உலக சினிமாவுக்கு நாங்க தான் அத்தாரிட்டி!

December 11, 2013 at 6:55 pm Leave a comment

cinema

“நம்ம பயலுவளுக்கு படம் எடுக்க தெரியலடே” என்று ஆரம்பிப்பார் கேசவண்ணன். சினிமா பற்றி எங்களுக்கு பேச கிடைத்த ஒரே ஜீவன் கேசவண்னன் தான். எப்போ பார்த்தாலும் ஜிப்பா, தாடியோடவே திரிவார். நாங்கள் (நானும் ரதீஷும்) ப்ள்ஸ் டூ படித்து கொண்டிருந்த நேரம். கேசவண்ணன் வழியாக சினிமா பற்றிய ஒரு புது உலகம் திறந்திருந்தது. அடூர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன் போன்ற பெயர்களெல்லாம் புதியதாக காதில் விழுந்தது. தமிழில் ருத்ரய்யா என்று ஒரு டைரக்டர் அவள் அப்படிதான் எடுத்ததே அப்போது தான் எங்களுக்கு தெரியும்.

கேசவண்ணன் பேச ஆரம்பித்தால் ஃபெலினி முதல் பசோலினி வரை புதிய அலை இயக்குனர்கள் பெயர்கள் திற்பரப்பு அருவி போல பொல பொலவென்று கொட்டும். வங்க மொழித்திரைப்படங்கள் பற்றி பொங்கி பொங்கி பேசுவார். பேசுவது மட்டுமல்லாமல் அதிகபட்சம் ”திருவந்திரம் சலசித்திர சம்மேளன”ங்களிலாவது தவறாது தலைய காட்டி விட்டு வருவார். டி.வி.டி, இண்டெர்நெட் எல்லாம் இல்லாத கற்கால வாழ்க்கையில் இந்த மாதிரி படங்களை எங்கே போய் பார்ப்பது. பெயர்களை கேள்விப்பட்டு மனப்பாடம் பண்ணி கொள்வதோடு சரி. கேசவண்ணனிடம் கடன் வாங்கும் சினிமா பற்றிய புத்தகங்களுடன் வீடு திரும்புவோம். அதில் சத்ய ஜித்ரேயின் “OUR FILMS THEIR FILMS” முதல் அடூரின் “A LIFE IN CINEMA” வரைக்கும் இருக்கும்.

இங்க்லீஷில் சத்ய ஜித் ரேக்கே சரியான ஸ்பெல்லிங் தெரியாத‌ போதும் இந்த புத்தகங்களை எப்போதும் கைகளில் வைத்திருப்பதில் கொத்தாக ஒரு கெத்து. பள்ளியில் பசங்க கே.எஸ். ரவிக்குமார் பற்றி பேசினால் நாங்கள் ரித்விக் கட்டாக் பற்றி பேசுவோம். அவர்கள் முத்து ரஜினி பற்றி பேசினால் நாங்கள் மிருனாள் சென்னின் ஜெனிஸிஸ் நஸ்ருத்தின் ஷா பற்றி எடுத்து விடுவோம். எப்படியோ நாங்கள் வேற இனம் என்பதை ஃப்ரூப் பண்ண வேண்டிய புத்தி ஜீவி கட்டாயத்தை வலிய வரவழைத்துக்கொண்டிருந்தோம். வங்காளிகள் திரைப்படங்களை எங்கள் பங்காளிகள் திரைப்படம் போல ஃபீல் பண்ணிகொண்டிருந்தோம். உண்மையென்னவென்றால் மேற்கு வங்காளம் இருப்பது மேற்கா கிழக்கா என்று கூட எங்களுக்கு தெரியாது.

அப்போதெல்லாம் மலையாளம் டி.டி.யில் அவ்வப்போது அடூர், அரவிந்தன் படங்களெல்லாம் போடுவார்கள். ‘ஆக்ச‌ன்’ சொல்லி விட்டு அடூர் லஞ்சுக்கு போயிடுவார் அப்புறம் வந்து ‘கட்’ சொல்ல அரை மணி நேரம் ஆகும் என்று நண்பர்கள் கிண்டலடிப்பார்கள். அவ்வளவு நீளமான ஷாட்டுகளாக இருக்கும். அரண்டு ஓடும் நண்பர்களை பொருட்படுத்தாமல் அப்படியே உட்காந்து பார்ப்போம். எல்லாரும் இந்தியன் கமலின் மேக் அப் நடிப்பை கொண்டாடும் போது எலிப்பத்தயத்தில் கரமன ஜனார்த்தனின் இயல்பான நடிப்பு பற்றி விவாதம் செய்வோம்.

ரோஷமோன் பாக்கமாலே அகிரா குரசோவா ஆங்கிள் பற்றி பேசுவோம். க்ளோஸ் அப் பார்ததில்லை ஆனா அப்பாஸ் கியரோஸ்டமி பத்தி அலப்பறை பண்ணுவோம். இப்படி உலக சினிமாவில் ஊறி கிடந்தோம். தமிழ் சினிமாவும் மலையாள சினிமாவும் மட்டுமே பார்த்தவர்கள் எங்களை ஏதோ ஏகத்துக்கும் புத்தி ஜீவிகள் என்று நினைத்து கொண்டிருந்தார்கள்.

ரதீஷ் சாதாரணமாக ஊர்ந்து செல்லும் எறும்பு வரிசையைக்கூட கைகள் வைத்து கேமரா கோணம் பார்ப்பான். ‘இப்படியே பேண் பண்ணினா இங்கே கட்டு’ என்பது போன்ற வாசகங்களை உதிர்த்த படி தான் கதை சொல்லுவான். நானும் என் பங்குக்கு நாலாவது ஷாட் டிஸ்ஸால்வ் அஞ்சாவது ஷாட் வைப்பிங்கு என்று எடிட்டிங் நுட்பம் பேசுவேன். கல்யானகிராஃபர் வைத்திருக்கும் கேமராவை தவிர வேறு பார்த்ததில்லை ஆனாலும் கோல்டன் ஆங்கிள் பற்றி அலசுவோம். டெய்லர் சட்டைக்கு காலர் கட் பண்ணும் கத்திரியை தவிர வேறொன்றும் தெரியாது ஆனாலும் மான்டேஜ் எடிட்டிங் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசுவோம்.

பிறகு சென்னைக்கு வந்த பிறகு ஃபிலிம் சேம்பர் திரப்பட விழாக்கள் தீனி போட ஆரம்பித்தன. ஓவிய கல்லூரி மாணவர் ஐ.டியை வைத்து கொண்டு ஓசியிலேயே படங்கள் பார்ப்போம். டாம் டைக்வரின் ரன் லோலா ரன், மஹ்மல்பப்பின் சைக்கிளிஸ்ட், குரொசோவாவின் செமன் சாமுராய் என்று உலக சினிமா டூரை உண்மையிலேயே அடிக்க ஆரம்பித்தோம்.

 புதியதாக உலக சினிமா பார்க்க வரும் உற்ற நண்பர்களையும் அப்போதே குறியீடுகள், சர்ரியலிசம், மூன்றாமுலக சினிமா என்று பேசி மூச்சு வாங்க ஓட வைப்போம். அகண்ட ஸ்கிரீனில் சப்டைட்டில் மட்டுமே படித்து படித்து படத்தை தவற விடும் பய புள்ளைகளும் உண்டு. உலக சினிமா எல்லாவற்றையும் உள்ளுர் மொழியில் டப் பண்ணனும் என்று பேசிக்கொள்வோம். ஆனால் இன்று  அவற்றையெல்லாம் உருவி ‘ரீமேக்கே’ செய்து விடுகிறார்கள்.

நமது சினிமாக்களில் முத்தம் கொடுக்கிறதுக்கே முன்னாடி ரெண்டு இலையோ பூவோ வச்சி மறைக்கும் போது, உலக சினிமாக்களில் முக்கியமான ‘சீன்’களெல்லாம் கூட முழுசா காட்டுவது ஒரு பக்கம் கிளு கிளுப்பாக இருந்தாலும், என்னமா ஆர்டிஸ்டிக்கா பண்ணிருக்கானுக என்று ஆராயவும் தவறுவதில்லை. இதையொட்டி சில சமயம் படம் பாக்க வரும் பெருசுங்களை பசங்க சந்தேகமா பாத்தாலும் “இவங்கல்லாம் கலை ஆர்வலர்களப்பா” என்று அங்கீகரிக்கவும் மனசு தயங்குவதில்லை.

இன்று காலம் மாறி விட்டது. பார்சன் காம்ப்ளக்ஸில் டிவிடி விற்கும் பையனே உலக சினிமா இயக்குனர்கள் பேரை ஒன்று விடாமல் சொல்லுகிறான். போன கான் ஃபிலிம் பெஸ்டிவலில் தங்க பனை வாங்கின படம்னா இது என்று டீட்டெயிலும் காட்டுறான். கடைக்கு போக சோம்பல்னா கூகுள்ல சினிமா பேர தட்டினா டொரெண்ட் தந்து வேணும்கிறத உருவிக்கோ என்கிறான். உன்குழலில்(youtube. பெயர்சொல்லை தமிழ் படுத்தாதீங்கன்னா கேக்குறாங்களா) முழு படமும் ஓட விட்டு பாக்கலாம். சினிமா பற்றிய விவரங்களை விக்கி பீடியா அள்ளி கொடுக்குது. சந்துல திரும்பினா நாலு பசங்க உலக சினிமா லெவலுக்கு தான் பண்ணிகிட்டுருக்கிற குறும்படத்த பத்தி பேசிக்கிறாங்க. டிஜிட்டல் புரட்சி சினிமாவ உங்க கொல்லைப்பக்கம் கூட்டிட்டு வந்திருச்சுன்னு சொல்றாங்க. எப்படியோ ஒரு கலை ஜனநாயகப்பூர்வமாகுறது நல்லது தானே. நானும் உலக சினிமா ரேஞ்சுக்கு ஒரு  ஸ்கிரிப்ட எழுத ஆரம்பிச்சுட்டேன்.

இத கேட்டு “நம்ம சினிமா உலக சினிமா ரேஞ்சுக்கு போயிடிச்சா இல்ல உலக சினிமா நம்ம சினிமா ரேஞ்சுக்கு வந்திரிச்சா ” என்ற கேசவண்ணாவை ஊரில் பார்த்த போது  “பின்ன என்னப்பா. அன்னைக்கெல்லாம் உலக சினிமான்னா எங்களை மாதிரி தீவிர ஆர்வலர்கள் தேடி தேடி பார்க்கிற படங்களா இருந்தது. இன்னைக்கு என்னன்னா ஆளுக்கு நாலு டிவிடிய காட்டுறாங்க. கிம் கி டுக் படம் போல வராதுன்னு சொல்லி என்னையே கிர்ரடிக்கிறாங்க. கோடம் பாக்கத்து ஆளுங்க கூட படிமம், குறியீடு பற்றி பாடம் எடுக்கிறாங்க. எல்லா பதிப்பகங்களும் உலக சினிமா பற்றி ஆளுக்கு நாலு புத்தகம் போடுறாங்க. அது அதுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கணும் இல்ல” என்றார் வருத்தமாக. ஒரு காலத்தில் உலகசினிமா பற்றிய புத்தகங்களை கட்டிபிடித்து உறங்கியவர்.

இப்போது கேசவண்ணன் ஜிப்பா போடுவதில்லை. தாடியும் காணோம்.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , .

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் மூன்று. சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் நான்கு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: