முள் முடி

January 16, 2014 at 10:10 pm Leave a comment

mulmudi2

அரவிந்த் நெடுநேரமாக அந்த காந்தியின் படத்துக்கு முன்னால் தனிமையாக உட்கார்ந்திருந்தார். எல்லாம் திட்டமிட்டு செய்தது இல்லை. கடந்த சில மாதங்களாக தன்னை சுற்றி நடந்த, நடந்து கொண்டிருக்கிற‌ எல்லாம். இந்த சீழ்பிடித்த அரசமைப்பை எதிர்த்து தனி ஒரு மனிதனாக தன் குரலை உயர்த்த ஆரம்பித்த போது இதெல்லாம் நடக்கும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. ஆனால் ஒரு ஆத்ம பலம் மட்டுமே இருந்தது. ஒரு ஆத்ம நம்பிக்கை. இந்த கிழவனிடம் இருந்து பெற்றது என்று கூட வைத்து கொள்ளலாம்.

இந்த கிழவனின் வழி வந்த அன்னாவின் மீது இப்போதும் எப்போதும் போல மதிப்பு இருக்கிறது. அவரின் நேர்மை மீது எந்த சந்தேகமும் இல்லை. அவரில்லை என்றால், தான் இன்று இங்கே இந்த நிலமையில் இல்லை என்பதும் அரவிந்துக்கு தெரிந்தே இருந்தது. ஆனால் காந்தியின் காலமில்லை இது. வெள்ளைக்காரர்கள் அளவுக்கு இன்று நாட்டை ஆளும் கொள்ளைக்காரர்கள் யோக்கியமில்லை. வெறுமனே போராட்டம் நடத்துவதும், உண்ணா விரதமிருப்பதும் மட்டுமே அவர்களை அசைக்கப்போவதில்லை ஆகவே மக்களின் உதவியுடன் அதிகாரத்துக்கு வருவதே சரியான வழி என்று தான் முடிவெடுத்ததிலும் தவறு இருப்பதாக அரவிந்துக்கு தோன்ற வில்லை.

மக்களே தன்னுடைய முடிவையும் ஆதரித்தார்கள் இல்லையென்றால் இப்படி தலஸ்தானத்தில் அதிகாரத்தில் வந்திருக்க முடியாது தானே. ஆனால் எப்படியோ கசப்பு உருவாகி விட்டத்து. சரி செய்ய முடியுமா. தெரியவில்லை. ஆனால் தனது நேர்மை அதற்கு பதில் சொல்லும் என்றும் அரவிந்த் நினைத்துக்கொண்டார்.

இன்று மக்கள் தன்னை ஆபத்பாந்தவனாக பார்த்து செங்கோலை தன் கைகளில் கொடுத்துவிட்டார்கள். இது மக்களின் செங்கோல். ஊழலுக்கும், கொள்ளைக்கும், மதவாதத்திற்கும் எதிரான செங்கோல். இதை தாங்கி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. தான் நம்பும் கடவுள் இவை எல்லாவற்றுக்குமான ஆத்ம பலத்தை அளிப்பார் என்றே அரவிந்த் நம்பிக்கொண்டிருக்கிறார். இது காந்திக்கு கூட கிடைக்காத வாய்ப்பு அல்லவா?

ஆனால் எங்கோ எதுவோ குறைகிறது என்பதையும் அரவிந்த் உணராமலில்லை. இது இன்று தான் மட்டுமே பிடித்திருக்கும் செங்கோல் இல்லை. இன்னும் நிறைய கைகள் அதை தாங்கி உள்ளன. அவர்களின் நேர்மையை முற்று முழுதாக தன்னால் அறிந்து கொள்ள முடியாததையும், அவர்கள் நோக்கம் பற்றிய தெளிவு இன்னும் சரியாக பிடிபடவில்லை என்பதையும் நினைக்கும் போது சஞ்சலமாக இருந்தது. எதிரிகள் கையிலிருக்கும் ஆயுதமும் இது தான் என்பதும் தெரியும். மனிதர்களின் மனதை ஸ்கேன் செய்ய முடியாது தானே.  இது எறும்புகள் இழுக்கும் சக்கரைக்கட்டி. நாலா பக்கமும் இழுபடும். ஜனநாயகத்திற்கு நாமளிக்கும் விலை. ஆனால் எங்கோ எதுவோ குறைகிறது.

அரவிந்த் பக்கத்திலிருந்த கிளாசிலிருந்து தண்னீரை எடுத்து மிடறு மிடறாக குடித்தார். தான் அளித்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. தண்ணீர். வாக்குறுதிகளின் பட்டியல் தன் மனக்கண் முன்பு நீண்டு கொண்டே செல்கிறது. எல்லாவற்றையும் சாத்தியமாக்கி காட்ட முடியுமா. உழுத்து போன இந்த அமைப்பை வைத்துகொண்டு. ஆனால் செய்து தான் ஆகவேண்டும். தன்னுடைய தோல்வி மக்களை ஏமாற்றமடைய வைக்கும். இது போல இன்னும் எழுந்து வருபவர்களை சோர்வடைய செய்யும். அதுவே பிசாசுகளின் ஆட்டத்தை மேலும் மோசமானதாக்கி விடும். பிறகு இப்படி ஒரு மாற்றம் வர இன்னும் காலங்கள் பிடிக்கும்.

இன்று கட்சியில் எங்கெங்கோ யாராரோ இணைந்து கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள். அவர்களின் நம்பிக்கை. நேற்று வரை வழக்கமான ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் கையிருக்கும் ஒரே ஆயுதமான ஓட்டுச்சீட்டு என்னும் அங்கீரத்தை அளித்தவர்கள். இவர்கள் கூட மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் மாற்றம் என்பது மேலிருந்து மட்டுமே வர முடியும் என்று நம்புகிறார்கள் அல்லவா. அது எல்லா பக்கத்திலிருந்தும் வர வேண்டும் என்பதை ஒத்துக்கொண்டாலும் தங்கள் வாழ்க்கையின் அன்றாடங்களுக்காக எந்த குற்றவுணர்ச்சியும் இன்றி அவர்களும் இந்த மாபெரும் ஊழல் எந்திரத்தின் சிறு கண்ணியாக இயங்கியவர்கள் தான். அவர்களும் இன்று தன் கூட வருகிறார்கள்.

கட்சியிலிருக்கும் இந்த கலவையான மனிதர்கள். பத்திரிகையாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை. இவர்களை இணைக்கும் கண்ணி எது. இவர்களை கைகோர்க்கவைத்த மைய்யம் எது. ஊழலற்ற நிர்வாகம் ஒன்று மட்டும் தானே. அதுவே போதுமானதா. எங்கோ எதுவோ குறைகிறது என்று தான் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் அது எது. ஊழல் மட்டுமே தான் இன்று நமது பிரச்சினையா? இந்த சமூக அமைப்பில் அடிமட்டத்திலிருந்து பார்த்தால் சாதி ஒரு முக்கியமான பிரச்சினை அல்லவா? மதம்? அடிப்படை ஆத்ம நேர்மை அற்ற சமூகத்திடம் ஊழல் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஊழலின் ரிஷிமூலமான பொருளாதார அமைப்பு பற்றி என்ன மாற்றுக்கருத்து இருக்கிறது என்னிடம். இங்கே ஒரு கூட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற, மூச்சு முட்டுகிற தேசிய இனங்கள் பற்றி என்ன முடிவு இருக்கிறது. இப்படி ஈரும் பேனுமாக இந்த தேசத்தின் அன்னை தலையை பரட்டையாக விரித்து போட்டிருக்கிறாளே. இதற்கான ஒற்றை மூலிகையாக நான், எனது கட்சி இருக்க முடியுமா?

கேள்விகள் தனது குல்லாய் போட்ட மண்டைக்குள் ஈசல்கள் போல எழுந்து வந்தபடியே இருந்தது. அவற்றை அவ்வளவு எளிதாக பெருக்கித் தள்ள தன்னால் முடியவில்லை என்பதை நினைக்கும் போது அரவிந்துக்கு தண்ணீருக்குள் அமிழ்ந்து இருப்பது போலிருந்தது. காந்தியின் கண்ணாடி போட்ட கண்களை பார்த்தார். அவரின் புன்னகையை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கேலியா அல்லது கருணையுடன் பார்க்கிறாரா?

சட்டென்று அரவிந்தின் மூளையில் அந்த வாசகம் தோன்றியது. சித்தாந்தம். அந்த வார்த்தை தான் எதுவோ ஒன்று குறைவதாக தான் நினைத்துக்கொண்டிருக்கும் கேள்விக்கான பதிலாக தோன்றியது. எல்லா கட்சிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு சித்தாந்தம் இருக்கிறது, கம்யூனிசமோ? பாஸிசமோ? அவர்களை தெளிவாக வரையறுத்துக்கொள்ள, மெலும் முன்னெடுக்க சித்தாந்தம் அவசியம் அல்லவா? எங்களுக்கென்று என்ன இருக்கிறது. எதன் அடிப்படியில் ஒன்று திரளுகிறார்கள்? சித்தாந்தமன்ற ஒன்று எந்த சித்தாந்தத்தை விடவும் ஆபத்தானது அல்லவா? நாமும் அதை நோக்கித்தான் போவோமா?

இன்று, இந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த அமைப்பில் எதிர்குரல்கள் எழுகின்றன. ஆளுக்கு ஒரு கருத்தை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இது எதிரிகளுக்கு நன்மையளிக்கும் விஷயம் தான். இது இவ்வளவு தான் என்று இப்போது அவர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். கடவுளே எதை நம்பி நான் முன்னே செல்வது.

அரவிந்துக்கு வாழ்க்கையில் இது வரை சந்திக்காத குழப்பமான மனநிலையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து அறையை விட்டு வெளியே வந்தார். வாசலில் கூட்டம். புதியதாக கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வமோடு இருப்பவர்கள். இதில் உண்மையின் முகம் எது. சந்தர்ப்ப வாதமெது. தன்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இந்த விளையாட்டுக்கு முடிவு எது. குழப்பமாக இருப்பதை காட்டிக்கொள்ளக்கூடாது. அதுவே மற்றவர்களை நம்பிக்கையிழக்கச்செய்து விடும்.

முற்றத்தில் இறங்கி காரை நோக்கி நடந்தார். கோஷங்கள் காதுக்குள் வலிப்பது போல வந்து மோதி மோதி சென்றன. காருக்குள் ஏறும் முன் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப்பார்த்தார். தலையில் குல்லா. அது கிரீடமா? முள்முடியா என்று ஒரு கணம் தோன்றியது.

 

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , .

தேநீர் காதல்! சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் ஆறு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2014
M T W T F S S
« Dec   Apr »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: