ஆன்டி கிரிக்கெட்!

May 4, 2012 at 1:30 am 7 comments

எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. இதனால் கிரிக்கெட்டுக்கு ஒண்ணுமில்ல எனக்குதான் கஷ்டம். பராக்கு பார்த்துகொண்டு பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது, பேருந்தில் போகும் போது, ஒண்ணுக்கடிக்க டாய்லெட் போகும் போது, டீக்கடைக்கு ரிலாக்சாக டீயடிக்கப்போகும்போது,  ‘ஸ்கோர் என்ன பாஸ்’ என்று கேட்பவர்களிடம் ‘தெரியல பாஸ்’ என்றால் ஏதோ நியாண்டர்தால் மனிதனைப்பார்த்து விட்டது போல பார்ப்பார்கள்.
.
”கிரிக்கெட் பார்க்கறதில்லை. ஒன்லி ஃபுட்பால் தான்” என்று கிடைக்கிற கேப்பில் கோலடிக்கவும் முடியல. ஏன்னா ரூனிக்கு ரொனால்டினோ சித்தப்பாவான்னு கேக்குற அளவுக்குதான் கால்பந்து ஞானமும்.
.
அக்காக்கள் ஆடும் பாறைகளிக்கு, சின்னண்ணன்களின் தள்ளும்புள்ளும் (இது விளவங்கோடு தமிழ்) விளையாட்டுக்கு, பெரியண்ணன்கள் ஆடும் கபடிக்கு சின்ன வயசிலிருந்தே பார்வையாளனாகப் பழக்கப்பட்டவன் தான் நான். ஆனாலும் இந்த டி.வி முன்னால் உட்காந்து கிரிக்கெட் பாக்கச்சொன்னால் பாகற்காயை பல்லில் கடித்தமாதிரி இருக்கிறது. இந்த உளவியலின் உள்ளர்த்தம் என்ன.
.
மண்ணை ஊதி ஊதி மறைத்துவைத்த இலையை கண்டதும் ஆளாளுக்கு விரட்டிபிடித்து விளையாடும் மரம்தொட்டுகளி, உப்பிற்கு போகும் வழியேது என்று கண்ணைக்கட்டி ரப்பர் சருகுகளில் காலுரச நடக்கும் கண்கட்டிகளி, காலிடுக்கு வழியாக விட்டெறிந்த கம்பை எடுத்து விட்டு ஓடிவரும் முன்பே மரத்தில் வானரங்களாகி கிளைவிட்டு தாவும் மரக்கொரங்கு, ஒற்றைக்காலிலே ஊரை அளக்கும் கிளியாந்தட்டு, சாக்குட்டான், சாத்தியாம்புறம், முறுமுட்டி, நாக்கோணி, ஐத்துக்கோணி, ஆரஞ்ச், கீலேஸ் என்று புரியாத மொழியில் புள்ளடிக்கும் தள்ளும்புள்ளும், கயிற்றை சுழற்றி எதிராளிக்கு மணடையில் ஆக்கர் வைக்கும் பம்பரம், முஷ்டியை மடக்கி வீராப்பாக முட்டு வாங்கும் கச்சி களி, விழுந்து விழுந்தே விழுப்புண்கள் பெறும் கபடியாட்டம் என்று எத்தனையோ விளையாட்டுகளை எகத்தாளமாய் ஆடிய பரம்பரை தானே நம்மளது. ஏன் இந்த கிரிக்கெட்டை கண்டால் மட்டும் பேட்ஸ்மேனை விட வேகமாக ஓடித்தள்ளுகிறேன்.
.
இதிலும் அப்பவெல்லாம் எங்களுரில் ஊருக்கு ஒரு வீட்டில் தான் டி.வி இருக்கும். பெரும்பாலும் அந்த வீட்டுகாரர் இராணுவத்திலிருப்பார். வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும், ஞாயிற்றுகிழமை மாலை தமிழ்ப்படம் என்றால், வீடு உணமையிலேயே ஹவுஸ்ஃபுல்லாகும். அதிலும் பெரும்பாலும் பெண்பிள்ளைகளுக்குத்தான் வீட்டுக்குள் அனுமதி. ஆண்பிள்ளைகள் ஜன்னல் கம்பிக்குள் தலையை விட்டு கொண்டோ முற்றத்து வேப்பமரத்தில் தொங்கிக் கொண்டோ தான் அந்த பிளாக் அண்ட் வொயிட் டீவியில் படம் பாக்கணும். அதிலும் டீவிக்கு, ஸ்வெட்டர் போட்டமாதிரி ஒரு அங்கியோ, பொட்டிக்கடைக்கு ஷட்டர் போட்ட மாதிரி ஒரு மரப்பலகை மூடியோ போட்டிருப்பார்கள். என்றாவது கிரிக்கெட் போட்டால் முற்றம் வரை நிறைந்து நின்று எட்டிப்பார்க்கும் மக்கள் கூட்டம். நானும் என்ன தான் பாக்கிறனுங்கண்ணு சிலநாள் எட்டிப்பார்ப்பேன்.
.
ஒருத்தன் பந்தை சாவகாசமாய் பெப்சியோ கோக்கோ வழியும் எச்சில் தொட்டு, ஏதோ மல்டிநேஷனல் பிராண்டிங் பதித்த தன் பேண்ட் தொடையில் தேய்த்துகொண்டு ஓடியாந்து எறிய, மூன்று குச்சிகளுக்கு முன்னால் நிற்பவன் குச்சியை காக்கும் பொருட்டு மட்டையை காற்றில் சுழற்றி பந்தை அடிக்க, அதன் பின்னால் ஒருத்தன் ஓட அது சிக்ஸரோ பவுண்டரியோ போகும்மென்று சுற்றியிருக்கும் மக்கள் கூட்டம் கையில் பீப்பியுடன் கத்த, மறுபடியும் ஒருத்தன் பந்தை சாவகாசமாய் பெப்சியோ கோக்கோ வழியும் எச்சில் தொட்டு, ஏதோ மல்டிநேஷனல் பிராண்டிங் பதித்த தன் பேண்ட் தொடையில் தேய்த்துகொண்டு ஓடியாந்து எறிய, மூன்று குச்சிகளுக்கு முன்னால் நிற்பவன் குச்சியை காக்கும் பொருட்டு மட்டையை காற்றில் சுழற்றி பந்தை அடிக்க, அதன் பின்னால் ஒருத்தன் ஓட அது சிக்ஸரோ பவுண்டரியோ போகும்மென்று சுற்றியிருக்கும் மக்கள் கூட்டம் கையில் பீப்பியுடன் கத்த, இதை ரெண்டு தடவை படிக்கும் போதே உங்களுக்கு மண்டைகாயுதே திரும்ப திரும்ப பார்க்க எனக்கு எப்படி இருக்கும்.
.
பிற்காலத்தில் என் கண் முன்னாலேயே கோலியும், பம்பரமும், தள்ளும்புள்ளும், மாயமாய் எங்கோ மறைய எங்கும் எதிலும் கிரிக்கெட்டே பேச்சாகி போனது. ரெண்டு நண்டுசிண்டான்கள் சந்தித்துகொண்டால் கூட தெண்டுல்கர் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். பூமரை மென்று கொண்டே ஃப்ரீயாய் கிடைத்த காங்குலியின் ஸ்டிக்கரை புத்தகப்பையில் ஒட்டிக்கொண்டு சிரிப்ப்பான் சிவகுமார். அசாருதீன் படம் போட்ட நோட்டு புக்கு வாங்கி வந்து விரைப்பு காட்டுவான் வில்லியம். சச்சினின் சிக்சரைப் பற்றி பேசி கிளாஸ் ரூமிலேயே கிடா வெட்டுவார்கள். எனக்கு தான் ரத்தம் வரும்.

டிவி மேட்ச் நாட்களில் எங்களூர் தெருக்களெல்லாம் 144 தடையுத்தரவு தாயத்து கட்டினமாதிரி, வெறிச்சோடி கிடக்கும். ஐ யாம் லெஜண்ட் படத்தில் வரும் வில் ஸ்மித் மாதிரி தனியனாக தெருவில் திரிவேன்.ஒரு மன வைராக்கியம். போரடிக்கிற டீவி முன்னாடி உட்காந்து பிஜுவுடன் பொரிக்கடலையோ மிக்சரோ சாப்பிட்டு சிக்சர் பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. இந்த இடைவெளியை நிரப்ப புத்தகங்களே போக்கிடம் என்று அறிந்து எப்போதும் லைப்ரரியே கதி என்று கிடந்தேன். எனக்கு கிரிக்கெட்டுக்கு மாற்றாக குமுதமும் விகடனும் தான் இருந்தது.
.
கிரிக்கெட் பாக்குறது மட்டுமில்லாமல் தெருவுக்கு தெரு பாரதி பேரிலோ விவேகானந்தர் பேரிலோ கிளப் ஆர்ம்பித்து லோக்கல் கிரவுண்டுகளில் டூர்ணமெண்டுகள் வேறு வைப்பான்கள். இதுக்காவது பார்வையாளனாக நான் கல்ந்துகொள்ள வேண்டி கண்டிப்பு காட்டுவான்கள். ஒரு நாள் ஆடவேண்டிய ஒருத்தன் வராத காரணத்தால் எந்த பிராக்டிசோ இண்ட்ரெஸ்டோ இல்லாத என்னையே களத்தில் இற்க்கும் துணிவு எங்கள் தெரு டீமில் எவனுக்கோ வந்து விட்டது. அதற்கு நான் கொடுத்த விலை ”டக் அவுட் அவமானம்”. இதற்கு முன்னமே கிரிக்கெட் எனக்கு பிடிக்காது என்பதால் இந்த சம்பவம் என் கிரிக்கெட் கிலிக்கு காரணமில்லை.
.
இலக்கியம் படிக்க ஆரம்பிச்ச துவக்க நாட்களில் கிரிக்கெட் எல்லாம் அற்ப மானுடப்பதர்களுக்கானது. நானெல்லாம் வேற இனம் என்கிற தெனாவெட்டில் தெம்பாக திரிந்தேன்.  பிற்பாடு நானறிந்த சில இலக்கியவாதிகளே தீவிர கிரிக்கெட் ரசிகர்களாக இருந்து தொலைத்து என் இறுமாப்பையும் கலைத்து விட்டது வேறுகதை. கிரிக்கெட்டின் பின்னாலிருக்கிற முதலாளித்துவ, உலகமயமாக்கல் நுகர்வுகலாச்சார இன்னபிற சமாச்சாரங்களை பற்றி ஃபிரண்ட்ஸ்களுடன் விவாதம் செய்ய ஆரம்பித்தேன். மேட்ச் ஆரம்பிக்கிற வரை என் பேச்சை கேட்டு இருக்கும் நண்பர்கள் ஒன்ஸ், டீவியை ஆன் பண்ணினா என்னை ம்யூட் பண்ணிவிட்டு ஆட்டத்தில் மூழ்கிப்போவார்கள். நான் கடுப்பை மறைக்க காரசேவை கொறிக்க ஆரம்பிப்பேன்.
சென்னை வந்தபிறகு வசந்த் அண்ட் கோ வாசலிலோ, வி.ஜி.பி ஷோவ் ரூம் வின்டோவிலோ எட்டிப்பார்த்து கிரிக்கெட் ரசிக்கும் கும்பல் . ஆப்பிஸ் டைனிங் ரூம் டிவியில் கிரிக்கெட் பார்த்து ஓகே ஓகே சந்தானம் ஸ்டைலில் ஆங்கிலத்தில் பேசிகொள்ளும் பெருசுகள். தெருக்களில் கல்லி கிரிக்கெட் ஆடி, நடப்பவர்களின் இடுப்பொடிக்கும் சிறுசுகள், ஐ லவ் சச்சின் என்று முகநூலில் காவடியெடுக்கும் பக்தர்கள்,
.
டெஸ்ட் மேட்ச், ஒண்டே மேட்ச் என்று முன்பெல்லாம் வருஷத்துக்கு சில நாட்கள் தான் வருத்தப்படவேண்டி இருந்தது இப்போது 20:20 என்றும் ஐபிஎல் என்றும் ஒன்றரை மாதங்கள் ஒட்டுக்கா ஓட விடுகிறார்கள். சேப்பாக்கம் கிரவுண்டில் கிரிக்கெட் நடந்தால் திருவல்லிக்கேணி போக வேண்டிய பேருந்து பெல்ஸ் ரோடு முனையிலேயே நின்று விடுகிறது, பார்த்தசாரதி கோவிலுக்கு பாதயாத்திரை போகிறமாதிரி சாலையை நோக்கி நட்ந்து போகிறார்கள் பயணிகள்.
.
கிரிக்கெட் இன்று நமது பாரம்பரிய விளையாட்டுகளை அழித்து விட்டது, ஊழல்மயமாகி விட்டது, விளையாட்டைத்தாண்டி பிசினஸ் மட்டுமே என்றகி விட்டது என்றெல்லாம் விமர்சனம் செய்வோரின் குரல், குடித்து விட்டு போட்ட கொக்ககோலா டின் மாதிரி நசுங்கி மூலையில் கிடக்கிறது. ஸ்டேடியத்தை தாண்டும்போது ரசிகர்களின் ’ஆர்ப்புவிளி’ கிளிஷேவாக விண்ணை எட்டுகிறது. உள்ளே ஏதாவது மல்டிநேஷனல் பிராண்டு அம்பாசடராக இருக்கும் அவர்களின் கிரிக்கெட் கடவுள் களமாடிக்கொண்டிருக்கலாம்.  இப்படி கிரிக்கெட்டுக்கு மதம் மாறியாயிற்று மக்கள். இந்த விசயத்தில் நான் மட்டும் நாத்திகனாய் இருக்கிறேன். ஈயடிக்கிற இடத்தில் இரும்புக்கென்ன வேலை என்று பேசாமல் எனது பாரதி சாலையை நோக்கி நடக்கிறேன்.
{ஆன்டி கிரிக்கெட் என்னும் தலைப்பு ஆன்டி ஹீரோ ஆன்டி கிளைமாக்ஸ் என்பது போல எதிர் அர்த்தம் வரும் பொருட்டு வைக்கப்பட்டது)
Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , , .

சினிமா விமர்சகர்கள்: ஒரு இன வரைவியல். நீங்க தான் நாடகத்தின் கேரக்டர்!

7 Comments Add your own

 • 1. krishy  |  May 4, 2012 at 7:01 pm

  அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

 • 2. b.ganesh  |  May 5, 2012 at 8:02 pm

  உங்களின் இந்தக் கட்டுரை‌ரை ரசித்துப் படித்தேன். வரிக்கு வரி ஒத்துப் போகிறேன். ஒய் பிளட்… ஸேம் பிளட்!

 • 3. ensanthosh  |  May 5, 2012 at 11:16 pm

  நன்றி கணேஷ்!

 • 4. Yuvarani  |  May 7, 2012 at 12:22 am

  அருமையான பதிவு! எனக்கும் கிரிகெட் அலர்ஜி!

 • 5. ensanthosh  |  May 7, 2012 at 12:48 am

  நன்றி யுவராணி!

 • 6. ஆனந்த் செல்லையா  |  May 7, 2012 at 10:22 am

  /அசாருதீன் படம் போட்ட நோட்டு புக்கு வாங்கி வந்து விரைப்பு காட்டுவான் வில்லியம். சச்சினின் சிக்சரைப் பற்றி பேசி கிளாஸ் ரூமிலேயே கிடா வெட்டுவார்கள். எனக்கு தான் ரத்தம் வரும்./ஹா…ஹா…சேம் ப்ளட்.

 • 7. ensanthosh  |  May 7, 2012 at 10:19 pm

  சியர்ஸ்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

May 2012
M T W T F S S
« Apr   Sep »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: