சுராவும் சுஜாதாவும்.

இலக்கியம்

sura sujatha

நான் ஒரு எழுதுபவனாக இல்லை, ஒரு வாசகனாகவே இதை எழுதுகிறேன். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே புளியமரத்தின் கதை வாசித்து விட்டேன். ஜெ.ஜெ. சில குறிப்புகள் எல்லாம் கல்லூரி காலத்தில் தான் படித்தேன்.(இந்த புத்தகங்களுக்கும் பிற்காலத்தில் அட்டை வடிவமைப்பு செய்திருக்கிறேன் எனபது இங்கே தேவையற்ற உபதகவல்). சுராவின் பெரும்பாலான சிறுகதைகளை படித்திருக்கிறேன். கட்டுரைகளையும்.

சொந்த ஊர் அருமனை என்றாலும் பத்தாம் வகுப்பு வரை வளர்ந்தது நாகர்கோவில் என்பதால் அதன் மீது ஒரு வசீகரம் உண்டு. வேப்பமூடு ஜங்ஷனும், மீனாட்சிபுரம் குளத்து பஸ் ஸ்டாண்டும், கோட்டாறும், தியேட்டர்களும் என் சிறுவயது ஞாபகங்களுடன் பிணைந்தவிட்ட ஒன்று. புளியமரத்தின் கதையில் சுரா அளிக்கும் பழைய, எனக்கும் பரிச்சயமற்ற நாகர்கோவில் பற்றிய சித்திரமே முதல் வாசிப்பில் என்னை கவரும் அம்சமாக இருந்தது. அன்றிருந்த இளம் மனநிலையில் அந்த அளவிற்கே என் வாசிப்பும் இருந்தது. பிறகு இரண்டு மூன்று தடவை புளியமரத்தின் கதையை வாசித்திருக்கிறேன். வெவ்வேறு வயதுகளில், சென்னையில். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் மனித மனங்களின் உள்ளடுக்குகள், அதன் கீழ்மைகள், அதன் பெருமிதங்கள், அதன் தந்திரங்கள் எல்லாம் இழைகளாக பிரிந்து கிண்டலும் கேலியுமாக என் முன்னே எழுந்து திரிவதை பார்த்திருக்கிறேன். இன்னும் ஒரு முறை வாசித்தால் பழைய வாசிப்பில் நான் தவறவிட்ட சுவராஸ்யமான இண்டு இடுக்குகள் கண்ணில் தட்டுபடலாம்.

ஜெ.ஜெ சில குறிப்புகள் வாசிக்கும் காலத்தில் ஓரளவுக்கு தமிழ் எழுத்தின் பின்புலத்தையும், வாழ்க்கையின் கலைடாஸ்கோப் சிக்கல்களையும் பற்றிய அறிமுகமும் ஓரளவு புரிதலும் உருவாகி விட்டிருந்தது. ஜெ.ஜெ அவற்றின் மீது ஒரு மரண அடி அடித்தான். மெல்லிய தெளிவையும் எல்லையற்ற குழப்பத்தையும் உருவாக்கினான். கேள்விகளால் வாசிக்கும் என்னை சீண்டினான். எல்லாவற்றையும் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யக்கோரினான். ஜெ.ஜெ என்னை தொந்தரவு செய்தது போலவே எல்லாரையும் தொந்தரவு செய்தான். இத்தனைக்கும் ஜெ.ஜெ.சில குறிப்புகள் நான் வாசித்தது தொண்ணூறுகளின் கடைசியில். அது வெளியான போது இன்னும் ச்லனங்களை உருவாக்கியது என்பது நமக்கு தெரியும்.

மனிதர்களின் சிடுக்குகளை ஒரு சர்ககஸ் மேஜிக் கண்ணாடியின் கோணல்களான கேரிக்கேச்சர்கள் போல புளியமரத்தின் கதை சித்தரித்தது என்றால், ஜெ.ஜெ அந்த சிடுக்குகளை முடிவில்லாத கேள்விகளால் தீவிரமான ஒரு பெயிண்டிங் போல நமக்குள் அழுத்தமாக வரைந்து செல்கிறது.

சுராவின் கறாரான இலக்கியமதிப்பீடுகள் பற்றி நாம் அறிந்ததே. அது எப்போதும் தேவையாகவும் இருக்கிறது. நான் காலச்சுவடில் டிசைனராக பணியாற்றிக்கொண்ருந்தபோது அவரை சில முறை நாகர்கோவில் வீட்டில் சந்தித்து பேசியுமிருக்கிறேன். அவரை சந்திப்பது என்பது எல்லாரையும் (வாசித்தவர்களை சொல்கிறேன்) போல எனக்கும் ஒரு கனவாக இருந்தது. முதல் சந்திப்பிலேயே மூன்று நான்கு மணி நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு சிறுவனாக இருந்த என்னிடம் அவர் ஒரு சக வயதுக்காரனைப்போல சினிமா பற்றியும் இளைஞர்களின் லைஃப்ஸ்டைல் பற்றியும் ஆர்வமாக – என்னை பேசவிட்டு அவர் தான் -கேட்டுக்கொண்டிருந்தார். அரவிந்தன், அடூர், ஜான் ஆப்ரஹாம் பற்றி அவர் ஒரு முறை பேசியது சுவராஸ்யமாக இருந்தது. இந்த மூவருடனும் அவருக்கு நேர்ப்பழக்கம் உண்டு. ”அடூர் திட்டமிட்டு நேர்த்தியாக ஒரு வங்கி மேலாளரைப்போல ஒரு சினிமாவுக்கான வேலைகளை செய்வார், ஜான் அதற்கு நேரெதிரான ஆள் எந்த திட்டமும் இல்லை வேலைகளும் முழுமையாக இருக்காது. ஆனால் அரவிந்தன் இந்த இரு ஆளுமைகளுக்கும் நடுவில் இருப்பவர். அவரே எனக்கு மிகப்பிடித்தமான கலைஞர் ” என்றார். ஒரு வகையான சமநிலை கொண்ட பார்வை. இந்த பார்வையே சு.ராவின் கலைநோக்கின் மைய்யம் என்பது என் புரிதல்.

கலை மற்றும் வாழ்வு பற்றிய இந்த தீவிரமான பார்வையை அவர் எப்போதும் கொண்டிருந்தார். அதை நுட்பமும், மெல்லிய அதே நேரம் கூர்மையான அங்கதத்தையும் கொண்ட வசீகரமான மொழியால் எழுதினார். விமர்சனங்களை உருவாக்கினார். அதனாலேயே சம காலத்தில் எழுத வந்த இளம் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக, ஒரு மைய ஈர்ப்பாக இருந்தார். இப்போதும் இருக்கிறார். சுராவின் மொழி மைக்கேல் ஏஞ்சலோவின் உளியைப்போல கூர்மையாகவும் கச்சிதமாகவும் இருக்கிறது. தேவையற்ற ஒரு சொல்லின் பிசிறு கூட இல்லை. இந்த புரிதல் எல்லாம் ஒரு வாசகனாக எனக்கு இருக்கிறது. சு.ராவின் இடம் என்ன என்பது எனக்கு தெரியும்.

ப்போது சுஜாதா. சுஜாதாவை கணேஷ் வசந்த் டிடெக்டிவ் கதை எழுதுகிற, ஏன் எதற்கு எப்படி எழுதுகிற, முதல்வன் போன்ற படங்களுக்கு கலாட்டாவாக வசனம் எழுதிய ஒரு ஜாலியான ஜனரஞ்சக எழுத்தாளராகத்தான் அறிமுகம் செய்து கொண்டேன். நமது தமிழ் சமூகத்தின் எல்லாவிதமான பக்கங்களையும் தொட்டு செல்லும் வணிக சினிமாவைப்போலத்தான் சுஜாதாவையும் நினைத்தேன். நானெல்லாம் தீவிர இலக்கிய வாசகன் என்னும் ஒரு விதமான போலியான பாவனையில் இருந்தேன். அதனால் கிட்டத்தட்ட சுஜாதாவை பற்றிய கொஞ்சம் உதாசீனமான பார்வைதான் எனக்கு இருந்தது.

ஆனால் இரண்டாயிரத்திற்கு பிறகு தான் உண்மையில் சுஜாதாவை வாசிக்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல ’தீவிரமான பாவனை’ என்னும் மலச்சிக்கலிலிருந்து வெளியே வந்து பார்க்க ஆரம்பித்தது அப்போது தான். கொஞ்சம் திறந்த மனதுடன். சுஜாதாவின் மொழி நுட்பம் அப்போது தான் என்னை வசீகரிக்க ஆரம்பித்தது. அவரது சிறுகதைகள் (வாராந்திர டெட்லைன் அவசரங்களில் எழுதியதாக அவர் கூறிக்கொண்டது உட்பட), விளையாட்டுத்தனமும்,அறிவியலும், சமூகம் பற்றிய பகடியும் இழைகளாக ஓடும் விஞ்ஞானச்சிறுகதைகள், கணையாழியின் கடைசி பக்கங்கள் எல்லாம் படித்தபோது ஏற்கனவே எனக்குள்ளிருந்த சுஜாதா என்னும் பிம்பம் உடைந்து -டெர்மினேட்டரில் உருகிய மெட்டல் ரோபோ மீண்டும் அர்னால்டாக மாறுவதைப்போல- புதியதாக மாறி எழுந்து நின்றது.

