பெயர்வு

சிறுகதை

 

யூனிஃபார்முக்கு மாறி தொப்பியை சரிசெய்துகொண்டான் ராம்லால். ரயில் ஓட்டுனருக்கான சீருடை அது. வாஹினி மாலின் நவீன கழிவறை கண்ணாடியில் தன்னை ஒரு முறை மீண்டும் பார்த்துக்கொண்டான். நாடியை கொஞ்சம் தூக்கி கம்பீரமாக இருக்கிறானா என்று உறுதி படுத்திக்கொண்டான். விறைப்பாக நின்று தனக்கு தானே சல்யூட் வைத்துக்கொண்டதும், சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்கிற நினைப்பு வந்து திரும்பி பார்த்தான். என்னை பார்த்ததும் வெட்கம் வந்தது போல சிரித்தான். எனக்கு ராம்லாலை நன்றாக தெரியும். எப்படியும் மாதத்திற்கு ஒரு முறை அவனை பார்த்து விடுகிறேன். 

புன்னகைத்தபடி எனக்கும் ஒரு சல்யூட் வைத்தான் “பாப்பா வந்திருக்காளா சார்”என்றான்

“வந்திருக்கா. என் ஒயிஃப் கூட ஃபுட்கோர்ட்ல சாப்பிட்டுட்டு இருக்கா” என்றேன்

“ரயிலுக்கு பாப்பா வரும் இல்ல” என்றான். கொஞ்சம் ஹிந்தியில் உரசி எடுத்த தமிழ். 

“சாப்பிட்டு முடிச்சதும், அங்க தான் வர சொல்லி இருக்கேன்” என்றபடி பளபளவென்று இருந்த வாஷ் பேசினில் குழாய் தண்ணீரை திறந்து முகம் கழுவி துடைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். 

“அப்புறம் ஊருக்கு போனியா? உன் குடும்பம் எல்லாம் எப்டி இருக்கு” என்றபடி நடந்தேன்

“போன மாசம் போயிட்டு வந்தேன் சார். ஒயிஃப் குழந்தையை கூட்டிட்டு வந்துட்டேன்” என்றபடி

இடுப்பு பெல்டை சரிசெய்த படி என் கூடவே நடந்தான்.

வாஹினி மாலின் அகண்ட  வட்டமான தரைதளத்தின் பிரமாண்ட தூண்களுக்கிடையில் நடந்து  டிக்கெட் கவுண்டருக்கு வந்து சேர்ந்தோம். வாகினி மாலின் உள்தளத்தில் ஓடும் பாட்டரி ரயிலுக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்டர் அது. மெல்லமான அசைவுகளுடனும் சோபையான முகத்துடனும் டிக்கெட் கொடுப்பவர் டிக்கட்டை பஞ்ச் செய்து கேட்பவர்களுக்கு கவுண்டரின் துளை வழியாக கொடுத்துக்கொண்டிருந்தார்.

ராம்லால் கவுண்டர் அருகில் சென்று எட்டிபார்த்தான்.

வாஹினி மாலுக்கு குடும்பத்துடன் வரும்போதெல்லாம் ராம்லாலை பார்க்காமல் செல்வதில்லை. காரணம் எங்கள் ஆறு வயது மகள் ஆதிரா. வாஹினி மால் வந்தாலே பொம்மை ரயிலில் ஏறாமல் போகக்கூடாது என்பது அவளது கட்டளை. அதுவே சாசனம். ஆகவே நாங்கள் அதை மீறமுடியாது. போன வருடம் முதன் முதலாக அவள் இந்த ரயிலில் ஏறியபோதே அந்த ரயிலின் “எஞ்சின் மாமா”வாகிய ராம்லால வேறு அவளுக்கு ஃப்ரண்டாகி விட்டிருந்தான்.   

