மஞ்சள் நிழல்

January 14, 2014 at 1:54 am Leave a comment

கமலிக்கு வெறுப்பாக இருந்தது. பக்கத்தில் செல்வதாஸ் முழுப்போதையில் தூங்கிக்கொண்டிருந்தான். தெருநாயொன்று அவர்கள் அருகில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்தது. கொசுக்களின் ரீங்காரம் வேறு முழுதாக உறக்கத்தை கலைத்து விட்டிருந்தது.

கமலி எழுந்து உட்காந்து கொஞ்சம் பரட்டையான தலைமுடியை வாரி சுருட்டி கொண்டை போட்டாள். செல்வதாஸை ஒண்டியபடி சீனி படுத்திருந்தாள். அவளுக்கு அப்பாவின் இந்த சாராயவாசனை ரொம்ப பிடிக்கும் போல அல்லது இந்த வாசனை தான் அப்பா என்று கூட அவள் நினைத்துகொண்டிருக்கலாம்.

இன்றைக்கு குடிக்கக்கூடாது என்று நினைத்து தான் செல்வதாஸ் நீட்டிய குவார்ட்டர் பாட்டிலை வாங்கி தலைக்கு வைத்திருந்த துணிப்போட்டலத்திற்கு அடியில் வைத்திருந்தாள். இந்த தூக்கமின்மை அதை எடுத்து குடித்து விட்டு படுக்கலாம் என்று நினைக்க வைத்தது. வேண்டாம் என்றும் நினைத்துக்கொண்டாள்.

sad-woman-silhouette

பக்கத்தில் சுருட்டிக்கெட்டிய பொட்டலங்களில் அவர்களின் தொழிலுக்கான சாதனங்கள் கிடந்தன. டென்டு கொட்டாய் போடப்பயன்படும் நைந்துபோன காடாத்துணி. சில இசைக்கருவிகள். சமையல் பாத்திரங்கள். ஸ்ருதி ஒழுங்காக சேர்க்க முடியாத ஹார்மோனியப்பெட்டியைத்தான் செல்வதாஸ் தலைக்கு வைத்து படுத்திருந்தான். இன்று இரவு ’பொன் மகள் வந்தாள்’ என்று நடனமாடிய போது போட்ட ஜிகினா டிரேஸ்ஸைத்தான் சீனி போட்டிருந்தாள்.

சாயங்காலம் நடந்ததை நினைத்ததும் வாய் விட்டு அழணும் போலவும் வேண்டாம் போலவும் இருந்தது. தாலியைத்தூக்கி கட்டியவனின் முகத்தில் எறிந்து கொண்டு தெருவில் வந்து நிராதரவாக நின்றவளை வருகிறவன் போகிறவன் எல்லாம் படுக்க மட்டுமே கூப்பிட்ட போது செல்வதாஸ் மட்டுமே கூட வாழுறியா என்று வந்தவன். கூத்தாடி, தெரு வித்தைக்காரன் ஆனால் மனுஷன்.

பத்து வருடங்கள் ஓடியாயிற்று. இடையில் திருச்சி பஸ் ஸ்டாண்டில் யாரோ தூக்கி எறிந்து விட்டு போன குழந்தையாக வந்து தங்கள் குழந்தையாகிப்போன சீனி. நிரந்தரமான பிழைப்போ ஊரோ இருந்தால் எல்லாரையும் போல குழந்தையை படிக்க வைக்கலாம். நாடோடிப்பிழைப்பு குழந்தையும் கூட சேர்ந்து கூத்தாடித்தான் ஆகவேண்டும். பட்டினியோ, சோறோ இந்த பத்து வருடங்கள் பெரியதாக எதுவும் அழுதுவிட வில்லை. அனால் இன்றைய சாயங்காலம் கமலி எதிர்பார்க்காமல் வந்து விட்டது.

வந்த புதிதில் கமலியும் குடிக்காமல் தான் இருந்தாள். செல்வதாஸ் குவார்ட்டரை நீட்டும் போதெல்லாம் மறுத்திருக்கிறாள். பிறகு இந்த வானம் பார்த்த சாலையோர இரவுகளை கடக்க குடி ஒன்றே வழி என்பதையும் கண்டு கொண்டாள். இப்படி குடித்து விட்டு செல்வதாஸுடன் பேசிக்கொண்டிருந்த இரவொன்றில் செல்வதாஸ் அழுத்தி கேட்கவும் தன் பழையகாதலனைப்பற்றிய கதை ஒன்றை சொல்லியிருந்தாள்.

நாகர்கோவிலில் தன்னுடன் நெய்த்தாப்பீஸில் வேலை பார்த்த மகராசன். திருமணம் செய்துகொள்ள்லாம் என்கிற ஆசை இருந்ததாவும் பிறகு ஜாதியும், பொருளாதாரமும் தடையாக வர வேறு வழியில்லாமல் கமலியின் விருப்பமும் இல்லாமல் வேறொருவருடன் திருமணம் நடந்ததைப்பற்றியும். அதற்குப்பிறகான விஷ்யங்களை செல்வதாஸ் அறிவான். அப்போது அந்த மகராசன் எங்கே இருக்கிறான் என்பதையும் பேச்சினூடாக செல்வதாஸ் கேட்டுக்கொண்டான். அது கமலிக்கு தெரியாது என்பதே உண்மையான பதில்.

ஆனால் பதினைந்து வருடங்களுக்குப்பிறகு  இன்று சாயங்காலம், மகராசன் வந்து தன் முன்னே நிற்பான் என்பது கமலி நினைத்துகூட பாக்காதது. எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. கமலி நினைத்துக்கொண்டிருந்ததைப்போல அவன் வசதியான வாழ்க்கை ஒன்றும் வாழ்ந்து கொண்டிருந்தவனைப்போல் தோன்ற வில்லை. வாழ்க்கை அவனையும் கசக்கிப்பிழிந்தது போல மெலிந்து வயதானவனாகத் தொன்றினான்.

அவன் தான் முதலில் அவளை அடையாளம் கண்டுகொண்டான். பஸ்ஸ்டாண்டின் ஓரமாக செல்வதாஸும் சீனியும் உட்காந்து அன்றைய நிகழ்ச்சிக்கான தயாரெடுப்பில் இருந்த போது கமலி பாக்கு வாங்க மூத்திர செட்டின் பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடைக்கு போனபோது அவன் நின்றிருந்தான். முதலில் ஏதோ வயதான ஆள் என்று அவள் கண்டுகொள்ள வில்லை. அவன் தான் கமலி என்று கூப்பிட்ட நொடியில் அவள் அதிர்ந்து அவனைப்பார்த்தாள். அந்த குரல்.

அவன் அவளை அந்த பரட்டையான கோலத்தில் பார்த்தும் அதிர்ச்சியடையாமல் பேசியதை அவளால் உள்ளுக்குள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கதையைக்கூறினான். விதியின் புரிந்து கொள்ள முடியாத விளையாட்டு அவர்களை இப்போது சந்திக்க வைத்திருந்தது போல. இனி போவதற்கு இடமில்லை என்றும் உங்கள் கூடவே வந்துவிட தயாரென்றும் அவன் கூறினான். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அந்த தவறைச்செய்தாள். அவனை செல்வதாஸிடம் கூட்டிவந்து முழுக்கதையும் சொல்லி விட்டாள்.

அவளே எதிர்பார்க்காத படி செல்வதாஸ் அவனை கேவலமாக திட்டியபடி அடிக்கப்போய்விட்டான். செல்வதாஸின் பதட்டத்தை கமலியால் புரிந்துகொள்ள முடிந்தாலும் மகராசனைப்பார்க்க பாவமாக இருந்தது. கமலியையும் அறைந்த கையோடு சீனியையும் பொதிகளையும் தூக்கிக்கொண்டு கிளம்பத்தயாராய் நின்ற பஸ்ஸை பிடித்து ஏறிவிட்டான் செல்வதாஸ். கமலிக்கு வேறு வழியே இல்லை கூடவே ஏறிவிட்டாள். பஸ்ஸின் படியில் ஏறும்போது மகராசன் பாவமாக இவர்களை பார்த்தபடி நின்றிருந்தான்.

பஸ் வந்து சேர்ந்த இடத்தில் இறங்கி அங்கேயே ஆட்டத்தையும் முடித்து விட்டான் செல்வராஜ். சீனி ஆடிக்கொண்டிருக்கும் போது டோலக்கை வாசித்துக்கொண்டிருந்தாலும் கமலியின் மனசில் மகராசனின் கோலம் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. தொண்டையை தொறந்து பாடிக்கொண்டிருந்தாலும் செல்வதாஸும் அவளை கவனித்து கொண்டு தானிருந்தான்.

கிடைத்த காசில் பரோட்டாவும் குவார்ட்டரும் வாங்கி கொண்டு வந்து அமைதியாக சாப்பிட்டு விட்டு கமலிக்கு நீட்டினான். அவள் ரெண்டு பரோட்டாக்களை பிய்த்து தின்றாளே தவிர குடிக்கவில்லை. அதுவே இப்போது தூக்கம் வராததற்கும் காரணமாகி விட்டது. குடி மட்டும் தானா மகராசனின் முகம் கூட தான் என்று நினைத்துக்கொண்டாள்.

ஒரு போலீஸ் வாகனம் மஞ்சள் வெளிச்சம் பாய்ச்சியபடி கடந்து போனது. செல்வதாஸ் தூக்கத்தில் புலம்பியபடி புரண்டு படுத்தான். இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம் வரவேண்டும். இவனையும் சீனியையும் விட்டு விட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடுவேனா என்ன. இந்த பத்து வருடத்தில் எத்தனையோ பெண்கள் இவன் கூட வந்து படுத்திருக்கிறார்கள். அதுவும் இவள் விழித்துக்கொண்டிருக்கும்போது கூட இவள் கண் முன்னே மறைவிடம் தேடி பெண்களுடன் செல்வதை எத்தனை முறை பார்த்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு எந்த பதட்டமும் வரவில்லையே.

அவள் கேட்காத போது கூட அவன் அதற்கு அவளிடம் விளக்கமும் சொல்லி இருக்கிறானே. தான் ஒரு ஆட்டக்காரன், கலைஞன் முன்பெல்லாம் இன்னும் இளமையாக இருக்கும் போது திருவிழாக்களுக்கு ஊர் ஊராகச்செல்லும் காலங்களில் பெண்கள் இவன் பின்னாடி மயங்கி திரிவார்களென்றும், எங்கே கூப்பிட்டாலும் வந்து விடுவார்கள் என்றும். எத்தனை முறை பெருமைபோல பேசியிருக்கிறான்.

ஆனால் இன்று மகராசனை கண்டதும் ஏன் இவ்வளவு பதட்டபடுகிறான். கமலிக்கு கோபம் வருகிற மாதிரியும் இருந்தது அதேநேரம் செல்வதாசை பார்க்கவும் பாவமாக இருந்தது.

பொட்டலத்தின் கீழிருந்த குவார்ட்டரை எடுத்து அப்படியே குடித்தாள். கொஞ்ச நேரத்தில் கிறுகிறுப்பாக இருந்தது. அப்படியே திரும்பவும் செல்வதாஸ் பக்கத்தில் படுத்துக்கொண்டாள். அவனையும் சீனியையும் அணைப்பது போல கைகளை எடுத்து அவர்கள் மேல் போட்டாள். அவன் தூக்கத்தில் ஏதோ முனங்கிய படி இருந்த்தான். ஒன்றும் தெளிவாக கேட்காவிட்டாலும் அது கமலி போயிடாத போயிடாத என்றுதான் அவன் புலம்புகிறான் என்பதாக அவள் நினைத்துக்கொண்டாள். மெல்ல தூக்கம் வருவது போல இருந்தது.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , .

க்ரியாவின் அழகியல்! தேடிச்சோறு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2014
M T W T F S S
« Dec   Apr »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: