அஞ்ஞானச் சிறுகதைகள் 0.1

tamil advertising

 

1

பிளாஸ்டிக் பாட்டில்.
கி.பி. 2100
குருபிரசாத் ஆய்வுக்காக சேகரித்து தன் பச்சை நிற லேபரட்டிரியில் வைத்திருந்த அந்த குப்பையை கிளறிக்கொண்டிருந்தார். ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கையில் சிக்கியது. சுத்தமான குடிநீர் என்று அதில் எழுதி இருந்தது. “குடிநீரா அப்படி என்றால்” என்று அவர் நெற்றி சுருக்கி யோசித்து கொண்டிருந்தபோது அவர் கிட்னியோடு இணைக்கப்பட்டிருந்த மின்னணு காட்டி பீப் பீப் என்றது. கைகளில் கட்டியிருந்த வாட்ச் திரையில் மின்னிய வார்த்தையை உற்று பார்த்தார். “thirsty” அவசரமாக ஒரு மாத்திரையை நாக்கில் வைக்க அது கரைந்து உருகி அவருடைய தொண்டைக்குள் இறங்கத்துவங்கியது.

2

டார்க் பிறவுன் ஜெல்லி
கி.பி. 2500
சந்தானகிருஷ்ணன் செவ்வாய் கிரகத்தின் பாதுகாப்பு நுழைவு வாசலில் ஸ்கேனிங்கிற்காக நின்றிருந்தார். சில ரோபோக்கள் அவர் உடலை லேசர் ஒளியால் ஊடுருவி செக் செய்துகொண்டிருந்தன. பூமிக்கு விடுமுறைக்கு போனவர் இன்று தான் திரும்பி இருந்தார். வயிற்றை ஸ்கேன் செய்த ரோபோ திடீரென்று அலறியது. “extra terrestrial content: dark brown jelly ” என்று அயோனிச ஸ்பீக்கர்கள் மின்குரலில் கத்தியது. ஸ்கேனர் சிவப்பு திரையில் டீடெயில்ஸ் தோன்றியது கலர்: டார்க் பிறவுன், மெட்டீரியல்: ஜெல்லி டைப், டேஸ்ட்: ஸ்வீட். சட்டென்று அவர் முன்பு தோன்றிய மாயத்திரையில் கேப்டன் கூ படமாக தோன்றி கேட்டார் “மிஸ்டர். சந்தானகிருஷ்ணன் பூமியில் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள். “திருனெல்வேலி சார்” என்றார் சந்தானம்.

 

3

மூதாதை
கி.பி 2150
பிரணவ் கண்களை மூடி தயாராகிக்கொண்டான். அவன் தலையை சுற்றி விதவிதமான ஒயர்கள் நெளிந்து கொண்டிருந்தன. மூளையை ஊடுருவி பிணைத்திருக்கும் ஒயர்கள். அவன் தன் ஐந்து தலைமுறைக்கு முந்தைய அவன் எள்ளு தாத்தாவிடம் தொடர்பு கொள்ள தயாரானன். காலத்தின் பின்னோக்கிய ஒரு பயணம். விஞ்ஞானிகள் எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்துகொண்டிருந்தார்கள். ஓகே ஸ்டார்ட் ஒன் டூ த்ரீ. 2075… 2025..2012 அக்டோபர்… இன்று… இந்த நொடி…ரிங்டோன் அடித்துகொண்டே இருந்தது. தொடர்பு கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்துக்குபிறகு பிரணவ் கண்ணீருடனும் விஞ்ஞானிகள் மிகுந்த சோகத்துடனும் கலைந்து சென்றார்கள். கதையை படித்து முடித்துவிட்டீர்களா. இப்போது உங்கள் மொபைல் போனை பாருங்கள். ஒரு unknown நம்பரிலிருந்து மிஸ்டு கால் வந்திருக்கிறதா என்று!

 

4

எல்லோவ் பால்
கி.பி.2600

 

இந்திய விஞ்ஞானிகளுக்கு மிகப்பெருமையாக இருந்தது. ஆஸ்ட்ராய்ட் என்கிற புதிய பால் வீதிக்கு இன்று முதன்முதலாக ஒரு “காலக்சி ஷிப்பை” அனுப்பப்போகிறார்கள். சூரியனிலிருந்து ஒரு ட்ரில்லியன் ஒளிதூரத்தில் இருக்கும் பால்வீதி அது. ஷிப் இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட இருக்கிறது. அனைவர் முகத்திலும் பதட்டமும் கவலையுமாக இருந்தனர். தலைமை விஞ்ஞானி மூர்த்தி அந்த மிகப்பிரம்மாண்டமான ஷிப்பின் முன் சக்கரத்திற்கு பக்கத்தில் நின்றிருந்தார். அந்த சக்கரமே எல்.ஐ.சி பில்டிங்கை விட பெரிசாக இருந்தது. இந்த ஷிப் ஃபிளைட் மாதிரி சிறிது தூரம் தளத்தில் ஓடி பின் செங்குத்தாக மெலே எழும்பி விண்வெளிக்கு பறந்துவிடும். கவுன்ட் டவுன் ஆரம்பித்தது. பத்திலுருந்து தலைகீழாக எண்ண ஆரம்பித்தனர். சரியாக ஷிப் கிளம்பும் சில நொடிகளுக்கு முன்பு தலைமைவிஞ்ஞானி மூர்த்தி தன் வெள்ளை நிற தொங்கு சட்டையின் பையிலிருந்து அந்த எல்லோவ் பாலை எடுத்து முன்சக்கரத்திற்கு முன்பாக வைத்தார். அந்த பிரம்மாண்டமான சக்கரம் அதை நசுக்கியபடி முன்நகர்ந்தது. அந்த எல்லோவ் பாலிலிருந்து சிட்ரிக் ஆசிட் பீச்சி அடித்தது.

5
frogetarian
கி.பி. 3000
கி.பி. 3000லிருந்து கால யந்திரத்தில் ஏறி 2015க்கு வந்திருந்தான் அந்த மனிதன். அவன் இடுப்புக்குக்கீழே தவளையின் உடலைக்கொண்டிருந்தான். அவனைப்போலவே தவளை உடல் கொண்ட அவன் காலத்தின் சகமனிதர்களின் பிரதி நிதியாகத்தான் இப்போது இங்கே வந்திருக்கிறான். அந்த பெரிய வீட்டை பின் பக்கமாக சென்று சாலையிலிருந்து ஒரு துள்ளலில் மாடிக்கு குதித்து விட்டான். அறைக்குள் நுழைந்த போது அந்த வெள்ளையுடை மனிதர் இவனைக்கண்டு பீதியுடன் அலற முற்பட்டபோது அவன் கேட்டான் ” நீ தான் தவளையின் மரபணு கலந்த தக்காளிக்கு அனுமதி கொடுத்த மந்திரியா” அவர் பீதியுடன் தலையை ஆட்டினார். ஆப்ரிக்க கருந்தவளையின் கொடும் விஷம் கொண்ட நாக்கை ஆட்டியபடி அவன் பெருங்கோபத்துடன் அவர் கழுத்தை நோக்கி குனிந்தான்.

நீங்களும் ஆகலாம் கோட்டோவியர்!

tamil advertising

சில சிறுகதைகளுக்காக வரைந்தவை. இவை கணிணியில் வரைந்தவை. நீங்களும் நினைத்தால் இந்த மாதிரி படங்கள் வரைவது எளிது. தெரிந்துகொள்ள விரும்புவோர் எனக்கு மின்னஞ்சல் இடவும்.

இலக்கிய வாசக ஜென்மம்: சிறு அடையாளக் குறிப்புகள்

tamil advertising

புத்தகக்கண்காட்சியில் கூட்டமாகவும், மற்ற நேரங்களில் புக்பாயிண்டிலோ, லேண்ட் மார்க்கிலோ, திருவல்லிக்கேணி பழைய புத்தகக்கடைகளிலோ தனித்தனியாகவும் இவர்களை பார்க்கலாம். வாசகர்கள் இரண்டு வகைப்படுவர். சாப்ட்வேர் வேலை காரர்கள் மற்றும் சாப்ட்வேர் வேலைக்காரரல்லாதவர்கள். முதல் வகையினர் கடனட்டைகளை உரசியே காரியம் சாதிக்க பின்னவர்கள் மனசுக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களின் முன்னட்டையை தடவித்தடவி பார்த்தபடி பட்ஜெட்டுக்குள் வருமா என நெற்றியை சுருக்கி யோசித்த படியே திரிபவர்கள்.

சிலர் எந்திரன் சிட்டி ரோபோ மாதிரி புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டி படித்து முடித்து விட்டது போல எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்வார்கள். புத்தக்கண்காட்சியில் தூரத்தில் நின்ற படியே ஜாம்பவ எழுத்துவான்களை தர்சித்து விட்டு நெருங்கி பேசப்பயந்து கூட்டத்தோடு கூட்டமாக சுற்றி சுற்றி வருபவர்களும் உண்டு. சிலர் அந்த எழுத்தாளன் போட்டதிலேயே சல்லி விலை புத்தகத்தை வாங்கிவிட்டு எழுத்தாளனிடன் அதில் கையெழுத்தும் போட்டு கேட்டு “பாருய்யா உன் புக்கை பாவம் பாத்து வாங்கி இருக்கேன்” என்பது போல தோரணை காட்டி சிரிக்காத எழுத்தாளனிடம் சிரித்து பேசியபடி போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கிலும் அப்லோடுவார்கள்.

புக்பாயின்ட், தேவநேயப்பாவாணர் அரங்கம், பாரதியார் இல்லம் என ஒன்று விடாமல் இலக்கியக்கூட்டங்கள் நடக்கும் எல்லாஇடத்திலும் ஆஜராவது இவர்களின் வாராந்திர நடவடிக்கைகள். அங்கெல்லாம் டீயோ காஃபியோ சாப்பிட்டு டிஸ்பிளே வைத்திருக்கும் புத்தகங்களை புரட்டியபடி சக வாசக நண்பர்களிடம் இலக்கிய குசலம் விசாரித்தல் இவர்களின் பொழுதுபோக்கு. உற்று பார்த்தால் நாங்களும் இலக்கிய வாசகர்கள் தான் என்கிற பெருமிதம் முகத்தில் கெத்தி நிற்கும்.

பத்தாண்டுகளுக்கு முன் வரை அகதிகள் போன்று அடையாளமற்று கிடந்த இவர்களில் சிலர் இன்று சில எழுத்தாளுமைகளின் தயவால் வாசகர் வட்டங்கள் சதுரங்கள் என்று ஆரம்பித்து கட்சிக்காரர்கள் போல தில்லு காட்டி திரிபவர்களும் உண்டு. ரஜினி கமல் ஃபேன்ஸ் முன்பெல்லாம் தீபாவளி ரிலீசுக்கு தியேட்டர் முன்பு சண்டை போடுவது போல இவர்கள் தங்கள் எழுத்தாளத் தலைவன்களுக்காக முஷ்டி முறிக்கியபடி திரிவதும் இன்று சாதாரணம்.

இலக்கியம் இன்று மேலும் பரந்த வாசகர்களை பெற்றுவிட்ட காரணத்தினால் ஜிப்பா அணிந்த வாசகர்களை இன்று காண்பது அரிது. ஜீன்சும், டீ ஷர்டும் அணிந்த இளம் வாசகர்களே அதிகம் . ஜிப்பா அணிந்த சில வாசக மாமாக்கள் இதை இலக்கியம் நீர்த்து போய் விட்டது என்கிற சங்கடகர தோரணையில் கூட்டஙகளில் அமர்ந்திருப்பதை அவ்வப்போது காணமுடிகிறது.

அவரவர்களின் ரசனை அடிப்படையில் குழுகுழுவாகவும் இலக்கியக்கூட்டங்களுக்கு வருவது இவர்களின் வ‌ழக்கம். பிடிக்காத எழுத்தாளர்களின் பேச்சுகளை கேட்டு அடுத்த டீ பிரேக்கில் அவர்களை தஙக‌ளுக்குள் கலாய்ப்பதும். அந்த எழுத்தாளனை விட தான் மிகச்சிறப்பாக எழுதமுடியும் என்ற தோரணையில் மேலும் ஓர் தம்மை பற்ற வைத்து ஆழமாக இழுப்பதும் பழக்கம்.

எழுத்தாளர்களுடன் வாசகச்சந்திப்பு என்கிற விசித்திரமான நிகழ்ச்சிகளின் போது அதைவிட விசித்திரமான கேள்விகள் கேட்டு தங்கள் வாசக பேரறிவை நிரூபிப்பதில் இவர்களுக்கு தனி குஷி.

பிடித்த எழுத்தாளர்களுக்கு அல்வாவும் மல்லிப்பூவும் தவிர அனைத்து வகையான தின்பண்டங்களும் வாங்கி கொண்டு அவர்கள் வீட்டு கதவை தட்டும் வாசகர்கள் தனி.

சார் உங்க அந்த நாவல் படிச்சேன். அடி தூள் கிளப்பிட்டீங்க என்பது போன்ற வாசிப்பனுபங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு சுகம்.

ஆகமொத்தம் அண்ணாசாலையில், தேவி தியேட்டரில், மெரீனா பீச்சில் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இலக்கிய வாசகர்களை, என்றேனுமொரு நாள் தானும் எழுத்தாளனாவேன் என்கிற மன உறுதியுடன் திரியும் இலக்கிய வாசகர்களை சென்னையில் ஆங்காங்கே பார்க்கமுடிகிறது.

நேர்காணல்: பேயோன் (சமகால எழுத்தாளர்)

tamil advertising

ஒரு விளம்பர படம் சம்பந்தமாக ஒசாகா வருவது பற்றியும். சனி மாலை சந்திக்க முடியுமா என்றும் பேயோனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். ஒரு திரைக்கதை விவாதத்தில் சற்று பிசியாக இருப்பதால் ஞாயிறு காலை வீட்டிற்கு வருமாறு பதில் அனுப்பி இருந்தார். காமரா எடுத்துவரவும் போட்டோ எடுக்கவும் முதலிலேயே மறுப்பு தெரிவித்து இருந்தார். ஞாயிறு காலை நான் நண்பன் ஆனந்துடன் அவர் வீட்டில் ஆஜராகி இருந்தோம். ஜப்பானிய அழகியலில் உருவாக்கப்படிருந்த தாள்தள மேஜையில் ஒரு ஓரமாக விகடன் முகவரியிட்ட பிரவுன் கவர் ஒன்று கிடந்தது. பேயோன் பக்கங்களை எழுதி உறையிட்டிருப்பார் என்பதை சிந்தித்தபடி அமர்ந்திருந்தோம். தேனீருடன் ஆரம்பமானது உரையாடல். நாங்கள் கேட்ட மொக்கை கேள்விகளுக்கு பேயோன் அவருக்கே உரித்தான  நடையில் பதிலளித்தார். நேரன்மின்மையின் காரணமாக இச்சிறு நேர்காணலை மட்டுமே தற்போது பதிவு செய்ய முடிந்தது. 

கேள்வி: உங்களுக்குள் எழுத்து மேல் ஈடுபாடு வந்தது எப்படி?

பேயோன்: எனது பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத அனுபவங்களை எனது பள்ளி நூலகம் எனக்குத் தந்தது. தொலைக்காட்சித் தொடர் வசதி எங்கள் கிராமத்திற்கு இன்னும் வந்தபாடில்லாத காலகட்டம் அது. பள்ளி முடிந்தபின் ஓணான் அடிக்க சக பிள்ளைகள் ஓடுகையில் என் போன்ற வெகு சிலர் பள்ளி நூலகத்தில் தஞ்சம் புகுவோம்.