ராம்லால் பீஹார் காரன். மாத்வபூர் என்கிற மாதிரி ஏதோ ஒரு கிராமம்.  ஆறு வருடம் முன்பு சென்னை வந்து பல வேலைகள் பார்த்தவன், ட்ரைவிங் தெரியும் என்பதால் தெரிந்த ஒரு ப்ரோக்கர் வழியாக இந்த குழந்தைகள் ரயில் ஓட்டும் வேலைக்கு வந்து சேர்ந்தானாம். மாத சம்பளம் என்பது அவன் சொந்த ஊரில் ஜென்மத்துக்கும் நினைத்து பார்க்காத விஷயம். யூனிஃபார்ம் போடுவது அதை விட பெரியது . இவன் யூனிஃபார்மில் இருக்கும் போட்டோவை மனைவியிடம் காட்டியபோது ஊரே திரண்டு வந்து பார்த்தாக ஒரு முறை சொன்னான். ஆகவே சந்தோஷமாக இந்த வேலையைப்பார்த்துக் கொண்டிருந்தான்.    

மட்டுமல்லாமல் அவனுக்கு குழந்தைகள் மீது இயல்பாகவே ஒரு ப்ரியம் இருந்தது என்பதை நான் கண்டு கொண்டிருந்தேன். அவனுடைய குழந்தை பூமிகாவுக்கும் ஆதிராவின் வயது தான் என்றான் ஒருமுறை. இப்படி ஒவ்வொரு முறை அவனை பார்க்கும்போதும் பேசிப் பேசி அவனைப்பற்றி அறிந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மாலுக்கு வரும் யாரும் அவனிடம் இப்படி பேசுவதில்லை என்றான் ஒரு முறை. நான் ஆர்வமாக கேட்பது அவனுக்கு சந்தோஷம்.  

ஆதிராவுக்கு ஒரு டிக்கட் என்று ராம்லாலிடம் பணத்தை நீட்டினேன். அவன் சிரித்தபடி கவுன்ண்டரில் பணத்தை நீட்டி டிக்கட்டை எடுத்து தன் யூனிஃபார்ம் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.

மனைவியும் ஆதிராவும் ஃபுட்கோர்டிலிருந்து கிளம்பி நேராக ரயில் அருகில் வந்தார்கள். வரும்போதே ஆதிரா “ஹாய் எஞ்சின் மாமா”என்றபடி வந்தாள். கையில் வைத்திருந்த பெரிய லாலிபாப் ஒன்றை அவனுக்கு நீட்டினாள்.

“நீ சாப்பிடு பாப்பா” என்று அவன் அவளது தலையை வருடினான்.           

“பய்யா பத்து டிக்கட் போட்டாச்சு. பசஙகள வண்டில ஏத்திட்டு ஸ்டார்ட் பண்ணிக்கப்பா” என்றார் கவுண்டரில் இருந்த ஆள். பெற்றோர்கள் டிக்கட்டை நீட்ட, வாங்கி பாக்கெட்டிற்குள் திணித்தபடி குழந்தைகளை அந்த குட்டி ரயிலின் சிறிய பெட்டிகளுக்குள் உட்கார வைத்து கதவை அடைத்தான் ராம்லால்.   

ஒவ்வொரு பெட்டியிலும் மிக்கி மவுஸ் சோட்டாபீம் போன்ற கார்டூன்கள் வரையப்பட்டு எனாமல் பூக்கள் கலர் கலராக சிரித்துக்கொண்டிருந்தன. மொத்தம் ஐந்தாறு பெட்டிகள். அவற்றைத் தாண்டி முன் சென்று சிறிய எஞ்சினின் இருக்கையில் அமர்ந்து கொண்டான் ராம்லால். ரயில் புறப்புடும் விதமாக பாம்ம்ம்ம்ம் என்று சத்தமாக ஒரு ஹாரனை அடித்துவிட்டு ஸ்டார்ட் செய்தான். எஞ்சினில் கட்டி இருந்த பெரிய மணி முழங்கத் தொடஙகியது. குழந்தைகள் கூக்குரலிட்டும், கத்தியும் தங்கள் பெற்றோர்களை பார்த்து சிரித்தார்கள். ‘ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்’ போல ஏதோ ஒரு துள்ளலான ஆங்கில குழந்தைப்பாடல் கரகரப்பான ஸ்பீக்கரில் ஒலிக்கத்துவங்கியது.

ராம்லால் எஞ்சினை ஆள்கூட்டங்களுக்கு இடையிலாக லாவகமாக திருப்பி ஓட்டிச்சென்றான். சிலர் புன்னகையுடன் ஒதுங்கி வழி விட்டனர். ரயில் பெட்டிகள் வளைந்து வளைந்து தூண்களின் இடையிலாக ஊர்ந்து சென்றது.  குழந்தைகள் ஜாலியாக கண்ணாடிகளுக்குள் மேனிக்க்யூன்கள் நிற்கும் கடைகளை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள். ஒவ்வொரு சுற்றிலும் பெற்றோர்களை தாண்டும்போதும் குழந்தைகள் கூக்குரலிட்டார்கள். 

ஆதிரா வழக்கம் போல எங்களை பார்த்து தன் கையில் இருந்த பெரிய லாலிபாப்பை தூக்கி காட்டினாள். மூன்று சுற்று முடித்து ஒவ்வொரு பெட்டிகளாக திறந்து குழந்தைகளை இறக்கி விட்டான் ராம்லால். 

ஆதிரா அவளே குட்டி கதவை திறந்து கொண்டு இறங்கி எனக்கு இதெல்லாம் சகஜம் என்பதைப்போல எங்களை பார்த்தாள் .

“தேங்க்ஸ் எஞ்சின் மாமா”என்றாள்.

ராம்லால் சிரித்தான். அடுத்த சுற்றுக்காக சில குழந்தைகள் காத்திருந்தார்கள். குறைந்தது பத்து டிக்கட் இல்லாமல் வண்டியை கிளப்ப முடியாது. ராம்லால் கசங்கிய உடைகளை சரி செய்து கொண்டு மிடுக்காக காத்து நின்றான். டிக்கட் கவுண்டர் மீது அடிக்கடி பார்வை சென்று மீண்டது.  

“அப்பா என்ன வாங்கித்தந்தாரு” என்றான் ஆதிராவிடம் குனிந்து

“கலர் பென்சில். வரையுறதுக்கு புக்கு”என்று தன் அம்மாவிடமிருந்து பையை பிடுங்கி ராம்லாலிடம் காட்டினாள். நாங்கள் சிரித்தோம். 

“நீ நல்லா படம் வரைவியா”  என்றான் ராம்லால்

“ஆமா. சூப்பரா வரைவேனே. ஸ்கூல்ல எனக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்” என்றாள் ஆதிரா 

“என்ன பார்த்து வரைவியா” என்றான்

“ஓ உங்க தொப்பி கூட சூப்பரா வரைவேன்”என்றாள்

“ஓகே குட்டி எஞ்சின் மாமாவுக்கு பாய் சொல்லு. அப்பாவுக்கு ட்ரெஸ் எடுக்க போகணும்”என்றேன். 

கிளம்பும் முன்பு ஒரு கலர் பென்சில் செட்டை எடுத்து ராம்லாலிடம் கொடுத்தாள் “இது உங்க பொண்ணு பூமிகாவுக்கு”

“அய்யோ வேண்டாம் பாப்பா”என்றான் அவன்

“வாங்கிக்கோ ராம்லால்”என்றேன் நான்

“அய்யோ வேண்டாம் சார். கஸ்டமர் கிட்ட எதுவும் வாங்கக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு” என்றான்

“அட வாங்கி பாக்கட்ல போடு ராம்லால். இவ்வளவு பெரிய யூனிஃபார்ம் பாக்கெட் இருக்கே”என்றேன்

அவன் கவுண்டரில் இருக்கும் ஆளை ஒரு தடவை திரும்பி பார்த்துவிட்டு வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிரித்தான்.

பொங்கலுக்கு இந்த தடவை எனக்கென்று நான் புது துணிகள் எதுவும் எடுத்திருக்கவில்லை. அலுவலக வேலைகளால் தள்ளிப்போட்டு இப்படி மார்ச் முதல் வாரம் வரை வந்து விட்டது. மனைவி கட்டாயப்படுத்தியதால் வந்தேன் இல்லை என்றால் சம்மர் ஹாலிடேஸில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்திருப்பேன்.  

நாங்கள் முதல் தளத்தில் உள்ள பேண்டலூனில் எனக்காக ட்ரெஸ் எடுத்துக்கொண்டிருக்கும்போது கீழே ராம்லால் குழந்தைகளை ரயிலில் வைத்துக்கொண்டு உற்சாகமாக வட்டமிட்டுக்கொண்டிருந்தது கண்ணாடிகள் வழியாக தெரிந்தது. 

நாங்கள் ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு கிளம்பும் போது எங்கள் அருகில் உரசுவது போல “பாம்ம்ம்ம்”என்று ஹார்ன் அடித்துக்கொண்டு சென்றான். அவளது எஞ்சின் மாமா டாட்டா கட்டியபடி போவதைப்பார்த்ததும் ஆதிரா துள்ளிக்குதித்து கத்தினாள். 

நாங்கள் வாஹினி மாலுக்கு போய்விட்டு வந்த அடுத்த வாரம் கொரோனா ஊரடங்கை அறிவித்திருந்தார்கள். திடீரென்று கிடைத்த இந்த விடுமுறையை என்ன செய்வது என்று தெரியாமல் ஆதிரா வீட்டிற்குள் சுற்றி சுற்றி வந்தாள். வெளியே விளையாடவும் அனுமதியில்லை என்பது அவளை மேலும் துக்கம் கொள்ள செய்தது. மாலில் வாங்கி வந்த கலர் பென்சில் செட்டுகளை எடுத்து போட்டு அவ்வப்போது படம் வரைந்து கோண்டிருந்தாள். 

தினமும் நாலைந்து படங்கள் வரைந்து கொண்டு வந்து காட்டினாள். நான் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று லேப்டாப்பை திறந்துகோண்டு உட்கார்ந்தாள் என் மடியில் வந்து உட்கார்ந்து கொள்வாள். ஆப்பிஸ் ஸூம் மீட்டிங்குகளுக்கு நடுவில் புகுந்து ஒரு நாள் எங்கள் மேனேஜருக்கு ஹாய் சொன்னாள். 

படம் வரைந்து போரடித்த ஒரு நாளில் ‘அப்பா வாஹினி மாலுக்கு போலாமா. குட்டி ரயிலில்ல ஏறணும்” என்றாள். அப்போது தான் அது எனக்கு உறைத்தது. மால்களெல்லாம் மூடி நான்கு வாரங்களுக்கு மேலாகி விட்டது. இந்த ராம்லால் என்ன செய்து கொண்டிருப்பான். சம்பளம் கொடுத்திருப்பார்களோ என்னமோ? குடும்பத்தை வேறு போன மாதம் கூட்டி வந்திருப்பதாக சொன்னான். 

“பாப்பா வாஹினி மாலுக்கும் லீவு விட்டுட்டாங்க. ஸ்கூல் திறக்கும்போது தான் மாலும் திறப்பாங்க” என்றேன். மொத்த சோகத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல முகத்தை வைத்துக்கொண்டாள். 

மறுநாள் நாங்கள் டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்த போது வடமாநில தொழிலாளிகள் பொட்டி படுக்கைகளுடன் கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வதை காட்டினார்கள். பெண்களும் குழந்தைகளும் கூட நடந்து செல்வதை பார்க்கும்போது குற்ற உணர்ச்சியாக இருந்தது. 

“அப்பா எஞ்சின் மாமா எஞ்சின் மாமா”என்று கத்தினாள் ஆதிரா

ஒரு சேனலில் ராம்லால் நெடுஞ்சாலையோரம் நின்றபடி நீட்டிய மைக்கின் முன்பு தயக்கமாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். நான் ரிமோட்டில் வால்யூமை ஏற்றினேன். “ஒரு மால்ல வேல பார்த்திட்டுருந்தேன்.  போன மாசம் ஏஜெண்ட் கூப்பிட்டு மாலெல்லாம் திறக்க நாளாகும். நீ ஊருக்கு கிளம்புனு சொல்லிட்டாரு. கையில இருந்த காச வச்சு ஒரு மாசம் சமாளிச்சாச்சு. நம்மள்கு குழந்த இருக்குது. குடும்பம் இருக்குது. சாவுறதா இருந்தா கூட சொந்த ஊருக்கு போய் சாகலாம்னு இருக்குது சார்” என்றான். பக்கத்தில் அவன் மனைவியாக இருக்கலாம். கூடவே ஆதிரா அளவுக்கு சின்ன ஒரு குழந்தை. அது பூமிகாவா. ஆம் பூமிகா தான். கையில் ஆதிரா அன்று கொடுத்த பென்சில் பாக்கெட்டை வைத்து காற்றில் ஆட்டிக்கொண்டிருந்தாள். 

எனக்கும் மனைவிக்கும் தர்மசங்கடமாக இருந்தது. ஆதிரா “ஐ டிவியில எஞ்சின் மாமா எஞ்சின் மாமா. அவரோட குட்டி ரயில் எங்கப்பா”என்றாள்

“அவங்க எல்லாம் ஊருக்கு கிளம்பிட்டாங்கடா செல்லம். நாம நாகர்கோவில்லு போவோம் இல்ல. அத மாதிரி அவங்க அவங்க பாட்டி ஊருக்கு கிளம்பிட்டாங்க”என்றேன்

“எப்படி போவாங்க”என்றாள்

“இப்போ பஸ் ரயில் எதுவும் இல்லை இல்ல . நடந்தே போவாங்க” என்றேன் 

“எவ்வளவு தூரம்” என்றாள்

“ரொம்ப. ரொம்ப தூரம்” என்றேன்

“அவ்வளவு தூரம் நடந்தே போவாங்களா”என்றாள்

“ஆமா”என்றேன்

“கால் வலிக்காதா”

“வலிக்கும் பாப்பா”

“அய்யோ… பாவம்” என்றபடி டிவியை பார்த்தாள்.

“அவ தான் பூமிகாவா”என்றாள். ஆதிரா சட்டென்று எல்லாவற்றையும் புரிந்து கொள்பவள். 

“ஆமா” என்றேன்

“அவளுக்கு என்ன மாதிரியே சின்ன காலு. அவ்வளவு தூரம் எப்டிப்பா நடப்பா”என்று தன் காலை தொட்டு காட்டினாள்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மனைவியை பார்த்தேன்.  

“வா தூங்கப்போகலாம்” என்று ஆதிராவை தூக்கிக்கொண்டு அவள் பெட் ரூமிற்குள் சென்றாள்.

எனக்கு தூக்கம் வர வெகு நேரம் பிடித்தது.

காலையில் நான் எழுந்த போது கவனித்தேன் ஆதிரா எனக்கு முன்னால் எழுந்து விட்டிருந்தாள். என்னை கண்டதும் ஹாலிலிருந்தவள் ஓடி வந்தாள். கையில் ஒரு பேப்பர் இருந்தது. 

“அப்பா இதை பாரேன். காலையில வரஞ்சேன்”என்று காட்டினாள்

பென்சில்களால் வரைந்த கலர்ஃபுல்லான  குட்டி ரயில். எஞ்சினில் ராம்லால் உட்கார்ந்து ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் முகம் பெருமிதத்தோடும் உற்சாகத்தோடும் இருந்தது. பின்னால் இருந்த நீலக்கலர் பெட்டியில் ராம்லாலின் மனைவி இருந்தாள். அடுத்த இளஞ்சிவப்பு நிற பெட்டியில் பூமிகா உட்கார்ந்து கைகளை தூக்கி ஆட்டிக்கொண்டிருந்தாள். மேலும் பின்னால் இருந்த பெட்டிகள் முழுக்க குழந்தைகளும் ஆட்களுமாக மூட்டை முடிச்சுகளோடு இருந்தார்கள். அந்த குட்டி ரயில் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. அதன் கீழே நகரங்களும் கட்டிடங்களும் மனிதர்களும் சின்னதாக, மிக சின்னதாக அழுக்காக தெரிந்தார்கள்.

நான் ஆதிராவின் முகத்தை பார்த்தேன். அதற்கு பூமிகாவின் சாயல் இருந்தது.

நான் மறுபடி காகிதத்தை பார்த்தேன். அந்த குட்டி ரயில் இரண்டாக, நான்காக, எட்டாக, நூறாக பெருகிய படி காகிதத்திலிருந்து வெளியேறி ஓட ஆரம்பித்தன. அவை இந்தியாவின் பெரிய சாலைகளை, பெரிய நகரங்களை, கிராமங்களை, தெருக்களை இணைத்தபடி எல்லா இடங்களிலும் ஓட ஆரம்பித்தது. அதில் குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் மூட்டை முடிச்சுகளுடன் உட்கார்ந்து இருந்தனர். அதன் ‘பாம்ம்ம்’ என்கிற சத்தம் பெருகி பெருகி ஒரு பெரிய ஓலம் போல எழுந்து காதை நிறைத்தது.      

#சந்தோஷ்நாராயணன்சிறுகதை #சிறுகதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s