அஞ்ஞானச் சிறுகதைகள் 02

tamil advertising

06. ஆதாமின் விலா எலும்பு

பாபுஷங்கர் சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தான். ஏண்டா தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு வந்தோம் என்று இருந்தது. ஆதாமிடமிருந்து பறித்து ஏவாளுக்கு பொருத்திய விலா எலும்பு இங்கே தான் புதையுண்டு கிடக்கிற‌து என்று யாரோ சொன்னாலும் சொன்னார்கள், அரசாங்கம் இவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டது. ஒரு மாதமாக ஒரு இடம் விடாமல் தோண்டியாயிற்று. கிடைத்த பாடில்லை. சோர்வாக சோஃபாவில் சாய்ந்தான்.” டயர்டா இருக்கீங்களா. இத சாப்பிடுங்க” என்று மனைவி நீட்டிய கிண்ணத்தில் பெப்பர் வாசத்துடன் சுடசுட சூப் அதில் மிதந்து கோன்டிருந்தது ஒரு எலும்புத்துண்டு!

07. கண்ணாடி

எதிர்காலத்தில் நமது தோற்றம் எப்டி இருக்கும் என காட்டும் ஆளுயர கண்ணாடியை அந்த அறிவியல் கண்காட்சியில் வாங்கியிருந்தார் தொழிலதிபர் வெங்கடாசலம். வேலையாட்கள் சிரமப்பட்டு கண்ணாடியை அவர் அறைக்குள் வைத்து விட்டு சென்றனர். கண்ணாடியை பேக் செய்திருந்த பேப்பரை கழற்றி விட்டு, இருபது வருஷங்களுக்குப்பிறகு… என ட்யூன் செய்து பார்த்தார். அவர் உருவம் தெரியவில்லை. திடுக்கிட்டு வருடங்களை குறைத்தார் பத்து வருடங்களுக்குப்பிறகு… அப்போதும் தெரியவில்லை. ஐந்து வருடம்…உருவம் இல்லை. ஒருவருடம்…இல்லை, ஆறுமாதம்… ஒரு வாரம்… இன்று… உருவம் தெரியவே இல்லை. இன்னும் சில மணித்துளிகளாவது… சட்டென்று அவர் உருவம் தெரிந்த மறுகணம், கண்ணாடி அவர் மீது சரிந்தது.

08. காலம்
“காலம். அது உருவமில்லாதது என்று எல்லோரும் நம்பி கொண்டிருக்கிறார்கள். முட்டாள்கள்.” என்று நினைத்துகொண்டார் புரொபசர் நாராயணன். காலத்தை சிறு சிறு உருண்டைகளாக மாற்றி சேமிக்கும் நுட்பத்தை அவர் வெற்றிகரமாக இன்று கண்டுபிடித்திருந்தார். சில நூறுவருடங்கள் கூட சின்ன குலோப்ஜாமூன் அளவுக்கே இருந்தன. நாளை இந்த செய்தியை உலகுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வருடம் நோபல் எனக்குத்தான் என

்று சந்தோஷித்தபடி பால்கனியில் அம்ர்ந்து பிடித்தமான ஒயினை அருந்திகொண்டிருந்தார். திடீரென்று பின்னாலிருந்து யாரோ தன் கழுத்தில் நயிலான் கயிறை சுற்றி இறுக்குவதை உணர்ந்தார். நாற்காலியிலிருந்து தடுமாறி விழுந்த போது ஒரு கரிய உருவம் கொண்ட தடியன் அந்த உருண்டைகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கி கொண்டிருந்தான். இறந்து கொண்டிருந்த புரொபசர் கடைசியாக இழுத்த மூச்சில் எருமைச்சாணியின் வாசத்தை உணர்ந்தார்.

09. விடமாட்டானுங்க!

செயற்கையான பதட்டத்துடன் செய்தியாளர் கேமராவை நோக்கி பேசிக்கொண்டிருந்தார். பின்னணியில் தலையில் பிளாஸ்டிக் கொம்புகளுடன் மனிதர்கள் கேமராவில் முகம் தெரியும் என்கிற ஆர்வத்தில் எட்டிப்பார்த்து சிரித்தபடி நின்றார்கள். “இங்கே இங்கே…ம்… வீசிக்கொண்டிருக்கும் புழுதிக்கா..ற்று இப்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. மக்கள் மிகுந்த பதட்டத்துடன் காணப்படுகின்றனர். நர். அதாவது

 வந்து என்னன்னாக்கா… ஒரு வாரமாக வீசிக்கொண்டிருக்கும் இந்த புழுதிக்காற்றில்… இந்த புழுதிக்காற்றினாள் பாதிக்கப்பட்ட மக்கள்… அரசு ஆவன‌ச்செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இப்போ நீங்க இதை நேரடி காட்சிகள் மூலம் பாத்து கிட்டு இருக்கீங்க” கேமரா சற்று திரும்பி செம்பழுப்பு பூமியில் காற்று சுழன்று அடிப்பதை போக்கஸ் பண்ணுகிறது. ” இன்னும் நிறையத்தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம் கேமராமேன் செந்திலுடன் செவ்வாய்கிரகத்திலிருந்து அறிவழகன்”.

10. ஞாபகம் 2090

அஸிஸ்டென்ட் ரம்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. புரொபசர் குமரேசன் அவருடைய 60 வருட பொறியியல் வாழ்க்கையில் இப்படி கண்களில் கண்ணீரை தேக்கி பாத்ததில்லை. இதுவரை நூற்றுக்கணக்கான விண்வெளிக்கப்பல்களை வடிவமைத்தவர். புளூநெட் எம் என்கிற புதிய கிரகத்துக்கு கூட கப்பல் கட்டி அனுப்பியவர். இன்றைய தேதிக்கு உலகின் அனைத்து ஸ்பேஸ் ஆராய்ச்சியாளர்களும் அவரது கதவைத்தான் தட்டுகிறார்கள்.

 ரம்யா புரொபசரை நெருங்கி சென்று பார்வையாலேயே என்னவென்று கேட்டாள். இந்த புகைப்படத்தைத்தான் பலவருடங்களாகத்தேடிக்கொண்டிருந்ததாக குமரேசன் சொன்னார். ரம்யா அதை வாங்கிப்பார்த்தாள். அப்பா அம்மாவுடன் ஒரு எட்டு வயது குழந்தை கைகளை தூக்கியபடி ஒரு கடற்கரையில் நின்றிருந்த‌து. பின்னணியில் ஒரு கப்பல். அந்த குழந்தையின் முகம் புரொபசருடையது போல இருந்தது. புரொபசர் ஒரு முறை “பிரதிபா காவேரி” என்று சொல்லிக்கொண்டார். ரம்யாவுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று சரியாகப் புரியவில்லை.