அவர்கள் அழியும் முன்
April 13, 2015 at 11:44 pm Leave a comment
ஜிம்மி நெல்சன். இங்கிலாந்தை சேர்ந்த புகைப்பட கலைஞர். அவர்கள் அழியும் முன் (Before they pass away) என்னும் தலைப்பில் உலகம் முழுக்க அழியும் தறுவாயிலிருக்கும் பழங்குடிகளை புகைப்படங்களாக பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
ட்ரைபல் போட்டோகிராஃபி என்பதில் நிறைய கலைஞர்கள் ஆர்வமாக காட்டினாலும் ஜிம்மி நெல்சனின் புகைப்படங்களில் பழங்குடிகள் கிட்டத்தட்ட விளம்பர மாடல்கள் போல் போஸ் கொடுக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் ஜிம்மி பழங்குடிகளை நிலங்களின் பின்னணியுடன் கம்போஸ் செய்திருக்கும் விதம், ஒளி மற்றும் வண்ணங்களை பயன்படுத்தி இருக்கும் நுட்பம், புகைப்பட ரசிகர்களால் ஒரு பக்கம் கொண்டாடப்பட, இன்னொரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.
சர்வைவல் இன்டெர்நேஷனல் என்னும் அமைப்பைசேர்ந்த ஆந்த்ரோபாலஜி அறிஞரான ஸ்டீபன் கோரி ஜிம்மின் புகைப்படங்களை “பழமையின் மீதான தவறான பார்வை” என்று விமர்சிக்கிறார். அதற்கு அவர் உதாரணமாக ஈகுவடார் பழங்குடிகளான ‘வாரோனி இந்தியன்” குழுவை அவர் புகைப்படம் எடுத்திருக்கும் விதத்தை சுட்டி காட்டுகிறார். வாரோனி இந்தியன் பழங்குடிகள் இன்று ஆடைகள் உடுக்க ஆரம்பித்து விட்டனர் ஆனால் ஜிம்மி அவர்களை கிட்டத்தட்ட வலிந்து நிர்வாணமாகவே படம் பிடித்திருக்கிறார் என்கிறார் கோரி.
இந்தோனேஷிய பாப்புவா பழங்குடிகள் தலைவரான பென்னி வென்டாவும் இது போலவே குற்றம் சாட்டுகிறார். ஜிம்மி நெல்சன் தங்கள் பழங்குடிகளை “ஹெட் ஹன்டர்ஸ்” என்று தன் போட்டோகிராஃபி புத்தகத்தில் குறிப்பிடுவதையும் அவர் கண்டிக்கிறார். “உண்மையில் ஹெட் ஹன்டர்கள் பழங்குடி மக்கள் அல்ல பழங்குடிகளை அழிக்கும் இந்தோனேஷிய ராணுவம் தான். அது மட்டுமில்ல ஜிம்மி குறிப்பிடுவது போல நாங்கள் அழிந்து கொண்டிருப்பவர்கள் இல்லை அழிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு” என்கிறார்.
“என்னுடைய அழகியல் பார்வை, மற்றும் பழங்குடிகள் மீதான அன்பு சார்ந்து மட்டுமே இதை பதிவு செய்திருக்கிறேன்.” என்று பதில் சொல்கிறார் ஜிம்மி நெல்சன். ஒரு பழங்குடி குட்டிப்பாப்பாவை தோளில் வைத்துக்கொண்டு அவர் கேமராவை ஹேண்டில் செய்வதைப்பார்த்தால் அதுவும் உண்மை தான் என்றே தோன்றுகிறது.
Entry filed under: tamil advertising. Tags: ட்ரைபல் போட்டோகிராஃபி, புகைப்பட கலைஞர்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed