படைப்புத்திறனை பணமாக்கலாம்!

tamil advertising

oviyam

நீங்கள் சிறுவயதில் கரிக்கோடுகளால் வீடெல்லாம் கிறுக்க ஆரம்பித்து, அப்பாவிடம் அடம் பிடித்து வாட்டர் கலர் வாங்கி ” இயற்கைக் காட்சியை” வரைந்து நண்பர்களிடம் காட்டி காட்டி அலட்டல் பண்ணியிருக்கலாம். உங்களிடம் ஒரு ஓவியன் உருவாகி வளர்ந்த்திருக்கிறான் என்பதெ அதன் அர்த்தம் காலச்சுழற்சியில் வீட்டாரும் நாட்டாரும் உங்கள் உள்ளே இருந்த ஓவியனை அழித்து ஒரு இஞ்சினியராகவோ டாக்டராகவோ உருமாற்றியிருக்கலாம். அல்லது கணக்கு நோட்டில் கதைகள் கிறுக்கி, பத்தாம் வகுப்பு கீதாவை ஒருதலையாக காதலித்து அவள் அப்பா மாற்றலாகி வேறு ஊருக்கு அவளையும் கூட்டிசென்ற சோகத்தில் காதல் ஒரு நரகம் என்று உணர்ந்து கவிதைகள் எழுதி வாரமலருக்கு அனுப்பி அது பிரசுரமாகி பக்கத்து ஊரிலிருக்கும் கீதா எப்படியாவது அதை படித்து விட மாட்டாளா என்கிற பதபதப்பில், பத்தாம் வகுப்பு ஃபெயிலாகி அப்பாவும் அண்ணனும் மாறி மாறி பென்டெடுக்க கவிதையையும் கீதாவையும் அன்றுடன் நீங்கள் மறந்து போயிருக்கலாம். சூழ்நிலை இப்படி ஒரு எழுத்தாளனை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். (இன்று ப்ளாகில் எழுதி அந்த ஆசையை ஈடேற்றி கொள்வது வேறு விஷயம்) பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, நிறைய பவுடர் பூசி அழுத்தமாக லிப்ஸ்டிக் போட்டு அமெச்சூர் நடிகர்கள் நடித்த நாடகங்கள் என்று பார்த்து அந்த இன்ஸ்பிரேஷ்னில் நீங்கள் போட்ட நாடகங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், அதிகபட்சமாக அறிவியல் வாத்தியாரின் ஆதரவோடு பள்ளி ஆண்டுவிழாவில் நீங்கள் போட்ட “முத்துவுக்கு கிடைத்த குத்து” என்கிற நாடகம் எல்லாராலும் “செமத்தியாக” பாராட்டப்பட்டு உங்கள் நடிகர் கனவிற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்திருக்கலாம். ஒரு இளம் நடிகனை இந்திய திரையுலகம் இழந்திருக்கலாம். பெரியம்மா பொண்ணு நிச்சயதார்த்ததிற்கு நான் தான் போட்டோ எடுப்பென் என்று அடம்பிடித்து மாமாவிடமிருந்து ஆட்டோமெட்டிக் கேமராவை வாங்கி நீங்கள் விழுந்து விழுந்து படமெடுத்திருப்பீர்கள். ஃபிலிமை கழுவி பிரின்ட் போட்டபோது தான் தெரிந்திருக்கும் நடுக்கத்தில் உருவங்களெல்லாம் நடமாடும் ஆவியாக மாறி குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருப்பதை. பாவம் அவுட் ஆஃப் போக்கஸ் என்ற வாக்கியத்தை அந்த காலங்களில் நீங்கள் அறிந்த்திருக்க மாட்டீர்கள். இப்படி உங்கள் புகைக் பட கலைஞன் கனவும் ஃபிலிம் ரோல் போல உங்களுக்குள்ளே சுருண்டு மறைந்திருக்கும்.  இப்படி ஏராளம் ஏராளம் கலைஞர்கள் சின்ன வயதிலேயே காணாமல் போனதுண்டு எந்த காணவில்லை அறிவிப்பும் வெளியிடப்படாமலே. அதற்கு காரணம் அன்று இருந்த சமூகபொருளாதார நிலை தான். (அப்பாடா விஷயம் சீரியசுக்கு வந்தாச்சு) பெற்றோர்களின் கனவு தங்கள் பிள்ளைகள் கைநிறைய சம்பாத்தித்து சமூகத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற  தான். படம் வரைபவனும் கவிதை எழுதுறவனும் பொழைக்கமாட்டான் என்கிற மூடநம்பிக்கை தான். ஆனால் இன்று நிலமை மாறி இருக்கிறது. விளம்பரத்துறை, பல்வேறு ஊடகங்கள், அனிமேஷன் போன்ற தொழில்நுட்பமும் கலையும் கலந்துரையாடும் களங்கள் போன்றவை நமது  படைப்புத்திறனுக்கு தீனியும் பணமும் ஈட்டித்தருகின்றன. ஓவியத்திறமை இருக்கும் சிறுவன் அந்த துறையிலேயே ஒரு நிபுணனாக வருவதற்கான வெளி இன்று இருக்கிறது. எழுத்துத்திறமை இருப்பவர்கள் தாடியை சொறிந்தபடி அலைய வேண்டிய தேவை இன்று இல்லை. ஊடகங்களின் யுகத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். ஓவியம், எழுத்து, நடிப்பு, புகைப்படம், இசை என்று எல்லாவிதமான கலைதிறமைகளையும் வெளிப்படுத்த ஒரு களமாக இன்று விளம்பரத்துறை இருக்கிறது. இன்று எளிதாக படைப்புத்திறனை பணமாக்கலாம். சிறுவர்களின் கலைத்திறமைகளை வரவேற்போம். வளர வைப்போம்.