கர்ணனின் கவசம்

tamil advertising
கண்காட்சிகள் தோறும் நான் வாங்கிய புத்தகங்கள், நான் வடிவமைத்த புத்தகங்கள் என்று வீட்டில் நிறைந்து கிடக்கும் புத்தகங்களில் பாதிக்கு மேற்பட்டவை படிக்காமலே கிடக்கிறது. பெரும்பாலும் தீவிரமான புனைவு அல்லது அபுனைவு புத்தகங்கள். பிரசவத்திற்காக சென்றிருக்கும் ஷர்மியுடன் இருக்க‌ வாராவாரம் வெள்ளிகிழமை தஞ்சாவூருக்கு ரயிலிலோ பேருந்திலோ பயணம் செய்யும் இந்த நாட்களில் வாசிப்பதற்காக ஒரு ஃபுல் ஃப்லெட்ஜ்ட்என்டெர்டெயின்மென்ட் நாவலை தேடிக்கொண்டிருந்தேன். YMCAவில் மிக ரகசியமாக நடந்து கொண்டிருந்த புத்தகக் கண்காட்சியில் “கர்ணனின் கவசம்” வாங்கினேன். வாங்கிய கையோடு வெளியே போட்டிருந்த சாமியானாவிற்கு கீழே உட்காந்து குல்ஃபி சாப்பிட்டபடி படிக்கவும் ஆரம்பித்து விட்டேன்.
karnanin
சமீப காலங்களாக நாம் சினிமாக்களில் காணும் ‘நான் லீனியர் எடிட்டிங்’கை நாவலில் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். முதல் அத்தியாயம் முடிவதற்குள்ளாக வெவ்வேறு இடங்கள் வெவ்வேறு பாத்திரங்கள் என்று மூன்று பாராவுக்கு ஒரு ‘கட்’ கொடுத்து அடுத்தடுத்த இடங்களுக்கு நம்மை அழைத்து செல்கிறார். ஒவ்வொரு ‘கட்’டுகளிலும் ஒவ்வொரு முடிச்சு. ஹாலிவுட் படங்களில் வருவது போல பிரமாண்டமான ஓபனிங். புத்திசாலித்தனமான நரேஷன் என்று வேகமெடுக்கும் முதல் அத்தியாயம் நம்மை அடுத்த‌ அத்தியாயங்களுக்கு ஆர்வமுடன் துரத்துகிறது. ஓவ்வொரு முடிச்சு அவிழும் போது புது முடிச்சு ஒன்று விழுந்து கதையை ஒரு வலையாக பின்னிச்செல்கிறது.
.
பலவருடங்களாக பார்க்காமலிருந்து பார்க்க ஆசைப்பட்ட தஞ்சை பெரிய கோவிலை சில வாரங்களுக்கு முன்புதான் நண்பர் செந்தமிழனுடன் போய் பார்த்தேன். இப்போது இந்த நாவலில் தஞ்சாவூரும் பெருவுடையார் கோவிலும் ஒரு மைய்யமாக எழுந்து வந்த போது பிரமித்து போய் படிக்க ஆரம்பித்தேன். வெள்ளிக்கிழமை இரவு ரயிலில் டிக்கட் கிடைக்காமல் தஞ்சை செல்லும் பேருந்தை தி.நகரில் இரவு பத்து மணிக்கு பிடித்து ஏறி உட்கார்ந்தேன். கையில் கால்வாசி படித்து மீதியை படிக்க தயாராக வைத்திருந்த கர்ணனின் கவசம் இருந்தது. எனது பக்கத்து சீட்டில் உட்காந்திருந்த பெரியவர் தான் பரமேஸ்வர பெருந்தச்சனோ, முன் சீட்டில் உட்காந்திருக்கும் இளம்பெண் தான் தாராவோ, பேருந்தில் ஏறும் போது புன்னகை சிந்திய டிரைவர் “பகவான் கிருஷ்ணரா”, ஒரு வேளை நானும் இந்த கதையில் ஒரு கதாபாத்திரம் தானோ என்கிற பிரமையும் இப்போது இந்த கணத்தில் தஞ்சை செல்லும் இந்த பேருந்தில் இருப்பது என் தவிர்க்க முடியாத விதியோ என்ற நினைப்பும் வந்து எனக்கே சற்று குழப்பமாக இருந்தது.
.
அறிவியல் புனை கதை, தொன்மங்கள், புராணக்கதாபாத்திரங்கள், “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” என்பது போன்ற‌ நவீனத்தின் லங்குவேஜ் மிக்ஸ், கணித விதிகளின் கபடியாட்டம், காலம் பற்றிய ஐன்ச்டீன் விதி, கிராவிடி, இன்செஃப்ஷன் டைப் ஹாலிவுட் காட்சிமொழி, கர்ணனின் கவசம், என்று கலந்து கட்டி வாசகன் மூளைக்குள் கால்பந்து ஆடுகிறார் ஆசிரியர்.
.
ஒரு லெவலுக்கு மேல் கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம் ரேஞ்சுக்கு யாளியின் தலையை திருகினால் விலகும் கதவுகள், அண்டர் கிரவுன்ட் சுரங்க பாதைகள், தண்ணீருக்குள் ஒளிரும் உலகம் என்று அவ்வப்போது தட்டும் அலுப்பை ஆசிரியரின் புத்திசாலித்தனமும், பரந்து பட்ட பன்முக வாசிப்பின் அறிவும் அதை அனாயசமாக அடுக்கி கொண்டே போகும் விதமும் நம்மை ஆச்சரிய படுத்தி கடந்து போக வைத்து விடுகிறது.
.
இப்படி ஒரு மாயாஜால உலகத்தை எழுத்துகளின் பக்கங்கள் வழியாக கடந்து கதை முடிந்த பின்னும் திகைத்து போய் நிற்கிறதே ஒரு உருவம் அது வேறு யாருமல்ல… வாசகன் தான்.
.
ஸ்ரீமான் கே.என். சிவராமன்  அவர்களால் நந்தன‌ வருடம் மார்கழி மாதம் எழுத ஆரம்பித்து விஜய வருடத்தின் துவக்கத்தில் முடிந்த இந்த கதை படிப்பவர்களின் மனதில் ஈரேழு பதினான்கு லோகங்களையும் ஸ்ரிஸ்டித்து பலவாறான மாயாஜாலங்களை நிகழ்த்தும் வண்ணம் எழுதப்படிருக்கிற படியால் கதை வாஸிக்க பிரியப்படுபவர்கள் தவறாது இந்த புத்தகத்தினை வாசித்து சகல இன்பங்களையும், ஷேமங்களையும் பெறுவார்கள் என்பதனை இதன் மூலம் தெரியபடுத்தி கொள்கிறோம். இந்த கதையினை வடிக்க உதவி புரிந்தவர்களாக அறியப்படும் யுவகிருஷ்ணா மற்றும் நரேன் ஆகிய சிறுவர்களையும் இந்நேரம் நினைத்து பார்க்க கடவது வாசகர்களுக்கு மேலும் பலன் செய்யக்கூடியதாக இருக்கும்.