நேர்காணல்: பேயோன் (சமகால எழுத்தாளர்)

October 17, 2012 at 1:10 am 5 comments

ஒரு விளம்பர படம் சம்பந்தமாக ஒசாகா வருவது பற்றியும். சனி மாலை சந்திக்க முடியுமா என்றும் பேயோனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். ஒரு திரைக்கதை விவாதத்தில் சற்று பிசியாக இருப்பதால் ஞாயிறு காலை வீட்டிற்கு வருமாறு பதில் அனுப்பி இருந்தார். காமரா எடுத்துவரவும் போட்டோ எடுக்கவும் முதலிலேயே மறுப்பு தெரிவித்து இருந்தார். ஞாயிறு காலை நான் நண்பன் ஆனந்துடன் அவர் வீட்டில் ஆஜராகி இருந்தோம். ஜப்பானிய அழகியலில் உருவாக்கப்படிருந்த தாள்தள மேஜையில் ஒரு ஓரமாக விகடன் முகவரியிட்ட பிரவுன் கவர் ஒன்று கிடந்தது. பேயோன் பக்கங்களை எழுதி உறையிட்டிருப்பார் என்பதை சிந்தித்தபடி அமர்ந்திருந்தோம். தேனீருடன் ஆரம்பமானது உரையாடல். நாங்கள் கேட்ட மொக்கை கேள்விகளுக்கு பேயோன் அவருக்கே உரித்தான  நடையில் பதிலளித்தார். நேரன்மின்மையின் காரணமாக இச்சிறு நேர்காணலை மட்டுமே தற்போது பதிவு செய்ய முடிந்தது. 

கேள்வி: உங்களுக்குள் எழுத்து மேல் ஈடுபாடு வந்தது எப்படி?

பேயோன்: எனது பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத அனுபவங்களை எனது பள்ளி நூலகம் எனக்குத் தந்தது. தொலைக்காட்சித் தொடர் வசதி எங்கள் கிராமத்திற்கு இன்னும் வந்தபாடில்லாத காலகட்டம் அது. பள்ளி முடிந்தபின் ஓணான் அடிக்க சக பிள்ளைகள் ஓடுகையில் என் போன்ற வெகு சிலர் பள்ளி நூலகத்தில் தஞ்சம் புகுவோம்.

நான் படிக்கும் புத்தகங்களில் தென்படும் சுவாரசியமான வாக்கியங்களை கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் வட்டமிட்டு அதனருகே மார்ஜினில் சிவப்பு ஸ்கெட்ச்சால் எனது கருத்துகளைப் பதிவுசெய்யும் பழக்கம் எனக்கிருந்தது. எனது முதல் நூல் மதிப்புரை இப்படித்தான் உருப்பெற்றது. சில கதைப் புத்தகங்களில் கதைகளின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனால் கத்தரித்த வெள்ளைத் தாளை அதன் மேல் ஒட்டி மாற்று முடிவை எழுதும் பழக்கமும் அப்போதே எனக்கிருந்தது.
வேறு எந்தத் தொழிலும் சரியாகத் தெரியாததால் எழுதியே ஆக வேண்டிய நிலை. எழுதும் தொழில் சரியாகத் தெரியக் கூடாது என்கிற இனிய நிர்ப்பந்தம் வேறு!

கே: 
சுயமொழி என்கிற பெயரில் நீங்கள் பொன்மொழிகள் எழுதுவதாக குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே?
பேயோன்: (சிரிக்கிறார்) பொன்மொழி எழுதாத எழுத்தாளர்கள் யார்? எழுத்தாளர்கள் மேதமையைக் காட்டிக்கொள்ளும் முனைப்பிற்கும் வாசகனுக்கும் பொன்மொழிகளே பாலமாகும். எழுத்தாளர்கள் ‘என் பொன்மொழிகள்’ என்று தனி புத்தகமாகப் போட்டுக்கொள்ளக் கூச்சப்பட்டாலும் தங்கள் படைப்புகளிடையே அவற்றை நுழைத்து ‘இந்த வாக்கியம் நன்றாக அமைந்திருக்கிறது, அடியில் “-” போட்டு quote பண்ணுவார்கள்’ என்று திருப்தியடைவது வழக்கம். எனது படைப்புகளிலேயே சந்தடி சாக்கில் தத்துவ முத்துக்கள் உதிர்க்கப்பட்டிருக்கும். நானும் என் பங்குக்குப் பொன்மொழிகளாகவே சிலவற்றை எழுதியுள்ளேன். ஆனால் ஒரு எச்சரிக்கை: பொன்மொழிகளுக்கு வாசகர்களை மதிக்கத் தெரியாது. அறிவுரை அளிக்கும் மிதப்போ என்னவோ, எப்போதும் ஏக வசனம்தான். பிடித்திருந்தால் பரப்பவும்.

கே: 
வாசகர்களுடனான உங்கள் அனுபவம் பற்றி?

பேயோன்: என் மகன் கெட்ட வார்த்தை பேசக் கேட்டு அவனைக் கண்டித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் வாசகர் ஒருவர் (எனக்கு நண்பர்களைவிட வாசகர்கள் மிகுதி) என் வீட்டு வாசற்படியில் அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்தார். நான் என் மகனைத் திருத்துவதைப் பார்த்து அவருக்கு ஆச்சரியம் பற்றிக்கொண்டது. நான் மட்டும் பேச்சிலும் எழுத்திலும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா என்பது அவர் கேள்வி.

நான் “வாங்க வாங்க” என வரவேற்றபடியே அவருக்கு என் குழந்தை வளர்ப்புக் கொள்கையை விளக்கினேன். கெட்ட வார்த்தை மட்டுமல்ல, பொய் பேசுதல், உண்மை பேசுதல், சூது-வாது ஆகியவை மரணம் போல குழந்தைகள் செய்யக் கூடாத காரியங்கள். இவைகளை நாம் செய்கிறோம் என்றால் நமக்குத் தெரியும் நாம் ஏன் செய்கிறோம் என்று. ஏண்டா இப்படிச் செய்தாய் என்று கேட்கப்படும்போது மனசாட்சிக்கு விரோதமாகவோ விரோதமில்லாமலோ விளக்கம் கொடுக்க நமக்குத் தெரிகிறது. குழந்தைகளுக்குத் தெரியுமா? கேட்டவர் தெளிந்தார்.

என்னை பார்க்க வருபவர்கள் கவிதை தொகுப்பு தருகிறார்களே தவிர தின்பதற்கு எதுவும் வாங்கிவருவதில்லை. கூச்சம் கருதாமல் கேட்டால் சிரிக்கிறார்கள்.

கே: உங்கள் எழுத்தில் ஆணாதிக்கம் தாண்டவமாடுவதாக விமர்சன்ங்கள் இருக்கிறதே அதை அப்படி எதிர் கொள்ளுகிறீர்கள்?


பேயோன்: ( அடுக்களைக்குள் எட்டிப்பார்த்து கொஞ்சம் உஷாராகி கொள்கிறார், வலது கையால் இடது மேவாயை தடவியபடி) முதலில், ஆண் ஏன் ஆதிக்கம் செலுத்தக்கூடாது? ஆளுவதில் பெண்ணுக்குள்ள உரிமை ஆணுக்கும் உள்ளதுதானே? என்று நாம் தர்க்கத்திற்காவது கேட்டுக்கொள்ளலாம். இன்று கல்வித், தொழில்துறை, மருத்துவம், கலை-இலக்கியம், அரசியல், அறிவியல்-தொழில்நுட்பம், குற்றம் என எங்குமெதிலும் பெண்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இருப்பது போல் பெண் எழுத்தாளர்களும் கவிஞர்கள் இருப்பது போல் பெண் கவிஞர்களும் இன்றைக்கு உருவாகிவிட்டார்கள் (அதுவும் ஔவையார் வகையறா அல்ல, பாப்லோ நெரூடா வகையறா). சமூக அதிகாரப் பகிர்வில் 95-05 என்ற பங்குநிலை மாறி 60-40 என்று கிட்டத்தட்டிய சமநிலை அடையப்பட்டுள்ளது. இதை நேர்மையான பின்ஆணாதிக்கவியல்வாதிகள் (feminists) யாரும் மறுக்க முடியாது.

கே: காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பேயோன்: காதல் மனித ஆயுளைப் போன்றது. அதனால் ஒரு வாழ்நாள் காலம் நீடிக்கவும் முடியும், நொடியில் மறைந்துவிடவும் முடியும். அது எவ்வளவு வலுவானதோ அந்தளவிற்குப் பலவீனமானது. சுயங்கள் அழிந்து ஒரு கூட்டுச் சுயம் பிறக்குமிடம் காதல். சுதந்திரம், தனிநபரியம் போன்ற விசயங்களுக்குக் காதலில் இடமில்லை. காதலுக்கும் மரணத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. அது போல காதலையும் காமத்தையும் பிரிக்கும் கோடு மிக மெல்லியது. காதலைவிட சுவாரசியமான ஒரு விசயம் உண்டென்றால் அது காமம்தான். காமம் மட்டும் காதலைவிட நீண்டகாலம் நீடிக்கிற ஒன்றாக இருந்தால் காமத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கும். காதலைப் பற்றி அடுத்த புத்தகக் கண்காட்சி வரை எழுதிக்கொண்டேயிருக்கலாம். ஆனால் இந்த உணர்வைப் பற்றி தாஸ்தாயெவ்ஸ்கிவும் டர்ஜெனிவும் மார்க்வெஸும் சொல்லாத எதையும் நான் சொல்லிவிடப்போவதில்லை.

கே: ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்?

பேயோன்:
சட்டைப்பையில் பேனா இல்லாமல் நான் வெளியே போவதில்லை. திடீரென யாராவது ‘வாசகர்’ –  ரசிகர் – எதிரில் வந்து புத்தகத்திலோ துண்டுச் சீட்டிலோ ஆட்டோகிராப் கேட்டால் புன்னகையுடன் கையொப்பமிட்டுத் தர பேனா இருக்காமல் போவது எழுத்தாளனுக்கு அசிங்கம். செய்கிற வேலையெல்லாம் கணிப்பொறி விசைப்பலகையில்தான். இருந்தாலும் எழுத்துத் தொழிலுக்குப் பேனா ஒரு மகத்தான குறியீடு என்பதால் அதை நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறேன். காசோலையில் கையெழுத்துப் போடவும் பேனா இன்றியமையாதது.
கே: நீங்கள் தொடர்ந்து கவிதைகள் எழுதுபவர். கவிதைகள், மற்றும் தற்கால கவிஞர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு?

பேயோன்:
வெகுஜன அழகியலில் பொய்க்கு இடமிருப்பதை நாமே பார்த்திருக்கிறோம். கவிதைக்குப் பொய் அழகு என்பது பாடம். “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே”யின் நீட்சி அந்தக் கூற்று. ஆக, பொய்யை தார்மீக காரணங்களுக்காகவிற்குப் பதிலாக அழகியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவது தவறல்ல என்றாகிறது. Truth is beauty என்றார் கீட்ஸ். அவரும் அதைப் பொய்யினால் அழகாக்கப்பட்ட தனது கவிதையில் சொல்லியிருக்கிறார். சிலருக்குப் பொய் சொல்வதே தொழில். அதே போல முழுநேரக் கவிஞர்களும் இருக்கிறார்கள். (சிரிக்கிறார்)
கே: தற்போதைய எழுத்துச்சூழலில் உங்களை பற்றிய சுய அவதானிப்பாக எதை சொல்லுவீர்கள்?

பேயோன்: (நீண்ட நேர யோசனைக்குப்பிறகு) ப்ளீஸ்! நானும் உங்களைப் போன்று டீசன்ட்டானவன்தான். நானும்தான் கோல்ட்ஃப்ளேக் கிங்ஸ் பிடிக்கிறேன். நானும்தான் உங்களைப் போல ‘லாஜிக் இடிக்கிறது’ என்பதற்கு பதில் ‘தர்க்க இடிபாடுகளிடையே சிக்கியுள்ளது’ என்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டும் முன்னுக்கு வர முடியாதவன்தான்.

 
கே: விருதுகள் பற்றி உங்கள் அபிப்ராயம்?

பேயோன்: 
சமீபமாய் நிறைய விருதுகள் சேர்ந்துவிட்டன. ஒரு டெம்போ வைத்து தமிழக சுற்றுப்பயணம் சென்றால் அத்தனையையும் அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்.விருதுகள் என்னை மென்மையாக்கிவிட்டதாய் உணர்கிறேன். 5 ஆண்டுகளுக்குமுன் எல்லோரையும் மண்ணை வாரிப்போட்டு சபித்தபடி இருந்தது நினைவில் பசுமையாய்.
கே: தற்போது எழுதுபர்களில் யாரை  விரும்பி படிக்கிறீர்கள்?

பேயோன்: (சிறிது முகம் சிவக்கிறார்) யாராவது எதையாவது எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்றில்லை

 
கே: தொடர்ந்து உலகசினிமாக்கள் பார்த்து வருபவர் நீங்கள். சினிமா மீதான உங்கள் நேசம் பற்றி?
பேயோன்: நல்ல சினிமாக்களை பார்ப்பதில் நீண்டகால பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போது என்னால் ஒரு அறையின் எந்த மூலையிலிருந்தும் சினிமா பார்க்க முடியும்.
 
கே: இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பேயோன்: ஒரு நல்ல நாவலை எடுத்துக்கொண்டு அதன் மேல் ட்ரேசிங் பேப்பர் வைத்து கவனமாக எழுதுங்கள். உங்கள் எழுத்தின் தரம் வளரும்.

 
இறுதியாக, மிதமிஞ்சிய தன்னம்பிக்கையைக் கைகொள்ளுங்கள். அது என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சொத்து. எனக்கு எல்லாம் தெரியும் என முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து சொல்லிக்கொள்ளுங்கள். என்னைப் போல் எழுத அபிலாஷித்தால் உங்களை உலக எழுத்தாளர்களின் வரிசையில் ஒருவராக நினைத்துக்கொள்ள வேண்டும்.
“நோயுற்று” என்று எழுதக் கூடாது. அது தெளிவாக இருக்கும். “நோய்மையுற்று” என்று எழுத வேண்டும். அதுதான் கெத்தாக இருக்கும். (சிரிப்பு)
கே: வாசகர்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி?

பேயோன்:
 என்னால் முடியுமா என்று கேட்காதே. இவனால் முடிகிறதே என்று யோசி.
அடுத்த முறை ஒசாகா வரும்போது நீண்ட நேர்காணல் செய்யலாம் என்ற உத்தேசத்துடன் வணக்கம் கூறி விடைபெற்றோம். வாசல் வரை வந்து வழியனுப்பிய பேயோனின் முகம் என்றும் எங்களுக்கு நினைவில் நிற்கும்.
Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , .

ஃபேஸ்புக்: லைக்குகளின் நுண்நுண்ண‌ரசியலும் கமென்டுகளின் மரண‌மும் இலக்கிய வாசக ஜென்மம்: சிறு அடையாளக் குறிப்புகள்

5 Comments Add your own

 • 1. Krishna Prabhu  |  October 17, 2012 at 8:35 pm

  குலுங்கிக் குலுங்கி சிரித்த இடம்:

  கே: தொடர்ந்து உலகசினிமாக்கள் பார்த்து வருபவர் நீங்கள். சினிமா மீதான உங்கள் நேசம் பற்றி?

  பேயோன்: நல்ல சினிமாக்களை பார்ப்பதில் நீண்டகால பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போது என்னால் ஒரு அறையின் எந்த மூலையிலிருந்தும் சினிமா பார்க்க முடியும்.

 • 2. ramji yahoo (@ramjiyahoo)  |  October 17, 2012 at 8:43 pm

  is he in osaka or Tamilnadu, difficult to believe that he is in Osaka or he has come to osaka.

 • 3. ensanthosh  |  October 17, 2012 at 10:54 pm

  ராம்ஜி இது ஒரு புனைவு நேர்காணல். 🙂

 • 4. ensanthosh  |  October 17, 2012 at 10:55 pm

  கிருஷ்ணப்பிரபு! கேள்விகள் மட்டுமே என்னுடையவை பதில்கள் பேயோனின் பல்வேறு எழுத்துகளிலிருந்து எடுத்தவை. இது ஒரு புனைவு நேர்காணல்!

 • 5. S. Kothandaraman  |  October 21, 2012 at 10:46 am

  தஸ்தவஸ்கியை ஞாபகப் படுத்தியதும், அவர் கடவுளை ப் பற்றி எழுதியதை நான் நினைவு கொள்கிறேன்.
  அவரைவிட மிகத் தெளிவாகவும், இறுதியாகவும் வேறு யாரும் கூறியதாக எனக்கு தோன்றவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

October 2012
M T W T F S S
« Sep   Nov »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: