சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் ஆறு
January 17, 2014 at 1:28 am 2 comments
(முன்கதை சுருக்கம்: சோமாலியா கப்பல் கொள்ளையர்களிடம் ஏராளமான தமிழ் இலக்கிய புத்தகங்களுடன் மாட்டிக்கொள்கிறான் ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியம். என்ன நடந்தது தெளிவாக தெரிந்து கொள்ள முன் அத்தியாங்களை படிக்கவும். கண்டினியூட்டி முக்கியம் பாஸ்!)
“யோவ் அது டைனோசர் முட்டை இல்ல. முதுமக்கள் தாழி “ என்று விட்டு அதன் அருகில் சென்று தட்டி பார்த்தான். உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.
“திறந்து பாக்கலாமா” என்றான் ஜெய்.
“திறந்திடாதீங்க” என்று அதனுள்ளிலிருந்து ஒரு அசரீரி வந்தது.
“உள்ளே யாரு” என்றான் ஜெய்.
“நான் பேயோன்.” என்று பதில் வந்தது. கூடவே “சமகால எழுத்தாளன்” என்றும்.
“இங்கே என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. தாழிய திறக்கவா”
“வேண்டாம். அவசரமா ஒரு வாசகர் கடிதம் எழுதிட்டு இருக்கேன்”
”யாருக்கு”
“எனக்கு தான்.”
“உங்களுக்கேவா”
“ஏன் தம்பி என் ரைட்டர்பேயோன் டாட் காம் ரெகுலரா படிக்கிறதில்லியா. அதான் ஆச்சரியப்படுற”
“அய்யோ சார் நீங்க எப்டி இங்க” என்றான் ஜெய்
“எதுக்கு பதறுறீங்க. நான் எப்பவுமே இப்படி தான வாழ்ந்திட்டு இருக்கேன்”
“எப்பவுமேவா. நீங்க ஒசாகாவுல இருக்கிறதா இல்ல நான் நம்பிட்டு இருக்கேன்”
” ஒசாகாவுல தான் இருந்தேன். அப்பப்போ போரடிக்கும் போது இப்படி முதுமக்கள் தாழிக்குள்ள புகுந்து கடலில மிதக்க ஆரம்பிச்சுடுவேன். இதுக்குள்ளேயே wi-fi எல்லாம் வச்சிருக்கேன் தெரியுமா”
“அதான பாத்தேன் உங்கள பாக்கணும்னு கொலவெறியில திரியிற பயபுள்ளைக கையில மாட்டாம இருக்க இப்டி ஒரு டெக்னிக் இருக்கா” என்று ஆச்சரியம் காட்டினான் ஜெய்.
“புத்தக கன்காட்சி நடக்குதுல்ல அங்கேயெல்லாம் போக மாட்டீங்களா பேயோன் சார்” என்றான் ஜெய்
“அங்கே போனா ஒரே வாசகர்கள் தொந்தரவு. ஒரு லோட்டா ரத்தத்துக்கு நான் பல லோட்டா ரத்தம் சிந்த வேண்டியதா போகும். அதுலையும் சில வாசகர்கள் இருக்காங்க நான் கலாய்ச்சு எழுதுற நவீனக்கவிதைகளையே நல்லா புரிஞ்சுக்காம படிமங்கள் பிரமாதம்ணு பிட்டப்பொடுறாங்க. விஷயம் தெரியாத சில விடலை வாசகிகள் விகடன்ல நான் எழுதுன ‘வட்டியும் முதலும்’ சூப்பர்னு எனக்கே எனிமா குடுக்குறாங்க. இதுக்கு தான் இந்த வாசகர்கள் கூட வச்சிக்கக்கூடாதுங்கிறது. அதனால தான் வாசகர் கடிதங்கள கூட நானே எழுதிடுவேன். அதுவுமில்லாம என் பதிப்பாளர் காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் பக்கத்திலேயே பிடிச்சு உட்கார வச்சு போட்டோ எடுத்து ஃபேஸ்புக்குல வேற அப்டேட் குடுக்கணும் வாங்கண்ணு அடம் பிடிச்சாரு. இந்த இரத்தப்படலத்துக்கெல்லாம் நாம பலியாக வேண்டாமென்று இந்த வருஷம் இப்படியே எஸ்கேப் ஆயிட்டேன். ”
“சூப்பர் சார் நீங்க. அப்புறம் இந்த சாரு, மு.ராமசாமி,எல்லாம் உள்ளூர் படத்துல தான் ஜூனியர் ஆர்டிஸ்ட் வேஷம் கட்டுனாங்கன்னா நீங்க உலகப்படத்துலேயே நடிச்சிட்டீங்களெ சார்” என்றான் ஜெய்.
“என்ன சொல்றீங்க” என்றார் பேயோன்
“விளையாடாதீங்க சார். அகிர குரசோவாவோட செவன் சாமுராயில நீங்க நடிச்ச விவசாயி கதாபத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது”
“ஓ அத சொல்லுறிங்களா.”
“சார் நீங்க தான ட்விட்டர்ல தட்டுனத எல்லாம் புக்கா கொண்டு வர பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சது. இன்னைக்கு ஆளாளுக்கு அராஜகம் பண்னிட்டு திரியிறாங்க. அது உங்களுக்கு தெரியுமா” என்று கேள்வியில் கொக்கி போட்டான் ஜெய்.
” நானும் பாத்திட்டு தான் இருக்கேன். நான் ஜோதிடன் இல்லை வெறும் சமகால எழுத்தாளன் அல்லவா. எதிர்காலைத்தை கணிக்கத்தவறி விட்டேன் இந்த போக்கு இப்படி கொடூரமாக இருக்கும் என்று யூகிக்காமலே ஆழி செந்தில் நாதனிடன் என் ட்வீட்டுகளை அன்று கொடுத்தது தவறு தான் என்று இப்போது தோன்றாமலில்லை”
“அது மட்டுமில்ல நீங்கள் எழுதின புத்தகங்களையும் இப்போ உங்கள் தளத்தில் மின்னூலாக வெளியிட்டுருக்கீங்க.”
“பிடிஎஃப்னு சொல்லுங்க. அப்போதான் சமகால வாசகர்களுக்கு புரியும் என்பது என் அபிப்ராயம்”
“சரிதான். எப்படி சார் பதிப்பாளர் கிட்ட ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிட்டிங்களா இல்லையா”
“நானென்ன ரவுடி மாதிரி ஒரு ஆளையா போட்டேன். என் புக்கத்தானப்பா போட்டேன். இருந்தாலும் நான் இன்னும் எழுதாம இருக்கிற புஸ்தகத்த போடுவேனே தவிர விக்காம இருக்கிற புஸ்தகத்த போட மாட்டேன். காசு கொடுத்தே 300 காப்பிக்கு மேல வாங்கிப்படிக்கல மெனெக்கட்டு டவுன் லோட் பண்னி எவன் படிப்பான் என்கிற ஒரு புரிதல் தான்”
தாழிக்குள்ளிலிருந்து வெளியே வராமலே குரலால் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அசரீரி சத்தத்துக்கு அரண்டு போன தலைவன் “யாருப்பா இவரு முகத்த காட்டாம முக்கா மணி நேரமா பேசிட்டு இருக்காரு” என்றான்.
“இதுக்கே இப்படி டென்ஷன் ஆகுறீங்க இவரு தமிழ் நாட்டு வாசகர்களுக்கே தலைய காட்டாம தண்ணி காட்டிட்டிருக்காரு முக்கா மணி நேரத்துக்கே முந்திரிக்கொட்ட மாதிரி முழி பிதுங்குறீங்களே பாஸ்” என்றான் ஜெய் பெருமையாக.
” பேயோன் சார். சும்மா ரைட்டர் சார் மட்டுமில்ல ஓவியர் சார் கூட. அவரு குட்டி குட்டியா போடுற ஓவியங்களுக்கின்னே ஒரு ரசிகர் படை இருக்கு தெரியுமா” என்று கூடவே ஒரு குறிப்பும் கொடுத்துவிட்டு தாழியை நோக்கி குனிந்து
“பேயோன் சார். ஷெர்லாக் ஹோம்ஸுக்கு அப்புறம் எங்களுக்கு செல்லமான டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் குமார் தான். அவருக்கு இன்ஸ்பிரேஷன் யாரு” என்றான்
”இன்ஸ்பெக்டர் குமார் என்கிறது சுமார் மூஞ்சி குமார் மாதிரி ஒரு கதாபாத்திரம் மட்டுமே. நான் இன்ஸ்பிரேஷனுக்காக எந்த நடமாடும் மனிதர்களையும் அதிக நேரம் உற்று நோக்குவதில்லை. நான் தொடர்ந்து திரைக்கதை விவாதங்களுக்குச்செல்லும் எவிஎம் ஸ்டுடுடியோவின் செக்யூரிட்டியின் பிரதி வடிவின் ஒரு விதமான புனைவு தான் இன்ஸ்பெக்டர் என்றும் வைத்து கொள்ளலாம்”
“அடுத்து என்ன பண்றதா உத்தேசம் சார்”
“இந்த சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும் என்று தொடர் வருதுல்ல சந்தோஷ்னு ஒருத்தர் எழுதுறாரு. அத்தியாயம் அஞ்ச முடிக்கும் போது அடுத்து பேயோன் தான்னு சொல்லி இருந்தாரு. உங்களுக்கு படிக்கிற பழக்கம் இருந்தா அந்த தம்பியிடம் சொல்லுங்க. திருநெல்வேலிக்கே அல்வாவா திருப்பதிக்கே லட்டா என்று திருவள்ளுவர் சொல்லி இருக்காரில்ல அதுபோல பகடி எழுத்துல பட்டம் வாங்கின எனக்கே மகுடியா?” என்று விட்டு “அடுத்து ஒரு பயணக்கட்டுரை தான் எழுதிட்டு இருக்கேன். போர்ஹேவின் புதிர் படிகள்.” என்று சொல்லி விட்டு கிசுகிசுப்பான குரலில் “மாமனார் கம்பல் பண்ணினதால மாலை போட்டு மலைக்கு போயிருந்தேன். இந்த நேரத்துல மேகசின்ல இருந்து அவசரமா ஒரு பயணக்கட்டுரை கேக்குறாங்க. அதான் சபரிமலை அனுபவத்தையே இப்படி அடிச்சி விட்டிலாம்ணு ஆட்டைய போட்டாச்சு. ஓகே தம்பி ஓரமா மிதந்து போயிட்டிருந்த என்ன கோக்குமாக்கா கோணங்கி தூக்கிட்டு வந்து இப்படி பண்ணிட்டாரு. திரும்பவும் சோழிய உருட்டுற மாரி இந்த தாழிய உருட்டினீங்கனா அடுத்த புக்ஃபேருக்கு அங்கே சென்னையில சந்திப்போம்” என்ற படி அவரே தாழிக்குள் உருண்டிருக்க வேண்டும். தண்ணீருக்குள் விழுந்த தாழி அலைகளில் மிதந்து விலகியது. “கடைசி வரைக்கும் அவரு முகத்த பாக்காம போனமே” என்று கவலைப்பட்டான் ஒரு கொள்ளையன்.
“பாஸ் நாம கரைய நெருங்கிட்டோம்னு நினைக்குறோம்.” என்றான் ஒரு கொள்ளையன்.
கரையில் கஸ்டம்ஸ் ஆப்பிஸர் போல ஒருவர் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.
ஜெய் கைகளை கண்களுக்கு மேல் குவித்து உற்று பார்த்து விட்டு சொன்னான்
“விமலாதித்த மாமல்லன் போல இருக்கு”
“அய்யய்யோ… கப்பலை கமுக்கமா திருப்பி சோமாலியாவுக்கே விடுங்க. இந்த விளையாட்டே வேண்டாம் ” என்று டெரர்ராகி கத்தினான் கொள்ளைக்கூட்ட தலைவன்.
(தொடரும்)
Entry filed under: tamil advertising. Tags: ஆழி, சோமாலியா கொள்ளையர், பேயோன்.
1.
தனிமரம் | January 17, 2014 at 2:10 am
ஆஹா சிரிப்புவெடியும் சுவாரசியமும் தொடரட்டும் ஐயா!
2.
G.Kuppuswamy | January 17, 2014 at 9:18 pm
Very good Santhosh. ஏழாவது அத்தியாயம் சீக்கிரம் ரெடியாகட்டும்.