சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் ஐந்து

December 18, 2013 at 9:04 am 8 comments

Vasco-Da-Gama-Biography

(முன்கதை சுருக்கம்: சோமாலியா கப்பல் கொள்ளையர்களிடம் ஏராளமான தமிழ் இலக்கிய புத்தகங்களுடன் மாட்டிக்கொள்கிறான் ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியம். என்ன நடந்தது தெளிவாக தெரிந்து கொள்ள முன் அத்தியாங்களை படிக்கவும். கண்டினியூட்டி முக்கியம் பாஸ்!)

கப்பல் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருந்தது. நடுவழியில் ஒரு கட்டு மரத்தில் ஒற்றை ஆளாக ஒருவர் எதிரில் வருவதை பார்த்தனர். நெருங்கி செல்லும் போது ஜெய் அடையாளம் கண்டு கொண்டான்.

“பாஸ் இவரு பேரு கோணங்கி.” என்று கத்தினான் ஜெய்.

”என்னது என்றான்” தலைவன் குழப்பமாக.

“ இவரு பேரு கோணங்கி. இவரும் ஒரு ரைட்டர் தான்”

“அப்போ அவர கப்பல்ல ஏத்துங்க” கட்டளையிட்டான் தலைவன்.

கொள்ளையர்களின் கப்பல் கோணங்கியின் கட்டுமரத்தை நெருங்கியது.

கோணங்கி ஏறிட்டு இவர்களை பார்த்தார்.

“அண்ணே வணக்கம். நான் ஜெயகிருஷ்ணன். இவங்கெல்லாம் சோமாலியா கொள்ளையர்கள்” என்று இண்ட்ரோ கொடுத்து விட்டு “என்ன இந்த பக்கம்” என்றான்.

“நல்லது தம்பி. நீங்க நம்ம வாசகருங்களா” என்றார் ஆமா என்று தலைஆட்டினான் ஜெய்.

“பாத்தீங்களா என் வாசகர்கள் எதிர்காலத்துல தான் இருப்பாங்கன்னு ஏற்கனவே நான் சொல்லிருக்கேன் இப்போ பாத்தீங்களா. கடல் நடுவுல உங்கள சந்திச்சிருக்கேன். ரொம்ப சந்தோஷம். ஒரு கை பிடிங்க” என்ற படி தாவி கப்பலுக்குள் ஏறினார். கைகளில் உருண்டை உருண்டையாக நாலைந்து சுரைக்காய் குடுவைகள். அதில் ஒன்று அதீத பெருசாக ஆளுயரத்துக்கு இருந்தது.

“அண்ணே முருகபூபதி கிட்ட இருந்த நாலு சுரைக்காய் குடுவைகளையும் பிடுங்கிட்டு வந்திருக்கீங்க. அவரு எப்டி தேரிக்காட்டுல நாடகம் போடுவாரு” என்றான் ஜெய்.

“தம்பி, பூபதி கிட்ட சுரைக்காய் குடுவை இன்னும் ஸ்டாக் இருக்கு. அதவிடுங்க இந்த அஞ்சாவது குடுவை என்னன்னு தெரியுமா” என்றார் கோனங்கி.

அதற்குள் கொள்ளையர்களில் ஒருவன் தன் பாஸிடம் சொன்னான் “பாஸ் இத பார்த்தா ஏதோ டைனோசர் முட்டை மாதிரி தெரியுது. அடிச்சிட்டு போய் ஸ்பீல்பெர்க் கிட்ட வித்தா ஐனூறு பில்லியன் தேறும் பாஸ்” என்று கோணங்கியின் கையிலிருந்த அஞ்சாவது குடுவையை தொடப்போனான்.

“கைய எடுப்பா” என்றார் கோணங்கி. கொள்ளையன் திகைப்புடன் பின் வாங்கினான்.

” இது டைனோசர் முட்டையுமில்ல. சுரக்குடுவையுமில்ல. முதுமக்கள் தாழின்னு தமிழ்ல சொல்லுவாங்க” என்று விளக்கினார். ஜெய் இது வரை ஒரு முதுமக்கள் தாழியை பார்த்ததில்லை, ஆச்சரியம் மேலிட அதை தடவி பார்த்தான்.

கோணங்கி தன் மடியில் பொதிந்திருந்த ஒரு பொட்டலத்தை அவிழ்த்து கொள்ளையர்களிடம் நீட்டினார். அவர்கள் அதை திகிலுடன் திறந்து பார்த்தனர்.

“பாஸ் ஏதோ ஜெல்லி மாதிரி இருக்கு. கறுப்பா கையில ஒட்டுது. நாம கொள்ளையர்கள்னு தெரிஞ்சு இந்தாளு ஏதோ சதி பண்ற மாதிரி இருக்கு” என்றான் ஒரு கொள்ளையன்.

கோணங்கி சிரித்து கொண்டே கொள்ளையனிடம் “தம்பி ஜெல்லியுமில்லை பெல்லியுமில்ல. இது திருநெல்வேலி அல்வா. வர்ற வழியில வண்ணதாசன பார்த்தேன். வழிச்செலவுக்கு வச்சுக்கோன்னு ஒரு பொட்டலத்த கொடுத்தாரு. தின்னவேவி அல்வா இவ்வளவு நெகிழ்வா இருக்காது ஆனா கல்யாண்ஜி கை பட்டதால நெகிழ்வின் உச்சத்துக்கே போய் இப்படி பிசுபிசுத்து கிடக்குது. வேற ஒண்ணுமில்ல” என்று விட்டு “ சாப்பிடுங்க” என்றார் கூடவே.

கொள்ளையர்களும் ஜெய்யும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து தின்றார்கள்.

“சரிண்ணே நீங்க எப்டி இந்த நடுக்கடலில. கையில் முதுமக்கள் தாழியுடன். அந்த கதைய சொல்லுங்க” என்றான் ஜெயகிருஷ்ணன்.

கையிலிருந்த ஒரு சுரக்கொடுவையை தூக்கி வாய்க்கு நேராக கவிழ்த்து வழிந்த தண்னீரை கொஞ்சம் குடித்து விட்டு சொல்லத்துவங்கினார் கோணங்கி.

“தம்பி ’பாழி’, ’பிதிரா’வுக்கு அப்புறம் இப்போ ‘கோடா’ன்னு ஒரு நாவல் எழுதுற திட்டத்துல இருக்கேன்”

“பாத்தீங்களா பாஸ் இவரு தலைப்பை புரிஞ்சுக்கறதுக்கே தமிழ்நாட்டில வாசகர்கள் நான் கடவுள் ஆர்யா மாதிரி தலைகீழா நிக்க வேண்டியிருக்கும்” என்று பெருமிதத்தான் ஜெய்.

கோணங்கி முறுவலித்தபடி தொடர்ந்தார். “அதுக்காக பதினைந்தாம் நூற்றாண்டுல கள்ளிக்கோட்டைக்கு வந்திரங்கிய வாஸ்கோட காமா பற்றிய குறிப்புகளை தேடிய இந்த பயணம் ஆரம்பிச்சப்போ கோவில்பட்டியிலருந்து ஒருத்தர் சைக்கிள்ல டபிள்ஸ் வச்சு தேனியில ட்ராப் பண்ணியவுடனே காய்கறி லோடு லாறியில ஏறி  கேரளாவுல லேண்ட்டாயி கள்ளிக்கோட்டை  போய் விசாரிச்சா ஒரு முதுவன் இந்த கட்டுமரத்துல மாலத்தீவு வரைக்கும் கூட்டிட்டு போனப்ப வாஸ்கோட காமா வர்ற வழியில மாலத்தீவுல ஒரு ரெஸ்ட போட்டுடு கிளம்பினாருன்னு சொன்னப்போ அதான் அங்கே போய் அப்டியே கிளம்பி கடல்ல மிதந்த இந்த முதுமக்கள் தாழிய கலெக்ட் பண்னிட்டு வந்திட்டு இருக்கும் போது தான் வழியில  உங்கள பார்த்தேன் நடுக்கடலிலேயே நாலு அத்தியாயத்த எழுதிட்டேன்” என்றார்.

”இப்படி பேசும்போதே ஃபுல்ஸ்டாப் வரமாட்டேங்குது எழுதினா மட்டும் கதையில கமா போட்டுருவாரா என்ன” என்று கலங்கிபோய் ஜெய் பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் மைண்ட் வாய்சை கேட்டபடி தன் சாக்குதுணி தொங்கு பையிலிருந்து சில பழுப்புநிற காகிதங்களை எடுத்து காட்டினார் கோணங்கி.

“தம்பி முதல் அத்தியாயத்துல முப்பது பக்கத்துக்கு முற்றுபுள்ளியே இல்லாமல் எழுதிருக்கேன். படிக்கவா” என்றார்.

ஜெய் பீதியுட கண் கலங்க, கொள்ளையர்கள் வெள்ளாந்தியாக கோணங்கியை ஏறிட்டு பார்த்தனர்.

“கோடாவின் கப்பலில் பறந்த போர்த்துகீசிய வெண்பறவையின் இறகென்று வழிகாட்ட உப்புத்தண்ணீரில் ம்றைந்து எழும் கடல் சீல்களின் நுனி மீசையில் தெரிந்த காந்த முள் காட்டியின் திசை அறிந்து தன் கையிலிருந்த கிரந்தங்களின் பழுப்பு நிற வரைபடத்தில் பாதை தெளிவுறும் காற்றின் போக்கில் கடலோடிய காமாவின் மது நிரம்பிய கோப்பைக்குள் தெளிந்து வந்த கிழக்கின் கடல் கரையில் ஒரு பூர்வீக மங்கையின் ஸ்பைசாண்டிக புன்னகைக்குள் மறைந்திருந்த கூந்தலுக்குள் தன் சிரம் கொடுத்து அவள் ஏழுகடல் ஏழுமலை தாண்டி பூக்கும் பூவின் வாசனையில் அமிழ்ந்திருக்கும் தன் வதனத்தை கேரள இலவரசனின் செந்நிற வைரத்தில் வைத்து பூட்டி வண்டி கட்டியபடி காலத்தில் பின்னோக்கி பயணித்து டிசம்பர் மாத கூதிர் பருவத்தில் தட்டான்கள் உறங்கும் பாழ்வெளிக்குள் நுழைந்து கோட காமா தன் கப்பலின் நங்கூரம் பாய்ச்சி…”  என்று மூச்சு வாங்னினார் கோணங்கி.

சுற்றும் தன் தலையை தன் கைகளால் பிடித்து நிறுத்திய படி “வாஸ்கோட காமா கேரள கடற்கரையில் வந்தி இறங்கினார். அது தானண்ணே நீங்க சொல்ல வறது” என்றான் ஜெய். கோணங்கி மூச்சு வாங்க ஆமா என்பது போல தலையாட்டி சிரித்தார். “அதுக்கு நீங்க ’வாஸ்கோட காமா கேரள கடற்கரையில் வந்தி இறங்கினார்’ன்னே சொல்லி இருக்கலாமே” என்றான் ஜெய்.

“தம்பி இந்தளவுக்கு என் வாசகத்தை புரிஞ்சுகிட்ட முதல் வாசகன சந்திக்கிறேன். ஆனா ’வாஸ்கோட காமா கேரள கடற்கரையில் வந்தி இறங்கினார்’னு சொல்றதுக்கு கோணங்கி எதுக்கு. எனக்குன்னு ஒரு மொழி இருக்கு அது ஒரு வகையான ஆட்டோபிக்‌ஷன்” என்றார்.

“ஆட்டோஃபிக்‌ஷன். அப்டினா” என்றான் கொள்ளையர் தலைவன்.

“அது வந்து தம்பி நான் பேப்பர்ல முதல் வார்த்தையதான் எழுதுவேன். அப்புறம் ப்ரோகிராம் பண்ணின மெஷின் மாதிரி என் கை பூரா வார்த்தைகளையும் போட்டு ஃபில் பண்ணிகிட்டே போவும்”  என்று பூடகமாகச்சிரித்தார்.

”அண்ணே மதினிமார்கள் கதை மாதிரி மாஸ்டர்பீஸெல்லாம் எப்போ மறுபடி எழுதுவீங்க” என்றான் ஜெய்.

“அது காலாதீததில் பின்னோக்கி போன விஷயம் நான் காலத்தில் முன்னோக்கி போய் என் வாசகர்கள தேடுற ஒரு நாடோடி. என்ன அப்டியே விட்டுடுங்க “ என்று சொல்லி விட்டு மீண்டும் கடலில் குதித்து கட்டுமரத்தில் ஏறிக்கொண்டார்.

“ பிஜி தீவுகள்ல நம் மூதாதையர்களின் முதுகெலும்பு படிவங்கள் இருக்கு அதுல ஏதோ லிபிகள் எழுதப்பட்டிருக்கு அத நோக்கி தான் என் அடுத்த ப்யணம்” என்ற படி கட்டுமரத்தை காற்றில் செலுத்தி அலைகளில் நெளிந்து அப்படியே பயணமானார்.

ஜெய் திரும்பி கொள்ளையர்களை பார்த்தான். ஒரு கொள்ளையன் கூக்குரலிட்டான் “பாஸ் அவரு இந்த டைனோசர் முட்டைய மறந்திட்டு போயிட்டார்”

“யோவ் அது டைனோசர் முட்டை இல்ல. முதுமக்கள் தாழி “ என்று விட்டு அதன் அருகில் சென்று தட்டி பார்த்தான். உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.

“திறந்து பாக்கலாமா” என்றான் ஜெய் தலைவனை நோக்கி.

“திறந்திடாதீங்க” என்று தாழிக்குள்ளிருந்து ஒரு சத்தம் வந்தது.

“உள்ளே யாரு” என்றான் ஜெய் ஆச்சரியமாக.

“நான் பேயோன்.” என்று பதில் வந்தது. கூடவே “சமகால எழுத்தாளன்” என்றும்.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , .

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் நான்கு முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை!

8 Comments Add your own

 • 1. ranjani135  |  December 18, 2013 at 11:00 am

  ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் அவரது எழுத்து பாணியையும் உங்கள் எழுத்துக்களில் நகைச்சுவையில் சொல்லிப்போவது ரசிக்க வைக்கிறது. (புல் ஸ்டாப் வைத்தேனா என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக பார்த்துவிட்டு post comment – ஐ தட்டுகிறேன்!)

 • 2. ensanthosh  |  December 18, 2013 at 11:08 am

  ha ha

 • 3. வெளங்காதவன்  |  December 18, 2013 at 1:39 pm

  அட்ரா சக்க!

 • 4. Saravanan Nandagopal  |  December 18, 2013 at 5:29 pm

  superrrrrrrrrrrrrrrrrrr

 • 5. Pandian  |  December 18, 2013 at 5:43 pm

  “பாஸ் அவரு இந்த டைனோசர் முட்டைய மறந்திட்டு போயிட்டார்”
  😂😂😂😂

 • 6. muralikannan  |  December 18, 2013 at 7:35 pm

  பேயோன் எண்ட்ரியே சூப்பர்

 • 7. ds  |  December 22, 2013 at 11:14 pm

  ROFL!

 • 8. sksk82  |  January 4, 2014 at 7:18 pm

  மாலத்தீவு……..முதுமக்கள் தாழி……ஆட்டோஃபிக்‌ஷன்……பிஜி தீவுகள்……அசத்துறீங்க போங்க………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: