Archive for September, 2012

இது காதல் கதை மட்டுமேயல்ல!

2050ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு அதிகாலை. நெய்தல் நிலத்திற்கேயுரிய உப்புக்காற்று மெலிதாக வீசிக்கொண்டிருந்த அந்த பூங்காவில் கிறிஸ்டோபர் எலிசபெத்தை சந்திக்க காத்திருந்தான்.

சென்னையிலிருந்து வரும்போதே இந்த முறை எலிசபெத்திடம் காதலை சொல்லி விடுவதை தீர்மானித்திருந்தான். ஆன்டிக்கு தெரிந்தால் உடனே கல்யாணம் செய்து கையோடு அனுப்பி விடுவாள். யாரும் தங்கள் காதலுக்கு எதிர் நிற்க மாட்டார்கள் என்பது இருவருக்கும் தெரியும். இருந்தாலும் கொஞ்சநாள் நன்றாக காதலிக்க வேண்டும் என்பது கிறிஸ்டோபரின் அவா. காலையில் பூங்காவுக்கு வந்து விடு என்று என்று சொல்லும் போதே ஏஞ்சலுக்கும் தெரியும். விருப்பம் சின்ன வயதிலிருந்தே இருந்தாலும் காதலை நேரடியாக சொன்னதில்லை.

பூங்காவிலிருந்து பார்க்கையில் எதிரில் கடல் லேசான மஞ்சள் ஒளியுடன் அலையாடிக்கொண்டிருந்தது. சில படகுகள் ஒளியுடன் அசைந்து கடல் பரப்பின் மீதாக நகர்ந்து கொண்டிருந்தது. கிரிஸ்டோபரின் மனமே படகுகளாக மிதந்து கொண்டிருப்பதாக தோன்றிய போது சின்னதாக சிரிப்பு வந்தது.

எலிசபெத் சரியாக ஆறுமணிக்கு வருவதாக சொல்லி இருந்தாள். ஆறு தாண்டி விட்டது. பூங்காவை சுற்றி முற்றி பார்த்தான். விளிம்புகளில் மஞ்சள் ஒளி லேசாக தீற்றப்பட்டு அழகான மரங்கள், செடிகள், பூக்கள். தானே ஒரு ஓவியத்தின் உள்ளே இருப்பது போல பிரமைத்து கொண்டான். பூங்கா ஓரத்தில் ஏதோ பழைய கட்டிட இடிபாடுகளின் எச்சங்கள் தெரிந்தன.

தூரத்தில் எலிசபெத் வந்து விட்டாள். இந்த பசுமையான பூங்காவின் நடுவில் அவள் வருவது பைபிள் கதைகளில் வரும் தேவகன்னிகையின் வருகை போல இருந்தது. இவ்வளவு அழகான இந்த இடம் தான் தன் அழகான காதலைச்சொல்ல சரியான இடம் என்று அவன் தேர்ந்தெடுத்தது சும்மா அல்ல. ஈடன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் போல தானும் எலிசபெதும் அங்கே அந்த பூங்காவில் காதலின் ரகசியக்கனியை பங்கிட்டு கொள்ள‌ வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டான். அந்த தருணமும் வந்து விட்டது.

கூடை நிறைய மத்தி மீனுடன் திரும்பும் அவன் அப்பாவைப்போல மனம் நிறைய காதலுடன் அவன் திரும்பி இருந்தான். அதை அப்படியே அவள் காலடியில் கொட்டி விட வேண்டும்.

எலிசபெத் வந்தாள். கிறிஸ்டோபர் தன் காதலை சொன்னான். அவளுக்கு அதிர்ச்சியளிக்க அதில் ஒன்றுமில்லை. இருந்தாலும் வெட்கம் சிறு வலையாக அவள் முகத்தில் பரவிற்று. தான் அவளுக்கு தர எதுவும் கொண்டுவரவில்லை என்பதை அவளுக்கு சொன்னான். பிறகு அந்த பூங்காவில் அந்த காலையில் மலர்ந்த செம்பருத்தி மலர் ஒன்றை பறித்து அவளுக்கு கொடுத்தான். அதில் லேசாக உப்பின் மணம் இருந்தது. செம்பருத்தியை தன் ஈரமான தலையில் சொருகியபடி அவள் அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தாள். அவனும்.

தூரத்தில் இப்போது கதிரவனின் ஒளி மேலும் பொலிவாகிக்கொண்டு வந்தது. கிறிஸ்டோபர் எலிசபெத்தின் காதலால் அந்த பூங்கா மேலும் ஒளிர்வுடன் மினுங்க ஆரம்பித்தது.

கிறிஸ்டோபர் எலிசபெத்தின் கைகளை பிடித்துக்கொண்டான். எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தார்கள் என்பது அவர்ளுக்கு தெரியாது. எலிசபெத்தின் பார்வை வெட்கத்துடன் பூங்காவிலிருந்த ஒவ்வொரு செடிகளையும் அதன் பூக்களையும் தொட்டு தொட்டு மீண்டது. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் இந்த பூங்காவில் ஓடியாடி விளையாடியது இருவருக்கும் ஒரே சமயம் ஞாபகத்தில் வந்து உள்ளூர மகிழ்ச்சி பெருகிற்று.

எலிசபெத்தை நினைக்கும் போதெல்லாம் கிறிஸ்டோபரால் இந்த பூங்காவை நினைக்காமல் இருக்க முடியாது. பூங்காவை பார்க்கும் போதெல்லாம் எலிசபெத்தையும். இந்த கடற்கரையில் இவ்வளவு பெரிய பூங்கா எப்படி வந்தது என்று ஒரு நாள் டென்னிஸ் வாத்தியாரிடம் கேட்டதும் அவர் சொன்ன பதிலும் கூடவே ஞாபகம் வந்தது. இப்போது இந்த பூங்காவில் தன் காதலை சொல்லி தன் வாழ்க்கையை எலிசபெத்துடன் ஆரம்பிக்கப்போகிறான். இந்த கடற்கரை மண்ணில் எனது முன்னோர் போராடி மீட்ட இந்த இடத்தில் தன் காதலைச்சொன்னது அவனுக்கு ஆத்ம திருப்தியாக இருந்தது. இதை விட தன் காதலை சொல்ல பொருத்தமான இடம் இவ்வுலகில் வேறு உண்டா என நினைத்துகொண்டான்.

எமது மக்கள் பட்டினி கிடந்து, அடி உதை வாங்கி மீட்டுக்கொடுத்த இடம் அல்லவா இது. இங்கே தான் என் பேரனும் தன் காதலைச்சொல்வான். அவன் பேத்தியும் தன் காதலனை கொஞ்சுவாள். எங்கள் சந்ததிகள் செழித்து பெருகப்போவதும் இங்கிருந்து தான். எலிசபெத்தின் கைகளின் வெப்பத்தை உணர்ந்தவன் மெல்ல சிரித்து கொண்டான்.

இருவரும் எழுந்து வீட்டுக்குப்போகத் தயாரானார்கள். பூங்கா இருக்கின்ற இடத்தில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஏதோ பெரிய கட்டுமானங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் சில சிதைந்த சுவர்கள் மூலமாக தெரிந்து கொண்டிருந்தது. கிறிஸ்டோபரும் எலிசபெத்தும் கைகளை கோர்த்துக்கொண்டு நுழைவாயிலை விட்டு வெளியேறும்போது பூங்காவின் மூலையில் கிடந்த அந்த மட்கிப்போன பெயர்பலகையை கவனித்தான். அது அங்கே வரவிருந்த அந்த பிரமாண்ட திட்டத்தின் பெயர் பலகை. அது துரு பிடித்து பழைய வேதனைகளின் ஞாபகச்சின்னம் போல அங்கே கிடந்து. அதிலிருந்த எழுத்துகள் பெரும்பாலும் அழிந்து போயிருந்தது. சில எழுத்துக்களை மட்டுமே கிறிஸ்டோபராலும் எலிசபத்தாலும் வாசிக்க முடிந்தது. அணு ன் லைய ம் . பறவைகள் சில சிறகடித்து அவர்கள் தலைக்கு மீதாக பறந்து சென்றன். ஒரு மரத்தின் வேர் கிறிஸ்டோபரின் காலில் தட்டியது. டென்னிஸ் வாத்தியார் சொன்ன அந்த தாடிக்காரரை பற்றி பெருமையுடன் மனதில் நினைத்து கொண்டான்.

Advertisements

September 26, 2012 at 1:06 am 8 comments

நிர்வாணம் என்பதும் ஒரு கலை!

இன்ஸ்டல்லேஷன் என்பது நவீன சிற்பக்கலையின் ஒரு வடிவம். கையில் கிடைக்கும் எதையும் கலையாக்கலாம் எனபதே இதன் தத்துவம். சாணி வரட்டியிருந்து சாட்டிலைட் உடைசல் வரை மனிதனுக்கு இந்த பிரபஞ்சத்தில் கைக்கெட்டும் எதை வேண்டுமானால் ஊடகமாக உபயோகிக்கலாம். ஆனால் அதில் ஒரு ஆர்டிஸ்டிக் இன்டெர்பிரடேஷன் என்கிற கலைஞனின் தலையீடு இருக்க வேண்டும். அதாவது கலைஞன் ஒரு கருத்தையோ, அனுபவத்தையோ அந்த கலைவடிவம் வழியாக பார்வையாளனுக்கு கடத்த வேண்டும். நம் ஊரிலும் வல்சன் கொலேரி முதல் மு. நடேஷ் வரை பல கலைஞர்கள் இருக்கிறார்கள்.

பெரும்பாலும் அஃறிணைகளையே இன்ஸ்டல்லேஷன் ஆர்ட்-க்கு உபயோகப்படுத்தி கொண்டிருக்க ஸ்பென்சர் டுனிக் என்கிற கலைஞனுக்கு “வேறு” மாதிரியாக ஒரு ஐடியா தோன்றி இருக்கிறது. அடிப்படையில் இவர் ஒரு புகைப்பட கலைஞர். அதிலும் எல்லா உலகப் புகைப்பட கலைஞர்களை போல இவரும் முதலில் சில அழகான நியூட்(நிர்வாண அழகியல்) புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். ஒன்றிரண்டு மாடல்களை வைத்து ஸ்டுடியோவுக்குள்ளே புகைப்படங்கள் மட்டுமே எடுப்பது என்பதை தாண்டி இந்த இந்த நியூட் மேட்டரை என்ன பண்ணலாம் என்று யோசித்தபோது, இருபது, முப்பது நியூட் மாடல்களை  திரட்டி பொதுவிடங்களில் வைத்து போட்டோ எடுக்கலாம் என்று தோன்றி இருக்கிறது.

அந்த புகைப்படங்கள் அடைந்த வெற்றி டுனிக்கை இன்னும் பிரம்மாண்டத்தை நோக்கி தள்ளி இருக்கிறது. ஆயிரம் இரண்டாயிரம் மாடல்கள் என்று போய் ஒரு சமயத்தில் பதினெட்டாயிரம் மாடல்கள் வரை நிர்வாணமாக வைத்து பிரம்மாண்டமான மனித இன்சஸ்டல்லேஷ்ன்களை அமைத்து அதை புகைப்படங்களும் எடுத்திருக்கிறார்.


ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று நிர்வாணமாக இவருடைய புகைப்படங்களில் மனித உடல்கள் அலையாக, கடலாக, கட்டிடங்களாக, நிலக்காட்சிகளாக விரிந்து பரவுகிறார்கள். நிர்வாணம் அசிங்கம் என்கிற சமூகப்பார்வையை இந்த கூட்டு நிர்வாண புகைப்பட்ங்களின் வழியாக கேள்விக்குள்ளாக்கும் ஸ்பென்சர் டுனிக் புகைப்படங்களின் வழியாக ஆதித்தன்மையின் அழகியலை தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கிறார். அவருடைய புகைப்படங்களை காண கூகிளில்  Spencer Tunick என்று ‘டைப்’பிட்டு பார்க்கவும்.

September 25, 2012 at 4:47 pm 2 comments


வாசித்தவர்கள்

  • 69,860 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

September 2012
M T W T F S S
« May   Oct »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: