முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை!

tamil advertising

இன்று சற்று தீவிரமாக வாசிக்கும் உரையாடும் நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஒரு வார்த்தை ”நவீன மனம்”. நவீன மனம் எதையும் சந்தேகம் கொள்ளும், அது எப்போதும் தர்க்கம் என்னும் இரும்பு ஸ்கேலால் எல்லாவற்றையும் கறாராக அளக்கும், அது ஒற்றைப்படையான உண்மை என்று ஒன்று இருப்பதையே ஏற்றுக்கொள்ளாது. எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு உட்படுத்தும், இது அறிவியற் பூர்வமானதா என்று கேள்வி கேக்கும்… நீங்கள் நவீன மனம் படைத்தவர் என்று நம்பி கொண்டிருந்தால் இன்னும் இந்த வரிசையில் இட்டு நிரப்பிக்கொள்ள உங்களிடம் ஒரு நூறு விஷயங்கள் இருக்கும்.

எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக மட்டுமே அணுகுவேன் என்று அடம் பிடிக்கும் உங்களிடம் இப்போது ஒரு கேள்வி. நீங்கள் காதலித்திருப்பீர்கள், அல்லது காதலித்து கொண்டிருப்பீர்கள். இந்த இடத்தில் நான் சொல்கிறேன் உங்கள் காதலரின் உடலுக்காக அதாவது அவரிடம் பாலுறவு கொள்வதற்காக அதாவது இனப்பெருக்க உறுப்புகளின் வழியாக உங்கள் சந்ததிகளை பெருக்கிக்கொள்வதற்காக அதாவது இந்த மனித இனம் தழைத்திருக்க இனப்பெருக்க மறு உற்பத்திக்காக உங்கள் சுரப்பிகள் போடும் வேதியல் நாடகம் மட்டும் தான் காதல் என்பது. இப்படித்தான் அறிவியல் சொல்கிறது. இதை ஒத்துக்கொள்கிறீர்களா? நான் ஒத்துக்கொள்கிறேன் மேலே சொன்னவை சந்தேகமற்ற அறிவியல் உண்மை தான். ஆனால் ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது இப்படி தர்க்கப்பூர்வமாக, அறிவியல் பூர்வமாக எல்லாவற்றையும் அறிந்து கொண்ட பின்னும் நாளையோ நாளை மறுநாளோ உங்கள் காதலரை சந்திக்கும் போது ஏதோ ஒன்று மெல்ல நுரை ததும்பி உங்களில் நிறையும். அது என்ன?

கண்டிப்பாக அது நாம் மேலே சொன்ன அறிவோ, தர்க்கமோ இல்லை. அது உணர்வு. இப்போது இப்படி யோசிப்போம். நாம் முந்திய பாராவில் பார்த்த அறிவா இல்லை இப்போது சொன்ன உணர்வா எது உங்களுக்கு உண்மையில் மகிழ்வளிக்ககூடியது. சந்தேகமே இல்லை உணர்வில் இருப்பது தான் இல்லையா.

இனி நாம் செய்யப்போவது என்ன அறிதலின் சுமை கொண்டு தலை கனப்பதையா இல்லை உணர்தலின் சுகம் கொண்டு வாழ்தலை இனிய பயணமாக மாற்றுவதையா.

தர்க்கம் என்னும் வளையாத இரும்பை விட்டு இப்படி உணர்தல் என்னும் நெகிழும் மூங்கிலாக வாழ்வை அணுக நான் கற்றுக்கொண்டிருப்பது நண்பர் செந்தமிழனிடம்.

ம.செந்தமிழன் இயக்குனர்,எழுத்தாளர்,ஆய்வாளர்,என்பதை தாண்டி அவர் ஒரு இயற்கையியல் ஆர்வலர். விவசாயி. இயற்கையியல் என்றால் வெறும் இயற்கை சார்ந்த அறிவியல் அறிவு மட்டுமே கொண்டு அதை புரிந்து கொள்ள முடியாது, இந்த இயற்கையை இயக்கும் பேராற்றலின் பேரன்பை புரிந்து கொள்வதும், மனிதன் மட்டுமே இயற்கையின் மய்யம் இல்லை என்கிற பேருண்மையை உணர்ந்து கொள்வதும் கூட.

அறிவியலின் பெயரால் வேட்டையாடப்பட்டு கொண்டிருக்கும் நமக்கு உணர்தலின் தேவையை பற்றி மிக மிக மென்மையாக, அமைதியாக, அறிவு சுமைகளாய் கனம் கொள்ளாத தரவுகளுடன், இயற்கையின் பேராற்றல் வழங்கிய பேரன்புடனும் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் செந்தமிழன். ”முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை!”

muthal mazhai

இந்த உணர்தலை மிக அழகாக இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொள்ளுகிறார். ஒரு நீண்ட இசைக்கோர்வையை தனிமையில் அமைதியாக கேட்பது போல, ஒரு ஆழமான தியானத்தில் அமிழ்வது போல, மனம் பஞ்சாக உதிர்ந்து காற்றில் மெல்ல மிதந்து செல்வது போல, கடவுளின் கைகளையே பிடித்து கொண்டு ஒரு நதிக்கரை ஓரம் நீள் நடை செல்வது போல, இருக்கிறது இந்த புத்தகம் அளிக்கும் அனுபவம். நீங்களும் ஒரு தடவை அனுபவித்து பாருங்கள். பழக்க தோஷத்தில் உங்கள் இரும்பு தர்க்கத்தை எடுத்து இந்த சொற்களை உரசிப்பார்க்க ஆரம்பித்தால் மெழுகாக உங்கள் இரும்பு உருகுவதை உணர்வீர்கள். பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை நினைத்து ஒரு சிறு புன்னகை மட்டுமே!

 

முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை!

இயற்கையியல் கட்டுரைகள்

ம. செந்தமிழன்

செம்மை வெளியீட்டகம்.

 

 

 

 

 

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் ஐந்து

tamil advertising

Vasco-Da-Gama-Biography

(முன்கதை சுருக்கம்: சோமாலியா கப்பல் கொள்ளையர்களிடம் ஏராளமான தமிழ் இலக்கிய புத்தகங்களுடன் மாட்டிக்கொள்கிறான் ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியம். என்ன நடந்தது தெளிவாக தெரிந்து கொள்ள முன் அத்தியாங்களை படிக்கவும். கண்டினியூட்டி முக்கியம் பாஸ்!)

கப்பல் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருந்தது. நடுவழியில் ஒரு கட்டு மரத்தில் ஒற்றை ஆளாக ஒருவர் எதிரில் வருவதை பார்த்தனர். நெருங்கி செல்லும் போது ஜெய் அடையாளம் கண்டு கொண்டான்.

“பாஸ் இவரு பேரு கோணங்கி.” என்று கத்தினான் ஜெய்.

”என்னது என்றான்” தலைவன் குழப்பமாக.

“ இவரு பேரு கோணங்கி. இவரும் ஒரு ரைட்டர் தான்”

“அப்போ அவர கப்பல்ல ஏத்துங்க” கட்டளையிட்டான் தலைவன்.

கொள்ளையர்களின் கப்பல் கோணங்கியின் கட்டுமரத்தை நெருங்கியது.

கோணங்கி ஏறிட்டு இவர்களை பார்த்தார்.

“அண்ணே வணக்கம். நான் ஜெயகிருஷ்ணன். இவங்கெல்லாம் சோமாலியா கொள்ளையர்கள்” என்று இண்ட்ரோ கொடுத்து விட்டு “என்ன இந்த பக்கம்” என்றான்.

“நல்லது தம்பி. நீங்க நம்ம வாசகருங்களா” என்றார் ஆமா என்று தலைஆட்டினான் ஜெய்.

“பாத்தீங்களா என் வாசகர்கள் எதிர்காலத்துல தான் இருப்பாங்கன்னு ஏற்கனவே நான் சொல்லிருக்கேன் இப்போ பாத்தீங்களா. கடல் நடுவுல உங்கள சந்திச்சிருக்கேன். ரொம்ப சந்தோஷம். ஒரு கை பிடிங்க” என்ற படி தாவி கப்பலுக்குள் ஏறினார். கைகளில் உருண்டை உருண்டையாக நாலைந்து சுரைக்காய் குடுவைகள். அதில் ஒன்று அதீத பெருசாக ஆளுயரத்துக்கு இருந்தது.

“அண்ணே முருகபூபதி கிட்ட இருந்த நாலு சுரைக்காய் குடுவைகளையும் பிடுங்கிட்டு வந்திருக்கீங்க. அவரு எப்டி தேரிக்காட்டுல நாடகம் போடுவாரு” என்றான் ஜெய்.

“தம்பி, பூபதி கிட்ட சுரைக்காய் குடுவை இன்னும் ஸ்டாக் இருக்கு. அதவிடுங்க இந்த அஞ்சாவது குடுவை என்னன்னு தெரியுமா” என்றார் கோனங்கி.

அதற்குள் கொள்ளையர்களில் ஒருவன் தன் பாஸிடம் சொன்னான் “பாஸ் இத பார்த்தா ஏதோ டைனோசர் முட்டை மாதிரி தெரியுது. அடிச்சிட்டு போய் ஸ்பீல்பெர்க் கிட்ட வித்தா ஐனூறு பில்லியன் தேறும் பாஸ்” என்று கோணங்கியின் கையிலிருந்த அஞ்சாவது குடுவையை தொடப்போனான்.

“கைய எடுப்பா” என்றார் கோணங்கி. கொள்ளையன் திகைப்புடன் பின் வாங்கினான்.

” இது டைனோசர் முட்டையுமில்ல. சுரக்குடுவையுமில்ல. முதுமக்கள் தாழின்னு தமிழ்ல சொல்லுவாங்க” என்று விளக்கினார். ஜெய் இது வரை ஒரு முதுமக்கள் தாழியை பார்த்ததில்லை, ஆச்சரியம் மேலிட அதை தடவி பார்த்தான்.

கோணங்கி தன் மடியில் பொதிந்திருந்த ஒரு பொட்டலத்தை அவிழ்த்து கொள்ளையர்களிடம் நீட்டினார். அவர்கள் அதை திகிலுடன் திறந்து பார்த்தனர்.

“பாஸ் ஏதோ ஜெல்லி மாதிரி இருக்கு. கறுப்பா கையில ஒட்டுது. நாம கொள்ளையர்கள்னு தெரிஞ்சு இந்தாளு ஏதோ சதி பண்ற மாதிரி இருக்கு” என்றான் ஒரு கொள்ளையன்.

கோணங்கி சிரித்து கொண்டே கொள்ளையனிடம் “தம்பி ஜெல்லியுமில்லை பெல்லியுமில்ல. இது திருநெல்வேலி அல்வா. வர்ற வழியில வண்ணதாசன பார்த்தேன். வழிச்செலவுக்கு வச்சுக்கோன்னு ஒரு பொட்டலத்த கொடுத்தாரு. தின்னவேவி அல்வா இவ்வளவு நெகிழ்வா இருக்காது ஆனா கல்யாண்ஜி கை பட்டதால நெகிழ்வின் உச்சத்துக்கே போய் இப்படி பிசுபிசுத்து கிடக்குது. வேற ஒண்ணுமில்ல” என்று விட்டு “ சாப்பிடுங்க” என்றார் கூடவே.

கொள்ளையர்களும் ஜெய்யும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து தின்றார்கள்.

“சரிண்ணே நீங்க எப்டி இந்த நடுக்கடலில. கையில் முதுமக்கள் தாழியுடன். அந்த கதைய சொல்லுங்க” என்றான் ஜெயகிருஷ்ணன்.

கையிலிருந்த ஒரு சுரக்கொடுவையை தூக்கி வாய்க்கு நேராக கவிழ்த்து வழிந்த தண்னீரை கொஞ்சம் குடித்து விட்டு சொல்லத்துவங்கினார் கோணங்கி.

“தம்பி ’பாழி’, ’பிதிரா’வுக்கு அப்புறம் இப்போ ‘கோடா’ன்னு ஒரு நாவல் எழுதுற திட்டத்துல இருக்கேன்”

“பாத்தீங்களா பாஸ் இவரு தலைப்பை புரிஞ்சுக்கறதுக்கே தமிழ்நாட்டில வாசகர்கள் நான் கடவுள் ஆர்யா மாதிரி தலைகீழா நிக்க வேண்டியிருக்கும்” என்று பெருமிதத்தான் ஜெய்.

கோணங்கி முறுவலித்தபடி தொடர்ந்தார். “அதுக்காக பதினைந்தாம் நூற்றாண்டுல கள்ளிக்கோட்டைக்கு வந்திரங்கிய வாஸ்கோட காமா பற்றிய குறிப்புகளை தேடிய இந்த பயணம் ஆரம்பிச்சப்போ கோவில்பட்டியிலருந்து ஒருத்தர் சைக்கிள்ல டபிள்ஸ் வச்சு தேனியில ட்ராப் பண்ணியவுடனே காய்கறி லோடு லாறியில ஏறி  கேரளாவுல லேண்ட்டாயி கள்ளிக்கோட்டை  போய் விசாரிச்சா ஒரு முதுவன் இந்த கட்டுமரத்துல மாலத்தீவு வரைக்கும் கூட்டிட்டு போனப்ப வாஸ்கோட காமா வர்ற வழியில மாலத்தீவுல ஒரு ரெஸ்ட போட்டுடு கிளம்பினாருன்னு சொன்னப்போ அதான் அங்கே போய் அப்டியே கிளம்பி கடல்ல மிதந்த இந்த முதுமக்கள் தாழிய கலெக்ட் பண்னிட்டு வந்திட்டு இருக்கும் போது தான் வழியில  உங்கள பார்த்தேன் நடுக்கடலிலேயே நாலு அத்தியாயத்த எழுதிட்டேன்” என்றார்.

”இப்படி பேசும்போதே ஃபுல்ஸ்டாப் வரமாட்டேங்குது எழுதினா மட்டும் கதையில கமா போட்டுருவாரா என்ன” என்று கலங்கிபோய் ஜெய் பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் மைண்ட் வாய்சை கேட்டபடி தன் சாக்குதுணி தொங்கு பையிலிருந்து சில பழுப்புநிற காகிதங்களை எடுத்து காட்டினார் கோணங்கி.

“தம்பி முதல் அத்தியாயத்துல முப்பது பக்கத்துக்கு முற்றுபுள்ளியே இல்லாமல் எழுதிருக்கேன். படிக்கவா” என்றார்.

ஜெய் பீதியுட கண் கலங்க, கொள்ளையர்கள் வெள்ளாந்தியாக கோணங்கியை ஏறிட்டு பார்த்தனர்.

“கோடாவின் கப்பலில் பறந்த போர்த்துகீசிய வெண்பறவையின் இறகென்று வழிகாட்ட உப்புத்தண்ணீரில் ம்றைந்து எழும் கடல் சீல்களின் நுனி மீசையில் தெரிந்த காந்த முள் காட்டியின் திசை அறிந்து தன் கையிலிருந்த கிரந்தங்களின் பழுப்பு நிற வரைபடத்தில் பாதை தெளிவுறும் காற்றின் போக்கில் கடலோடிய காமாவின் மது நிரம்பிய கோப்பைக்குள் தெளிந்து வந்த கிழக்கின் கடல் கரையில் ஒரு பூர்வீக மங்கையின் ஸ்பைசாண்டிக புன்னகைக்குள் மறைந்திருந்த கூந்தலுக்குள் தன் சிரம் கொடுத்து அவள் ஏழுகடல் ஏழுமலை தாண்டி பூக்கும் பூவின் வாசனையில் அமிழ்ந்திருக்கும் தன் வதனத்தை கேரள இலவரசனின் செந்நிற வைரத்தில் வைத்து பூட்டி வண்டி கட்டியபடி காலத்தில் பின்னோக்கி பயணித்து டிசம்பர் மாத கூதிர் பருவத்தில் தட்டான்கள் உறங்கும் பாழ்வெளிக்குள் நுழைந்து கோட காமா தன் கப்பலின் நங்கூரம் பாய்ச்சி…”  என்று மூச்சு வாங்னினார் கோணங்கி.

சுற்றும் தன் தலையை தன் கைகளால் பிடித்து நிறுத்திய படி “வாஸ்கோட காமா கேரள கடற்கரையில் வந்தி இறங்கினார். அது தானண்ணே நீங்க சொல்ல வறது” என்றான் ஜெய். கோணங்கி மூச்சு வாங்க ஆமா என்பது போல தலையாட்டி சிரித்தார். “அதுக்கு நீங்க ’வாஸ்கோட காமா கேரள கடற்கரையில் வந்தி இறங்கினார்’ன்னே சொல்லி இருக்கலாமே” என்றான் ஜெய்.

“தம்பி இந்தளவுக்கு என் வாசகத்தை புரிஞ்சுகிட்ட முதல் வாசகன சந்திக்கிறேன். ஆனா ’வாஸ்கோட காமா கேரள கடற்கரையில் வந்தி இறங்கினார்’னு சொல்றதுக்கு கோணங்கி எதுக்கு. எனக்குன்னு ஒரு மொழி இருக்கு அது ஒரு வகையான ஆட்டோபிக்‌ஷன்” என்றார்.

“ஆட்டோஃபிக்‌ஷன். அப்டினா” என்றான் கொள்ளையர் தலைவன்.

“அது வந்து தம்பி நான் பேப்பர்ல முதல் வார்த்தையதான் எழுதுவேன். அப்புறம் ப்ரோகிராம் பண்ணின மெஷின் மாதிரி என் கை பூரா வார்த்தைகளையும் போட்டு ஃபில் பண்ணிகிட்டே போவும்”  என்று பூடகமாகச்சிரித்தார்.

”அண்ணே மதினிமார்கள் கதை மாதிரி மாஸ்டர்பீஸெல்லாம் எப்போ மறுபடி எழுதுவீங்க” என்றான் ஜெய்.

“அது காலாதீததில் பின்னோக்கி போன விஷயம் நான் காலத்தில் முன்னோக்கி போய் என் வாசகர்கள தேடுற ஒரு நாடோடி. என்ன அப்டியே விட்டுடுங்க “ என்று சொல்லி விட்டு மீண்டும் கடலில் குதித்து கட்டுமரத்தில் ஏறிக்கொண்டார்.

“ பிஜி தீவுகள்ல நம் மூதாதையர்களின் முதுகெலும்பு படிவங்கள் இருக்கு அதுல ஏதோ லிபிகள் எழுதப்பட்டிருக்கு அத நோக்கி தான் என் அடுத்த ப்யணம்” என்ற படி கட்டுமரத்தை காற்றில் செலுத்தி அலைகளில் நெளிந்து அப்படியே பயணமானார்.

ஜெய் திரும்பி கொள்ளையர்களை பார்த்தான். ஒரு கொள்ளையன் கூக்குரலிட்டான் “பாஸ் அவரு இந்த டைனோசர் முட்டைய மறந்திட்டு போயிட்டார்”

“யோவ் அது டைனோசர் முட்டை இல்ல. முதுமக்கள் தாழி “ என்று விட்டு அதன் அருகில் சென்று தட்டி பார்த்தான். உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.

“திறந்து பாக்கலாமா” என்றான் ஜெய் தலைவனை நோக்கி.

“திறந்திடாதீங்க” என்று தாழிக்குள்ளிருந்து ஒரு சத்தம் வந்தது.

“உள்ளே யாரு” என்றான் ஜெய் ஆச்சரியமாக.

“நான் பேயோன்.” என்று பதில் வந்தது. கூடவே “சமகால எழுத்தாளன்” என்றும்.

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் நான்கு

tamil advertising

51045063_pirates2

(முன்கதை சுருக்கம்: சோமாலியா கப்பல் கொள்ளையர்களிடம் ஏராளமான தமிழ் இலக்கிய புத்தகங்களுடன் மாட்டிக்கொள்கிறான் ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியம். என்ன நடந்தது தெளிவாக தெரிந்து கொள்ள முன் அத்தியாங்களை படிக்கவும். கண்டினியூட்டி முக்கியம் பாஸ்!)

“சோமாலியா கொள்ளையர்கள் கடத்திய தமிழன் ஜெயகிருஷ்ணனின் கதி என்ன…? ஒரு விவாதம்.” என்று ஹோஸ்டிங் பண்ணும் ஆள் காற்றை காரச்சேவாக மென்ற படி பில்டுப் கொடுக்க, கருத்து சொல்ல காத்திருந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் தொண்டையை சற்று செருமி கொண்டார்.  முகத்தில் விழும் முடிக்கற்றைகளை கைகளால் கோதி விட்ட படி உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.

”இதப்பற்றி சொல்லணும்னா

அவ்வளவு கொடுமை
அவ்வளவு வன்மம்
அவ்வளவு புறக்கணிப்பு
அவ்வளவு கொடூரம்
அவ்வளவு கொடுங்கனவு
அவ்வளவு கைவிடல்”
என்று சொல்லிக்கொண்டே போனார்.

“யாரு மேன் இது” என்றான் தலைவன்.

“இது எங்க ஊரு பிரபல கவிஞர் மனுஷ்யபுத்திரன். சச்சின் டெண்டுல்கர் ரிட்டயர்டுலருந்து சன்முகபாண்டியன் ’சகாப்தம்’ வரைக்கும் ஒரு கருத்துன்னா, சன் டிவி முதல் வின் டிவி வரை இவர் கிட்ட தான் பைட்ஸ் கேக்கும் ” என்றான் ஜெய்.

“இப்போ இந்த கடத்தல் பற்றி என்ன தான் சொல்றாரு” என்றான் கொள்ளையன்.

“பொதுவா நல்லாதான் கருத்து சொல்லுவாரு. இன்னைக்கு என்னன்னு தெரியல கவிதை எழுதுன கையோட ஸ்டுடியோவுக்கு வந்திட்டாரு போல. அந்த ஹேங் ஓவர்லேயே பேசுற மாதிரி தெரியுது” என்று விட்டு ஜெய் டிவியை பார்த்தான்.

“இந்த சின்னஞ்சிறிய கடத்தலின்

சின்னஞ்சிறு விஷயங்களை பற்றி சொல்வதென்றால்.

ஒரு மனிதன்

இன்னொரு மனிதனை கடத்துவது

எவ்வளவு அபத்தமாக மாறி விட்டது

அது ஒரு பலவந்தம்

அது ஒரு குற்றம்

அது ஒரு தாக்குதல்

அது ஒரு அத்து மீறல்….”

இது வேலைக்காகாது என்று ஜெய்க்கு தெரிந்து விட்டத்து அழாத குறையாக சேனலை மாற்ற சொன்னான். என்ன நடக்கிறது என்று புரியாத அந்த சின்னஞ்சிறு கொள்ளையன் அடுத்த சேனலை மாற்றி விட்டு

“அட இங்கேயும் லைவ்ல அவர மாதிரியே ஒருத்தர் இருக்கிறாரு” என்றான். எல்லா கொள்ளையர்களும் ஆச்சரியமாக டி.வியை பார்த்தனர்.

“அவரு மாதிரி இல்ல அவரே தான்” என்ற ஜெயகிருஷாணன் டிவியை பார்த்தான். அங்கே தமிழிசை சவுந்தர ராஜனிடம் தலைமுடி கண்ணை மறைக்க விவாதம் செய்து கோண்டிருந்தார். ஜெய் உடைந்த ரிமோட்டை வாங்கி இன்னொரு சேனலுக்கு மாற்றினான்.

அந்த சேனலில் நாலு கட்டத்தில் ஒரு கட்டத்துக்குள் உட்காந்தபடி இன்னொரு கட்டத்துக்குள்ளிருக்கும் ஞானதூசிகனை கைககளை காற்றில் பரோட்டா வீசிய படி பொளந்து கட்டி கொண்டிருந்தார்.

இன்னொரு சேனலை திருப்பினால் “ரஜினிக்கு அப்புறமா ரசிகர்கள் எதிர்பார்க்கிறது உங்கள தான். அரசியலுக்கு வருவீங்களா மாட்டீங்களா” என்று கிடுக்கிபிடி கேள்வியைப்போடும் காம்பியரிடம் டிமிக்கி கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்.

“எப்படி மேன் ஒரே ஆள் ஒரே நேரத்துல வேற வேற டிவியில லைவ்ல வரமுடியும்” என்று துப்பாக்கியின் நுனியால் மண்டையை சொறிந்தான் தலைவன்.

இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்பதைபோல ஜெய் அண்ணாந்து டிவியை பார்த்தான். தன் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து அதில் முகநூலை ஆன் பண்ணி, கொள்ளையனின் முகத்துக்கு நேராக காட்டி விட்டு சொன்னான்.

”இங்கே பேசிகிட்டு இருக்கும்போதே ஃபேஸ்புக்ல புதுசா ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டிருக்கார் பாருங்க”  தலைவன் தலையை குனிந்து மொபைலை பார்த்தான். கைகளில் காப்பி கோப்பையுடன் ஒரு கறுப்பு வெள்ளை ப்ரொஃபைல் பிக்சர் கண்ணில் பட்டது.

”வினாயக முருகன்ல ஆரம்பிச்சு நெல்சன் சேவியர் வரைக்கும் அதுக்குள்ள ஐனூறு பேரு லைக் வேற போட்டிருக்காங்க” என்று தலைவன் பிரமித்தான்.

“அந்த கேப்புல நாலஞ்சு அடிப்படைவாதிகள் வந்து இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்டுக்கு சம்பந்தமில்லாம அவர கமெண்டுல திட்டுறாங்க கவனிச்சீங்களா பாஸ். எல்லா மதவாதிகளும் போடுற பெளலிங்கையும்  அவரு தனியாளா தடுத்தாடுறதால இன்னைய தேதிக்கு எங்களுக்கு கிடைச்ச ’செக்குலார் சிங்கம்’ணு என்னை மாதிரி ஆட்கள் அவர கொண்டாடிட்டு இருக்கோம் ” என்ற ஜெய் மேலும்,

“இது மட்டுமில்ல இப்போ உயிர்மை ஆப்பிஸ் போய் பாத்தீங்கன்னா புக்ஃபெயர் ஃபீவர்ல புதுசா வர புத்தகங்களின் அட்டைபடத்துக்கு ஆன்லைன்ல இமேஜ் தேடிட்டே, ஆன் த ஸ்பாட்டுல நாலு புக்குக்கு பில்ட் அப் கொடுத்து பின்னட்டை ’பிளர்பு’ம் எழுதிட்டு இருப்பாரு. அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிறதுல தான் இவரு பாபா ரஜினி, ஆனா ஆல் த சேனலுல அட்டர் டைம்ல அவதாரம் எடுக்கிறதுல இவரு ஒரு கமல் பாஸ்”  என்று நிறுத்தினான் ஜெய்.

ஆர்வமான தலைவன் ஜெயகிருணனிடம் கேட்டான் “இவரு என்ன மாதிரி கவிதைகள் எல்லாம் எழுதுவாருப்பா”

“பாஸ் நீராலானதுன்னு ஒரு தொகுப்பு. அத உன்னோடிருத்தல் தன்னோடிருத்தல் மற்றும் பிறரோடு இருத்தல்னு பிரிச்சு பிரியத்த பின்னி எடுத்திருப்பாரு”

“பிரியமா”

“காதல்கிறது அவருக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை அதான் பிரியம். மேல சொல்லுறேன் கேளுங்க. அந்த ஒரு தொகுப்பே போதும் பாஸ். அத இப்ப திறந்து நான் படிக்க ஆரம்பிச்சாலும் நீங்க துப்பாக்கியால சுட்டா கூட ”எளிய பிரியத்தின் கண்ணீர் முதலில் ஒரு மணல் துகளாகிறது’’ன்னு சொல்லிக்கிட்டே இந்த சோமாலிய பாலைவனத்துல செத்து போகவும் தயாரா இருக்கேன்” முதன் முதலாக ஜெயகிருஷ்ணனின் கண்கள் நீராலானது.

”அந்த அளவுக்கு உன் மனச டச் பண்னிடிச்சா” என்று தலைவன் தன் நெஞ்சோடு ஜெய்யை அணைத்து கொண்டான்.

”நான் அதுக்காக அழல பாஸ். ஆனந்த விகடன் சொல்வனம் பக்கங்களில் கூட

“ஒரு எறும்பை நசுக்குவது போல

ஒரு காலிபிளாஸ்டிக் கோப்பையை விசுவது போல

ஒரு பழைய செருப்பை விட்டெறிவது போல

ஒரு குண்டூசியை நழுவவிடுவது போல

ஒரு காலண்டர் பேப்பரை கிழிப்பது போல

ஒரு காலணா துட்டை தவற விடுவது போல

அவ்வள்வு எளிதில்

தொலைக்க முடியாதது

உனதிந்த ப்ரியம்”

என்று ஆளாளுக்கு பட்டியல் போடுற மாரி கவிதை எழுதி மனுஷ்யபுத்திரனாகலாம்னு பாக்குறாங்க. அத தான் அவரோட தீவிர ரசிகனா என்னால தாங்க முடியல. அத நினச்சு தான் இவ்வளவு கண்ணீர். இவ்வளவு துக்கம். அடுத்த புக்ஃபெயரிலாவது உயிர்மை ஸ்டாலில அவர சந்திச்சா இத சொல்லணும்.” என்று முடித்தான் ஜெய்.

“சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்” என்றான் தலைவன்.

“சோமாலியா வரைக்கும் தெரிஞ்சு போச்சா.” என்று எகிறினான் ஜெய்.

தலைவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியனை பார்த்து சொன்னான். “நான் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆயிட்டேன் மேன். இப்பவே நாம தமிழ் நாட்டுக்கு கிளம்புறோம். அங்கே ஒவ்வொரு இலக்கியவாதிகளையும் சந்திக்கிறோம் எடுறா கப்பல” என்றான்.

“பாஸ் நாம இங்கேருந்து நேரா தமிழ் நாட்டுக்கு போக முடியாது ஏன்னா இது அரபிக்கடல். முதல்ல கேரளா போய் இறங்குறோம் அப்புறம் அங்கருந்து தரைவழியா தமிழ்நாட்டுக்கு போறோம்” என்றான் ஒரு அடியாள்.

கப்பல் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருந்தது. நடுவழியில் ஒரு கட்டு மரத்தில் ஒற்றை ஆளாக ஒருவர் அமானுஷ்யமாக எதிரில் வருவதை பார்த்தனர். நெருங்கி செல்லும் போது ஜெய் அடையாளம் கண்டு கொண்டான்.

“அய்யோ பாஸ் இவரு பேரு கோணங்கி.” என்று கத்தினான்.

உலக சினிமாவுக்கு நாங்க தான் அத்தாரிட்டி!

tamil advertising

cinema

“நம்ம பயலுவளுக்கு படம் எடுக்க தெரியலடே” என்று ஆரம்பிப்பார் கேசவண்ணன். சினிமா பற்றி எங்களுக்கு பேச கிடைத்த ஒரே ஜீவன் கேசவண்னன் தான். எப்போ பார்த்தாலும் ஜிப்பா, தாடியோடவே திரிவார். நாங்கள் (நானும் ரதீஷும்) ப்ள்ஸ் டூ படித்து கொண்டிருந்த நேரம். கேசவண்ணன் வழியாக சினிமா பற்றிய ஒரு புது உலகம் திறந்திருந்தது. அடூர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன் போன்ற பெயர்களெல்லாம் புதியதாக காதில் விழுந்தது. தமிழில் ருத்ரய்யா என்று ஒரு டைரக்டர் அவள் அப்படிதான் எடுத்ததே அப்போது தான் எங்களுக்கு தெரியும்.

கேசவண்ணன் பேச ஆரம்பித்தால் ஃபெலினி முதல் பசோலினி வரை புதிய அலை இயக்குனர்கள் பெயர்கள் திற்பரப்பு அருவி போல பொல பொலவென்று கொட்டும். வங்க மொழித்திரைப்படங்கள் பற்றி பொங்கி பொங்கி பேசுவார். பேசுவது மட்டுமல்லாமல் அதிகபட்சம் ”திருவந்திரம் சலசித்திர சம்மேளன”ங்களிலாவது தவறாது தலைய காட்டி விட்டு வருவார். டி.வி.டி, இண்டெர்நெட் எல்லாம் இல்லாத கற்கால வாழ்க்கையில் இந்த மாதிரி படங்களை எங்கே போய் பார்ப்பது. பெயர்களை கேள்விப்பட்டு மனப்பாடம் பண்ணி கொள்வதோடு சரி. கேசவண்ணனிடம் கடன் வாங்கும் சினிமா பற்றிய புத்தகங்களுடன் வீடு திரும்புவோம். அதில் சத்ய ஜித்ரேயின் “OUR FILMS THEIR FILMS” முதல் அடூரின் “A LIFE IN CINEMA” வரைக்கும் இருக்கும்.

இங்க்லீஷில் சத்ய ஜித் ரேக்கே சரியான ஸ்பெல்லிங் தெரியாத‌ போதும் இந்த புத்தகங்களை எப்போதும் கைகளில் வைத்திருப்பதில் கொத்தாக ஒரு கெத்து. பள்ளியில் பசங்க கே.எஸ். ரவிக்குமார் பற்றி பேசினால் நாங்கள் ரித்விக் கட்டாக் பற்றி பேசுவோம். அவர்கள் முத்து ரஜினி பற்றி பேசினால் நாங்கள் மிருனாள் சென்னின் ஜெனிஸிஸ் நஸ்ருத்தின் ஷா பற்றி எடுத்து விடுவோம். எப்படியோ நாங்கள் வேற இனம் என்பதை ஃப்ரூப் பண்ண வேண்டிய புத்தி ஜீவி கட்டாயத்தை வலிய வரவழைத்துக்கொண்டிருந்தோம். வங்காளிகள் திரைப்படங்களை எங்கள் பங்காளிகள் திரைப்படம் போல ஃபீல் பண்ணிகொண்டிருந்தோம். உண்மையென்னவென்றால் மேற்கு வங்காளம் இருப்பது மேற்கா கிழக்கா என்று கூட எங்களுக்கு தெரியாது.

அப்போதெல்லாம் மலையாளம் டி.டி.யில் அவ்வப்போது அடூர், அரவிந்தன் படங்களெல்லாம் போடுவார்கள். ‘ஆக்ச‌ன்’ சொல்லி விட்டு அடூர் லஞ்சுக்கு போயிடுவார் அப்புறம் வந்து ‘கட்’ சொல்ல அரை மணி நேரம் ஆகும் என்று நண்பர்கள் கிண்டலடிப்பார்கள். அவ்வளவு நீளமான ஷாட்டுகளாக இருக்கும். அரண்டு ஓடும் நண்பர்களை பொருட்படுத்தாமல் அப்படியே உட்காந்து பார்ப்போம். எல்லாரும் இந்தியன் கமலின் மேக் அப் நடிப்பை கொண்டாடும் போது எலிப்பத்தயத்தில் கரமன ஜனார்த்தனின் இயல்பான நடிப்பு பற்றி விவாதம் செய்வோம்.

ரோஷமோன் பாக்கமாலே அகிரா குரசோவா ஆங்கிள் பற்றி பேசுவோம். க்ளோஸ் அப் பார்ததில்லை ஆனா அப்பாஸ் கியரோஸ்டமி பத்தி அலப்பறை பண்ணுவோம். இப்படி உலக சினிமாவில் ஊறி கிடந்தோம். தமிழ் சினிமாவும் மலையாள சினிமாவும் மட்டுமே பார்த்தவர்கள் எங்களை ஏதோ ஏகத்துக்கும் புத்தி ஜீவிகள் என்று நினைத்து கொண்டிருந்தார்கள்.

ரதீஷ் சாதாரணமாக ஊர்ந்து செல்லும் எறும்பு வரிசையைக்கூட கைகள் வைத்து கேமரா கோணம் பார்ப்பான். ‘இப்படியே பேண் பண்ணினா இங்கே கட்டு’ என்பது போன்ற வாசகங்களை உதிர்த்த படி தான் கதை சொல்லுவான். நானும் என் பங்குக்கு நாலாவது ஷாட் டிஸ்ஸால்வ் அஞ்சாவது ஷாட் வைப்பிங்கு என்று எடிட்டிங் நுட்பம் பேசுவேன். கல்யானகிராஃபர் வைத்திருக்கும் கேமராவை தவிர வேறு பார்த்ததில்லை ஆனாலும் கோல்டன் ஆங்கிள் பற்றி அலசுவோம். டெய்லர் சட்டைக்கு காலர் கட் பண்ணும் கத்திரியை தவிர வேறொன்றும் தெரியாது ஆனாலும் மான்டேஜ் எடிட்டிங் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசுவோம்.

பிறகு சென்னைக்கு வந்த பிறகு ஃபிலிம் சேம்பர் திரப்பட விழாக்கள் தீனி போட ஆரம்பித்தன. ஓவிய கல்லூரி மாணவர் ஐ.டியை வைத்து கொண்டு ஓசியிலேயே படங்கள் பார்ப்போம். டாம் டைக்வரின் ரன் லோலா ரன், மஹ்மல்பப்பின் சைக்கிளிஸ்ட், குரொசோவாவின் செமன் சாமுராய் என்று உலக சினிமா டூரை உண்மையிலேயே அடிக்க ஆரம்பித்தோம்.

 புதியதாக உலக சினிமா பார்க்க வரும் உற்ற நண்பர்களையும் அப்போதே குறியீடுகள், சர்ரியலிசம், மூன்றாமுலக சினிமா என்று பேசி மூச்சு வாங்க ஓட வைப்போம். அகண்ட ஸ்கிரீனில் சப்டைட்டில் மட்டுமே படித்து படித்து படத்தை தவற விடும் பய புள்ளைகளும் உண்டு. உலக சினிமா எல்லாவற்றையும் உள்ளுர் மொழியில் டப் பண்ணனும் என்று பேசிக்கொள்வோம். ஆனால் இன்று  அவற்றையெல்லாம் உருவி ‘ரீமேக்கே’ செய்து விடுகிறார்கள்.

நமது சினிமாக்களில் முத்தம் கொடுக்கிறதுக்கே முன்னாடி ரெண்டு இலையோ பூவோ வச்சி மறைக்கும் போது, உலக சினிமாக்களில் முக்கியமான ‘சீன்’களெல்லாம் கூட முழுசா காட்டுவது ஒரு பக்கம் கிளு கிளுப்பாக இருந்தாலும், என்னமா ஆர்டிஸ்டிக்கா பண்ணிருக்கானுக என்று ஆராயவும் தவறுவதில்லை. இதையொட்டி சில சமயம் படம் பாக்க வரும் பெருசுங்களை பசங்க சந்தேகமா பாத்தாலும் “இவங்கல்லாம் கலை ஆர்வலர்களப்பா” என்று அங்கீகரிக்கவும் மனசு தயங்குவதில்லை.

இன்று காலம் மாறி விட்டது. பார்சன் காம்ப்ளக்ஸில் டிவிடி விற்கும் பையனே உலக சினிமா இயக்குனர்கள் பேரை ஒன்று விடாமல் சொல்லுகிறான். போன கான் ஃபிலிம் பெஸ்டிவலில் தங்க பனை வாங்கின படம்னா இது என்று டீட்டெயிலும் காட்டுறான். கடைக்கு போக சோம்பல்னா கூகுள்ல சினிமா பேர தட்டினா டொரெண்ட் தந்து வேணும்கிறத உருவிக்கோ என்கிறான். உன்குழலில்(youtube. பெயர்சொல்லை தமிழ் படுத்தாதீங்கன்னா கேக்குறாங்களா) முழு படமும் ஓட விட்டு பாக்கலாம். சினிமா பற்றிய விவரங்களை விக்கி பீடியா அள்ளி கொடுக்குது. சந்துல திரும்பினா நாலு பசங்க உலக சினிமா லெவலுக்கு தான் பண்ணிகிட்டுருக்கிற குறும்படத்த பத்தி பேசிக்கிறாங்க. டிஜிட்டல் புரட்சி சினிமாவ உங்க கொல்லைப்பக்கம் கூட்டிட்டு வந்திருச்சுன்னு சொல்றாங்க. எப்படியோ ஒரு கலை ஜனநாயகப்பூர்வமாகுறது நல்லது தானே. நானும் உலக சினிமா ரேஞ்சுக்கு ஒரு  ஸ்கிரிப்ட எழுத ஆரம்பிச்சுட்டேன்.

இத கேட்டு “நம்ம சினிமா உலக சினிமா ரேஞ்சுக்கு போயிடிச்சா இல்ல உலக சினிமா நம்ம சினிமா ரேஞ்சுக்கு வந்திரிச்சா ” என்ற கேசவண்ணாவை ஊரில் பார்த்த போது  “பின்ன என்னப்பா. அன்னைக்கெல்லாம் உலக சினிமான்னா எங்களை மாதிரி தீவிர ஆர்வலர்கள் தேடி தேடி பார்க்கிற படங்களா இருந்தது. இன்னைக்கு என்னன்னா ஆளுக்கு நாலு டிவிடிய காட்டுறாங்க. கிம் கி டுக் படம் போல வராதுன்னு சொல்லி என்னையே கிர்ரடிக்கிறாங்க. கோடம் பாக்கத்து ஆளுங்க கூட படிமம், குறியீடு பற்றி பாடம் எடுக்கிறாங்க. எல்லா பதிப்பகங்களும் உலக சினிமா பற்றி ஆளுக்கு நாலு புத்தகம் போடுறாங்க. அது அதுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கணும் இல்ல” என்றார் வருத்தமாக. ஒரு காலத்தில் உலகசினிமா பற்றிய புத்தகங்களை கட்டிபிடித்து உறங்கியவர்.

இப்போது கேசவண்ணன் ஜிப்பா போடுவதில்லை. தாடியும் காணோம்.

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் மூன்று.

tamil advertising
Unknown

(முன்கதை சுருக்கம்: சோமாலியா கப்பல் கொள்ளையர்களிடம் ஏராளமான தமிழ் இலக்கிய புத்தகங்களுடன் மாட்டிக்கொள்கிறான் ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியம். என்ன நடந்தது தெளிவாக தெரிந்து கொள்ள முன் அத்தியாங்களை படிக்கவும். கண்டினியூட்டி முக்கியம் பாஸ்!)

 

அவன் எழுத்து கூட்டி சத்தமாக படித்தான் “கறிவிருந்துடன் ஒரு இலக்கிய சந்திப்பு கண்டிப்பாய் வரவும் இப்படிக்கு பவா.செல்லதுரை”

“யாருப்பா இது பவர். செல்லதுரை.பெரிய ஆளா இருப்பாரு போல‌” என்றான் தலைவன்

“அய்யோ அது பவர். இல்லங்க பவா. புள்ளி வராது” என்றான் ஜெயகிருஷனன். தலைவன் மெசேஜை திருப்பி திருப்பி பார்த்தான். ஜெய் மெஸேஜ் பேப்பரை வாங்கி மறுபடி படித்து விட்டு தலைவனை பார்த்து சொல்ல ஆரம்பித்தான்

” சார் நீங்க தமிழ்நாட்டு பக்கம் வந்தீங்கன்ன்னு வச்சுக்குங்க, அங்கேருந்து திருவண்ணாமலை வரைக்கும் போயிட்டு வரலாம்ணு போனீங்கண்ணா தப்பித்தவறி இலக்கியம்ணு ஒரு வார்த்தை சொல்லிடாதீங்க. அவ்ளவு தான் உங்கள அலேக்கா தூக்கிட்டு போய்டுவாரு இந்த பவா. செல்லதுரை”

“எத்தன பேர கடத்திருக்கோம். எங்க கிட்டேவா” என்றான் தலைவன்.

“அவ்வளவு டெரரா அவரு” என்றான் ஒரு கொள்ளையன்

“இல்ல பாஸ். அவருக்கு இலக்கிய அன்பர்கள்னா ஒரு பாசம். அவ்வளவுதான் அப்புறம் சும்மா விட மாட்டார். மட்டன் பிரியாணி,  சிக்கன் கொத்சு, கூடவே அவரு எழுதின கதையில ஒண்ண நரேட் பண்ணி கண்ணுல தண்ணி வர வச்சிடுவார். சிக்கனால வந்திச்சா இல்ல சிறுகதையால வந்திச்சா கண்ணுல தண்ணின்னு உங்களுக்கே தெரியாது. விருந்துக்கு அப்புறம் அப்டியே கொல்லைப்பக்கமா மாந்தோப்புல இருக்கிற கெஸ்ட் ஹவுஸ் போனீங்கன்னா உண்ட மயக்கத்துல உட்காந்திருக்கிற மிஷ்கின்ல இருந்து நீயா நானா ஆன்டனி வரைக்கும் நீங்க பாக்கலாம் பாஸ். ” என்றான் ஜெய்.

இவங்க எல்லாம் யாரு என்பதை போல பார்த்தான் தலைவன்.

” இலக்கிய ஏப்பம் விட்டுட்டே மாமரத்துக்கு கீழே நீங்க லேசா கண்ணசந்தா இன்னொரு மரத்துக்கு கீழே நா. முத்துகுமார் சத்தமா கவிதை பாடி நியூட்டனின் மூன்றாம் விதிப்படி உங்க தூக்கத்த கெடுத்திட்டு இருப்பார். அங்கேருந்து எஸ்கேப்பாயி இன்னொரு மரத்துல தலைய சாய்ச்சா பி.சி. ஸ்ரீ ராம் கேமரா போகஸ் பண்ணிட்டு இருப்பார். இப்படி எந்த மூலைக்கு போனாலும் வித விதமான ஆளுமைகளை பார்த்து நீங்களே விக்கித்து போய், சொந்த ஊரான‌ சோமாலியாவுக்கே போய் தூங்கிக்கலாம்ணு முடிவெடுப்பீங்க” என்று நிறுத்தினான் ஜெய்

“அப்போ பவா.செல்லத்துரை என்ன பண்ணிட்டு இருப்பார்” என்றான் ஒரு கொள்ளையன் ஆர்வமாக‌

“அவர் 19, டிஎம் சரோனிலிருந்து… கப்பல் கொள்ளையர்களுடன் ஒரு கார்த்திகை தீபம்  என்று தன் பிளாகில் ஒரு கட்டுரைய தட்டிட்டு இருப்பார் பாஸ்” என்ற போது தலைவன் குதூகலித்து “இவ்வளவு அன்பான ஒரு இலக்கிய வாதியா? அவர கண்டிப்பா நாங்க மீட் பண்ணனுமே” என்றான் தலைவன்.

“அன்புன்னா அன்பு அவ்வளவு அன்பு பாஸ். ஏழுமலை ஜமா மாதிரி எக்செலென்ட் கதைகள் எழுதினவர்.  இப்படி விருந்து வைக்கிறதுலயும் விழா எடுக்கிற‌துலையும் அவரு டைம் போய்க்கிட்டு இருக்கு. திருவண்ணாமலையில கிரிவலம் போற பவுர்ணமி இரவுக்கு அப்புறம், இவரும் நண்பர்களும் உருவாக்கின கலை இரவு தான் பேமசு தெரியுமா.” என்று நிறுத்தினான் ஜெய்.

“தமிழ் இலக்கியத்துல ஒரு காலத்துல சுந்தர ராமசாமி வீடு தான் கலை இலக்கிய வாதிகளுக்கு காசி ராமேஸ்வரம் மாதிரி. ஒரு தடவ போயிட்டு வரலேன்னா எழுத்தாளர்கள் ஆத்மாவுக்கு இலக்கிய சாந்தி கிடைக்காது. எப்போ போனாலும் சுராவே சோறுபோட்டு பஸ்ஸுக்கு படியும் கொடுத்து அனுப்புவாரு.  அவ்வளவு நல்ல மனுஷன். அதுக்கு அப்புறம் தைரியாமா ஒரு கதவ தட்டலாம்னா அது பவா. செல்லத்துரையோட கதவு தான். ஆனா கையில இலக்கிய ஸ்வைப்பிங் கார்டு இருக்கணும் பாஸ்”

“ஓகே எனக்கே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குப்பா. உங்க ஊரு இலக்கிய வாதிக எல்லாம் இவ்வளவு நல்லவகளா இருக்காங்களே” என்றான் தலைவன்.

ஜெயகிருஷ்ணன் தான் ஒரு பணயக்கைதியாக இருப்பதையே சற்று மறந்து போயிருந்தான். கொள்ளையர்களில் ஒருவன் அந்த தூசி படிந்த டி.வியை ஆன் பண்ணினான்.

“பாஸ் பாஸ் எங்க ஊரு சேனல் எதாவது கிடைக்குமான்னு பாருங்க. என்னை பத்தி ஏதாவது நியூஸ் வந்திருக்காணு பாக்குறேன்.” என்றான் ஜெய்.

அந்த கொள்ளையன் மெல்ல ஒரு தமிழ் சானலை மாற்றினான்.
“சோமாலியா கொள்ளையர்கள் கடத்திய தமிழன் ஜெயகிருஷ்ணனின் கதி என்ன…? ஒரு விவாதம்.” என்று ஹோஸ்டிங் பண்ணும் ஆள் காற்றை காரச்சேவாக மென்ற படி பில்டுப் கொடுக்க, கருத்து சொல்ல காத்திருந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் தொன்டையை சற்று செருமி கொண்டார்.  முகத்தில் விழும் முடிக்கற்றைகளை கைகளால் கோதி விட்ட படி உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.

 

(தொடரும்)

இன்றைய கலை 2. தியோ ஜான்சன்

tamil advertising

theo_jansen

தியோ ஜான்சன்

டச் நாட்டை சேர்ந்த சிற்பகலைஞரான தியோ ஜான்சன் நடமாடும் சிற்பங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். பொறியியலையும் கலையையும் இணைத்து இவர் உருவாக்கும் Strandbeest சிற்பங்கள் எந்த மோட்டார் மெக்கானிசமும் இல்லாமல் காற்றின் வேகத்தை துணை கொண்டு அசைவை பெறுபவை. நடமாடுபவை. நம்மை ஆச்சரியப்படுத்துபவை.

இவை பற்றி மேலும் அறிய இங்கே சுட்டுங்கள் http://www.strandbeest.com/

இன்றைய கலை1: மரினா அப்ராமொவிக்

tamil advertising
மரினா அப்ராமொவிக்

மரினா அப்ராமொவிக்

செர்பியாவில் பிறந்த ஒரு நிகழ்த்து கலைஞர். உடலின் எல்லையயும் மனதின் விரிவையும், தனது  பல்வேறு சோதனை முயற்சிகளின் வழியே நிகழ்த்து கலையில் மேற்கொண்ட இவர் இப்போது நியூயார்க்கில் வசிக்கிறார்.

ஒரு சுட்டி

http://www.youtube.com/watch?v=gyq-0uPBTMI

உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா? : கார்ப்பரேட் சித்தன் சிந்தனைகள்!

tamil advertising

Image

1

“அந்த கோர்ஸ் படிச்சா ஃப்யூச்சர் இல்ல”

“இல்லப்பா இந்த கோர்ஸுக்கு சரியான ஃப்யூச்சர் இருக்கு”

அலுவலகத்தின் இரு இன்டெர்ன்ஷிப் மானவர்கள் விவாதித்து கொண்டிருந்தார்கள்.

கார்ப்பரேட் சித்தன் கேட்டான் “ஏம்பா என்ன இன்னும் ஒரு ஐனூறு வருஷம் உயிர் வாழ்வீங்களா”

 

2

“தண்ணீரைக்கூட தனியார்மயமாக்கணும்” என்றார் அலுவலக நண்பரொருவர்.

“நாளைக்கு கக்கூசுக்கு கூட கடனட்டை எடுத்திட்டு போகணும் பரவால்லியா” என்றான் கார்ப்பரேட் சித்தன்.

 

3

“காலையிலையும் நைட்லேயும் பல்லு வெளக்கா ஆயிரம் காரணம் இருக்கு, கிருமிகள், கிருமிகள்… ” என்று பயமுறுத்தும் டூத்பேஸ்ட் விளம்பரங்களை பார்த்து மிரண்டு போன நண்பனிடம் கார்ப்பரேட் சித்தன் சொன்னான்

” இவனுங்க‌ சொல்றத கேட்டா, இது பல்லா இல்ல‌ பப்ளிக் டாய்லெட்டான்னு சந்தேகம் வந்திருது”

 

4

” உணவு கடையில எலி இருந்தா அஞ்சு லட்சம் அபராதமாம்.” என்று செய்தியை வாசித்தார் அலுவலக நண்பர் ” “உணவே இங்கே எலியா இருக்கிற நிலைமையை மாத்துங்கடா முதலில” என்றான் கார்ப்பரேட் சித்தன்.

5

“உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கான்னு கேட்டானுங்க. ஓகே. இப்போ எலுமிச்சை இருக்கான்னு கேக்கிறானுங்க.” என்றார் அலுவலக நண்பர்

“இது பல்லு விளக்குற பேஸ்டா இல்ல சரக்குக்கு தொட்டுக்குற சைடிஷ் ஊறுகாயா. “ என்றான் கார்ப்பரேட் சித்தன்.

6

”எங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு” என்றான் அலுவலக நண்பன்

“உங்க தாத்தாவுக்கு கரும்புத்தோட்டமே இருந்திச்சு. ஞாபகம் இருக்கா” என்றான் கார்ப்பரேட் சித்தன்

7

”லைஃப் முழுக்க இன்கம் வர மாதிரி ஒரு ஸ்கீம் இருக்கு” என்றாள் தொலைபேசி வங்கி பெண்

“யாரு உங்க பாங்க் ஓனருக்கா” என்று போனை வைத்தான் கார்ப்பரேட் சித்தன்

8

” i like modern  multiplex theaters only.” என்றான் அலுவலக நண்பன்

“அங்கே போயும் ’ஊதா கலர் ரிப்பன் யாரு உனக்கு அப்பன்’க்கு தானே விசிலடிக்கப்போற”  என்றான் கார்ப்பரேட் சித்தன்!

 

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் இரண்டு.

tamil advertising

Somali pirate on the coast of Hobyo

ஆர்வம் மேலிட தலைவன் இன்னொரு புத்தகத்தை எடுத்து பிரித்தான். “இது யாருப்பா” என்றான். “எஸ்.ராமகிருஷ்ணன்” என்றான் ஜெய். “உலக சினிமா பற்றி ஒரு புக் எழுதி இருக்காரே அவரா” என்று தலைவனே கேட்டான். ஜெய் அப்படியே ஷாக் ஆயிட்டான்.

“பாஸ் உங்களுக்கு எப்டி தெரியும் பாஸ்” என்றான் ஒரு பொடியாளாய் இருந்த இன்னொரு அடியாள்.

“மூணு நாலு வருஷம் முன்னாடி அவர நான் மீட் பண்ணிருக்கேன்பா” என்று ஆரம்பித்தான் பாஸ். பொறுமையில்லாமல் ஜெய் கேட்டான் “எஸ்ராவையா? நீங்களா? எங்கே மீட் பண்ணினீங்க சார்”

ஏன் இந்த அவசரம் என்பது போல தலைவன் ஜெய்யை உற்று பார்த்துவிட்டு தொடர்ந்தான் “உங்க ஊருல ஆனந்த விகடம்னு ஒரு மேகசின் வருதா”

“விகடம் இல்ல விகடன்” திருத்தினான் ஜெய். முகத்தில் சற்று பெருமிதம் காட்டி கொண்டான், ஏன் என்று அவனுக்கே தெரிய வில்லை.

“ஏதோ ஒண்ணு தம்பி. இப்படி குறுக்க குறுக்க பேசாதீங்க. எனக்கு மறந்து போவும். ஆங்.. ஆனந்த விகடன்ல தேசாந்திரின்னு ஒரு பத்தி எழுதுனாராம் இல்ல.”

“எங்க ஊருல பத்தின்னா ரெண்டே ரெண்டு தான் பேமசு. ஒண்ணு சைக்கிள் அகர்பத்தி இன்னோண்ணு எஸ்ரா பத்தி மேல சொல்லுங்க” என்றான் ஜெய்.

“பயம் விட்டு போச்சு.” என்று சற்று முறைத்து விட்டு விட்ட இடத்தில் தொடர்ந்தான் தலைவன்.

“அவரு தேசாந்திரி எழுதிட்டு இருந்தாரா அந்த அனுபவங்களுக்காக கால் நடையாவே இந்தியா முழுக்க சுத்த ஆரம்பிச்சிருக்காரு. கோவில்பட்டியில கடலை மிட்டாய்க்கு பாகு காய்ச்சறவன்ல ஆரம்பிச்சு சென்னை ட்ரெயின்ல பிளாஸ்டிக் முகமூடி விக்கிறவன், பம்பாய்ல வாட்ச் மிட்டாய் செய்யுறவன், காசியில பிச்சை எடுக்கிற தாத்தா, கல்கத்தாவுல கைவண்டி இழுக்குற வங்காளி, காஷ்மீர்ல குல்லா செய்றவன், கராச்சியில கபாப் போடுறவன் வரைக்கும் விழிம்பு நிலை மக்கள் கிட்ட நெருக்கமா பேசி தன் அனுபவங்களை உருக்கமா எழுதி அந்ததந்த ஊருல இருந்தே விகடனுக்கு த்பால்ல அனுப்பிருவாராம். அப்டியே விளிம்புநிலை மக்கள் கிட்ட பேசிக்கிட்டே பொடிநடையா நடந்தவர் சோமாலியா வரைக்கும் வந்துட்டார்னா பத்துக்கோயேன்” என்று நிறுத்தினான் தலைவன்”கோயேன்” என்று முடித்த இடத்தில் ஒரு அழுத்தம் இருந்தது. தலைவனின் கண்கள் ததும்புவதை பார்தததும் “சிறுத்தை அழுவது போல” என்று எஸ்ரா ஸ்டைலில் கவித்துவமான ஒரு வாசகம் ஜெய்கிருஷ்ணனின் மனதுக்குள் ஓடி மறைந்தது.

கொள்ளையர்களில் சிலரும் ரகசியமாக கண்ணீரை துடைத்து கொண்டு விம்முவதை ஜெய் கவனித்தான். எங்கும் லேசான சோகம் பரவுவதை உணர்ந்த ஜெய் கொள்ளையர்களின் சோகத்தை கலைக்க எண்ணியவன் போல “சரி சரி அவரு தேசாந்திரி மட்டும் எழுதல உங்கள மாதிரி திருடர்களை பற்றி கூட ஒரு நாவல் எழுதி இருக்கார்” என்றான்.

”சொல்லவே இல்ல” என்பது போல தலைவன் பார்த்தான்.

”நெடுங்குருதின்னு ஒரு நாவல். உங்களை மாதிரி கள்வர்களை பற்றிய கதை தான் அது. வேம்பலைன்னு ஒரு கிராமமே திருடர்கள் கிராமம் தான் கதையில தெரியுமா” என்றான்.

இப்போது தலைவனுக்கு பெருமையாக இருந்தது. ”பேசாம அவர கடத்திட்டு வந்து நம்மள பத்தி ஒரு நாவல் எழுத சொல்லலாமா” என்று ஒரு அடியாள் கேட்டான்.

“எதுக்கு தேசாந்திரி பார்ட் டூ எழுத சொன்னா அவரே ஆட்டோமேட்டிக்கா இன்னொரு வாட்டி இங்கே வந்திட போறாரு” என்றான் இன்னொருவன்.

தலைவன் முறைத்தான்.

அப்போது பக்கத்திலிருக்கும் கடற்கரையில் காவல் நிற்கும் ஒரு கொள்ளையன் பரபரப்புடன் ஓடி வந்தான்.

“என்னா மேட்டர்” என்றான் பாஸ்.

“பாஸ் இந்த பாட்டில பாருங்க இது கடல் தண்ணில மிதந்து வந்திச்சு. உள்ள ஒரு மெசேஜும் இருக்கு. மெசேஜ் உங்களுக்கு. பாட்டில் எனக்கு”

“மெசேஜ படி” என்றான் தலைவன்.

”நான் எப்டி பாஸ் படிக்கிறதுக்கு இது தமிழில எழுதி இருக்கு எனக்கு தான் தமிழ் தெரியாதே” என்றான் அவன்.

மெசேஜை பிடுங்கி இன்னொருவனிடம் கொடுத்து “படி” என்றான் தலைவன்.

அவன் எழுத்து கூட்டி சத்தமாக படித்தான் “கறிவிருந்துடன் ஒரு இலக்கிய சந்திப்பு கண்டிப்பாய் வரவும் இப்படிக்கு பவா.செல்லதுரை”

(தொடரும்)

 

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் ஒன்று.

tamil advertising

( சின்ன முன்னுரை: எனக்கு இலக்கியம் பிடிக்கும் இலக்கியவாதிகளையும் பிடிக்கும். அந்த வாசக பேரன்பிலிருந்து பிறந்ததே இந்த கதை)

CBAB08195A33F0D84C739B1D939F_h416_w442_m2_q80_chrmqLYKD

கப்பல் சோமாலியா கடல் எல்லையை தாண்டும் வரை பயணிகள் உஷாராக இருக்கும் படி சிப்பந்திகள் சொன்ன போது ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியனுக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது. சென்னையில் தன் நண்பன் சந்தோஷ் வாங்கி கொடுத்த தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் கனமான புத்தகங்களை தவிர அவனிடம் சொல்லிக்கொள்ளும் படி எந்த உயர்தர வஸ்துவும் இல்லை. சோமாலிய கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்தால் கூட இப்புத்தகங்களை தூக்கி சுமக்க கஷ்டப்பட்டாவது தன்னை விட்டுவிடுவார்கள் என்று கற்பனை செய்து கோண்டான். எப்படியோ சிறு தோணிகள் மூலம் கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்து விட்டார்கள் என அறிந்த போது கூட அவன் அசரவில்லை. ஆனால் சில கொள்ளையர்கள் சுற்றி வளைத்து இவனை பிடித்துக்கொண்டு இவனுடைய பெரிய பார்சலைப்பார்த்து என்ன இது என்று கேட்ட போது கூட “புக்ஸ் தமிழ் புக்ஸ்” என்றான் மிதப்பாக. தலையில் ’நங்’கென்று அடி விழுந்தது. பிறகு நடந்தது எல்லாம் அவனுக்கு ஹெராயின் போதையில் வரும் ட்ரிப்பிங் போல சுருள் சுருளாக பலவண்னத்தில் உள்ளுக்குள் ஒரு மாடர்ன் ஆர்டாக நெளிந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது. கண் விழித்து பார்த்தால் ஏதோ ஒரு தகரக்கொட்டகையில் ஒரு மர பெஞ்சில் படுத்திருந்தான்.

 

சுற்றிலும் கருத்த தேகங்கள் கொண்ட சோமாலிய கொள்ளையர்கள் அழுக்கான மிலிட்டரி யூனிபாஃமில் ஏதேதோ செய்து கொண்டிருந்தார்கள். இவனுக்கு நினைவு திரும்பியதை கண்டுகொண்ட அவர்களில் தலைவன் போல இருந்தவன் இவன் அருகில் வந்து இவன் தாடையை பிடித்து தூக்கி “இந்தியாவிலிருந்து வரேன்னு தெரியும். அங்கே எங்கேருந்து வரே” என்று சுத்த தமிழில் கேக்கா விட்டாலும் அவன் பேசிய ஆங்கிலத்தை இப்படி மனதிற்குள் மொழி பெயர்த்து கொண்டான் ஜெய். ”தமிழ் நாடு” “இதெல்லாம் என்ன” “புக்ஸ்” “அது தெரியுது மவனே இதெல்லாம் என்ன புக்ஸ்” என்றான்.

”இதெல்லாம் இலக்கிய புக்ஸ். குண்டு குண்டா இருக்குதே அதெல்லாம் நாவல்ஸ். ஒல்லியா இருக்கிறது எல்லாம் கவிதை புக்ஸ்” என்றான். “ ஓ நாவல். அது சரி” என்று விட்டு அவிழ்ந்து கிடந்த புத்தக கட்டில் ஒன்றை சுட்டி ஒல்லியான ஒரு கொள்ளைக்காரனிடம் தூக்க சொல்லுகிறான். அவன் அந்த புத்தகத்தை தூக்க முயற்சி செய்து முடியாமல் இன்னொருவனை ஒரு கை பிடிக்க சொல்லி இருவருமாக தூக்கி கொண்டு வந்து காட்டுகிறார்கள் “இது என்ன புக்” என்கிறான் தலைவன். “இது. விஷ்ணுபுரம்” என்கிறான் ஜெய். இரண்டு கொள்ளையர்களும் தூக்க முடியாமல் தூக்கிகொண்டு நிற்க தலைவன் சில பக்கங்களை புரட்டி விட்டு ஜெய்யை நோக்கி திரும்பி கேட்டான்” இது எத்தனை பேர் சேர்ந்து எழுதியது” “எத்தனை பேரா… ஒரே ஆள் ஒரே ஆள் எழுதியது தான் என்கிறான்” அந்த ஒல்லியான ஆள் கடுப்புடன் “ இத ஒரே ஆளா தூக்க முடியல ஒரு ஆள் எழுதினதா, என்ன விளையாடுறியா” என்கிறான். அவன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை பார்த்து லேசான பீதியுடன் ஜெய்”நல்ல வேளை அசோகவனம் இன்னும் வரல” என்று தனக்குள் முணு முணுத்து விட்டு “சத்தியமா சொல்றேங்க ஒரே ஆள் தான். அவரு பேரு ஜெயமோகன். இங்கே நமீபியாவுக்கெல்லாம் கூட வந்திருக்கிறாரு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா விசாரிச்சு பாருங்க” என்றான். கூட்டத்திலிருந்து இன்னொரு கொள்ளையன் மெல்ல நடந்து வந்து சாவகாசமாக புத்தகத்தின் பின்னட்டையை திருப்பி பார்த்து விட்டு தலைவனிடம் சொன்னான் “பாஸ். இவரப்பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன் நம்ம சினுவா ஆச்சிபிய கூட இவரு நிராகரிச்சு தான் எழுதிருக்காரு” என்றான். ஜெய்க்கு இந்த தகவலே புதுசாக இருந்தது. ”நிராகரிச்சுன்னா?” என்றான் தலைவன். “அது வந்து பாஸ் இப்போ நம்ம கிட்ட மாட்டுன ஹோஸ்டேஜுல யாராவது ஒர்த் இல்லன்னு தெரிஞ்சா போட்டு தள்ளுறோம் இல்ல அது மாதிரி தான்” என்றான். ஓ என்ற படி தலைவன் ஜெய்கிருஷ்ணனை பார்த்து திரும்பி “ அடுத்த கப்பல் எப்போ வருமோ என்னமோ அது வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகணும் தம்பி. நீ என்ன பண்ணு இந்த நாவல எங்களுக்கு படிச்சி காட்டுற” என்றான். ஜெய் கதறி விட்டான். “ஐயா நான் இத மும்பைல கப்பல் ஏறும் போது படிக்க ஆரம்பிச்சது. ஸ்ரீபாதமே இன்னும் தாண்ட முடியல. முழுக்க படிச்சு காட்டுனா ஒரே கப்பல் ஏழு வாட்டி சோமாலியாவ கடந்து போனாலும் நீங்க மிஸ் பன்னிடுவீங்க. அவ்ளவோ நாளாகும். விட்டுடுங்க” என்றான்.

 

தலைவன் குனிந்து இன்னொரு புக்கை எடுத்தான் “ இது என்னா” என்பது போல இவனை நோக்கி தலையை மேலும் கீழும் அசைத்தான். ஜெய் லேசாக எட்டி பார்த்து விட்டு சொன்னான் “ இது சீரோ டிகிரி” “இவரு யாருப்பா கூலிங்கிளாஸ், காதுல ஸ்டட் எல்லாம் போட்டு கிட்டு” என்றான் ஜெய் வாய் திறப்பதற்குள் கொள்ளையர்களில் ஒருவன் சொன்னான் “இவரு பேரு சாருநிவேதிதா பாஸ்” “ஹேய் உனக்கு எப்படி தெரியும் மேன்” “பாஸ் போன வருஷம் டெல்லியில ஒரு இண்டெர்நேஷனல் எழுத்தாளர்கள் மீட்டிங் நடந்திச்சில்ல அது பேரு என்ன எழவோ மறந்திட்டேன். அதுல நான் ஒரு சோமாலிய எழுத்தாளருக்கு டூப் போட்டு கிட்டு கலந்து கிட்டேன் இல்ல அங்க தான் இவர சந்திச்சேன்.” “ஓ இண்ட்ரெஸ்டிங். சொல்லு சொல்லு” என்றான் தலைவன். ”மீட்டிங் முடிச்சு சரக்கடிக்கும்போது இவர் கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். ஆனா அவரு அன்னைக்கு சரக்கு அடிக்கவே இல்ல. ஏதோ மலைக்கு போறதுக்கு மாலை போட்டிருந்தார். சோமாலியாவுல ஒட்டகபாலில தயாரிக்கிற சினோ அவருக்கு பிடிச்ச பானம்னு அவரு சொல்லி தான் எனக்கே தெரிஞ்சுது பாஸ்.”  தலைவன் சீரோ டிகிரியை தூக்கி பிடித்து இந்த புக்கை பற்றி ஏதாவது தெரியுமா என்றான் “ பாஸ் இதோட இங்கிலீஷ் ட்ராண்ஸ்லேஷன் என்கிட்ட இருக்கு. நான் ஏற்கனவே படிச்சிட்டேன். ஒரு மாதிரி நான் லீனியர் ரைட்டிங்” என்றான். “அப்டினா” புருவத்தையும் புத்தகத்தையும் ஒரே சமயத்தில் தூக்கியபடி தலைவன் கேட்டான். “ அது வந்து பாஸ். இப்போ ஒரு கப்பல்ல நாம கொள்ளை அடிக்க போறோம்னு வச்சிக்குங்க அந்த கப்பலோட எந்த பக்கத்தில இருந்தும் உள்ள நுழையலாம் இல்ல. எப்படி வேணும்னாலும் நுழையலாம் இல்ல ஆனா கொள்ள அடிக்கிறது தான் முக்கியம் அது மாதிரி தான் பாஸ்.  முதல் அத்தியாத்துல நுழஞ்சும் படிக்கலாம் மூணாம் அத்தியாயத்துல நுழஞ்சும் படிக்கலாம். பின்னாடி இருந்து முன்னாடி கூட படிக்கலாம்.” தலைவன் டயர்டாகி “வேற என்னப்பா இதுல மேட்டர் இருக்கு” என்றான். இந்த கேள்விக்கு ஜெய் வாய் விட்டு சிரித்தான். “நிறைய இருக்கு” என்றான் அந்த படித்த கொள்ளையன். “ பாஸ் இத சோமாலிய மொழிக்கு நான் தான் ட்ராண்ச்லேஷன் பண்ணனும்ணு ரொம்ப அடம் பிடிச்சாரு” “யாரு” ’’ சாரு”என்றான் கூடவே. “பாஸ் அவரு சாதாரண ஆளுல்ல பாஸ். நம்ம சோமாலிய எழுத்தாளர் நுருதின் ஃபாரா பத்தி கூட ஒரு மணி நேரம் பேசிட்டு இருந்தாரு. அவரு பேரையே நான் அப்போ தான் கேள்விப்பட்டேன் தெரியுமா. சாரு இஸ் கிரேட் என்று பெருமைப்பட்டு கொண்டான் தலைவன்.

 

ஆர்வம் மேலிட தலைவன் இன்னொரு புத்தகத்தை எடுத்து பிரித்தான். “இது யாருப்பா” என்றான். “எஸ்.ராமகிருஷ்ணன்” என்றான் ஜெய். “உலக சினிமா பற்றி ஒரு புக் எழுதி இருக்காரே அவரா” என்று தலைவனே கேட்டான். ஜெய் அப்படியே ஷாக் ஆயிட்டான்.

(தொடரும்)