கணையாழி கடைசிப்பக்கத்தில் கிட்டத்தட்ட சுஜாதா தன் முப்பதாவது வயதில் எழுத ஆரம்பித்திருக்கிறார். டெல்லியில் உலக சினிமாக்களை பார்த்து விட்டு ஸ்ரீதரையும் கோபாலகிருஷ்ணனையும் இயக்குனர்களே இல்லை என்று கலாய்க்கிறார். நவீன நாடகங்களை பார்த்து விட்டு சென்னையின் பழைய சிரிப்பு நாடகங்களை கிண்டல் செய்கிறார். இதழ்களின் குண்டு தீபாவளி மலர்களை கேலி செய்கிறார். சத்யஜித்ரேயை கொண்டாடுகிறார். லா.சா.ரா, க.நா.சு வை பற்றி எழுதுகிறார். சுராவின் புளியமரத்தின் கதையின் உயர்தர நகைச்சுவையை யாரும் கொண்டாட வில்லையே என்று கவலைப்படுகிறார். ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளேயில் இருக்கும் சர்ரியலிசத்தன்மையை சுட்டிக்காட்டுகிறார். இப்படி எல்லாவற்றை பற்றிய விமர்சனமும் மதிப்பீடுகளும் சுஜாதாவுக்கும் இருந்திருக்கின்றன. கூடவே ஜாலியாக லேட்டரல் திங்கிங் புதிர்களை போடுகிறார், ரூபே கோல்ட்பெர்க் என்னும் சித்திரக்காரனின் நகைச்சுவை சித்திரங்களை தந்து அதிலிருக்கும் விளையாட்டுத்தனத்தை பகிர்ந்து கொள்ளுகிறார், குறுக்கெழுத்து போட்டி வைக்கிறார். வாசிப்பவர்களை சற்று இலகுவாக்குகிறார்.

அதுவே சுஜாதாவின் வசீகரம். எழுத்தாளனோ வாசகனோ எப்போதும் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும், எந்நேரமும் தீவிரமாக மோட்டுவளையை பார்த்து சிந்திக்க வேண்டும், உன்னதத்திலேயே மிதக்க வேண்டும் என்று அவர் விரும்பியதாக தெரியவில்லை. அதே நேரம் நகர, மத்திய வர்க்க வாழ்க்கையின் சித்திரங்களை அவரது கதைகளிலும் நாடகங்ககளிலும் அமைதியாகவும், அங்கதமாகவும் சித்தரிக்கவும் செய்திருக்கிறார். வாராந்திரிகளின் ரசனைக்கு எற்றவாறு இறங்கி வந்தும் சிக்சர் அடித்திருக்கிறார். அதற்கான இடம் எது என்பதும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இதில் ஒரு விளையாட்டுத்தனம் இருக்கிறது. நானெல்லாம் சீரியசான இலக்கிய்யகாரன் என்ற பாவனை இல்லை. ஆனாலும் அவ்வகையான எழுத்துகளில் கூட வசீகரமான ஃப்ரெஷ்ஷான ஒரு மொழி இருக்கிறது. கிரியேடிவிட்டி இருக்கிறது.

தொடர்ந்து கலைச்சொல்லாக்கம் பற்றி கவலை படுகிறார். கணினியில் தமிழ் வந்த போது அதன் சாத்தியங்களை குறித்து திரும்ப திரும்ப எழுதுகிறார். பன்முகத்தன்மையுடன் எல்லாவற்றையும் அணுகுகிறார். பல்வேறு விஷயங்களின் மீதான ஆர்வம் காரணமாகவே மேலோட்டமான ஆழமற்ற படைப்புகளை எழுதி இருக்கிறார் என்று ஒரு க்ரூப் இப்போதும் குற்றம் சொல்கிறது. ஆனால் சுஜாதா அவ்வாறான கிளைம்களை கோரி நின்றதாக எனக்கு தோன்ற வில்லை. மனிதர் தான் செய்வதை ஜாலியாக உற்சாகமாக செய்து கொண்டிருந்திருக்கிறார். அதை படிப்பவர்களுக்கு கடத்தவும் செய்திருக்கிறார். கடைசி நாட்களில் கற்றதும் பெற்றதும் எழுதுவது வரை இளம் எழுத்தாளர்களை அடையாளம் காட்டுகிறார்..

