட்டிக்கொண்டு சிரிப்ப்பான் சிவகுமார். அசாருதீன் படம் போட்ட நோட்டு புக்கு வாங்கி வந்து விரைப்பு காட்டுவான் வில்லியம். சச்சினின் சிக்சரைப் பற்றி பேசி கிளாஸ் ரூமிலேயே கிடா வெட்டுவார்கள். எனக்கு தான் ரத்தம் வரும்.

டிவி மேட்ச் நாட்களில் எங்களூர் தெருக்களெல்லாம் 144 தடையுத்தரவு தாயத்து கட்டினமாதிரி, வெறிச்சோடி கிடக்கும். ஐ யாம் லெஜண்ட் படத்தில் வரும் வில் ஸ்மித் மாதிரி தனியனாக தெருவில் திரிவேன்.ஒரு மன வைராக்கியம். போரடிக்கிற டீவி முன்னாடி உட்காந்து பிஜுவுடன் பொரிக்கடலையோ மிக்சரோ சாப்பிட்டு சிக்சர் பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. இந்த இடைவெளியை நிரப்ப புத்தகங்களே போக்கிடம் என்று அறிந்து எப்போதும் லைப்ரரியே கதி என்று கிடந்தேன். எனக்கு கிரிக்கெட்டுக்கு மாற்றாக குமுதமும் விகடனும் தான் இருந்தது.
.
கிரிக்கெட் பாக்குறது மட்டுமில்லாமல் தெருவுக்கு தெரு பாரதி பேரிலோ விவேகானந்தர் பேரிலோ கிளப் ஆர்ம்பித்து லோக்கல் கிரவுண்டுகளில் டூர்ணமெண்டுகள் வேறு வைப்பான்கள். இதுக்காவது பார்வையாளனாக நான் கல்ந்துகொள்ள வேண்டி கண்டிப்பு காட்டுவான்கள். ஒரு நாள் ஆடவேண்டிய ஒருத்தன் வராத காரணத்தால் எந்த பிராக்டிசோ இண்ட்ரெஸ்டோ இல்லாத என்னையே களத்தில் இற்க்கும் துணிவு எங்கள் தெரு டீமில் எவனுக்கோ வந்து விட்டது. அதற்கு நான் கொடுத்த விலை ”டக் அவுட் அவமானம்”. இதற்கு முன்னமே கிரிக்கெட் எனக்கு பிடிக்காது என்பதால் இந்த சம்பவம் என் கிரிக்கெட் கிலிக்கு காரணமில்லை.
.
இலக்கியம் படிக்க ஆரம்பிச்ச துவக்க நாட்களில் கிரிக்கெட் எல்லாம் அற்ப மானுடப்பதர்களுக்கானது. நானெல்லாம் வேற இனம் என்கிற தெனாவெட்டில் தெம்பாக திரிந்தேன்.  பிற்பாடு நானறிந்த சில இலக்கியவாதிகளே தீவிர கிரிக்கெட் ரசிகர்களாக இருந்து தொலைத்து என் இறுமாப்பையும் கலைத்து விட்டது வேறுகதை. கிரிக்கெட்டின் பின்னாலிருக்கிற முதலாளித்துவ, உலகமயமாக்கல் நுகர்வுகலாச்சார இன்னபிற சமாச்சாரங்களை பற்றி ஃபிரண்ட்ஸ்களுடன் விவாதம் செய்ய ஆரம்பித்தேன். மேட்ச் ஆரம்பிக்கிற வரை என் பேச்சை கேட்டு இருக்கும் நண்பர்கள் ஒன்ஸ், டீவியை ஆன் பண்ணினா என்னை ம்யூட் பண்ணிவிட்டு ஆட்டத்தில் மூழ்கிப்போவார்கள். நான் கடுப்பை மறைக்க காரசேவை கொறிக்க ஆரம்பிப்பேன்.
சென்னை வந்தபிறகு வசந்த் அண்ட் கோ வாசலிலோ, வி.ஜி.பி ஷோவ் ரூம் வின்டோவிலோ எட்டிப்பார்த்து கிரிக்கெட் ரசிக்கும் கும்பல் . ஆப்பிஸ் டைனிங் ரூம் டிவியில் கிரிக்கெட் பார்த்து ஓகே ஓகே சந்தானம் ஸ்டைலில் ஆங்கிலத்தில் பேசிகொள்ளும் பெருசுகள். தெருக்களில் கல்லி கிரிக்கெட் ஆடி, நடப்பவர்களின் இடுப்பொடிக்கும் சிறுசுகள், ஐ லவ் சச்சின் என்று முகநூலில் காவடியெடுக்கும் பக்தர்கள்,
.
டெஸ்ட் மேட்ச், ஒண்டே மேட்ச் என்று முன்பெல்லாம் வருஷத்துக்கு சில நாட்கள் தான் வருத்தப்படவேண்டி இருந்தது இப்போது 20:20 என்றும் ஐபிஎல் என்றும் ஒன்றரை மாதங்கள் ஒட்டுக்கா ஓட விடுகிறார்கள். சேப்பாக்கம் கிரவுண்டில் கிரிக்கெட் நடந்தால் திருவல்லிக்கேணி போக வேண்டிய பேருந்து பெல்ஸ் ரோடு முனையிலேயே நின்று விடுகிறது, பார்த்தசாரதி கோவிலுக்கு பாதயாத்திரை போகிறமாதிரி சாலையை நோக்கி நட்ந்து போகிறார்கள் பயணிகள்.
.
கிரிக்கெட் இன்று நமது பாரம்பரிய விளையாட்டுகளை அழித்து விட்டது, ஊழல்மயமாகி விட்டது, விளையாட்டைத்தாண்டி பிசினஸ் மட்டுமே என்றகி விட்டது என்றெல்லாம் விமர்சனம் செய்வோரின் குரல், குடித்து விட்டு போட்ட கொக்ககோலா டின் மாதிரி நசுங்கி மூலையில் கிடக்கிறது. ஸ்டேடியத்தை தாண்டும்போது ரசிகர்களின் ’ஆர்ப்புவிளி’ கிளிஷேவாக விண்ணை எட்டுகிறது. உள்ளே ஏதாவது மல்டிநேஷனல் பிராண்டு அம்பாசடராக இருக்கும் அவர்களின் கிரிக்கெட் கடவுள் களமாடிக்கொண்டிருக்கலாம்.  இப்படி கிரிக்கெட்டுக்கு மதம் மாறியாயிற்று மக்கள். இந்த விசயத்தில் நான் மட்டும் நாத்திகனாய் இருக்கிறேன். ஈயடிக்கிற இடத்தில் இரும்புக்கென்ன வேலை என்று பேசாமல் எனது பாரதி சாலையை நோக்கி நடக்கிறேன்.
{ஆன்டி கிரிக்கெட் என்னும் தலைப்பு ஆன்டி ஹீரோ ஆன்டி கிளைமாக்ஸ் என்பது போல எதிர் அர்த்தம் வரும் பொருட்டு வைக்கப்பட்டது)