நான் படிக்கும் புத்தகங்களில் தென்படும் சுவாரசியமான வாக்கியங்களை கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் வட்டமிட்டு அதனருகே மார்ஜினில் சிவப்பு ஸ்கெட்ச்சால் எனது கருத்துகளைப் பதிவுசெய்யும் பழக்கம் எனக்கிருந்தது. எனது முதல் நூல் மதிப்புரை இப்படித்தான் உருப்பெற்றது. சில கதைப் புத்தகங்களில் கதைகளின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனால் கத்தரித்த வெள்ளைத் தாளை அதன் மேல் ஒட்டி மாற்று முடிவை எழுதும் பழக்கமும் அப்போதே எனக்கிருந்தது.
வேறு எந்தத் தொழிலும் சரியாகத் தெரியாததால் எழுதியே ஆக வேண்டிய நிலை. எழுதும் தொழில் சரியாகத் தெரியக் கூடாது என்கிற இனிய நிர்ப்பந்தம் வேறு!

கே: 
சுயமொழி என்கிற பெயரில் நீங்கள் பொன்மொழிகள் எழுதுவதாக குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே?
பேயோன்: (சிரிக்கிறார்) பொன்மொழி எழுதாத எழுத்தாளர்கள் யார்? எழுத்தாளர்கள் மேதமையைக் காட்டிக்கொள்ளும் முனைப்பிற்கும் வாசகனுக்கும் பொன்மொழிகளே பாலமாகும். எழுத்தாளர்கள் ‘என் பொன்மொழிகள்’ என்று தனி புத்தகமாகப் போட்டுக்கொள்ளக் கூச்சப்பட்டாலும் தங்கள் படைப்புகளிடையே அவற்றை நுழைத்து ‘இந்த வாக்கியம் நன்றாக அமைந்திருக்கிறது, அடியில் “-” போட்டு quote பண்ணுவார்கள்’ என்று திருப்தியடைவது வழக்கம். எனது படைப்புகளிலேயே சந்தடி சாக்கில் தத்துவ முத்துக்கள் உதிர்க்கப்பட்டிருக்கும். நானும் என் பங்குக்குப் பொன்மொழிகளாகவே சிலவற்றை எழுதியுள்ளேன். ஆனால் ஒரு எச்சரிக்கை: பொன்மொழிகளுக்கு வாசகர்களை மதிக்கத் தெரியாது. அறிவுரை அளிக்கும் மிதப்போ என்னவோ, எப்போதும் ஏக வசனம்தான். பிடித்திருந்தால் பரப்பவும்.

கே: 
வாசகர்களுடனான உங்கள் அனுபவம் பற்றி?

பேயோன்: என் மகன் கெட்ட வார்த்தை பேசக் கேட்டு அவனைக் கண்டித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் வாசகர் ஒருவர் (எனக்கு நண்பர்களைவிட வாசகர்கள் மிகுதி) என் வீட்டு வாசற்படியில் அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்தார். நான் என் மகனைத் திருத்துவதைப் பார்த்து அவருக்கு ஆச்சரியம் பற்றிக்கொண்டது. நான் மட்டும் பேச்சிலும் எழுத்திலும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா என்பது அவர் கேள்வி.

நான் “வாங்க வாங்க” என வரவேற்றபடியே அவருக்கு என் குழந்தை வளர்ப்புக் கொள்கையை விளக்கினேன். கெட்ட வார்த்தை மட்டுமல்ல, பொய் பேசுதல், உண்மை பேசுதல், சூது-வாது ஆகியவை மரணம் போல குழந்தைகள் செய்யக் கூடாத காரியங்கள். இவைகளை நாம் செய்கிறோம் என்றால் நமக்குத் தெரியும் நாம் ஏன் செய்கிறோம் என்று. ஏண்டா இப்படிச் செய்தாய் என்று கேட்கப்படும்போது மனசாட்சிக்கு விரோதமாகவோ விரோதமில்லாமலோ விளக்கம் கொடுக்க நமக்குத் தெரிகிறது. குழந்தைகளுக்குத் தெரியுமா? கேட்டவர் தெளிந்தார்.

என்னை பார்க்க வருபவர்கள் கவிதை தொகுப்பு தருகிறார்களே தவிர தின்பதற்கு எதுவும் வாங்கிவருவதில்லை. கூச்சம் கருதாமல் கேட்டால் சிரிக்கிறார்கள்.

கே: உங்கள் எழுத்தில் ஆணாதிக்கம் தாண்டவமாடுவதாக விமர்சன்ங்கள் இருக்கிறதே அதை அப்படி எதிர் கொள்ளுகிறீர்கள்?


பேயோன்: ( அடுக்களைக்குள் எட்டிப்பார்த்து கொஞ்சம் உஷாராகி கொள்கிறார், வலது கையால் இடது மேவாயை தடவியபடி) முதலில், ஆண் ஏன் ஆதிக்கம் செலுத்தக்கூடாது? ஆளுவதில் பெண்ணுக்குள்ள உரிமை ஆணுக்கும் உள்ளதுதானே? என்று நாம் தர்க்கத்திற்காவது கேட்டுக்கொள்ளலாம். இன்று கல்வித், தொழில்துறை, மருத்துவம், கலை-இலக்கியம், அரசியல், அறிவியல்-தொழில்நுட்பம், குற்றம் என எங்குமெதிலும் பெண்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இருப்பது போல் பெண் எழுத்தாளர்களும் கவிஞர்கள் இருப்பது போல் பெண் கவிஞர்களும் இன்றைக்கு உருவாகிவிட்டார்கள் (அதுவும் ஔவையார் வகையறா அல்ல, பாப்லோ நெரூடா வகையறா). சமூக அதிகாரப் பகிர்வில் 95-05 என்ற பங்குநிலை மாறி 60-40 என்று கிட்டத்தட்டிய சமநிலை அடையப்பட்டுள்ளது. இதை நேர்மையான பின்ஆணாதிக்கவியல்வாதிகள் (feminists) யாரும் மறுக்க முடியாது.

கே: காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பேயோன்: காதல் மனித ஆயுளைப் போன்றது. அதனால் ஒரு வாழ்நாள் காலம் நீடிக்கவும் முடியும், நொடியில் மறைந்துவிடவும் முடியும். அது எவ்வளவு வலுவானதோ அந்தளவிற்குப் பலவீனமானது. சுயங்கள் அழிந்து ஒரு கூட்டுச் சுயம் பிறக்குமிடம் காதல். சுதந்திரம், தனிநபரியம் போன்ற விசயங்களுக்குக் காதலில் இடமில்லை. காதலுக்கும் மரணத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. அது போல காதலையும் காமத்தையும் பிரிக்கும் கோடு மிக மெல்லியது. காதலைவிட சுவாரசியமான ஒரு விசயம் உண்டென்றால் அது காமம்தான். காமம் மட்டும் காதலைவிட நீண்டகாலம் நீடிக்கிற ஒன்றாக இருந்தால் காமத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கும். காதலைப் பற்றி அடுத்த புத்தகக் கண்காட்சி வரை எழுதிக்கொண்டேயிருக்கலாம். ஆனால் இந்த உணர்வைப் பற்றி தாஸ்தாயெவ்ஸ்கிவும் டர்ஜெனிவும் மார்க்வெஸும் சொல்லாத எதையும் நான் சொல்லிவிடப்போவதில்லை.

கே: ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்?

பேயோன்:
சட்டைப்பையில் பேனா இல்லாமல் நான் வெளியே போவதில்லை. திடீரென யாராவது ‘வாசகர்’ –  ரசிகர் – எதிரில் வந்து புத்தகத்திலோ துண்டுச் சீட்டிலோ ஆட்டோகிராப் கேட்டால் புன்னகையுடன் கையொப்பமிட்டுத் தர பேனா இருக்காமல் போவது எழுத்தாளனுக்கு அசிங்கம். செய்கிற வேலையெல்லாம் கணிப்பொறி விசைப்பலகையில்தான். இருந்தாலும் எழுத்துத் தொழிலுக்குப் பேனா ஒரு மகத்தான குறியீடு என்பதால் அதை நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறேன். காசோலையில் கையெழுத்துப் போடவும் பேனா இன்றியமையாதது.
கே: நீங்கள் தொடர்ந்து கவிதைகள் எழுதுபவர். கவிதைகள், மற்றும் தற்கால கவிஞர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு?

பேயோன்:
வெகுஜன அழகியலில் பொய்க்கு இடமிருப்பதை நாமே பார்த்திருக்கிறோம். கவிதைக்குப் பொய் அழகு என்பது பாடம். “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே”யின் நீட்சி அந்தக் கூற்று. ஆக, பொய்யை தார்மீக காரணங்களுக்காகவிற்குப் பதிலாக அழகியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவது தவறல்ல என்றாகிறது. Truth is beauty என்றார் கீட்ஸ். அவரும் அதைப் பொய்யினால் அழகாக்கப்பட்ட தனது கவிதையில் சொல்லியிருக்கிறார். சிலருக்குப் பொய் சொல்வதே தொழில். அதே போல முழுநேரக் கவிஞர்களும் இருக்கிறார்கள். (சிரிக்கிறார்)
கே: தற்போதைய எழுத்துச்சூழலில் உங்களை பற்றிய சுய அவதானிப்பாக எதை சொல்லுவீர்கள்?

பேயோன்: (நீண்ட நேர யோசனைக்குப்பிறகு) ப்ளீஸ்! நானும் உங்களைப் போன்று டீசன்ட்டானவன்தான். நானும்தான் கோல்ட்ஃப்ளேக் கிங்ஸ் பிடிக்கிறேன். நானும்தான் உங்களைப் போல ‘லாஜிக் இடிக்கிறது’ என்பதற்கு பதில் ‘தர்க்க இடிபாடுகளிடையே சிக்கியுள்ளது’ என்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டும் முன்னுக்கு வர முடியாதவன்தான்.

 
கே: விருதுகள் பற்றி உங்கள் அபிப்ராயம்?

பேயோன்: 
சமீபமாய் நிறைய விருதுகள் சேர்ந்துவிட்டன. ஒரு டெம்போ வைத்து தமிழக சுற்றுப்பயணம் சென்றால் அத்தனையையும் அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்.விருதுகள் என்னை மென்மையாக்கிவிட்டதாய் உணர்கிறேன். 5 ஆண்டுகளுக்குமுன் எல்லோரையும் மண்ணை வாரிப்போட்டு சபித்தபடி இருந்தது நினைவில் பசுமையாய்.
கே: தற்போது எழுதுபர்களில் யாரை  விரும்பி படிக்கிறீர்கள்?

பேயோன்: (சிறிது முகம் சிவக்கிறார்) யாராவது எதையாவது எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்றில்லை

 
கே: தொடர்ந்து உலகசினிமாக்கள் பார்த்து வருபவர் நீங்கள். சினிமா மீதான உங்கள் நேசம் பற்றி?
பேயோன்: நல்ல சினிமாக்களை பார்ப்பதில் நீண்டகால பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போது என்னால் ஒரு அறையின் எந்த மூலையிலிருந்தும் சினிமா பார்க்க முடியும்.
 
கே: இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பேயோன்: ஒரு நல்ல நாவலை எடுத்துக்கொண்டு அதன் மேல் ட்ரேசிங் பேப்பர் வைத்து கவனமாக எழுதுங்கள். உங்கள் எழுத்தின் தரம் வளரும்.

 
இறுதியாக, மிதமிஞ்சிய தன்னம்பிக்கையைக் கைகொள்ளுங்கள். அது என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சொத்து. எனக்கு எல்லாம் தெரியும் என முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து சொல்லிக்கொள்ளுங்கள். என்னைப் போல் எழுத அபிலாஷித்தால் உங்களை உலக எழுத்தாளர்களின் வரிசையில் ஒருவராக நினைத்துக்கொள்ள வேண்டும்.
“நோயுற்று” என்று எழுதக் கூடாது. அது தெளிவாக இருக்கும். “நோய்மையுற்று” என்று எழுத வேண்டும். அதுதான் கெத்தாக இருக்கும். (சிரிப்பு)
கே: வாசகர்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி?

பேயோன்:
 என்னால் முடியுமா என்று கேட்காதே. இவனால் முடிகிறதே என்று யோசி.
அடுத்த முறை ஒசாகா வரும்போது நீண்ட நேர்காணல் செய்யலாம் என்ற உத்தேசத்துடன் வணக்கம் கூறி விடைபெற்றோம். வாசல் வரை வந்து வழியனுப்பிய பேயோனின் முகம் என்றும் எங்களுக்கு நினைவில் நிற்கும்.

ஃபேஸ்புக்: லைக்குகளின் நுண்நுண்ண‌ரசியலும் கமென்டுகளின் மரண‌மும்

tamil advertising

ஹிட்லர் ஆட்சி காலத்தில் ஜெர்மன் சென்று திரும்பிய நாடகஆசிரிய ஃபிரெக்டிடம் நண்பர் அங்கே என்ன ஆட்சி செய்கிறது என்று கேட்டபோது “பயம் தான்” என்றாராம். அதுபோல இன்று கமென்டுகளும், லைக்குகளும் ஆட்சி செய்கிறது. ஆட்டிப்படைக்கிறது. இதை ஒட்டி ஃபேஸ்புக் மக்கள் சிலரை ஒரு ஆய்வு நிமித்தமாக சந்தித்தேன். இப்போதைக்கு ஆறு பேரின் வாக்குமூலங்கள்.


1
“என் பேரு அய்யப்பன் சார். என்னைக்கும் போல அன்னைக்கு உற்சாகமாதான் வீட்டுக்கு போனேன். பொண்டாட்டி முகம் குடுத்து பேசல. சாப்பாடு கேட்டா பிரட்டும் ஜாமும் கிச்சனில இருக்கு எடுத்து சாப்ப்டுக்கோண்ணு சொல்லிட்டா. படுக்கை நேரம், ரொமான்டிக்கா நான் லுக் உட்டா கண்ண நோண்டிடுற மாதிரி பாக்குறா. அட என்ன ஆச்சும்மான்னு கெஞ்சி கதறி கால்ல விழுந்தே கேட்டேன் சார். அப்புறம் தான் சொன்னா. அவ சமைக்கிற கேரட் அல்வா பத்தி நான் காமெடியா ஃபேஸ்புக்குல போன வருஷம் போட்ட ஸ்டேட்டஸ அவ அன்னைக்கு தான் பாத்திருக்காளாம். பொண்டாட்டிங்கள கலாய்ச்சு ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ் போட்டா கடுப்ப மன‌சுல அடக்கிகிட்டு திரியிற நம்ம ஆளுங்க மாஞ்சு மாஞ்சு லைக்கும் கமென்டும் போடுவாங்க சார். அதுக்காக தான் நான் ஒரே ஒரு தடவ அந்த ஒரு தடவதான் சார் அந்த ஸ்டேட்டஸ போட்டேன். ரெண்டு நாள் சோறு கிடைக்கல சார். ”
2
கையில் காப்பச்சீனோவுடன் அமர்ந்திருந்த இளைஞர் ” மை நேம் இஸ் குமாரசாமி சுப்ரமண்யம். ஒர்க்கிங் அட் சி.டி.எச். என்னோட பிரச்சன என்னன்னா காலையிலுருந்து ராத்திரி வரைக்கும் நான் என்ன பண்றேனோ அத‌ மொபைல்ல கிளிக் பண்ணி ஃபேஸ்புக்குல போடனும்ணு மனசு துடிக்குது சார். யூ நோ. என்ன பண்ணினாலும் உடனே போட்டோ எடுக்கணும் அத அப்லோட் பண்ணனும். என்னால கண்ட்றோல் பண்ணவே முடியல சார். நான் ரோட்டுல நடக்குறது, ஹோட்டல சாப்பிடறது. டீ குடிக்குறது. சரக்கு போட்டுட்டு தம் அடிக்கிறதுன்னு எல்லாத்தையும் போடணும் சார். ஆனா “சில” விஷயங்கள மட்டும் ஷேர் பண்ணவே முடியாதுன்னு நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சேடா இருக்கு சார். ஷேரிங் தான் சார் ஹாப்பி. பாருங்க சார் உங்க கிட்ட பேசுறதையும் அப்டியே போட்டோ எடுத்து போடப்போறேன் சார். தப்பா நினைச்சுகாதீங்க” என்று மொபைலை பக்கத்திருப்பவரிடம் கொடுத்து எங்கள் இருவரையும் போட்டோ எடுக்க சொல்லி விட்டு என் தோளோடு தோள் உரசிய படி கேமராவை பார்த்து சிரித்தார்.
3
முகமூடி அணிந்த அவர் என் முன்பாக வந்து உட்காந்தார் ” சார் என் பேர சொல்ல விரும்பல சார். ஏன்னா நான் ஃபேஸ்புக்குல இருக்கிறதே ஃபேக் ஐடில தான் சார். என் சொந்த பேருல தான் சார் நான் அக்கவுண்ட் வச்சிருந்தேன். டெய்லி எத்தனையோ ஸ்டேட்டஸ் எத்தனையோ போட்டோஸ் போட்டேன் சார். ஒரு பய மதிக்கலையே. கண்ட மேனிக்கு எவன் எவனுக்கோ டேக் பண்ணி விட்டா கூட பயபுள்ளைக திட்டிகிட்டே என்னை பிளாக் பண்ணிட்டானுங்க. எனக்கும் கமெண்டும், லைக்கும் கிடைக்குணும்னு ஆசை இருக்கும் தானே. நானும் மனுஷப்பய தானே சார். அப்புறம் தான் சார் இந்த ஃபேக் ஐடிய ஆரம்பிச்சேன். கண்ட இடத்துல கக்கா போற மாதிரி  பாக்கிற இடத்துல எல்லாம் ஏடாகூடமா கமென்ட் போடுறது. என்ன சப்ஜெக்ட்னாலும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா ஒரு எகத்தாள‌ ஸ்டேட்டச போடுறதுன்னு ஆரம்பிச்சேன். இப்போ ஃபேஸ்புக்குல நம்ம வண்டி நல்லா ஓடுது சார்”
4
மஞ்சள் ஒளியில் இருட்டு கலந்த வெளிச்சத்துடன் கொடுங்கனவில் வரும் ஒரு சீன் போல என் முன் வந்து அமர்ந்தார் ஒரு கவிஞ்ச‌ர்.
” இல்லப்பா இப்பெல்லாம் சட்டு சட்டுன்னு நடு ராத்திரி கூட முழிப்பு வந்து மன‌சு முழுக்க ஸ்டேட்டஸ் மெசேஜா ஓடுது. நேத்து கூட கனவில லைக் சிம்பல்கள் முறுக்கின முஷ்டியோட கூட்டமா தேனீ மாதிரி தொரத்தி கிட்டு வருது. நான் ஓடுறேன் ஓடுறேன் டைம்லைனின் எல்லைக்கே ஓடுறேன். இன்னொருத்தரோட ஸ்டேட்டஸ் மெசேஜ் பாக்ஸ் என் காலில் தட்டி தடுக்கி விழுறேன். முழிப்பு வந்திடுச்சு. விடலையே உடனே கம்ப்யூட்டர ஆன் பண்ணி ஒரு ஸ்டேட்டச போட்டேன். பிசாசுக்கூட்டம் போல அந்த நடு ராத்திரிலயும் எங்கெல்லாமோ முழிச்சுகிட்டுருக்கிற நம்ம மக்கள் உடனே ஒரு வண்டி கமென்ட் போடுறானுங்க. அத படிச்சே டயர்டாயி தூங்கிட்டேன்னா பாத்துகோயேன். முன்பெல்லாம் கவிதைக்கான தருணம்னு ஒண்ணு வரும் அதுக்காக காத்து கிட்டு இருப்பேன். மனசுக்குள்ள அதுவா ஒரு கசப்போ, இனிப்போ, துவர்ப்போ திரண்டு வரும் அப்டியே கப்புன்னு பிடிச்சுட்டு “நீரடியில் அலைவுறும் உன் முகம் ஒரு புராதனக்கூழாங்கல் போல அசைவற்று கிடக்கிறது” என்பது மாதிரி ஏதோ எழுதி ஏதாவது சிறுபத்திரிகைக்கோ குறுபத்திரிகைக்கோ அனுப்புவேன். பிரசுரமாயி (ஆனா)  வாசக எதிர்வினை (எப்பவாவது) வரதுக்கு ஒரு சில மாசங்களாவது ஆகும். ஆனா இந்த பாழாப்போன ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டா பத்து செகண்ட்ல நூறு கமென்ட் கிடைக்குதா. அணு  பிரச்சனையிலிருந்து என் வாசகி அனுவோட‌ பிரச்சினை வரைக்கும் எல்லாத்தையும் மெசேஜா போட மனசு அடிச்சுக்குது. இதிலிருந்து எப்போது மனவிடுதலையோ” என்று கவித்துவமாக அலுத்து கொண்டிருந்த போதே டிவியில் ஒரு நியூசை பாத்ததும் அதை பற்றி ஒரு ஸ்டேட்டஸ் போடலாம் என்கிற அவசரத்தில் கணிணியை நோக்கி அனிச்சையாக திரும்பினார்.
5
ரோட்டோரமாக அவரை சந்தித்த போது அங்கே ட்ராபிக் போலீஸ் நிக்கிறாங்க நாம அந்த சந்துக்குள்ள போய் பேசுவோம் என்றார். நம்ம ரெண்டு பேர் கிட்ட தான் வண்டி எதுவும் இல்லையே அப்புறம் எதுக்கு ட்ராபிக் போலீசப்பாத்து பயப்படுறீங்கண்ணு கேட்டா சின்ன வயசிலிருந்தே போலீசுன்னா எனக்கு பயம் தோழர்  அது ட்ராபிக் போலீசா இருந்தாலும் கூட. சொல்லி விட்டு ஆரம்பித்தார் ” தோழர் நான் தான் ஃபேஸ்புக்குல புரட்சிகுத்து என்கிற பெயரில் சமூக அவலங்களை பற்றி சாட்டையடியாக அதிகாரத்தை நோக்கி கேள்விக்கணைகளை தொடுப்பவன். என்ன தோழர் இங்கே அரசியல் நடக்குது. ஒருத்தன் கூட உருப்படியா அரசியல் பண்ணல தோழர். என்ன‌ மாதிரி நாலு பேரு கம்யூட்டர் முன்னாடி நெஞ்ச நிமித்தி இப்படி ஸ்டேட்டசுகள் போட்டாதான் தோழர் சமூகத்துல ஒரு புரட்சி வரும். என்னோட இந்த ஸ்டேட்டசுகளை தொகுத்தாலே கார்ல்மார்க்ஸோட கம்மூனிஸ்ட் மானிஃபெஸ்டோவ விட பெரிய தொகுப்பா அது இருக்கும் தோழர். எப்படியாவது ஸ்டேட்டஸ் போட்டு போட்டு புரட்சியை உருவாக்கணும் தோழர். அது பத்திக்கும் தோழர்.  காரல் மார்க்ஸ் இருந்திருந்தா என் கமென்டுக்கெல்லாம் முத ஆளா அவர் தான் லைக் போடுவாருன்னு எனக்கு தெரியும். நீங்க வேணும்னா பாருங்க ஃபேஸ்புக்கு வழியாவே புரட்சி வெடிக்கும்.” என்றவர் அருகிலிருந்த கேட் பக்கத்தில் செக்யூரிட்டியை பார்த்து டென்ஷனானார். தோழர் அது போலீஸ் இல்ல செக்யூரிட்டி என்றதும் கொஞ்சம் முகம் தெளிந்தார். அரச பயங்கரவாதத்துக்கு எதிரான அவருடைய ஸ்டேட்டஸ் மெசேஜுகளை நினைத்து கொண்டேன்.
6
அடுத்து ஒரு பிரபல ஸ்டேட்டஸ் மெசேஜர் எதிரில் நான் நின்றிருந்தேன்.
” மை நேம் இஸ் ராஜ் அதிசயராஜ். இப்படி தான் சந்தோஷ் என் ஸ்டேட்டஸ் மெசேஜுகளும் இருக்கும். எல்லாத்தையும் கலாய்க்கிற மாதிரியே கமென்ட் போடுறது, அதிரடியா பதறடிக்கிறது, கன்ட இடத்துலையும் வந்து என் மண்டைய நுழைக்கிறது, ஆஃப்ஆயில் தனமா ஆர்குயுமென்ட் பண்றது  இதெல்லாம் எனக்கு ஃபேஸ்புக் பொழுதுபோக்கு. கக்கூசிலிருந்து கட்டில் வரைக்கும் என் கைகள் பிளாக்பெரி க்வொர்கி கீபோர்டில் தானா மெசேஜ் போட்டுகிட்டே இருக்கும். உங்களையும் கலாய்ப்பேன், அவங்களையும் கலாய்ப்பேன் சமயத்துல என்னையும் கலாய்ப்பேன். இப்படி கலாய்த்து கலாய்த்து எத கலாய்கிறது எத கலாய்க்காம இருக்கிரதுன்னு தெரியாம அதையும் கலாய்த்து ஒரு மெசேஜ் போடுவேன் ஒடனே அத கலாய்ச்சு அவனவன் கமென்ட் போடுவானுங்கோவ். அதையும் கலாய்ப்பேன். ஒரு ரகசியம் சொல்றேன் சார் எல்லாத்தையும் கலாய்க்கிற மாரி ஈசியான ஜாப் வேற கெடையாது. அது மட்டுமில்ல இந்த ஹூமர் சென்ஸ் இருக்கே அத மெயின்டன் பண்ணுறது தான் ரொம்ப கஷ்டம். எத பத்தி ஸ்டேட்டஸ் போட்டாலும் அதுல ஒரு ஹூமர் டச் இருக்கணும்னு நான் படுற கஷ்டம் இருக்கே. அத தனே மக்களும் எதிர்பாக்கானுங்க. நாம போடுற ஸ்டேடஸ்ல ரொம்ப அப்பாவித்தனமான‌ புத்திசாலித்தனம் ரொம்ப ரொம்ப முக்கியம்” என்ற படி பைக்கை மிதித்து கிளம்பினார்.