பெயர்வு

சிறுகதை

 

யூனிஃபார்முக்கு மாறி தொப்பியை சரிசெய்துகொண்டான் ராம்லால். ரயில் ஓட்டுனருக்கான சீருடை அது. வாஹினி மாலின் நவீன கழிவறை கண்ணாடியில் தன்னை ஒரு முறை மீண்டும் பார்த்துக்கொண்டான். நாடியை கொஞ்சம் தூக்கி கம்பீரமாக இருக்கிறானா என்று உறுதி படுத்திக்கொண்டான். விறைப்பாக நின்று தனக்கு தானே சல்யூட் வைத்துக்கொண்டதும், சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்கிற நினைப்பு வந்து திரும்பி பார்த்தான். என்னை பார்த்ததும் வெட்கம் வந்தது போல சிரித்தான். எனக்கு ராம்லாலை நன்றாக தெரியும். எப்படியும் மாதத்திற்கு ஒரு முறை அவனை பார்த்து விடுகிறேன். 

புன்னகைத்தபடி எனக்கும் ஒரு சல்யூட் வைத்தான் “பாப்பா வந்திருக்காளா சார்”என்றான்

“வந்திருக்கா. என் ஒயிஃப் கூட ஃபுட்கோர்ட்ல சாப்பிட்டுட்டு இருக்கா” என்றேன்

“ரயிலுக்கு பாப்பா வரும் இல்ல” என்றான். கொஞ்சம் ஹிந்தியில் உரசி எடுத்த தமிழ். 

“சாப்பிட்டு முடிச்சதும், அங்க தான் வர சொல்லி இருக்கேன்” என்றபடி பளபளவென்று இருந்த வாஷ் பேசினில் குழாய் தண்ணீரை திறந்து முகம் கழுவி துடைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். 

“அப்புறம் ஊருக்கு போனியா? உன் குடும்பம் எல்லாம் எப்டி இருக்கு” என்றபடி நடந்தேன்

“போன மாசம் போயிட்டு வந்தேன் சார். ஒயிஃப் குழந்தையை கூட்டிட்டு வந்துட்டேன்” என்றபடி

இடுப்பு பெல்டை சரிசெய்த படி என் கூடவே நடந்தான்.

வாஹினி மாலின் அகண்ட  வட்டமான தரைதளத்தின் பிரமாண்ட தூண்களுக்கிடையில் நடந்து  டிக்கெட் கவுண்டருக்கு வந்து சேர்ந்தோம். வாகினி மாலின் உள்தளத்தில் ஓடும் பாட்டரி ரயிலுக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்டர் அது. மெல்லமான அசைவுகளுடனும் சோபையான முகத்துடனும் டிக்கெட் கொடுப்பவர் டிக்கட்டை பஞ்ச் செய்து கேட்பவர்களுக்கு கவுண்டரின் துளை வழியாக கொடுத்துக்கொண்டிருந்தார்.

ராம்லால் கவுண்டர் அருகில் சென்று எட்டிபார்த்தான்.

வாஹினி மாலுக்கு குடும்பத்துடன் வரும்போதெல்லாம் ராம்லாலை பார்க்காமல் செல்வதில்லை. காரணம் எங்கள் ஆறு வயது மகள் ஆதிரா. வாஹினி மால் வந்தாலே பொம்மை ரயிலில் ஏறாமல் போகக்கூடாது என்பது அவளது கட்டளை. அதுவே சாசனம். ஆகவே நாங்கள் அதை மீறமுடியாது. போன வருடம் முதன் முதலாக அவள் இந்த ரயிலில் ஏறியபோதே அந்த ரயிலின் “எஞ்சின் மாமா”வாகிய ராம்லால வேறு அவளுக்கு ஃப்ரண்டாகி விட்டிருந்தான்.   

ராம்லால் பீஹார் காரன். மாத்வபூர் என்கிற மாதிரி ஏதோ ஒரு கிராமம்.  ஆறு வருடம் முன்பு சென்னை வந்து பல வேலைகள் பார்த்தவன், ட்ரைவிங் தெரியும் என்பதால் தெரிந்த ஒரு ப்ரோக்கர் வழியாக இந்த குழந்தைகள் ரயில் ஓட்டும் வேலைக்கு வந்து சேர்ந்தானாம். மாத சம்பளம் என்பது அவன் சொந்த ஊரில் ஜென்மத்துக்கும் நினைத்து பார்க்காத விஷயம். யூனிஃபார்ம் போடுவது அதை விட பெரியது . இவன் யூனிஃபார்மில் இருக்கும் போட்டோவை மனைவியிடம் காட்டியபோது ஊரே திரண்டு வந்து பார்த்தாக ஒரு முறை சொன்னான். ஆகவே சந்தோஷமாக இந்த வேலையைப்பார்த்துக் கொண்டிருந்தான்.    

மட்டுமல்லாமல் அவனுக்கு குழந்தைகள் மீது இயல்பாகவே ஒரு ப்ரியம் இருந்தது என்பதை நான் கண்டு கொண்டிருந்தேன். அவனுடைய குழந்தை பூமிகாவுக்கும் ஆதிராவின் வயது தான் என்றான் ஒருமுறை. இப்படி ஒவ்வொரு முறை அவனை பார்க்கும்போதும் பேசிப் பேசி அவனைப்பற்றி அறிந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மாலுக்கு வரும் யாரும் அவனிடம் இப்படி பேசுவதில்லை என்றான் ஒரு முறை. நான் ஆர்வமாக கேட்பது அவனுக்கு சந்தோஷம்.  

ஆதிராவுக்கு ஒரு டிக்கட் என்று ராம்லாலிடம் பணத்தை நீட்டினேன். அவன் சிரித்தபடி கவுன்ண்டரில் பணத்தை நீட்டி டிக்கட்டை எடுத்து தன் யூனிஃபார்ம் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.

மனைவியும் ஆதிராவும் ஃபுட்கோர்டிலிருந்து கிளம்பி நேராக ரயில் அருகில் வந்தார்கள். வரும்போதே ஆதிரா “ஹாய் எஞ்சின் மாமா”என்றபடி வந்தாள். கையில் வைத்திருந்த பெரிய லாலிபாப் ஒன்றை அவனுக்கு நீட்டினாள்.

“நீ சாப்பிடு பாப்பா” என்று அவன் அவளது தலையை வருடினான்.           

“பய்யா பத்து டிக்கட் போட்டாச்சு. பசஙகள வண்டில ஏத்திட்டு ஸ்டார்ட் பண்ணிக்கப்பா” என்றார் கவுண்டரில் இருந்த ஆள். பெற்றோர்கள் டிக்கட்டை நீட்ட, வாங்கி பாக்கெட்டிற்குள் திணித்தபடி குழந்தைகளை அந்த குட்டி ரயிலின் சிறிய பெட்டிகளுக்குள் உட்கார வைத்து கதவை அடைத்தான் ராம்லால்.   

ஒவ்வொரு பெட்டியிலும் மிக்கி மவுஸ் சோட்டாபீம் போன்ற கார்டூன்கள் வரையப்பட்டு எனாமல் பூக்கள் கலர் கலராக சிரித்துக்கொண்டிருந்தன. மொத்தம் ஐந்தாறு பெட்டிகள். அவற்றைத் தாண்டி முன் சென்று சிறிய எஞ்சினின் இருக்கையில் அமர்ந்து கொண்டான் ராம்லால். ரயில் புறப்புடும் விதமாக பாம்ம்ம்ம்ம் என்று சத்தமாக ஒரு ஹாரனை அடித்துவிட்டு ஸ்டார்ட் செய்தான். எஞ்சினில் கட்டி இருந்த பெரிய மணி முழங்கத் தொடஙகியது. குழந்தைகள் கூக்குரலிட்டும், கத்தியும் தங்கள் பெற்றோர்களை பார்த்து சிரித்தார்கள். ‘ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்’ போல ஏதோ ஒரு துள்ளலான ஆங்கில குழந்தைப்பாடல் கரகரப்பான ஸ்பீக்கரில் ஒலிக்கத்துவங்கியது.

ராம்லால் எஞ்சினை ஆள்கூட்டங்களுக்கு இடையிலாக லாவகமாக திருப்பி ஓட்டிச்சென்றான். சிலர் புன்னகையுடன் ஒதுங்கி வழி விட்டனர். ரயில் பெட்டிகள் வளைந்து வளைந்து தூண்களின் இடையிலாக ஊர்ந்து சென்றது.  குழந்தைகள் ஜாலியாக கண்ணாடிகளுக்குள் மேனிக்க்யூன்கள் நிற்கும் கடைகளை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள். ஒவ்வொரு சுற்றிலும் பெற்றோர்களை தாண்டும்போதும் குழந்தைகள் கூக்குரலிட்டார்கள். 

ஆதிரா வழக்கம் போல எங்களை பார்த்து தன் கையில் இருந்த பெரிய லாலிபாப்பை தூக்கி காட்டினாள். மூன்று சுற்று முடித்து ஒவ்வொரு பெட்டிகளாக திறந்து குழந்தைகளை இறக்கி விட்டான் ராம்லால். 

ஆதிரா அவளே குட்டி கதவை திறந்து கொண்டு இறங்கி எனக்கு இதெல்லாம் சகஜம் என்பதைப்போல எங்களை பார்த்தாள் .

“தேங்க்ஸ் எஞ்சின் மாமா”என்றாள்.

ராம்லால் சிரித்தான். அடுத்த சுற்றுக்காக சில குழந்தைகள் காத்திருந்தார்கள். குறைந்தது பத்து டிக்கட் இல்லாமல் வண்டியை கிளப்ப முடியாது. ராம்லால் கசங்கிய உடைகளை சரி செய்து கொண்டு மிடுக்காக காத்து நின்றான். டிக்கட் கவுண்டர் மீது அடிக்கடி பார்வை சென்று மீண்டது.  

“அப்பா என்ன வாங்கித்தந்தாரு” என்றான் ஆதிராவிடம் குனிந்து

“கலர் பென்சில். வரையுறதுக்கு புக்கு”என்று தன் அம்மாவிடமிருந்து பையை பிடுங்கி ராம்லாலிடம் காட்டினாள். நாங்கள் சிரித்தோம். 

“நீ நல்லா படம் வரைவியா”  என்றான் ராம்லால்

“ஆமா. சூப்பரா வரைவேனே. ஸ்கூல்ல எனக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்” என்றாள் ஆதிரா 

“என்ன பார்த்து வரைவியா” என்றான்

“ஓ உங்க தொப்பி கூட சூப்பரா வரைவேன்”என்றாள்

“ஓகே குட்டி எஞ்சின் மாமாவுக்கு பாய் சொல்லு. அப்பாவுக்கு ட்ரெஸ் எடுக்க போகணும்”என்றேன். 

கிளம்பும் முன்பு ஒரு கலர் பென்சில் செட்டை எடுத்து ராம்லாலிடம் கொடுத்தாள் “இது உங்க பொண்ணு பூமிகாவுக்கு”

“அய்யோ வேண்டாம் பாப்பா”என்றான் அவன்

“வாங்கிக்கோ ராம்லால்”என்றேன் நான்

“அய்யோ வேண்டாம் சார். கஸ்டமர் கிட்ட எதுவும் வாங்கக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு” என்றான்

“அட வாங்கி பாக்கட்ல போடு ராம்லால். இவ்வளவு பெரிய யூனிஃபார்ம் பாக்கெட் இருக்கே”என்றேன்

அவன் கவுண்டரில் இருக்கும் ஆளை ஒரு தடவை திரும்பி பார்த்துவிட்டு வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிரித்தான்.

பொங்கலுக்கு இந்த தடவை எனக்கென்று நான் புது துணிகள் எதுவும் எடுத்திருக்கவில்லை. அலுவலக வேலைகளால் தள்ளிப்போட்டு இப்படி மார்ச் முதல் வாரம் வரை வந்து விட்டது. மனைவி கட்டாயப்படுத்தியதால் வந்தேன் இல்லை என்றால் சம்மர் ஹாலிடேஸில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்திருப்பேன்.  

நாங்கள் முதல் தளத்தில் உள்ள பேண்டலூனில் எனக்காக ட்ரெஸ் எடுத்துக்கொண்டிருக்கும்போது கீழே ராம்லால் குழந்தைகளை ரயிலில் வைத்துக்கொண்டு உற்சாகமாக வட்டமிட்டுக்கொண்டிருந்தது கண்ணாடிகள் வழியாக தெரிந்தது. 

நாங்கள் ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு கிளம்பும் போது எங்கள் அருகில் உரசுவது போல “பாம்ம்ம்ம்”என்று ஹார்ன் அடித்துக்கொண்டு சென்றான். அவளது எஞ்சின் மாமா டாட்டா கட்டியபடி போவதைப்பார்த்ததும் ஆதிரா துள்ளிக்குதித்து கத்தினாள். 

நாங்கள் வாஹினி மாலுக்கு போய்விட்டு வந்த அடுத்த வாரம் கொரோனா ஊரடங்கை அறிவித்திருந்தார்கள். திடீரென்று கிடைத்த இந்த விடுமுறையை என்ன செய்வது என்று தெரியாமல் ஆதிரா வீட்டிற்குள் சுற்றி சுற்றி வந்தாள். வெளியே விளையாடவும் அனுமதியில்லை என்பது அவளை மேலும் துக்கம் கொள்ள செய்தது. மாலில் வாங்கி வந்த கலர் பென்சில் செட்டுகளை எடுத்து போட்டு அவ்வப்போது படம் வரைந்து கோண்டிருந்தாள். 

தினமும் நாலைந்து படங்கள் வரைந்து கொண்டு வந்து காட்டினாள். நான் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று லேப்டாப்பை திறந்துகோண்டு உட்கார்ந்தாள் என் மடியில் வந்து உட்கார்ந்து கொள்வாள். ஆப்பிஸ் ஸூம் மீட்டிங்குகளுக்கு நடுவில் புகுந்து ஒரு நாள் எங்கள் மேனேஜருக்கு ஹாய் சொன்னாள். 

படம் வரைந்து போரடித்த ஒரு நாளில் ‘அப்பா வாஹினி மாலுக்கு போலாமா. குட்டி ரயிலில்ல ஏறணும்” என்றாள். அப்போது தான் அது எனக்கு உறைத்தது. மால்களெல்லாம் மூடி நான்கு வாரங்களுக்கு மேலாகி விட்டது. இந்த ராம்லால் என்ன செய்து கொண்டிருப்பான். சம்பளம் கொடுத்திருப்பார்களோ என்னமோ? குடும்பத்தை வேறு போன மாதம் கூட்டி வந்திருப்பதாக சொன்னான். 

“பாப்பா வாஹினி மாலுக்கும் லீவு விட்டுட்டாங்க. ஸ்கூல் திறக்கும்போது தான் மாலும் திறப்பாங்க” என்றேன். மொத்த சோகத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல முகத்தை வைத்துக்கொண்டாள். 

மறுநாள் நாங்கள் டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்த போது வடமாநில தொழிலாளிகள் பொட்டி படுக்கைகளுடன் கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வதை காட்டினார்கள். பெண்களும் குழந்தைகளும் கூட நடந்து செல்வதை பார்க்கும்போது குற்ற உணர்ச்சியாக இருந்தது. 

“அப்பா எஞ்சின் மாமா எஞ்சின் மாமா”என்று கத்தினாள் ஆதிரா

ஒரு சேனலில் ராம்லால் நெடுஞ்சாலையோரம் நின்றபடி நீட்டிய மைக்கின் முன்பு தயக்கமாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். நான் ரிமோட்டில் வால்யூமை ஏற்றினேன். “ஒரு மால்ல வேல பார்த்திட்டுருந்தேன்.  போன மாசம் ஏஜெண்ட் கூப்பிட்டு மாலெல்லாம் திறக்க நாளாகும். நீ ஊருக்கு கிளம்புனு சொல்லிட்டாரு. கையில இருந்த காச வச்சு ஒரு மாசம் சமாளிச்சாச்சு. நம்மள்கு குழந்த இருக்குது. குடும்பம் இருக்குது. சாவுறதா இருந்தா கூட சொந்த ஊருக்கு போய் சாகலாம்னு இருக்குது சார்” என்றான். பக்கத்தில் அவன் மனைவியாக இருக்கலாம். கூடவே ஆதிரா அளவுக்கு சின்ன ஒரு குழந்தை. அது பூமிகாவா. ஆம் பூமிகா தான். கையில் ஆதிரா அன்று கொடுத்த பென்சில் பாக்கெட்டை வைத்து காற்றில் ஆட்டிக்கொண்டிருந்தாள். 

எனக்கும் மனைவிக்கும் தர்மசங்கடமாக இருந்தது. ஆதிரா “ஐ டிவியில எஞ்சின் மாமா எஞ்சின் மாமா. அவரோட குட்டி ரயில் எங்கப்பா”என்றாள்

“அவங்க எல்லாம் ஊருக்கு கிளம்பிட்டாங்கடா செல்லம். நாம நாகர்கோவில்லு போவோம் இல்ல. அத மாதிரி அவங்க அவங்க பாட்டி ஊருக்கு கிளம்பிட்டாங்க”என்றேன்

“எப்படி போவாங்க”என்றாள்

“இப்போ பஸ் ரயில் எதுவும் இல்லை இல்ல . நடந்தே போவாங்க” என்றேன் 

“எவ்வளவு தூரம்” என்றாள்

“ரொம்ப. ரொம்ப தூரம்” என்றேன்

“அவ்வளவு தூரம் நடந்தே போவாங்களா”என்றாள்

“ஆமா”என்றேன்

“கால் வலிக்காதா”

“வலிக்கும் பாப்பா”

“அய்யோ… பாவம்” என்றபடி டிவியை பார்த்தாள்.

“அவ தான் பூமிகாவா”என்றாள். ஆதிரா சட்டென்று எல்லாவற்றையும் புரிந்து கொள்பவள். 

“ஆமா” என்றேன்

“அவளுக்கு என்ன மாதிரியே சின்ன காலு. அவ்வளவு தூரம் எப்டிப்பா நடப்பா”என்று தன் காலை தொட்டு காட்டினாள்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மனைவியை பார்த்தேன்.  

“வா தூங்கப்போகலாம்” என்று ஆதிராவை தூக்கிக்கொண்டு அவள் பெட் ரூமிற்குள் சென்றாள்.

எனக்கு தூக்கம் வர வெகு நேரம் பிடித்தது.

காலையில் நான் எழுந்த போது கவனித்தேன் ஆதிரா எனக்கு முன்னால் எழுந்து விட்டிருந்தாள். என்னை கண்டதும் ஹாலிலிருந்தவள் ஓடி வந்தாள். கையில் ஒரு பேப்பர் இருந்தது. 

“அப்பா இதை பாரேன். காலையில வரஞ்சேன்”என்று காட்டினாள்

பென்சில்களால் வரைந்த கலர்ஃபுல்லான  குட்டி ரயில். எஞ்சினில் ராம்லால் உட்கார்ந்து ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் முகம் பெருமிதத்தோடும் உற்சாகத்தோடும் இருந்தது. பின்னால் இருந்த நீலக்கலர் பெட்டியில் ராம்லாலின் மனைவி இருந்தாள். அடுத்த இளஞ்சிவப்பு நிற பெட்டியில் பூமிகா உட்கார்ந்து கைகளை தூக்கி ஆட்டிக்கொண்டிருந்தாள். மேலும் பின்னால் இருந்த பெட்டிகள் முழுக்க குழந்தைகளும் ஆட்களுமாக மூட்டை முடிச்சுகளோடு இருந்தார்கள். அந்த குட்டி ரயில் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. அதன் கீழே நகரங்களும் கட்டிடங்களும் மனிதர்களும் சின்னதாக, மிக சின்னதாக அழுக்காக தெரிந்தார்கள்.

நான் ஆதிராவின் முகத்தை பார்த்தேன். அதற்கு பூமிகாவின் சாயல் இருந்தது.

நான் மறுபடி காகிதத்தை பார்த்தேன். அந்த குட்டி ரயில் இரண்டாக, நான்காக, எட்டாக, நூறாக பெருகிய படி காகிதத்திலிருந்து வெளியேறி ஓட ஆரம்பித்தன. அவை இந்தியாவின் பெரிய சாலைகளை, பெரிய நகரங்களை, கிராமங்களை, தெருக்களை இணைத்தபடி எல்லா இடங்களிலும் ஓட ஆரம்பித்தது. அதில் குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் மூட்டை முடிச்சுகளுடன் உட்கார்ந்து இருந்தனர். அதன் ‘பாம்ம்ம்’ என்கிற சத்தம் பெருகி பெருகி ஒரு பெரிய ஓலம் போல எழுந்து காதை நிறைத்தது.      

#சந்தோஷ்நாராயணன்சிறுகதை #சிறுகதை

இலக்கியப் ‘பொங்கல்’!

tamil advertising

PONGAL-02

 

இலக்கியத்தையும், இலக்கிய வாதிகளையும் கிண்டல் பண்ணுறது இப்போ ஃபேஷனா போச்சு. அது ரொம்ப ஈசியும் கூட. மூணு வரி முகநூல் ஸ்டேட்டஸுக்கே முக்க வேண்டியிருக்கு ஆயிரம் பக்கத்துக்கு மேல எழுதுறது அசால்ட்டான விஷயம் இல்லை. இலக்கியம்னாலே அது ஏதோ முப்பது பேரு எழுதி இருபது பேரு படிக்கிறதுன்கிற நிலமை ஒரு காலத்தில் இருந்தது. இன்னைக்கு அது சில ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னா அதுக்கு நம் இலக்கிய வாதிகள் சிந்திய ரத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல.

சில நூறு பேரு படிக்கிற சிறுபத்திரிகைல தான் எழுதுவேன்னு அடம் பிடிக்காம ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதி வெறும் பொழுதுபோக்கு புத்தகங்களை மட்டுமே படிச்சிட்டிருந்த பயபுள்ளைகளை கொஞ்சம் தீவிரமாவும் வாசிக்க வச்சது எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சாருன்னு நீளும் பட்டியலிலுள்ள எழுத்தாளர்கள் தான்.

இன்னைக்கு விக்கிபீடியாவும், இணையமும் இருக்கு. யாரு வேணும்னாலும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்ணு அடிச்சா நாலு எழுத்தாளர் பேர அதுவே காட்டும். ஆனா இதெல்லாம் இல்லாத காலத்திலேயே போர்ஹே பற்றியும், மார்கோஸ் பற்றியும் நமக்கு நாலு நல்ல வார்த்த சொன்னது நம்ம இலக்கியவாதிக தான்.

நேற்று பெய்த முகநூல் மழையில் முளைத்த ஃபேக் ஐடி காளான்களெல்லாம் இலக்கியவாதிகளை இளக்காரம் பண்ணி திரிவதை பார்த்தால் “வயலுக்கு வந்தாயா” என்கிற கட்டப்பொம்மன் வசனத்தை தான் வாய் முணுமுணுக்குது.

கனமாக ஒரு புத்தகம் எழுதினால், தலைக்கு வச்சு தூங்கவா இல்ல தலையில போட்டு கொல்லவா என்று தறுமாறா ஸ்டேட்டஸ் போட்டு, கமென்ட் எவ்வளவு லைக் எவ்வளவுன்னு கணக்கு பாத்திட்டு கம்ப்யூட்டர் முன்னாடி தேவுடு காக்கிறார்கள்.

உட்காந்து வாசிக்கிறதுக்கே பொறுமை கிடையாது அப்புறம் உருப்படியா எதாவது எழுத முடியுமான்னா. அதுவும் முடியாது, ஆனா உசுரக்கொடுத்து ஒருத்தன் ஓயாமல் எழுதிக்கொண்டிருப்பான், தமிழனின் வாசிப்பு பழக்கத்த ஒரு படி மேல ஏத்துறதுக்கு தன் உடல் பொருள் ஆவியை கொடுத்து ஒருத்தன் உரையாடிக்கொண்டிருப்பான் அவனையும் அவன் எழுத்தையும் மதிக்காம இவர்கள் பாட்டிற்கு குதர்க்கமா பேசி கும்மியடிச்சிட்டு இருப்பாங்க.

கேரளாவிலும் எனக்கு சில நண்பர்கள் உண்டு. அவர்களுக்கும் இலக்கிய அறிமுகம் உண்டு. ஆனால் அவர்கள் எம்.டி முதல் இன்று எழுதிக்கொண்டிருக்கும் சந்தோஷ் எச்சிக்கானம் வரை இலக்கிய வாதிகளிடம் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டிருக்கிறார்கள். முரண்படுகள் இருக்கலாம், விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் அதையும் தங்கள் வாசக அன்பிலிருந்தே விமர்சிக்கிறார்கள். நம்மவர்களை போல நாலு லைக்குக்காக தங்களுக்கு மொழியின் புட்டிப்பால் ஊட்டிய பேராசான்களையே எட்டி உதைக்கும் நிலைக்கு இறங்கிப்போவதில்லை.

நாப்பது ஐம்பது வருடப்போராட்டங்களுக்கு பிறகு இன்று தான் சில ஆயிரம் பேராவது சீரியசாக படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதையும் எள்ளி நகையாடி கொள்ளி வைத்து விடாதீர்கள் நண்பர்களே. இலக்கியமும், வாதிகளும் விமர்சனத்துக்கு அப்பார் பட்ட்வர்கள் அல்ல ஆனால் அதை விரிவாக எழுதி நிறுவுங்கள். அலுவலக வேலைகளுக்கு இடையில் கிடைக்கும் ஓசி இன்டெர்நெட் கனெகஷனில் ஈசியாக நாலு வரி எழுதி விட்டு ஓடாதீர்கள்.

இன்றைக்கும் நானூறு பிரதிகளுக்கு மேலே எந்த நல்ல புக்கும் விக்கிறதில்லை என்று எழுத்தாளனையே கதறடிக்க வைக்கும் சமூகத்தில் தான் நாமிருக்கிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். சேதன் பகத் போன்றவர்கள் அடுத்த நாவலுக்கு அசால்ட்டாக சில கோடிகளை அட்வான்சாக வாங்க நமது எழுத்தாளர்களை இன்னும் ராயல்டியை நம்பி ஒரு சிங்கிள்டீ கூட வாங்கமுடியாத சோகத்தில் தான் நாம் வைத்திருக்கிறோம் என்கிற நிதர்சனத்தை உணருங்கள்.

இன்றைக்கு தான் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறாது. வாராவாரம் வலைப்பூவில் ;பேருந்து சீட்’ கிறுக்கல்கள் போல எதையாவது எழுதிக்கொண்டு, வாழ்க்கையே எழுத்துக்காக அர்பணித்தவர்களின் தியாகத்தின் மீது திருவிளையாடல்கள் நடத்தாதீர்கள் நண்பர்களே.

நம்மை மொழி என்னும் ஏர் கொண்டு உழுது பக்குவப்படுத்தும் உழவர்கள் நம் எழுத்தாளர்கள். அவர்களை கொண்டாடுவோம், அவர்களின் எழுத்துகளை வாங்கி படிப்போம். அவர்களின் தேடலுக்கும், உழைப்புக்கும் மரியாதை செய்வோம் என்று வரும் பொங்கல் நன்னாளில் உறுதி ஏற்போம்.!

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் மூன்று.

tamil advertising
Unknown

(முன்கதை சுருக்கம்: சோமாலியா கப்பல் கொள்ளையர்களிடம் ஏராளமான தமிழ் இலக்கிய புத்தகங்களுடன் மாட்டிக்கொள்கிறான் ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியம். என்ன நடந்தது தெளிவாக தெரிந்து கொள்ள முன் அத்தியாங்களை படிக்கவும். கண்டினியூட்டி முக்கியம் பாஸ்!)

 

அவன் எழுத்து கூட்டி சத்தமாக படித்தான் “கறிவிருந்துடன் ஒரு இலக்கிய சந்திப்பு கண்டிப்பாய் வரவும் இப்படிக்கு பவா.செல்லதுரை”

“யாருப்பா இது பவர். செல்லதுரை.பெரிய ஆளா இருப்பாரு போல‌” என்றான் தலைவன்

“அய்யோ அது பவர். இல்லங்க பவா. புள்ளி வராது” என்றான் ஜெயகிருஷனன். தலைவன் மெசேஜை திருப்பி திருப்பி பார்த்தான். ஜெய் மெஸேஜ் பேப்பரை வாங்கி மறுபடி படித்து விட்டு தலைவனை பார்த்து சொல்ல ஆரம்பித்தான்

” சார் நீங்க தமிழ்நாட்டு பக்கம் வந்தீங்கன்ன்னு வச்சுக்குங்க, அங்கேருந்து திருவண்ணாமலை வரைக்கும் போயிட்டு வரலாம்ணு போனீங்கண்ணா தப்பித்தவறி இலக்கியம்ணு ஒரு வார்த்தை சொல்லிடாதீங்க. அவ்ளவு தான் உங்கள அலேக்கா தூக்கிட்டு போய்டுவாரு இந்த பவா. செல்லதுரை”

“எத்தன பேர கடத்திருக்கோம். எங்க கிட்டேவா” என்றான் தலைவன்.

“அவ்வளவு டெரரா அவரு” என்றான் ஒரு கொள்ளையன்

“இல்ல பாஸ். அவருக்கு இலக்கிய அன்பர்கள்னா ஒரு பாசம். அவ்வளவுதான் அப்புறம் சும்மா விட மாட்டார். மட்டன் பிரியாணி,  சிக்கன் கொத்சு, கூடவே அவரு எழுதின கதையில ஒண்ண நரேட் பண்ணி கண்ணுல தண்ணி வர வச்சிடுவார். சிக்கனால வந்திச்சா இல்ல சிறுகதையால வந்திச்சா கண்ணுல தண்ணின்னு உங்களுக்கே தெரியாது. விருந்துக்கு அப்புறம் அப்டியே கொல்லைப்பக்கமா மாந்தோப்புல இருக்கிற கெஸ்ட் ஹவுஸ் போனீங்கன்னா உண்ட மயக்கத்துல உட்காந்திருக்கிற மிஷ்கின்ல இருந்து நீயா நானா ஆன்டனி வரைக்கும் நீங்க பாக்கலாம் பாஸ். ” என்றான் ஜெய்.

இவங்க எல்லாம் யாரு என்பதை போல பார்த்தான் தலைவன்.

” இலக்கிய ஏப்பம் விட்டுட்டே மாமரத்துக்கு கீழே நீங்க லேசா கண்ணசந்தா இன்னொரு மரத்துக்கு கீழே நா. முத்துகுமார் சத்தமா கவிதை பாடி நியூட்டனின் மூன்றாம் விதிப்படி உங்க தூக்கத்த கெடுத்திட்டு இருப்பார். அங்கேருந்து எஸ்கேப்பாயி இன்னொரு மரத்துல தலைய சாய்ச்சா பி.சி. ஸ்ரீ ராம் கேமரா போகஸ் பண்ணிட்டு இருப்பார். இப்படி எந்த மூலைக்கு போனாலும் வித விதமான ஆளுமைகளை பார்த்து நீங்களே விக்கித்து போய், சொந்த ஊரான‌ சோமாலியாவுக்கே போய் தூங்கிக்கலாம்ணு முடிவெடுப்பீங்க” என்று நிறுத்தினான் ஜெய்

“அப்போ பவா.செல்லத்துரை என்ன பண்ணிட்டு இருப்பார்” என்றான் ஒரு கொள்ளையன் ஆர்வமாக‌

“அவர் 19, டிஎம் சரோனிலிருந்து… கப்பல் கொள்ளையர்களுடன் ஒரு கார்த்திகை தீபம்  என்று தன் பிளாகில் ஒரு கட்டுரைய தட்டிட்டு இருப்பார் பாஸ்” என்ற போது தலைவன் குதூகலித்து “இவ்வளவு அன்பான ஒரு இலக்கிய வாதியா? அவர கண்டிப்பா நாங்க மீட் பண்ணனுமே” என்றான் தலைவன்.

“அன்புன்னா அன்பு அவ்வளவு அன்பு பாஸ். ஏழுமலை ஜமா மாதிரி எக்செலென்ட் கதைகள் எழுதினவர்.  இப்படி விருந்து வைக்கிறதுலயும் விழா எடுக்கிற‌துலையும் அவரு டைம் போய்க்கிட்டு இருக்கு. திருவண்ணாமலையில கிரிவலம் போற பவுர்ணமி இரவுக்கு அப்புறம், இவரும் நண்பர்களும் உருவாக்கின கலை இரவு தான் பேமசு தெரியுமா.” என்று நிறுத்தினான் ஜெய்.

“தமிழ் இலக்கியத்துல ஒரு காலத்துல சுந்தர ராமசாமி வீடு தான் கலை இலக்கிய வாதிகளுக்கு காசி ராமேஸ்வரம் மாதிரி. ஒரு தடவ போயிட்டு வரலேன்னா எழுத்தாளர்கள் ஆத்மாவுக்கு இலக்கிய சாந்தி கிடைக்காது. எப்போ போனாலும் சுராவே சோறுபோட்டு பஸ்ஸுக்கு படியும் கொடுத்து அனுப்புவாரு.  அவ்வளவு நல்ல மனுஷன். அதுக்கு அப்புறம் தைரியாமா ஒரு கதவ தட்டலாம்னா அது பவா. செல்லத்துரையோட கதவு தான். ஆனா கையில இலக்கிய ஸ்வைப்பிங் கார்டு இருக்கணும் பாஸ்”

“ஓகே எனக்கே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குப்பா. உங்க ஊரு இலக்கிய வாதிக எல்லாம் இவ்வளவு நல்லவகளா இருக்காங்களே” என்றான் தலைவன்.

ஜெயகிருஷ்ணன் தான் ஒரு பணயக்கைதியாக இருப்பதையே சற்று மறந்து போயிருந்தான். கொள்ளையர்களில் ஒருவன் அந்த தூசி படிந்த டி.வியை ஆன் பண்ணினான்.

“பாஸ் பாஸ் எங்க ஊரு சேனல் எதாவது கிடைக்குமான்னு பாருங்க. என்னை பத்தி ஏதாவது நியூஸ் வந்திருக்காணு பாக்குறேன்.” என்றான் ஜெய்.

அந்த கொள்ளையன் மெல்ல ஒரு தமிழ் சானலை மாற்றினான்.
“சோமாலியா கொள்ளையர்கள் கடத்திய தமிழன் ஜெயகிருஷ்ணனின் கதி என்ன…? ஒரு விவாதம்.” என்று ஹோஸ்டிங் பண்ணும் ஆள் காற்றை காரச்சேவாக மென்ற படி பில்டுப் கொடுக்க, கருத்து சொல்ல காத்திருந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் தொன்டையை சற்று செருமி கொண்டார்.  முகத்தில் விழும் முடிக்கற்றைகளை கைகளால் கோதி விட்ட படி உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.

 

(தொடரும்)

இலக்கிய வாசக ஜென்மம்: சிறு அடையாளக் குறிப்புகள்

tamil advertising

புத்தகக்கண்காட்சியில் கூட்டமாகவும், மற்ற நேரங்களில் புக்பாயிண்டிலோ, லேண்ட் மார்க்கிலோ, திருவல்லிக்கேணி பழைய புத்தகக்கடைகளிலோ தனித்தனியாகவும் இவர்களை பார்க்கலாம். வாசகர்கள் இரண்டு வகைப்படுவர். சாப்ட்வேர் வேலை காரர்கள் மற்றும் சாப்ட்வேர் வேலைக்காரரல்லாதவர்கள். முதல் வகையினர் கடனட்டைகளை உரசியே காரியம் சாதிக்க பின்னவர்கள் மனசுக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களின் முன்னட்டையை தடவித்தடவி பார்த்தபடி பட்ஜெட்டுக்குள் வருமா என நெற்றியை சுருக்கி யோசித்த படியே திரிபவர்கள்.

சிலர் எந்திரன் சிட்டி ரோபோ மாதிரி புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டி படித்து முடித்து விட்டது போல எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்வார்கள். புத்தக்கண்காட்சியில் தூரத்தில் நின்ற படியே ஜாம்பவ எழுத்துவான்களை தர்சித்து விட்டு நெருங்கி பேசப்பயந்து கூட்டத்தோடு கூட்டமாக சுற்றி சுற்றி வருபவர்களும் உண்டு. சிலர் அந்த எழுத்தாளன் போட்டதிலேயே சல்லி விலை புத்தகத்தை வாங்கிவிட்டு எழுத்தாளனிடன் அதில் கையெழுத்தும் போட்டு கேட்டு “பாருய்யா உன் புக்கை பாவம் பாத்து வாங்கி இருக்கேன்” என்பது போல தோரணை காட்டி சிரிக்காத எழுத்தாளனிடம் சிரித்து பேசியபடி போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கிலும் அப்லோடுவார்கள்.

புக்பாயின்ட், தேவநேயப்பாவாணர் அரங்கம், பாரதியார் இல்லம் என ஒன்று விடாமல் இலக்கியக்கூட்டங்கள் நடக்கும் எல்லாஇடத்திலும் ஆஜராவது இவர்களின் வாராந்திர நடவடிக்கைகள். அங்கெல்லாம் டீயோ காஃபியோ சாப்பிட்டு டிஸ்பிளே வைத்திருக்கும் புத்தகங்களை புரட்டியபடி சக வாசக நண்பர்களிடம் இலக்கிய குசலம் விசாரித்தல் இவர்களின் பொழுதுபோக்கு. உற்று பார்த்தால் நாங்களும் இலக்கிய வாசகர்கள் தான் என்கிற பெருமிதம் முகத்தில் கெத்தி நிற்கும்.

பத்தாண்டுகளுக்கு முன் வரை அகதிகள் போன்று அடையாளமற்று கிடந்த இவர்களில் சிலர் இன்று சில எழுத்தாளுமைகளின் தயவால் வாசகர் வட்டங்கள் சதுரங்கள் என்று ஆரம்பித்து கட்சிக்காரர்கள் போல தில்லு காட்டி திரிபவர்களும் உண்டு. ரஜினி கமல் ஃபேன்ஸ் முன்பெல்லாம் தீபாவளி ரிலீசுக்கு தியேட்டர் முன்பு சண்டை போடுவது போல இவர்கள் தங்கள் எழுத்தாளத் தலைவன்களுக்காக முஷ்டி முறிக்கியபடி திரிவதும் இன்று சாதாரணம்.

இலக்கியம் இன்று மேலும் பரந்த வாசகர்களை பெற்றுவிட்ட காரணத்தினால் ஜிப்பா அணிந்த வாசகர்களை இன்று காண்பது அரிது. ஜீன்சும், டீ ஷர்டும் அணிந்த இளம் வாசகர்களே அதிகம் . ஜிப்பா அணிந்த சில வாசக மாமாக்கள் இதை இலக்கியம் நீர்த்து போய் விட்டது என்கிற சங்கடகர தோரணையில் கூட்டஙகளில் அமர்ந்திருப்பதை அவ்வப்போது காணமுடிகிறது.

அவரவர்களின் ரசனை அடிப்படையில் குழுகுழுவாகவும் இலக்கியக்கூட்டங்களுக்கு வருவது இவர்களின் வ‌ழக்கம். பிடிக்காத எழுத்தாளர்களின் பேச்சுகளை கேட்டு அடுத்த டீ பிரேக்கில் அவர்களை தஙக‌ளுக்குள் கலாய்ப்பதும். அந்த எழுத்தாளனை விட தான் மிகச்சிறப்பாக எழுதமுடியும் என்ற தோரணையில் மேலும் ஓர் தம்மை பற்ற வைத்து ஆழமாக இழுப்பதும் பழக்கம்.

எழுத்தாளர்களுடன் வாசகச்சந்திப்பு என்கிற விசித்திரமான நிகழ்ச்சிகளின் போது அதைவிட விசித்திரமான கேள்விகள் கேட்டு தங்கள் வாசக பேரறிவை நிரூபிப்பதில் இவர்களுக்கு தனி குஷி.

பிடித்த எழுத்தாளர்களுக்கு அல்வாவும் மல்லிப்பூவும் தவிர அனைத்து வகையான தின்பண்டங்களும் வாங்கி கொண்டு அவர்கள் வீட்டு கதவை தட்டும் வாசகர்கள் தனி.

சார் உங்க அந்த நாவல் படிச்சேன். அடி தூள் கிளப்பிட்டீங்க என்பது போன்ற வாசிப்பனுபங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு சுகம்.

ஆகமொத்தம் அண்ணாசாலையில், தேவி தியேட்டரில், மெரீனா பீச்சில் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இலக்கிய வாசகர்களை, என்றேனுமொரு நாள் தானும் எழுத்தாளனாவேன் என்கிற மன உறுதியுடன் திரியும் இலக்கிய வாசகர்களை சென்னையில் ஆங்காங்கே பார்க்கமுடிகிறது.

சினிமா விமர்சகர்கள்: ஒரு இன வரைவியல்.

tamil advertising

தமிழ்நாட்டில் கவிஞர்கள், கலைமாமணிகளுக்கு பிறகு அதிகமாக வாழும் இனம் என்று சினிமா விமர்சகர்களை சொல்லலாம். அதிலும் உள்பிரிவுகள் உண்டு. அவை யாவன என்றால் படம் வெளியாகிற அன்றே சக பதிவர்களுடன் தியேட்டர்களுக்கு சென்று இண்டெர்வெல்லில் தம்மடித்துக்கொண்டே பாதிப்படத்துக்கு விமர்சனத்தை பேசியே ஆரம்ப்பித்து, வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு போனதும் முதல் வேலையாக பிளாகில் விமரசன்ம் போடுபவர்கள். எடிட்டர்களின் அழுத்தத்தின் காரணமாகவோ, தெரிந்த சினிமா நண்பர்களின் அழைப்பின் காரணமாகவோ படம் பார்த்து பஞ்ச் வைத்து வாத்தியார்கள் போல மார்க் போட்டு விமர்சனம் ரெடி பண்ணும் வார இதழ் பாத்திரிகையாளர்கள், இயக்குனரே யோசிக்காத ஆங்கிளில் யோசித்து 80களின் இலக்கிய சுளுக்கு மொழியில் தலைப்புகளிட்டு திரைவிமர்சனங்கள் எழுதும் சிறுபத்திகையாளர்கள், இவர்களுடன் தங்கள் தனிப்பட்ட பிரியங்களுக்காக இயக்குனர்களை ஹிட்ச்காக்குடனோ குரசோவாவனுடனோ ஒப்பிட்டு முடிசூட்டி கையில் செங்கோல் வழங்கும் இலக்கிய எழுத்தாளர்கள். தொலைக்காட்சி சேனல்களில் சொடக்கு போட்டு விமர்சனம் செய்பவ்ர்கள்.

1

முதல் வகை பிளாக் எழுத்தாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். இவர்களுடைய வாசகர்கள் கம்பெனி வேலை நேரத்தில் அவசரமாக சின்ன பசங்க செக்ஸ் புக் படிக்கிற மாதிரி  பிளாக் படிப்பவர்கள். அதனால் இவர்களது மொழியும் ஆக்‌ஷன் சினிமா மாதிரி அவசர வேகத்தில் ஒரு மஜாவாக இருக்கும். சினிமா விமர்சனம் என்று சொல்லி பெரும்பாலும் இவர்கள் கலாய்ப்பது கதையை தான் கடைசி இரண்டு பாராவில் கேமரா சூப்பர் (5Dயா 7Dயா) , ஹாரிஸ் கலக்கியிருக்கிறார், ஜீ.வியின் பின்னணி சொதப்பல் என்கிற மாதிரி சினிமாவின் தொழிநுட்பத்தையும் சைடிஷ் மாதிரி தொட்டு கொள்வார்கள். ஹிரோயின்களுடைய குளோசப் ஷாட்டையோ கிர்ரடிக்கும் ஒரு சினிமா ஸ்டில்லையோ பதிவுக்கு நடுவில் படமாக போட்டு படிப்பவர்களில் பல்சை ஆப்பிஸ் நேரத்திலேயே அசரடிப்பவர்கள்.

இவர்கள் தங்களுக்கு என்று நெருங்கிய ஒரு வாசக வட்டத்தை கொண்டிருப்பவர்கள். அந்த வாசகர்களும் தங்களுக்கென்று ஒரு பிளாக் வைத்திருக்கும் பதிவர்களாகவே இருப்பார்கள். ஆக ஒரு ம்யூட்சுவல் அண்ட்ர்ஸ்டேண்டிங்க் அடிப்படையில் இவர்களின் விமர்சனங்களுக்கு ஒரு கம்மெண்டை போட்டு உசுப்பேத்திவிட்டு விடுபவர்கள். “தல விமர்சனம் சூப்பர்” “இன்னைக்கு ஈவ்னிங் ஷோவுக்கு புக் பண்ணி இருந்தேன். உங்க விமர்சனத்த படிச்சா போகவா வேணாமான்னு குழப்பமா இருக்கு” ”தியேட்டர்ல நானும் இதையே தான் ஃபீல் பண்ணினேன்” என்கிற வகை மாதிரிகளில் அந்த கமெண்ட் இருக்கும்.

2

இரண்டாவது வகை வார இதழ் விமர்சகர்கள். நல்லதோ கெட்டதோ பெரும்பாலும் இவர்கள் பெயர் வெளியே தெரிவதே இல்லை. இவர்களின் கருத்துக்கள் இதழ்களின் கருத்துக்களாவே அறியப்படும். இவர்கள் சில சமயம் தனியாகவோ அல்லது கூட்டம் கூட்டமாகவோ விமர்சனங்கள் எழுதுவார்கள். இதழாசிரியர்களின் வீக்கெண்ட் பிரெஷ்ஷர் காரணமாக தனியாக திய்ட்டர் தியேட்டராக அலைந்து டிக்கெட் எடுத்து விமர்சனம் எழுதிவிட்டு வவுச்சருடன் டிக்கெட்டை பின் பண்ணி அக்கவுண்ட் மாமாக்களிடம் கொடுத்து பெட்டிகாஷ் வாங்கிகொள்ள்ளும் பாவப்பட்டவ்ர்களாகவும் சிலநேரங்களில் விமர்சனக்குழுக்களாக தியேட்டரில் பன்னும் பட்டர்ஜாமும் சாப்பிட்டு படம் பார்த்து கூடிப்பேசி குத்துமதிப்பாக மதிப்பெண் போட்டு விமர்சன விமோசனம் அடைபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் போடும் ஓகே, நன்று, மிகநன்றுவுக்காக இயக்குனர்களோ, தயாரிப்பு தரப்பு ஆட்களோ போன் போட்டு நன்றி சொல்லி ஆனந்தகண்ணீர் வடிப்பதும், இப்படி பண்ணிட்டீங்களே பாசு என்று ரத்தகண்ணீர் வடிப்பதும் சகஜம்.

நடிகைகளின் தொப்புள் படங்களை போட்டு வரிசைபடுத்தி புதிர்போட்டி வைக்கும் பக்கங்களுக்கு அடுத்தபக்கத்திலேயே இவர்கள் சினிமாவிமர்சனத்தில் கலாச்சாரம் பற்றி கவலைப்படுவதும், விரசமான காட்சிகளுக்கு விமர்சனக்குட்டு வைப்பதும் கறுப்புகாமெடி. இவர்களின் விமர்சனம் சினிமா ஹீரோக்களைப்போல ஒரு பஞ்ச் டயலாக்குடன் தான் முடியும். பெரும்பாலும் படத்தின் தலைப்பையே இந்த பஞ்ச்க்கு பயன்படுத்துவார்கள். மற்றபடி கேமரா பசுமை, இசை இனிமை என்று எதுகை மோனையில் எளக்காரம் காட்டுவார்கள்.

3

மூன்றாம் வகையினரான சிறுபத்திரிகை சினிமா விமர்சகர்கள் உலகசினிமாவை ஊறுகாயாய் தொட்டுக்கொள்ளும் சுத்த சினிவாசிகள். இவர்கள் பெரும்பாலும் பேராசிரியர்களாகவோ, இலக்கிய மரிக்கொழுந்துவாகவோ இருந்து தொலைப்பது இயக்குனர்களின் வரம் அல்லது சாபம். எடுத்த உடனேயே தார்கோஸ்வ்கியுடையதோ, கீஸ்லோஸ்கியுடையதோ ஒரு சினிமா பற்றிய ஒரு பொன்மொழியை பிள்ளையார்சுழியாகப்போட்டு விமர்சனத்தை ஆரம்பிப்பது இவர்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்துவரும் பழக்கம். மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதும்போது கூட பின்நவீனத்துவ கைப்பழக்கத்தில் குழப்பத் தலைப்புகளிட்டு கும்மியடிப்பது இவர்களின் கூட்டு நனவிலி மனோபாவம். அதில் கதாநாயகனின் மரணம் முதல் தயாரிப்பாளர்களின் மரணம் வரை கட்டுடைப்பு வேறு நிகழும். ஹீரோவின் விக், நாயகிகளின் கொலுசு, காமெடி நடிகர்களின் நக்கல் என்று எல்லா இடத்திலும் குறியீடுகளை தேடி அடைவார்கள்.  ஒவ்வொரு ஃப்ரேமுக்கு இடையிலும் இருக்கும் நுண்ணரசியலை சினிமா டூயட்டுகளில் வரும் ஹீரோக்களைப்போல தடவி தடவி கண்டுகொள்வார்கள். தங்கள் மார்க்சிய, ஃபிராய்டிச, கோப்பர்னிச இன்னபிற இசங்களின் ரசங்களை வைத்து பகுப்பாய்வு பரோட்டா வீசுவார்கள்.

பெரும்பாலும் இரானிய சினிமா எங்கேயோ போயிட்டுருக்கு கொரிய சினிமா கொல்லைக்கு போயிட்டுருக்கு இவனுங்க என்ன படம் எடுக்கிறானுங்க டைப் நெகடிவ் விமர்சங்கள் செய்வது இவர்கள் வழக்கம். சினிமா புரிந்த அளவுக்கு இவர்கள் விமர்சனம் புரியவில்லையே என்று வாசகனை வரட்டி எடுக்கும் மொழியே இவர்களின் தனிச்சிறப்பு. தமிழ்சினிமா இயக்குனர்கள் இலக்கியம் படிப்பதில்லை என்பதே இவர்களுடைய நெடுநாளைய விமர்சன மரபு. இந்த நிலமை இன்று கொஞ்சம் மாறத்துவங்கி இயக்குனர்களும் இலக்கியம் படிக்க ஆரம்பித்து இதழுக்கு ஆயுள் சந்தாவும் கட்ட ஆரம்பித்து விட்டதால் இவர்கள் விமர்சனத்தில் கரிசனத்தின் சிறு நிழல்களும் படிய ஆரம்பித்து விட்டது புதிய மரபு.

4

இவர்கள் மூன்றாம் வகை விமர்சகளாக இருந்து பரிணாம விதியின் அடிப்படையில் நான்காம் இடத்திற்கு வந்தவர்கள். பெரும்பாலும் இலக்கிய ஆளுமைகள் என்று அறியப்படுபவர்கள். இவர்கள் இன்று எண்ணிக்கையில் பரவலாக காணாப்படாவிட்டாலும் காட்டில் புலிகள் குறைவானாலும் கெத்துக்கு குறைவிருக்காது என்ற வகைப்பாட்டில் அடங்குபவர்கள். விமர்சனங்களின் வழியே இயக்குனர்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கும் இலக்கிய இணைவேந்தர்கள். இயக்குனர்கள் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் உலகப்படமாகவும் இயக்குனர்களுடன் மனஸ்தாபம் வந்து விட்டால் உள்ளூர் குப்பைகளாகவும் தெரியும் மப்பு மாலைக்கண் இவர்களிடையே பரவலாக காணப்படும் ஒன்று. ஒலக அழகிகளையே அறிமுகப்படுதும் இயக்குனர்களுக்கு ஒலகசினிமாவையே அறிமுகப்படுத்தும் உயரிய இடத்தில் இருப்பவர்கள். இவர்கள் இன்று சினிமாவை விமர்சிப்பவர்கள் என்கிற நிலையைதாண்டி சினிமாவில் எந்த பஜாரில் எந்த டிவிடி கிடைக்கும், இந்த சீனுக்கு எந்த படத்தில் உருவலாம், என்கிற மாதிரியான குழுவிவாதங்களில் பங்கெடுப்பவர்களாகவும், கும்மாங்குத்து ஹீரோக்களுக்கு பஞ்ச் டயலாக் பற்றவைப்பவர்களாகவும், குத்துப்பாட்டிற்கு குரூப் டான்ஸ் ஆடுபவர்களாகவும் டார்வினின் பரிணாமவிதிகளுக்கே பம்பரம் சுழற்றுபவ்ர்கள்.

5

தமிழுக்கு தொலைக்காட்சி வந்தபோதே சினிமா விமர்சனம் செய்கிறவர்கள் கால்மேல் கால் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையை விதியை அசைக்காமல் பின்பற்றுபவ்ர்கள். சிலர் நடந்து கொண்டோ தவழ்ந்துகொண்டோ கூட விமர்சனம் செய்வது உண்டு. இடையிடையே இங்கிலீஷ் பேசி பயம் காட்டுவது இவர்கள் இயல்பு. சினிமாக்காரர்கள் நம்பி கொடுத்த கிளிப்பிங்ஸ்களையே போட்டு முழுசினிமாவையும் காட்டி பார்வையாளர்களை தியேட்டர் பக்கமே போகவிடாமல் செய்துவிடும் காமெடிடிராஜடிகளும் உண்டு. சினிமாக்காரர்கலை அதட்டுவது போலவோ மிரட்டுவதுபோலவோ பாவ்னையில் பேசுவதும் இவர்கள் வழக்கம். கத்திரிக்காய் எடைபோடுவது போல சினிமாவை எடை போடுவதும், சினிமாக்களை ஒண்ணாப்பு படிக்கும் குழந்தைகள் போல ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி மொக்க சினிமாக்களை பத்தாமிடத்திலும் மரணமொக்கைகளை முதலிடத்திலும் வைப்பது இவர்களது விமர்சன அரசியல்.

பின்குறிப்பு: இது அவசரகோலத்தில் எடுத்த ஒரு சர்வே. முழுமையானது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதையே தீஸிஸாக எடுத்து யாரேனும் மானுடவியல் நோக்கில்  முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்வதாக இருந்தால் இந்த கட்டுரையை தாராளமாக பயன்படுத்திகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.