திரைக்கதையில் வராத சம்பவங்கள்.

tamil advertising

2012-07-03_moleskine-sketch_tc

தன்னை துரத்தி வரும் போலீசிடமிருந்து தப்பிக்க ஒரே வழி வழக்கம்போல எதிரில் ஓடும் ஆற்றில் குதித்து விடுவது தான் என்பது சிவாவுக்கு தெரியும். ஆனால் இந்த  திரைக்கதையை எழுதிகொண்டிருக்கும் மதுசூதனுக்கு இந்த மாதிரியான ’கிளிட்சே’க்கள் பிடிக்காது என்பதையும் சிவா ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு என்ன தான் செய்வது. அடுத்த வரியை அவன் எழுதுவது வரை பொறுத்து தான் ஆகவேண்டும். எதிரில் இப்போது ஆறு கிண்டலாக இவனை பார்த்து சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது. தூரத்தில் துரத்தி வந்த இரண்டு போலீச் காரர்களும் செய்வதறியாது நின்று கொண்டிருந்ததை பார்த்து சிவா சின்னதாக ஆசுவாசப்பட்டான். மதுசூதனின் கைகளில் போலீசுக்கே இந்த கதி தான் என்கிற போது கிடைக்கும் ஆசுவாசம் அது.

 

என்ன நினைத்தானோ என்னமோ மதுசூதன் பேனாவை மூடி விட்டு, திரைக்கதை பேப்பரின் மீது ஒரு கனமான புத்தகத்தை தூக்கி வைத்து விட்டு சோம்பல் முறிக்கும் பாவனையில் கைகளை பின்னால் கோர்த்து நெட்டி உடைத்தான். பிறகு ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு போனான்.

 

சிவா இப்போது திரும்பி போலீஸ்காரர்களை பார்த்தான். சிவாவுக்கும் ஒரு சிகரெட் இழுத்தால் இதமாக இருக்கும் என்று தோன்றியது. இந்த ஆற்றின் கரையும் குளிர்ந்த காற்றும் மதுசூதன் சிகரெட்டை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்ற விதமும் அவனுக்கு அப்படி ஒரு ஆசையை தூண்டிற்று. மெல்ல போலீஸ் காரர்களை நோக்கி நடந்தான். அவர்களும் இவன் அருகில் வருவதை விரும்பியதைப்போல சினேகபாவனையுடன் முகத்தை வைத்து கொண்டனர். “சிகரெட் ஏதாவது இருக்கா” என்றான் ஒரு போலீஸ்காரரை பார்த்து. “இல்லியேப்பா. அந்த ஆளு எங்க கிட்ட சிகரெட் இருக்கிறதா கதையில எழுதவே இல்லையே”  என்றான் ஒரு போலீஸ் காரன். நியாயம் தான். திரைக்கதையின் முக்கியபாத்திரமான என் பாக்கெட்டிலே ஒரு சிகரெட் துணடை வைக்க துப்பில்லாத இந்த ஆளு துணைக்கதாபாத்திரத்தில் வரும் இந்த போலீஸ் காரரரிடம் சிகரெட் இருப்பதாக எழுதிவிடவா போகிறான். போலீஸ் காரரிடம் சிகரெட் கேட்டு அவருடைய கதபாத்திரத்தின் மதிப்பை குறைத்து அவரை வெட்கமும் வேதனையும் பட செய்திருக்க வேண்டாமோ என்றும் சிவா நினைத்துக்கொண்டான்.

 

மதுசூதன் மறுபடி எழுத உட்கார இன்னும் நேரமெடுக்கும் என்பது சிவாவுக்கு நன்றாக தெரியும். ஒரு மணி நேரமோ ரெண்டு மணி நேரமோ அல்லது ஒரு நாளோ கூட ஆகலாம். இப்போது என்ன பண்ணுவது என்பது போல போலீஸ்காரர்கள் சிவாவை பார்த்தனர். “அய்யா உண்மையில் நீங்க எதுக்காக என்னை துரத்திட்டு வரீங்கண்னு தெரியுமா” என்றான். “தெரியலையேப்பா. இந்த சீனை ஆரம்பிக்கும் போதே இரண்டு போலீஸ் காரர்கள் சிவாவை துரத்தி கொண்டு வந்தனர் என்று ஆரம்பித்து எங்களை இப்படி ஆற்றின் கரையில் கொண்டு விட்டுட்டு போயிட்டானே. அது சரி நீ அப்படி என்ன தான் தப்பு பண்ணின” அப்பாவிதனம் வழியும் முகத்துடன் போலீஸ் காரர் கேட்டார். பக்கத்திலிருந்த போலீஸ்காரரும் ஆமோதித்து தலையாட்டி இவன் பதிலுக்காக முகத்தை ஏறிட்டு பார்த்தார். அவர் பழைய படங்களில் வரும் நாகேஷைப்போல இருந்தார். இவ்வளவு நோஞ்சானாக இருக்கும் ஒரு போலீஸ் காரரரிடமிருந்து தப்பிக்கவா தான் இந்த ஓட்டம் ஓடினேன் என்று நினைக்கும் போது சிவாவுக்கு வெக்கமாகவும் மதுசூதன் மீது கோபமாகவும் இருந்தது.

 

“எப்படியும் அடுத்த சில பக்கங்களில் அது உங்களுக்கு தெரிந்து விடத்தான் போகிறது”என்றான் சிவா. “ஓ உனக்கே தெரியாதோ”என்று அந்த நாகேஷ் போலீஸ் கேட்டது நக்கலாக தோன்றியது. கதையின் பிரதான பாத்திரமான தன்னை ஓரிரு சீனில் மட்டும் வந்து விட்டு போகும் இந்த காமெடியனைப்போல இருக்கும் ஒரு துக்கடா பாத்திரம் கிண்டல் செய்து விட்டதே என்று சிவாவுக்கு சின்னதாக கோபம் வந்தது. “யோவ் நான் சாதாரண ஆளில்லை கேட்டுக்க. மூணு கொலைகள் செய்திருக்கேன். அதுவும் பணத்துக்காகவோ, பதவிக்காகவோ இல்லை. இந்த சமூகத்துக்காக. அதுக்காக தான் இந்த ஓட்டம். நீங்க போலீசு என்னை ஒண்ணும் செய்ய முடியாது. தெரியுமா” என்றான்.

 

இன்னொரு போலீசு காரர் மெல்ல இவனை ஏறிட்டு பார்த்து விட்டு” அது சரி போலீசு ஒண்னும் செய்ய முடியாதுன்னு எப்படி சொல்லுற. அடுத்த ஷாட்டிலேயே உன்னை நாங்க ரெண்டு பேரும் சுத்தி வளைச்சு பிடிட்டோம்ணு அந்த ஆளு எழுதிட்டா உன் நிலமை என்னாவும் சொல்லு” என்றார். இப்போது அவர் ஆறா அமர பக்கத்திலிருந்த பாறை மீது லேசாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். நாகேஷ் போல இருந்த போலீசு காரர் இவனைப்பார்த்து புன்னகை புரிந்தார்.

“ஆங்… அவ்வளவு சீக்கிரம் மாட்டிருவோமா. இல்ல மாட்டா விட்டுவானா அவன். நான் இந்த ஆற்றிற்கு அக்கரையிலும் ஒருத்தனை கொல்ல வேண்டி இருக்கு இல்ல. அது வரைக்கும் உங்க கையில மாட்டிடுவேனா. நல்ல கதையா இல்ல இருக்கு” என்றவாறு சிவா பக்கத்திலிருக்கும் இன்னொரு சின்ன பாறை மீது உட்காந்த்தான்.

 

இப்போது அந்த போலீஸ் காரர்கள் வருத்தமான முகத்துடன் இவனை செய்வதறியாமல் பார்த்து கொண்டிருந்தனர். இவனுக்கு லேசாக போலீஸ் காரர்கள் மேல் இரக்கம் தோன்றியது. அந்த இரக்கம் மீது சற்று பெருமிதமும் கொண்டான். அந்த நாகேஷ் போலீஸ் இவன் பக்கம் நகர்ந்து வந்து “தம்பி. எனக்கு கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கு. அந்த ஆளு எழுதும்போது வெறும் லத்தியோடு ஓடி வராங்கண்ணு எழுதிட்டான். இந்த லத்தியை என்ன சாப்பிடவா முடியும்”   என்று இவன் மூக்கிற்கு நேராக லத்தியை நீட்டி கேட்டார்.

 

இவனுக்கு சிரிக்கவா அழவா என்று வந்தது.

 

மதுசூதன் என்ன நினைத்தானோ மீண்டும் வந்து திரைக்கதை பேப்பரை எடுத்து மறுபடி படித்தான். சிவாவும் போலீஸ்காரர்களும் விட்ட இடத்திற்கே மறுபடி ஓடி வந்து நின்று கொண்டனர். படித்து முடித்த மதுசூதன் சடாரென்று பேப்பரை கசக்கி பக்கத்திலிருந்த குப்பைக்கூடையில் போட்டு விட்டு மொபைல் போனை எடுத்து யாருக்கோ அழைத்தான். “ டயரக்டர் சார். நான் மதுசூதன் பேசுறேங்க. ஆமா… எழுதினேன் ஆனா இந்த இடம் நல்லா வரும்ணு தோணல. இந்த போலீஸ் காரங்க தொரத்துற சீனே வேணாம் சார். இதுக்கு ஆல்டர்நேட்டா ஒரு சீன் யோசிச்சிருக்கேன்… அத திரும்ப எழுதி அனுப்புறேன் எப்படி இருக்கும்ணு பாருங்க” என்ற படி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

 

கசங்கிய பேப்பரில் இருந்த அந்த இரண்டு போலீஸ் காரர்களும் அப்பாவியாக சிவாவை பார்த்தனர். “என்னப்பா இப்போ என்ன பண்றது” என்றனர். சிவா ஏதோ யோசிப்பது போல ஒரு கணம் முகத்தை ப்வனை பண்ணினான். பிறகு போலீஸ் காரர்களை பார்த்து சொன்னான் ”எனக்கே தெரியலைங்க இனி என்ன நடக்க போகுதுன்னு” அந்த நாகேஷ் போலீஸ் மறுபடி கேட்டான் ”நாங்க இப்படி குப்பையோட போய்டுவோம் நீ என்ன பண்ணுவ தம்பி” சிவா சொன்னான் ”நான் ஒண்ணும் பண்ண முடியாதுங்க. நானும் உங்க கூட குப்பைக்கு வர வேண்டியது தான். இந்த திரைக்கதையில் இருப்பது ஒரே சிவா இல்ல. ஒராயிரம் சிவாக்கள்”