ஃபேஸ்புக்: லைக்குகளின் நுண்நுண்ண‌ரசியலும் கமென்டுகளின் மரண‌மும்

October 5, 2012 at 7:18 pm 1 comment

ஹிட்லர் ஆட்சி காலத்தில் ஜெர்மன் சென்று திரும்பிய நாடகஆசிரிய ஃபிரெக்டிடம் நண்பர் அங்கே என்ன ஆட்சி செய்கிறது என்று கேட்டபோது “பயம் தான்” என்றாராம். அதுபோல இன்று கமென்டுகளும், லைக்குகளும் ஆட்சி செய்கிறது. ஆட்டிப்படைக்கிறது. இதை ஒட்டி ஃபேஸ்புக் மக்கள் சிலரை ஒரு ஆய்வு நிமித்தமாக சந்தித்தேன். இப்போதைக்கு ஆறு பேரின் வாக்குமூலங்கள்.


1
“என் பேரு அய்யப்பன் சார். என்னைக்கும் போல அன்னைக்கு உற்சாகமாதான் வீட்டுக்கு போனேன். பொண்டாட்டி முகம் குடுத்து பேசல. சாப்பாடு கேட்டா பிரட்டும் ஜாமும் கிச்சனில இருக்கு எடுத்து சாப்ப்டுக்கோண்ணு சொல்லிட்டா. படுக்கை நேரம், ரொமான்டிக்கா நான் லுக் உட்டா கண்ண நோண்டிடுற மாதிரி பாக்குறா. அட என்ன ஆச்சும்மான்னு கெஞ்சி கதறி கால்ல விழுந்தே கேட்டேன் சார். அப்புறம் தான் சொன்னா. அவ சமைக்கிற கேரட் அல்வா பத்தி நான் காமெடியா ஃபேஸ்புக்குல போன வருஷம் போட்ட ஸ்டேட்டஸ அவ அன்னைக்கு தான் பாத்திருக்காளாம். பொண்டாட்டிங்கள கலாய்ச்சு ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ் போட்டா கடுப்ப மன‌சுல அடக்கிகிட்டு திரியிற நம்ம ஆளுங்க மாஞ்சு மாஞ்சு லைக்கும் கமென்டும் போடுவாங்க சார். அதுக்காக தான் நான் ஒரே ஒரு தடவ அந்த ஒரு தடவதான் சார் அந்த ஸ்டேட்டஸ போட்டேன். ரெண்டு நாள் சோறு கிடைக்கல சார். ”
2
கையில் காப்பச்சீனோவுடன் அமர்ந்திருந்த இளைஞர் ” மை நேம் இஸ் குமாரசாமி சுப்ரமண்யம். ஒர்க்கிங் அட் சி.டி.எச். என்னோட பிரச்சன என்னன்னா காலையிலுருந்து ராத்திரி வரைக்கும் நான் என்ன பண்றேனோ அத‌ மொபைல்ல கிளிக் பண்ணி ஃபேஸ்புக்குல போடனும்ணு மனசு துடிக்குது சார். யூ நோ. என்ன பண்ணினாலும் உடனே போட்டோ எடுக்கணும் அத அப்லோட் பண்ணனும். என்னால கண்ட்றோல் பண்ணவே முடியல சார். நான் ரோட்டுல நடக்குறது, ஹோட்டல சாப்பிடறது. டீ குடிக்குறது. சரக்கு போட்டுட்டு தம் அடிக்கிறதுன்னு எல்லாத்தையும் போடணும் சார். ஆனா “சில” விஷயங்கள மட்டும் ஷேர் பண்ணவே முடியாதுன்னு நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சேடா இருக்கு சார். ஷேரிங் தான் சார் ஹாப்பி. பாருங்க சார் உங்க கிட்ட பேசுறதையும் அப்டியே போட்டோ எடுத்து போடப்போறேன் சார். தப்பா நினைச்சுகாதீங்க” என்று மொபைலை பக்கத்திருப்பவரிடம் கொடுத்து எங்கள் இருவரையும் போட்டோ எடுக்க சொல்லி விட்டு என் தோளோடு தோள் உரசிய படி கேமராவை பார்த்து சிரித்தார்.
3
முகமூடி அணிந்த அவர் என் முன்பாக வந்து உட்காந்தார் ” சார் என் பேர சொல்ல விரும்பல சார். ஏன்னா நான் ஃபேஸ்புக்குல இருக்கிறதே ஃபேக் ஐடில தான் சார். என் சொந்த பேருல தான் சார் நான் அக்கவுண்ட் வச்சிருந்தேன். டெய்லி எத்தனையோ ஸ்டேட்டஸ் எத்தனையோ போட்டோஸ் போட்டேன் சார். ஒரு பய மதிக்கலையே. கண்ட மேனிக்கு எவன் எவனுக்கோ டேக் பண்ணி விட்டா கூட பயபுள்ளைக திட்டிகிட்டே என்னை பிளாக் பண்ணிட்டானுங்க. எனக்கும் கமெண்டும், லைக்கும் கிடைக்குணும்னு ஆசை இருக்கும் தானே. நானும் மனுஷப்பய தானே சார். அப்புறம் தான் சார் இந்த ஃபேக் ஐடிய ஆரம்பிச்சேன். கண்ட இடத்துல கக்கா போற மாதிரி  பாக்கிற இடத்துல எல்லாம் ஏடாகூடமா கமென்ட் போடுறது. என்ன சப்ஜெக்ட்னாலும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா ஒரு எகத்தாள‌ ஸ்டேட்டச போடுறதுன்னு ஆரம்பிச்சேன். இப்போ ஃபேஸ்புக்குல நம்ம வண்டி நல்லா ஓடுது சார்”
4
மஞ்சள் ஒளியில் இருட்டு கலந்த வெளிச்சத்துடன் கொடுங்கனவில் வரும் ஒரு சீன் போல என் முன் வந்து அமர்ந்தார் ஒரு கவிஞ்ச‌ர்.
” இல்லப்பா இப்பெல்லாம் சட்டு சட்டுன்னு நடு ராத்திரி கூட முழிப்பு வந்து மன‌சு முழுக்க ஸ்டேட்டஸ் மெசேஜா ஓடுது. நேத்து கூட கனவில லைக் சிம்பல்கள் முறுக்கின முஷ்டியோட கூட்டமா தேனீ மாதிரி தொரத்தி கிட்டு வருது. நான் ஓடுறேன் ஓடுறேன் டைம்லைனின் எல்லைக்கே ஓடுறேன். இன்னொருத்தரோட ஸ்டேட்டஸ் மெசேஜ் பாக்ஸ் என் காலில் தட்டி தடுக்கி விழுறேன். முழிப்பு வந்திடுச்சு. விடலையே உடனே கம்ப்யூட்டர ஆன் பண்ணி ஒரு ஸ்டேட்டச போட்டேன். பிசாசுக்கூட்டம் போல அந்த நடு ராத்திரிலயும் எங்கெல்லாமோ முழிச்சுகிட்டுருக்கிற நம்ம மக்கள் உடனே ஒரு வண்டி கமென்ட் போடுறானுங்க. அத படிச்சே டயர்டாயி தூங்கிட்டேன்னா பாத்துகோயேன். முன்பெல்லாம் கவிதைக்கான தருணம்னு ஒண்ணு வரும் அதுக்காக காத்து கிட்டு இருப்பேன். மனசுக்குள்ள அதுவா ஒரு கசப்போ, இனிப்போ, துவர்ப்போ திரண்டு வரும் அப்டியே கப்புன்னு பிடிச்சுட்டு “நீரடியில் அலைவுறும் உன் முகம் ஒரு புராதனக்கூழாங்கல் போல அசைவற்று கிடக்கிறது” என்பது மாதிரி ஏதோ எழுதி ஏதாவது சிறுபத்திரிகைக்கோ குறுபத்திரிகைக்கோ அனுப்புவேன். பிரசுரமாயி (ஆனா)  வாசக எதிர்வினை (எப்பவாவது) வரதுக்கு ஒரு சில மாசங்களாவது ஆகும். ஆனா இந்த பாழாப்போன ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டா பத்து செகண்ட்ல நூறு கமென்ட் கிடைக்குதா. அணு  பிரச்சனையிலிருந்து என் வாசகி அனுவோட‌ பிரச்சினை வரைக்கும் எல்லாத்தையும் மெசேஜா போட மனசு அடிச்சுக்குது. இதிலிருந்து எப்போது மனவிடுதலையோ” என்று கவித்துவமாக அலுத்து கொண்டிருந்த போதே டிவியில் ஒரு நியூசை பாத்ததும் அதை பற்றி ஒரு ஸ்டேட்டஸ் போடலாம் என்கிற அவசரத்தில் கணிணியை நோக்கி அனிச்சையாக திரும்பினார்.
5
ரோட்டோரமாக அவரை சந்தித்த போது அங்கே ட்ராபிக் போலீஸ் நிக்கிறாங்க நாம அந்த சந்துக்குள்ள போய் பேசுவோம் என்றார். நம்ம ரெண்டு பேர் கிட்ட தான் வண்டி எதுவும் இல்லையே அப்புறம் எதுக்கு ட்ராபிக் போலீசப்பாத்து பயப்படுறீங்கண்ணு கேட்டா சின்ன வயசிலிருந்தே போலீசுன்னா எனக்கு பயம் தோழர்  அது ட்ராபிக் போலீசா இருந்தாலும் கூட. சொல்லி விட்டு ஆரம்பித்தார் ” தோழர் நான் தான் ஃபேஸ்புக்குல புரட்சிகுத்து என்கிற பெயரில் சமூக அவலங்களை பற்றி சாட்டையடியாக அதிகாரத்தை நோக்கி கேள்விக்கணைகளை தொடுப்பவன். என்ன தோழர் இங்கே அரசியல் நடக்குது. ஒருத்தன் கூட உருப்படியா அரசியல் பண்ணல தோழர். என்ன‌ மாதிரி நாலு பேரு கம்யூட்டர் முன்னாடி நெஞ்ச நிமித்தி இப்படி ஸ்டேட்டசுகள் போட்டாதான் தோழர் சமூகத்துல ஒரு புரட்சி வரும். என்னோட இந்த ஸ்டேட்டசுகளை தொகுத்தாலே கார்ல்மார்க்ஸோட கம்மூனிஸ்ட் மானிஃபெஸ்டோவ விட பெரிய தொகுப்பா அது இருக்கும் தோழர். எப்படியாவது ஸ்டேட்டஸ் போட்டு போட்டு புரட்சியை உருவாக்கணும் தோழர். அது பத்திக்கும் தோழர்.  காரல் மார்க்ஸ் இருந்திருந்தா என் கமென்டுக்கெல்லாம் முத ஆளா அவர் தான் லைக் போடுவாருன்னு எனக்கு தெரியும். நீங்க வேணும்னா பாருங்க ஃபேஸ்புக்கு வழியாவே புரட்சி வெடிக்கும்.” என்றவர் அருகிலிருந்த கேட் பக்கத்தில் செக்யூரிட்டியை பார்த்து டென்ஷனானார். தோழர் அது போலீஸ் இல்ல செக்யூரிட்டி என்றதும் கொஞ்சம் முகம் தெளிந்தார். அரச பயங்கரவாதத்துக்கு எதிரான அவருடைய ஸ்டேட்டஸ் மெசேஜுகளை நினைத்து கொண்டேன்.
6
அடுத்து ஒரு பிரபல ஸ்டேட்டஸ் மெசேஜர் எதிரில் நான் நின்றிருந்தேன்.
” மை நேம் இஸ் ராஜ் அதிசயராஜ். இப்படி தான் சந்தோஷ் என் ஸ்டேட்டஸ் மெசேஜுகளும் இருக்கும். எல்லாத்தையும் கலாய்க்கிற மாதிரியே கமென்ட் போடுறது, அதிரடியா பதறடிக்கிறது, கன்ட இடத்துலையும் வந்து என் மண்டைய நுழைக்கிறது, ஆஃப்ஆயில் தனமா ஆர்குயுமென்ட் பண்றது  இதெல்லாம் எனக்கு ஃபேஸ்புக் பொழுதுபோக்கு. கக்கூசிலிருந்து கட்டில் வரைக்கும் என் கைகள் பிளாக்பெரி க்வொர்கி கீபோர்டில் தானா மெசேஜ் போட்டுகிட்டே இருக்கும். உங்களையும் கலாய்ப்பேன், அவங்களையும் கலாய்ப்பேன் சமயத்துல என்னையும் கலாய்ப்பேன். இப்படி கலாய்த்து கலாய்த்து எத கலாய்கிறது எத கலாய்க்காம இருக்கிரதுன்னு தெரியாம அதையும் கலாய்த்து ஒரு மெசேஜ் போடுவேன் ஒடனே அத கலாய்ச்சு அவனவன் கமென்ட் போடுவானுங்கோவ். அதையும் கலாய்ப்பேன். ஒரு ரகசியம் சொல்றேன் சார் எல்லாத்தையும் கலாய்க்கிற மாரி ஈசியான ஜாப் வேற கெடையாது. அது மட்டுமில்ல இந்த ஹூமர் சென்ஸ் இருக்கே அத மெயின்டன் பண்ணுறது தான் ரொம்ப கஷ்டம். எத பத்தி ஸ்டேட்டஸ் போட்டாலும் அதுல ஒரு ஹூமர் டச் இருக்கணும்னு நான் படுற கஷ்டம் இருக்கே. அத தனே மக்களும் எதிர்பாக்கானுங்க. நாம போடுற ஸ்டேடஸ்ல ரொம்ப அப்பாவித்தனமான‌ புத்திசாலித்தனம் ரொம்ப ரொம்ப முக்கியம்” என்ற படி பைக்கை மிதித்து கிளம்பினார்.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , .

இது காதல் கதை மட்டுமேயல்ல! நேர்காணல்: பேயோன் (சமகால எழுத்தாளர்)

1 Comment Add your own

  • 1. cox dravid  |  October 17, 2012 at 7:04 pm

    உங்கள் எல்லோருக்கும் ஒரு சந்தோஷ செய்தி! ஃபேஸ் புக்கும்,ப்ளாகும் தான் ஒபாமாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கியதில் பெரும்பங்கு வகித்தன!(பிசினெஸ் வேர்ல்டில் நான் வசித்துத் தெரிந்து கொண்டது!அந்தப் பிரதியின் விவரம் பிறகு சொல்கிறேன் Business world வலைத்தளத்தில் ஆர்கிவ்ஸ் பகுதியில் இல் தேடிக்கொள்ளவும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

October 2012
M T W T F S S
« Sep   Nov »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: