பயமே வணக்கம்!

tamil advertising

சமீபத்தில் நண்பர்களுடன் ஒரு பயணம் சென்றிருந்தேன். கர்நாடகாவில் துபாரே என்னுமிடத்தில் ஒரு யானைகள் முகாம் உள்ளது. மைசூர் தசரா விழாவுக்கு கூட யானைகளுக்கு இங்கே தான் பயிற்சி கொடுக்கிறார்கள். ஒரு போட் எடுத்துக்கொண்டு காவிரி நதியைக் கடந்தால் ஒரு சில வினாடிகளில் அடையும் சின்னத்தீவில் இருக்கிறது இந்த முகாம்.

நாங்கள் சென்றிருந்த போது நிறைய சுற்றுலா வாசிகள் யானைகளை பார்க்கும் குதூகலத்துடன் போட்டிலிருந்து இறங்கி கொண்டிருந்தார்கள். பாகன்கள் சில யானைகளை நதியின் ஆழமில்லா தொடுகரையில் படுக்கவைத்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்கள். யானைகளும் உற்சாகமாக நீரை துதிக்கையில் பீச்சியடித்தும், கண்களை மூடி ஒரு குழந்தையைப்போல படுத்துக்கொண்டும் குளியலை ரசித்துக்கொண்டிருந்தன.
image1a
இரண்டு குட்டி யானைகள் தங்கள் கரிய உடம்பில் மினுமினுக்கும் நீர் வழிதலுடன் எங்களை கடந்து உற்சாகமாக நடந்து சென்றன. குட்டி யானைகளை பார்க்கும் போது மனதில் இனம்புரியாத ஒரு வாஞ்சை எழுந்து வருகிறது. ஆளாளுக்கு அதை தொட்டும் தடவியும் தங்கள் அன்பை காட்டிக்கொண்டு கூடவே நடந்தார்கள். இதெல்லாம் வழக்கமான ஒன்று என்பதைப்போல அவை தங்கள் சிறு காதுகளை விசிறியபடி கடந்து சென்றது.

முகாமுக்குள்ளே சென்ற போது குறுக்கும் நெடுக்குமாக யாணைகளை அழைத்துக்கொண்டு பாகன்கள் சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிக்கிறது. சுற்றும்முற்றும் பார்க்காமல் நின்று கொண்டிருந்தால் உங்களை தோள்களைத்தொட்டு யானை ஒன்று வழி விடுங்கள் என்பதைப்போல நின்று கொண்டிருக்கும். பிரம்மாண்டமான அந்த உருவங்கள் உங்களைச்சுற்றி நடந்து கொண்டிருப்பது பிரமிப்பாக இருக்கும்.

சில யானைகளை சுற்றுலா சவாரிக்கு பயன்படுத்துகிறார்கள். பெரிய வடங்களை அதன் வாலுக்கு அடியிலாக விட்டும், வயிற்றுக்கு அடியிலாக சுற்றியும் முதுகில் உட்காருவதற்கான ஒரு மரத்தட்டை கட்டி வைத்திருக்கிறார்கள். பத்து பேருக்கு மேலே ஒரு யானையின் முதுகில் கூக்குரல் இட்டவாறு ஏறி பயணிக்கிறார்கள். அதுவும் செக்கு மாடு போல மவுனமாக ஒரு அரைக்கிலோமீட்டர் சுற்றி வந்து மறு படி துவங்கிய இடத்திலேயே இறக்கி விடுகிறது. யானைகளின் மவுனமான அந்த நடை மனதை என்னமோ செய்தது. நானும் நண்பர்களும் அந்த சவாரி வேண்டாம் என்று முடிவு செய்தோம். இதை ஊக்குவிக்கக்கூடாது என்பதே முடிவுக்கு காரணம்.

ஓரிடத்தில் ஒற்றைக்கொம்புள்ள ஒரு யானையை நிற்கவைத்து அதற்கு வைக்கோல் பொதிகளை சுருட்டி உணவாக ஒருவர் அளித்துக்கொண்டிருந்தார். அது அமைதியாக‌ வைக்கோல் பொதிகளை தும்பிக்கையில் வாங்குவதும் வாய்க்குள் போட்டு மென்று சாப்பிடுவதுமாக நின்று கொண்டிருந்தது. பார்வையாளர்கள் பக்கத்தில் நின்றும், அதன் நீளமான ஒற்றைக்கொம்பை தொட்டுக்கொண்டும் புகைப்படங்கள் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். யானைக்கு எரிச்சலாக இருக்கிறதா இல்லையா என்பதை அதன் சாந்தமான கண்களில் என்னால் கண்டுணர முடிய வில்லை.

நான் அதன் கால்களை கவனித்தேன். முன்னங்கால்கள் நெருக்கமாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு அச்சங்கிலிகளின் தொடர்ச்சி பின்னங்கால்கள் வரை நீண்டிருந்தன. அது நினைத்தால் ஒரு நொடியில் கூட அச்சங்கலிகளை கண்ணிகளாக சிதறச்செய்ய முடியும். ஆனால் அது எதைப்பற்றியும் கவலை இன்றி சாப்பிடுவதிலேயே கவனமாக இருந்தது.

நண்பன் கூறினான் ‘யானைகளை குட்டிகளாக இருக்கும் போதே கடினமான சங்கிலிகளால் கால்களை பிணைத்து கட்டிப்போடுவார்கள். அது முடிந்த மட்டும் சங்கிலிகளை உடைக்க முயற்சி செய்யும். குட்டியாக இருப்பதால் அதனால் அதை உடைக்க முடியாது. பிறகு மெல்ல மெல்ல அது மனதுக்குள் பதிந்து சங்கிலிகளை மானசீகமாக ஏற்றுக்கொள்ளும். ஒரு கட்டத்தில் வெறும் சணல் கயிறால் கட்டிப்போட்டால் கூட அதை அறுக்க முயற்சி செய்யாது’ என்று.

யானையின் கால்களில் கிடப்பது சங்கிலி அல்ல மனிதனின் அகங்காரம் என்று ஒரு கணம் நினைத்துக்கொண்டேன். அல்லது மனிதனின் தந்திரம். அது கட்டிப்போடப்பட்டிருக்கிறது என்கிற காரணத்தாலேயே அதன் தந்தங்களை தடவியபடி போட்டோ எடுத்துக்கொள்ளும் மனிதர்களின் தன்னகங்காரம். இருபது ரூபாய் கொடுத்தால் உங்கள் சார்பாக ஒரு பொதி வைக்கோல் யானைக்கு ஊட்டப்படும் என்றான் யானைக்கு உணவளிக்கும் ஆள். சிலர் காசு கொடுத்து ஊட்டச்சொன்னார்கள். அவ்வளவு பிரம்மாண்டமாக‌ நம் முன்னே நிற்கும் அந்த இயற்கையின் படைப்புக்கு இருபது ரூபாயில் ஒரு பிடி உணவளிப்பதில் நமக்கு எங்கேயோ ஒரு அற்பத்தனம் நிறைவளிக்கிறதா.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்த யானையின் துதிக்கையை தடவிய படி போஸ் கொடுக்கச்சொல்லி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு குழந்தை மட்டும் அதை செய்ய மறுத்து கண்களில் தெரியும் பயத்துடன் தள்ளி நின்று யானையை பார்த்துகொண்டிருந்தது. நான் யானையின் கண்களைப் பார்த்தேன். அது ஓரக்கண்ணால் அந்த குழந்தையை பார்த்து கொண்டிருந்தது. நான் நினைத்துக்கொண்டேன் “அந்த குழந்தையின் பயத்தை யானை ரசிக்கிறது. அதைப்பார்த்து பயப்படுவதே முறை. அதன் மூலம் காட்டின் பிரதிநிதியாக நம்முன் நிற்கும் அந்த பிரம்மாண்டத்திற்கு நாம் செய்யும் மரியாதை. பயம் “