இந்த கலவையான பன்முகத்தன்மை தான் ஒரு சாரார் அவர் மீது வசீகரம் கொள்ளவும் ஒரு சாரார் விமர்சனங்கள் வைக்கவும் காரணமாக இருக்கிறது. ஆனால் மொழி பி.சி.சர்க்காரின் கையிலிருக்கும் மேஜிக் ஸ்டிக் போல அவர் விரல்களில் சுழல்கிறது. இந்த புரிதல் எல்லாம் ஒரு வாசகனாக எனக்கு இருக்கிறது. சுஜாதாவின் இடம் எது என்பதும் எனக்கு தெரியும்.

சுராவை இறுக்கமும் தீவிரமும் கொண்டவராகவும் சுஜாதாவை ஆழமற்ற விளையாட்டுத்தனம் கொண்டவராகவும் எதிரிடையாக வைத்து ஒப்பீடுகள் செய்து அதன் வழியாக இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கப்பார்க்கிறார்கள். தராசுகளில் வைத்து யார் எடை கூடியவர் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தராசுகளை கையில் வைத்திருக்கும் அதிகாரம் யாருக்கு யார் கொடுத்தது. ஆனால் ஒரு வாசகனாக யார் யாருக்கு என்ன இடம் என்பது எனக்கு தெரியும். அது வாசிப்பதன் வழியாக நமக்கு உருவாகும் பார்வை. இருபத்து நான்கு மணி நேரமும் தூய, உன்னத, அதி தீவிர கவித்துவ பாவனையிலேயோ அல்லது எல்லாவற்றையும் ஜஸ்ட் லைக் தேட் மேலோட்டமான மனநிலையில் மட்டுமே பார்த்துக்கொண்டோ தான் இருக்க வேண்டும் என்று இல்லை. பாவனைகள், ஆழமின்மை இந்த இரண்டையும் உதறி விட்டு சுவராஸ்யமான, நேர்மையான, சமநிலையான பார்வையுடன், ஒரு இடத்தில் நின்று கொள்ள வாசகர்களாக நமக்கு உரிமையுள்ளது தானே.

அது மட்டுமல்ல ஒரு வாசகனுக்கு இதெல்லாம் அவன் வாழ்வின் ஒரு சிறு பகுதி. இந்த வாசிப்பு அவன் வாழ்வில் உள்ளே ஒரு மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருக்கும் தான். ஒரு பார்வையை உருவாக்கி இருக்கும். ஆனால் அதை எல்லாம் மீறி இன்று இருக்கும் அரசியல், பொருளாதாரம், மருத்துவம், கல்வி, நுகர்வு, உணவு, மத அழுத்தம், இயற்கை அழிப்பு எல்லாம் அவன் மீது செலுத்தும் தாக்கம், என்று அவன் அன்றாடங்களில் எதிர்கொள்ள ஆயிரம் முரண்கள் உள்ளன. இலக்கியம் ஒன்றும் சகலரோஹ நிவாரணி இல்லை. இலக்கியத்துக்கும் எழுத்துக்கும் வெளியேயும் வாழ்க்கையும் இயற்கையும் விரிந்து கிடக்கிறது.

அவர்கள் அழியும் முன்

Uncategorized

_MG_2403

 

ஜிம்மி நெல்சன். இங்கிலாந்தை சேர்ந்த புகைப்பட கலைஞர்.  அவர்கள் அழியும் முன் (Before they pass away) என்னும் தலைப்பில் உலகம் முழுக்க அழியும் தறுவாயிலிருக்கும் பழங்குடிகளை புகைப்படங்களாக பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

ட்ரைபல் போட்டோகிராஃபி என்பதில் நிறைய கலைஞர்கள் ஆர்வமாக காட்டினாலும் ஜிம்மி நெல்சனின் புகைப்படங்களில் பழங்குடிகள் கிட்டத்தட்ட விளம்பர மாடல்கள் போல் போஸ் கொடுக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் ஜிம்மி பழங்குடிகளை நிலங்களின் பின்னணியுடன் கம்போஸ் செய்திருக்கும் விதம், ஒளி மற்றும் வண்ணங்களை பயன்படுத்தி இருக்கும் நுட்பம்,  புகைப்பட ரசிகர்களால் ஒரு பக்கம் கொண்டாடப்பட, இன்னொரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

 

omo-21

 

சர்வைவல் இன்டெர்நேஷனல் என்னும் அமைப்பைசேர்ந்த ஆந்த்ரோபாலஜி அறிஞரான‌ ஸ்டீபன் கோரி ஜிம்மின் புகைப்படங்களை “பழமையின் மீதான தவறான பார்வை” என்று விமர்சிக்கிறார். அதற்கு அவர் உதாரணமாக ஈகுவடார் பழங்குடிகளான ‘வாரோனி இந்தியன்” குழுவை அவர் புகைப்படம் எடுத்திருக்கும் விதத்தை சுட்டி காட்டுகிறார். வாரோனி இந்தியன் பழங்குடிகள் இன்று ஆடைகள் உடுக்க ஆரம்பித்து விட்டனர் ஆனால் ஜிம்மி அவர்களை கிட்டத்தட்ட வலிந்து நிர்வாணமாகவே படம் பிடித்திருக்கிறார் என்கிறார் கோரி.

இந்தோனேஷிய பாப்புவா பழங்குடிகள் தலைவரான பென்னி வென்டாவும் இது போலவே குற்றம் சாட்டுகிறார். ஜிம்மி நெல்சன் தங்கள் பழங்குடிகளை “ஹெட் ஹன்டர்ஸ்” என்று தன் போட்டோகிராஃபி புத்தகத்தில் குறிப்பிடுவதையும் அவர் கண்டிக்கிறார். “உண்மையில் ஹெட் ஹ‌ன்டர்கள் பழங்குடி மக்கள் அல்ல பழங்குடிகளை அழிக்கும் இந்தோனேஷிய ராணுவம் தான். அது மட்டுமில்ல ஜிம்மி குறிப்பிடுவது போல நாங்கள் அழிந்து கொண்டிருப்பவர்கள் இல்லை அழிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு” என்கிறார்.

“என்னுடைய அழகியல் பார்வை, மற்றும் பழங்குடிகள் மீதான அன்பு சார்ந்து மட்டுமே இதை பதிவு செய்திருக்கிறேன்.” என்று பதில் சொல்கிறார் ஜிம்மி நெல்சன். ஒரு பழங்குடி குட்டிப்பாப்பாவை தோளில் வைத்துக்கொண்டு அவர் கேமராவை ஹேண்டில் செய்வதைப்பார்த்தால் அதுவும் உண்மை தான் என்றே தோன்றுகிறது.

‘நாம் இருவர் நமக்கு இருவர்’

Uncategorized

family planning

‘நாம் இருவர் நமக்கு இருவர்’  80களில் இந்த வாசகத்தை கேட்காத, படிக்காத யாரும் இருந்திருக்க மாட்டார்கள். சிறுவனாக இருந்த நான் கூட மஞ்சள் நிறப்பின்புலத்தில் கறுப்பு வண்ணத்தில் திருத்தமாக வரைந்திருக்கும் அம்மா அப்பா குழந்தைகள் முகங்கள் போட்ட அரசு விளம்பரங்களை ஆர்வமாக பார்த்திருக்கிறேன். குடும்பக்கட்டுப்பாடு என்றால் என்னவென்று தெரியாத வயதில் அரசு மருத்துவமனைகளிலும் ரோட்டோர சுவர்களிலும் வரையப்பட்டிருந்த அந்த விளம்பரங்களை கவனித்திருக்கிறேன். எனது பால்ய கால ஞாபகங்களில் ஒன்றாக பதிந்து போன சித்திரங்கள் அவை. அதில்  மக்கள் தொகைப்பெருக்கம் உலகத்தை பயமுறுத்தத் துவங்கிய பிறகு உலக அரசாங்கங்கள் எடுத்த முடிவில் இந்தியாவும் இணைந்து கொண்டதின் வெளிப்பாடு அது. எனது தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பதினோரு பிள்ளைகள். அந்த விளம்பரங்களுக்கு கிடைத்த வெற்றி போலும். அரசாங்கம்¢ கொண்டு வந்த திட்டங்களில் இது மட்டும்தான் வர்க்க, ஜாதி வேறு பாடுகளை தாண்டி சமமான வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். அரசு விளம்பரங்கள் பெரும்பாலும் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன என்று நான் நினைத்ததுண்டு, பிற்காலத்தில் காட்சி தொடர்பியல் படிக்கும்போது தான் தெரிந்துகொண்டேன் மஞ்சள் வண்ணம் அதிக அலைநீளம் கொண்டது என்று. அதிக தூரத்திற்கு பார்வைக்கு படுகிற வண்ணம்.  அந்த விளம்பரங்களில் என்னை கவரும் இன்னொரு அம்சம் நல்ல சிகப்பு கலரில் வரையப்பட்ட முக்கோணம். அந்த முக்கோண லோகோவை வடிவமைத்தவர் டீப் தியாகி என்று அழைக்கப்பட்ட தர்மேந்திர குமார் தியகி. நேரு, லால்பகதூர் சாஸ்திரி காலத்திருந்து இந்திரா வரை  குடும்பக்கட்டுபாட்டு  உதவி ஆணையராக இருந்தவர். சிறந்த வடிவமைப்பு திறன் படைத்த்வர். இன்று இந்த முக்கோண லோகோ பல உலக நாடுகளின் குடும்பக்கட்டுபாட்டு சின்னமாக விளங்குகிறது. டீப் தியாகி தன் 41 ம் வயதில் இறந்து போனார் அவருக்கு குழந்தைகள் இல்லை. அவரது பங்களிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.

தமிழ் விளம்பர எழுத்தாளர்கள் தேவை.

tamil advertising, Uncategorized

தமிழ் விளம்பர எழுத்தாளர்களின் தேவை இன்று அதிகம்.
தமிழில் எழுதவேண்டும் என்று நினைப்பவர்களில் பலர் பத்திரிகை வேலையை மட்டும் தான் தேர்வு செய்கிறார்கள் அல்லது மூன்று பாரம் வரும் அளவுக்கு கவிதைகள் தேறியதும் புத்தகம் போட ஏதாவது பதிப்பகத்தை தேடி அலைகிறார்கள். பத்திரிகையை விட குறைந்த உழைப்பு (?) ஆனால் அதிக வருமானத்தை அளிக்கிற
விளம்பரத்துறைக்கு நம் எழுத்தாள நண்பர்கள் அதிகமாக வருவதில்லை. நூறு பத்திகளில் எழுத வேண்டிய விஷயங்களை ஒரு வரியில் சொல்ல  வேண்டிய நிர்ப்பந்தம் சுவாரஸ்யமானது என்றே நான் நினைக்கிறேன். ’குறுகத் தரிக்கும்’ இந்த திறமை தான் விளம்பர எழுத்துக்கு மிகத் தேவையானது. வெகுஜன மக்களிடம் நேரடியாக பேசும் கலை என்பதால் மொழி எளிமை முக்கியம்.
அவர்களின் பண்பாடு வாழ்வியல் உளவியல் பொருளாதாரம் சார்ந்த நுட்பமான அறிதல் ரொம்ப முக்கியம்.   இன்று வருகின்ற தமிழ் அச்சு விளம்பரங்கள் பெரும்பாலும் மொழிபெயர்ப்புகள்.
உள்ளூர் நிறுவனங்களுக்கு மட்டும் தான் நேரடி எழுத்துக்கள்
அவசியமாக இருக்கிறது அதுவும் பெரும்பாலும் ஆடல் பாடல்களல் ஆன துணிக்கடை விளம்பரங்கள் தான். விளம்பர மெட்டுகளுக்கு பாடல்கள் எழுதுவதும் முக்கிய வேலை.
நமது இந்திய சினிமாக்களின் நீட்சியாக இந்திய விளம்பரங்களிலும் பெரும்பாலும் பாடல்களே இடம் பிடித்திருக்கிறது. விளம்பர எழுத்துகளும் ஒரு வகை மக்கள் இலக்கியம் என்றே நினைக்கிறேன்.  ஆங்கிலத்தில் உலகப்புகழ்பெற்ற சிறந்த விளம்பர எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சிறந்த நாவலாசிரியர்களுக்கு இணையான புகழும்இருக்கிறது. உதாரணம் David Abbott, William Bernbach, Leo Burnett, David Ogilvy. தமிழிலும் இருக்கிறார்கள் ஆனால் அவர்களைப்பற்றி நமது இலக்கிய எழுத்தாளர்களுக்கோ ஊடகங்களுக்கோ அக்கறை இல்லை.  என்ன ஆச்சு… குழந்தை அழுகுது… போன்ற விளம்பர வசனங்கள் பட்டி தொட்டிகள் எங்கும் புகழ்பெற்று நமது தமிழ் வெகுஜனமக்களின் பகடி பேச்சுவழக்கின் ஒரு பாகமாக இருந்தது என்று கூட சொல்லாம் ஆனால் அந்த வசனத்தை  எழுதியது யார் என்று சத்தியமாக இன்று வரை தெரியாது.  புது பைக் புது ட்ரெஸ்ஸ§ புது வீடு கலக்குற் சந்ரு போன்றவை சமீபத்திய உதாரணங்கள். முழுக்கமுழுக்க வணிக ரீதியான கலை என்பதால் கூட படைப்பாளிகளின் விவரங்கள் வெளியில் தெரியாமல் போய் இருக்கலாம். சினிமாவுக்கு இனையான கவர்ச்சிகரமான ஒரு துறை விளம்பரம். சினிமாவை விட வணிகரீதியான ஒழுங்கு மிக அதிகம். மிகச்சிறந்த விளம்பர எழுத்தாளர்கள் சில சமயங்களில் ஒன்றுமே எழுதாமல் விட்டு விடுவார்கள்.  விளம்பரங்கள் காட்சியின் வழியாக பேசுபவை அதனால் மொழி சில சமயங்களில் அவசியமற்று போய்விடும். அந்த சமயங்களில் மவுனமே மிகச்சிறந்த வாசகம். நுட்பமான வாசிப்பு அறிவும் மொழி ஆளுமையும் உள்ள எழுத்தாளர்களின் வரவு விளம்பரத்துறைக்கு மிக முக்கியம் மனசை இளமையாகவும் மூளையை முதிர்ச்சியாகவும்  வைத்து கொள்ள வேண்டியது அதை விட முக்கியம். ’இளம்‘ எழுத்தாளர்களை விளம்பரத்துறைக்கு வரவேற்கிறேன்.

அரசியல் விளம்பரங்கள்

Uncategorized

cartoon 1

பராக் ஒபாமா தன் தேர்தல் விளம்பரத்திற்காக செய்த செலவு மிகப்பெரிய சாதனை. கிட்டத்தட்ட 60 மில்லியன் அமெரிக்க டாலர். ஒரு லட்சத்திற்கும் மேலே டி.வி. விளம்பரங்களைச் செய்துள்ளார்.  அவரது வெற்றிக்கு இதுவும் ஒரு கரணம் தான் போலும். நம்ம ஆட்களும் ஒன்றும் குறச்சாலில்லை. ராஜிவ்காந்தி தான் முதன் முதலாக 1984ல் வணிக ரீதியில் விளம்பர நிறுவனங்களை அரசியல் விளம்பரஙகளுக்கு பயன் படுத்த துவங்கியிருக்கிறார். 2009 பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் விளம்பர பட்ஜெட் போட்டிருக்கிறது. ப.ஜ.கவும் அதுக்கு இணையாக நிதியும் திட்டங்களும் வைத்திருக்கிறதாம். ஏற்கனவே பா.ஜ.க கடந்த 2004 தேர்தலின் போது சுமார் 75லிருந்து 100 கோடி ரூபாய் வரை “இந்தியா ஒளிர்கிறது” தலைப்பில் வந்த விளம்பரங்களுக்கு செலவு செய்தும் ஒன்றும் நடக்க வில்லை. இருந்தும் விளம்பரஙகள் மீது நம்பிக்கை பொய்க்கவில்லை. உள்ளூர் கட்சிகளை பற்றி சொல்ல தேவை இல்லை. எந்த சேனலை திருப்பினாலும் கறுப்பிலும் வெளுப்பிலும் கலரிலும் வித விதமாக விளம்பரங்கள் வந்து முகத்தில் அறைகிறது. ப்ட்ஜெட் எவ்வளவுன்னே தெரியாது. தெரியவும் முடியாது. சாதனைகளும் சோதனைகளும் விலாவரியாக விளம்பரபடுத்தப் படுகிறது. தொழில்நுட்பத்தின் கொடை தொகுதிப்பக்கமே வராத அரசியல் வாதிகளின் குரல் செல்பேசி வழியாக நம் காதுகள் வரை வந்து விடுகிறது.

நன்றி: economictimes.indiatimes

மறுபடியும் ஒரு காதல் கதை

Uncategorized

சினிமா விளம்பரங்கள்னா ஒரு காலத்துல ஃப்ளோரசென்ட் கலர்ல போஸ்டர் அடிச்சு ஒட்டுன காலம் ஒன்னு இருந்தது. இன்னைக்கு காலம் மாறிடிச்சு படம் பூஜ போடுறதுக்கு முந்தியே ஷரத்ஹக்ஸர் மாதிரி போட்டோகிராபர்கள கூப்பிட்டு போட்டோஷூட் போய்டுறாங்க. சித்தார்த் மாதிரி டிசைனர்களும் சும்ம போஸ்டர் டிசைன்கள்ல பின்னி எடுக்கிறாங்க. அதுலையும் நம்ம கவுதம் வாசுதேவ மேனன் விளம்பர உலகத்திலருந்து சினிமாவுக்கு வந்தவர் இல்லையா அதான் வித்தியாசமா யோசிக்கிறாரு, உதாரணம் அவர் சிம்பு வச்சு எடுத்திட்டுருக்கிற ‘விண்ணை தாண்டி வருவாயா’  போஸ்டர்கள். மறுபடியும் ஒரு காதல் கதை என்கிற base lineக்கு  ஏத்தமாதிரி இது வரைக்கும் தமிழ்ல வந்த சூப்பர்ஹிட் சினிமாக்களின் போஸ்டர் டிசைன்ஸ் மாதிரியே பண்ணிருக்கிறாங்க. நீங்க கவனிச்சீங்களா?

இதயத்தை திருடாதே

DSCN5591

மின்சாரகனவு

 

DSCN5588

உயிரே

DSCN5590

அலை பாயுதே

DSCN5587

காக்க காக்க

DSCN5585

இது எப்டி இருக்கு. கலக்கிறாய்ங்கல்ல!

சூசூ மாரிஸ்

Uncategorized

zoozoo 1

சூசூஸ். இது தான் இவங்க பேரு. வோடஃபோனோட விளம்பர புரட்சிகளில் இது லேட்டஸ்ட். பக் நாய்குட்டிய மறந்திருக்க மாட்டீங்க அதுக்குள்ள புதுசா இப்டி ஒரு கேரக்டர்கள உருவாக்கி இருக்காங்க. முழுக்க முழுக்க தென் ஆப்ரிக்காவில் ஒரு ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டிருக்கிற இந்த விளம்பரங்கள்  ஐபிஎல் கிரிக்கெட் மேட்சுகளின் போது தொடர்ந்து வெளியிட தீர்மானிச்சு  இருக்காங்களாம். இன்னொரு முக்கியமான விஷயம் நீங்க நினைக்கிற மாதிரி இது அனிமேஷன் கேரக்டர்கள் இல்ல. முழுக்க முழுக்க    ஃபேப்ரிக் உடைகள் தரித்த நடிகர்களை வச்சு ஷூட் பண்ணி இருக்காங்களாம். O&M என்கிற ஏஜென்சி தான் வோடஃபோன் விளம்பரங்களை தயாரிக்கிறவங்க.

மறக்க முடியுமா?!

Uncategorized

nirma-girl80களில் தூர்தர்ஷனோ டூரிங் டாக்கீஸோ எங்கே பார்த்தாலும் இந்த பெண் பம்பரமாய் சுற்றி ஆடிகொண்டே நிர்மா நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா என்று பாடுவதை பார்க்காமல் இருந்திருக்க முடியாது. கண்ண தொடச்சுக்குங்கோ ஞாபகம் வருதே  ஞாபகம் வருதே  ரேஞ்சுக்கு நீங்க ஃபீல் பண்ணுறத என்னால பாக்க முடியுது. இந்த பொண்ணு இறந்து போச்சுனு அப்பவே ஒரு பேச்சு அடிபடும். விசாரிச்சதுல அது உண்மை தானாம். இந்த பொண்ணு பேரு நிருபமா. ஓணர் பொண்ணு. கார் விபத்துல இறந்துட்டாங்களாம். ஆனா இந்த பொண்ணோட இமேஜ் இந்த பிராண்டுக்கே மிகபெரிய வெற்றிய தேடித் தந்திடிச்சு. ஒவ்வொரு இந்தியனோட சின்ன வயசு ஞாபகதுல நின்னுருச்சு. ஜெய் ஹோ.

எல்லாம் ஒரு…

Uncategorized

இன்னைக்கு எல்லாமே சந்தையில எப்டி விக்கிறதுங்குறது தான் நமக்கு முக்கியமா போச்சு. விக்கிணும்னா யாரவது வாங்கணும்ல. வாங்குறதுக்கு யாரும் இல்லன்னாலும் வாங்கிறவங்களையும்  உருவாக்க வேண்டி இருக்கு. பல்லே இல்லாதவன்கிட்ட டூத்ப்ரஷ் விக்க முடியுமா? முடியும் அதுக்கு தான் விளம்பரம்ணு ஒன்னு இருக்கு. இந்த டூத் ப்ரஷ் வாங்கினா ஒரு பல்செட் ஃப்ரீனு விளம்பரம் பொட்டா போதும். தாத்தாவுக்கு செட்டும் கிடைச்சாச்சு பேரனுக்கு ப்ரஷும் கிடைச்ச்சாச்சு. இது தான் “கன்ஸ்யூமர் பெனிஃபிட்”. இது தாங்கோ விளம்பரம். இதபத்தி தான் இனிமே நாம பேசப்போறோம். பேசலாமா?!